மதராஸ் – மண்ணும் , கதைகளும் -9 


மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

– கிளின் பார்லோ

கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின்  கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்தத் தொடர்

வரலாறு எப்போதும் இரண்டு ஆதாரமான புள்ளிகளை மையமாக வைத்தே இயங்கிவருகிறது. ஒன்று நிலத்தின் மீதான அதிகாரம். இரண்டாவது பெண்களின் மீதான அதிகாரம். மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இன்றுவரை நடந்த எல்லா யுத்தங்களும், பிரச்சினைகளும் இந்த இரண்டை மையமாக வைத்தே இயங்குவதைப்  பார்க்கலாம். நிலத்தின் மீதான அதிகாரவெறியால் போர்களைத்தொடங்கி மரணத்தை தழுவியர்களைப்போல பெண்களின் மீதான மோகத்தால் பதவியை, அதிகாரத்தை  இழந்து மறைந்துப்போனவர்களது கதைகளும் வரலாற்றில் உண்டு.

      இன்றைய சென்னையின் தொன்மையான கட்டடங்களில் ஒன்று கன்னிமாரா நூலகம்.  இந்நூலகம் அமைவதற்கு காரணமாக இருந்தவர் இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு என்ற பிரிட்டிஷ் ஆளுநர். 1886 ஆம் வருடம் முதல் 1890 ஆம் வருடம் வரை அன்றைய மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். திறமையான கவர்னர். நல்ல படிப்பாளி. 1890 ஆம் வருடம் மார்ச் 22ல் நூலகத்துக்கு அடிக்கல் நட்டு பேசும்போது, படிக்க ஆர்வம் காட்டுபவர்களுக்குப் போதுமான நூல்கள் இங்கில்லை. அந்தக்குறையை போக்கவே இந்தப் பொதுநூலகத்தை கட்டுகிறேன் என்று கன்னிமரா பேசியுள்ளார். அடிக்கல் நாட்டப்பட்டாலும் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள்தான் இந்த நூலகம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.  திறக்கப்படும்போது கன்னிமாரா பதவியில் இல்லை. இருந்தாலும் நூலகத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. முதல் நூலகராக எட்கர் தர்ஸ்டன் பணிக்கு நியமிக்கப்பட்டார். முல்லைப்பெரியாறு அணையை பென்னிகுக் கட்டும்போது அந்த முயற்சிக்கு முழு ஆதரவும் உதவியும் செய்தவர் கன்னிமாரா. முல்லைப்பெரியாறு அணைக்கட்டுக்கான பணிகளை தொடங்கும்போது பென்னிகுக் எத்தனையோ தடைகளைத் தாண்டி இறுதியில் தனது சொந்தக்காசை போட்டுத்தான் கட்டினார். அரசு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஏற்கனவே பஞ்சத்தில் நாடே செத்துக்கொண்டிருந்தது. அந்நாட்களில் கன்னிமாராதான் அணையின் அவசியத்தை பிரிட்டிஷ் அரசுக்கு எடுத்துச்சொல்லி கடிதங்கள் அனுப்பிவைத்தார். அதுபோல பஞ்சகாலத்தில் மிகத்திறமையாக செயல்பட்டு மக்களுக்கான உணவு அடிப்படைத்தேவைகளை கொடுத்து உதவியவர் கன்னிமாரா.  மதராஸ் காளிகாட் (கொல்கத்தா) ரயில்பாதை திட்டத்திலும் இவரது பங்குண்டு.  கன்னிமாரா நூலகம் தவிர உயர்நீதிமன்றம் மற்றும் விக்டோரியா பொதுக்கூடம் போன்ற கட்டிடங்களும் இவரது காலத்தில் உருவானவை. ஜார்ஜ் டவுனின் பாதாளச்சாக்கடை உருவாக்கம் அவரது கனவுத்திட்டமாக இருந்தது. கன்னிமாராவின் தனிப்பட்ட வாழ்க்கை சறுக்கல்களை மீறியும் அவர் அடிக்கல் நாட்டி திறந்துவைத்த கட்டிடங்கள் இன்றும் உறுதியாக நிற்கின்றன. மதராஸின் வரலாற்றுப்பக்கங்களில் அழிக்கமுடியாத நினைவுகளை பதிவு செய்துவிட்டு போன கவர்னர் கன்னிமாராவின் சொந்த வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. பதவிக்காலம் முடியும்முன்னரே  பதவியை இழந்து லண்டன் திரும்பினார்.  காரணம் அவரது வாழ்க்கையில் நடந்த சில சோகமான விஷயங்கள்.

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹவுசியின் மகள் சூசன்தான் கன்னிமாராவின் மனைவி. இவர்கள் திருமணம் நடக்கும்போது கன்னிமாராவின் வயது முப்பத்தாறு. சூசனுக்கு பத்தொன்பது. இந்த தம்பதிகளுக்கு  திருமணமாகி பலவருடங்கள் கழித்தும் குழந்தை இல்லை. வயதாக வயதாக இவர்களுக்கு இடையே இருந்த உறவின் இறுக்கமும் அதிகரித்துள்ளது. சூசனுக்கு  மதராஸின் கொடுமையான வெயிலும்  ,கொசுக்கடியும், பஞ்சக்கால சூழலும்  ஒத்துக்கொள்ளாமல் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தூக்கமாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தார். சூசனின் உடல்நிலையை கவனித்துக்கொள்ள பிரிக் என்ற மருத்துவர் நியமிக்கப்படுகிறார். சூசனின் உடல்நிலையை கவனித்த பிரிக்  குளிர்நிறைந்த ஒதகமந்து (ஊட்டி) போன்ற மலைப்பிரதேசங்களுக்கு சென்று ஓய்வெடுங்க என்று ஆலோசனை தருகிறார்.  சூசனையும் அவருக்கு மருத்துவம் செய்யும் பிரிக்கையும் ஒதகமந்துவில் விட்டுவிட்டு கன்னிமரா மட்டும் கவர்னர் மாளிகையில் இருந்துள்ளார்.

பிரிட்டிஷ்காலத்தில் கவர்னர் மாளிகை என்றாலே கேளிக்கை, கொண்டாட்டம், மது விருந்துகள் , பெண்கள்தானே?  இயல்பிலேயே கன்னிமாராவுக்கு வேட்டை, விளையாட்டு பொழுதுபோக்குகளின் மீது தீராத மோகம் இருந்தது. அதைவிட பெண்கள் விஷயத்தில் அவர் எப்போதும் சபலமிக்கவராக இருந்துள்ளார். மனைவியின் அருகாமை இன்மையும், குழந்தை இல்லாத ஏக்கமும்  அவரை இன்னும்  மூர்க்கமாக கேளிக்கை, கொண்டாட்டங்கள் பக்கம் திருப்பிவிட்டன.. கணவரின் இந்த கெட்டசகவாசங்கள் சூசனுக்கும் அரசல்புரசலாக அவ்வப்போது  தெரியவர பலமுறை கண்டித்தும் கன்னிமாரா திருந்தியபாடில்லை. கணவரின் தவறான நடத்தை மேலும் மேலும் அவரது உடல்நிலையையும், மனநிலையையும்  மோசமாக்கியுள்ளது.

பொதுவாக கவர்னர் மாளிகையின் விருந்தின்போது விருந்தினர்களை வரவேற்க கவர்னரின் மனைவி அங்கு இருந்தாக வேண்டும். சூசன் எப்போதும் உடல்நலக்குறைவால் ஒதகமந்துவில் தங்கியிருந்ததால் அந்தப் பொறுப்பை கவர்னரின் உறவுக்கார பெண்மணி ஈவா குயின் கையில் எடுத்துக்கொண்டார். ஆரம்பத்தில் சூசனுக்கு  ஈவாமீது நம்பிக்கையும், மரியாதையும் இருந்ததுள்ளது. ஆனால் நாளடைவில் ஈவா தனது முகத்தை வெளிக்காட்ட தொடங்கினார்.  ஒருநாள் சூசன் முன்கூட்டி தகவல் தெரிவிக்காமல் மருத்துவர் பிரிக்குடன் ஒதகமந்துவிலிருந்து கிளம்பி  கவர்னர் மாளிகைக்கு திரும்பியுள்ளார். திரும்பியவர் தனது படுக்கையறையில் தனது கணவருடன் இன்னொருப்பெண்ணையும் பார்த்துவிட்டார். அன்று கவர்னர் மாளிகையில் பெரிய விருந்தொன்று நடந்துக்கொண்டிருந்தது.  விருந்தை ஏற்பாடு செய்திருந்தது ஈவா. ஏற்கனவே சூசனுக்கும் ஈவ்லினுக்கும் கருத்துவேறுபாடும், மோதலும் அதிகரித்திருந்தது. கவர்னர் மாளிகை விவகாரங்களில் ஈவா அளவுகடந்து தலையிடுவது சூசனுக்கு பிடிக்கவில்லை. ஈவா ஏற்பாடு செய்த விருந்தில் தனது படுக்கையறையில் தனது கணவரை இன்னொரு பெண்ணுடன் பார்த்ததை சூசனால் தாங்கமுடியவில்லை. அதற்குமேல் தன்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது என்று கவர்னர் மாளிகையில் இருந்து வெளியேறியவர் ஒரு விடுதியில் தங்கிக்கொண்டார். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். மனமொடிந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த சூசனை ஆறுதலாகவும் மிகவும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டவர் டாக்டர் பிரிக்.  கவர்னர் தனது மனைவி, டாக்டர் பிரிக் இடையே தவறான உறவு இருப்பதாக சொல்ல ஆரம்பித்தார். இது சூசன் மனதை இன்னும் அதிகமாக காயப்படுத்தியது. விவாகரத்து பெறுவதில் பிடிவாதமாக இருந்தார். அன்றைய மதராஸ் மாகாணமே இந்த செய்திக்கேட்டு பரபரப்பானது. குறிப்பாக கவர்னரின் கேளிக்கைகள் பற்றி பத்திரிக்கைகள் மக்களுக்கு ஆர்வமாக தீனிப்போட்டன.

கவர்னர் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் சூசன் கவர்னர் மாளிகைக்கு திரும்பிச்செல்லாமல் பிடிவாதமாக இருந்தார்.  வழக்கு இழுத்துக்கொண்டே போக கவர்னருக்கான அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே போயின. கவர்னர் மாளிகைக்கு அதிகாரிகள் செல்வதை நிறுத்திக்கொண்டார்கள். ஏற்கனவே  குழந்தை இல்லாத கவர்னரை பற்றி பத்திரிக்கைகள் கிசுகிசுக்கள் எழுதினார்கள். இன்னொருப்பக்கம் கவர்னரை பிடிக்காத அதிகாரிகள் அவரைப்பற்றி லண்டனுக்கு தகவல்கள் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். இங்கிலாந்து மகாராணியின் காதுகளுக்கும் இந்தச்செய்தி போனது.  தவறு கவர்னர் மேலிருந்தாலும் இங்கிலாந்து ராணிக்கு சூசன் மீதுதான் கோபம் இருந்தது. சொந்த  பிரச்சினையை பொதுவெளிக்கு கொண்டுவந்து பத்திரிக்கைகளில் தொடர்ந்து கவர்னர் பெயருக்கும், பிரிட்டிஷ் ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்துக்கொள்வதாக ராணி நினைத்துள்ளார். கோபமடைந்த ராணி கன்னிமாராவை பதவிநீக்கம் செய்து லண்டனுக்கு திரும்பி வர உத்தரவிட்டார். பதவிக்காலம் முடியும்முன்னரே  மாளிகையை காலிசெய்துவிட்டு லண்டனுக்கு திரும்பவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் கன்னிமாரா. நீதிமன்றத்தில் சூசனுக்கு விவகாரத்து கிடைத்தது. வழக்கில் ஒரு திருப்பமாக கவர்னரின் முன்னாள் பணிப்பெண்மணி சாட்சி சொன்னார். அந்த பெண்மணி தனக்கும் , கவர்னருக்கும் இருந்த பாலியல் உறவை வெளிப்படுத்தினார்.

வரலாற்றில் எத்தனையோ மகத்தான மனிதர்கள் பெண்களால்  தோற்று கீழே விழுந்துபோது கன்னிமாரா மட்டும் அந்த பொதுவிதியிலிருந்து தப்பமுடியுமா? தனது அத்தனை வருட புகழை எல்லாம் இழந்து அவப்பெயருடன் கப்பலில் ஏறியதை மதராஸின் மண் பார்த்தது.பொதுவாழ்க்கையில் வெற்றிப்பெற்று  வெளியில் கொண்டாட்டமாக தெரியும் எத்தனையோ மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை  உள்ளே சோகங்களும், வேதனைகளும் ,ஏமாற்றங்களும் வலிமிக்கதாகவும் இருக்கும். கன்னிமாரா, சூசன் வாழ்க்கையும் அப்படி அமைந்திருந்தது. இவர்கள் விவகாரத்து பெறும்போது சூசனுக்கு வயது ஐம்பத்தி மூன்று .

லண்டன் திரும்பிய கன்னிமரா பிறகு சில வருடங்கள் கழித்து இன்னொரு பணக்கார பெண்ணை மணந்துகொண்டார். இந்தமுறையும் அவருக்கு புத்திரப்பாக்கியம் கிட்டவே இல்லை. விவாகரத்துக்கு பிறகு சூசன் இலங்கைத்தீவுக்கு சென்று ஓய்வெடுத்தார். பிறகு இங்கிலாந்து சென்றுவிட்டார்.    இக்கட்டான நேரத்தில் தனக்கு ஆறுதலாக நின்ற மருத்துவரையே திருமணம் செய்துக்கொண்டார்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
 2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
 3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
 4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
 5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
 6. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
 7. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
 8. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
 9. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
 10. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
 11. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
 12. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
 13. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
 14. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
 15. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
 16. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
 17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
 18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்