மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப்பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

கிளின் பார்லோ

கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப் புத்தகத்தின்  கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்தத் தொடர்…

 

மதராஸ்மண்ணும் , கதைகளும் -1   

  The cloth is like the light vapours of dawn.   

—YUAN CHWANG, Chinese traveler to India,  (602-664 AD)

விடியலின் ஒளியாவி  போன்றது இந்த துணி   

யுவான் சுவாங்க் சீன யாத்ரீகர் (602-664 கிபி) 

 

இன்று சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை  என்றதும் உடனே நினைவுக்கு வருவது அங்கிருக்கும் மீன் மார்க்கெட். அருகே ஓடும் கூவம்இருநூறு, முந்நூறு  ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடம் எப்படியிருந்தது தெரியுமாநெசவாளர்களும், துணிகளுக்கு சாயம் தோய்ப்பவர்களும், நூற்கண்டு பின்னுபவர்களுமாக இருந்த சிறுகிராமம்அதிலும் மஸ்லின் என்ற சன்னரக துணிகளை நெய்தவர்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தார்கள்.   இன்றைய தலைமுறையினர் பலருக்கு அநேகமாக தெரியாமல்போன ஒரு துணிரகத்தின் பெயர் மஸ்லின். வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷாருக்கு எந்தளவுக்கு இங்கிருந்த குறுமிளகின்மேல் ஒரு கண் இருந்ததோ அதைவிட ஒருபடிமேலே இங்கிருந்த பருத்திமேல் சொல்லப்போனால் மஸ்லின் துணிகள் மேல் கண் இருந்தது. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இங்கிருந்து ஐரோப்பாவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் ஒன்று இந்த மஸ்லின் துணிகள். மஸ்லின் என்ற பெயர்காரணத்துக்கு பலகதைகள் உண்டு. ஈராக்கில் உள்ள மோசூல் நகரில் உற்பத்திச் செய்யப்பட்டதால் அந்தப் பெயர் வந்தது என்றும், மசூலிப்பட்டினத்தில் உற்பத்திசெய்யப்பட்டதால்  அந்தப் பெயர் வந்தது என்றும் சொல்வார்கள்.  

இந்த மஸ்லின் துணியின் சிறப்பே அந்த மெல்லிய இழைதான். ஒரு முழு மஸ்லின் புடவையை மடித்து ஒரு தீப்பெட்டிக்குள் அடைத்துவிடலாம். புடவையின் முனையை ஒரு மோதிரத்தின் சிறுதுளையில் நுழைத்து மறுமுனையை வெளியே எடுக்கமுடியும். அப்படியென்றால் இந்தத் துணியின் மென்மை எப்படிப்பட்டது என்று உணர்ந்துக்கொள்ளமுடியும்.  ஒவ்வொரு ஆடைக்கும் அதன் நுண்மை மற்றும் மென்மை தன்மையின் அடிப்படையில் அலகுகள் தருவார்கள். உதாரணமாக கதர் பருத்தித் துணிகளின் அலகு 30-லிருந்து தொடங்கும். மஸ்லினின் அலகோ அதன் பல்வேறுவகையைப் பொறுத்தது நானூறுலிருந்து அறுநூறுவரை என்பதிலிருந்து அதன் மென்மைத் தன்மையை அறியலாம்மஸ்லின் துணியில் தைக்கப்பட்ட ஓர் சட்டையின் எடை பத்து கிராம்தான் இருக்கும். 1721ஆம் ஆண்டு  இந்தியாவில் அரசாண்ட ஜெகாங்கீர் பாதுஷா காலத்தில் நெய்த மஸ்லின் 15 கஜ நீளமுள்ளது முக்கால் பலம் நிறைதான் இருந்ததாம். ஒரு கஜம் என்பது கஜம் மூன்று அடி. ஒரு பலம்  என்பது பத்து கிராம்.

சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் ஜம்தானி என்ற பெயரில் இந்தவகை மஸ்லின் சேலைகளைப் பற்றிக் குறிப்புகள் வருகின்றன. பெரிபிலஸ் எழுதிய குறிப்புகளில் மஸ்லின் துணிகள் பற்றி வருகின்றன. ஜவஹர்லால் நேருவின்  ‘டிஸ்கவரி ஆப் இந்தியாபுத்தகத்தில் மஸ்லின் துணி ஏற்றுமதி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மார்கோபோலோ தனது இந்தியப் பயணக்குறிப்பில் இந்த மஸ்லின் துணிப்பற்றி எழுதியுள்ளார்பண்டைய இந்திய நாகரிகத்தில் இருந்தே மஸ்லின் துணி நம்மிடம் இருந்தாலும் அதை மிகவும் பிரபலமாக்கியவர்கள் முகலாயர்களே. அவர்களே மஸ்லின் துணிகளின் தீவிர ரசிகர்களாக இருந்துள்ளார்கள். இதைப்பற்றி ஒரு விசித்திரமான கதைகூட உண்டு.

ஒருமுறை ஒளரங்கசீப்பின் மகள் ஜெபுன்னிஸா எட்டுச்சுற்று மஸ்லின் புடவையை அணிந்து வந்துள்ளார். எட்டுச்சுற்று இருந்தும் அதன் ஒளி ஊடுருவும் மென்மையைப் பார்த்து ஒளரங்கசீப் அதிர்ந்து அந்தப் புடவையை மாற்றிவரச் சொல்லி உத்தரவிட்டாராம்அது உண்மையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அமீர் குஸ்ரூ என்ற பெர்ஷியன் கவிஞர் இந்த மஸ்லின் துணியின் மென்மையை பற்றி தனது பாடலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“நட்சத்திரத்தால் உரியப்பட்ட நிலவின் மேற்தோலைவிட நுண்மையானது. ஒளியின் பண்பையும் , நிர்வாண மேனியின்மீது விழும் தூயநீரின் தன்மையையும் ஒன்றாக கொண்டது.”  

‘சர்கார் ஈஅலா’ என்ற மஸ்லின் துணிரகத்தை முகலாய மன்னர்கள் தங்கள் தலைப்பாகைத் தயாரிக்க பயன்படுத்தினார்கள். அதுபோலவே கஷிதா, குதான்ஈரூமி, நன்பதி, யகுதி, அலிஜோலா, சமந்த் ஈலகர், ரவை சல்லா மல்மல் ராஜா,ஷப்னம் போன்ற எண்ணற்ற மஸ்லின் துணிரகங்கள் உண்டு.  மல்மல் என்ற பெயரில் நெய்யப்பட்ட மிகவும் லேசான மஸ்லின் ஆடைகள் பதினேழாம்  நூற்றாண்டில் ஐரோப்பாவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பாக இங்கிருந்த கவர்னர்கள் அதை இங்கிலாந்து ராணிக்குப் பரிசாக அனுப்பியுள்ளார்கள். இதில் ஜம்தானி என்ற மஸ்லின் துணிரகம் உயர்தரமானது. அரசக்குடும்பத்தில் இருந்த பெண்கள் எல்லாரும்  இதில் உருவாக்கப்பட்ட சேலைகளைத்தான் அணிந்துள்ளார்கள்.

இந்த மஸ்லின் ரக பருத்தியை மற்ற பருத்தி இழைபோல நெய்துவிடமுடியாது. மஸ்லின் நெசவாளர்கள் மஸ்லின் நூலை நூற்க ஓர் உத்தியை பயன்படுத்துவார்களாம். தங்கள் வலதுகை கட்டை விரல் நகத்தை நீளமாக வளர்த்து, நகத்தின் நடுவில் சிறிய துளையை உருவாக்குவார்கள். பிறகு மஸ்லின் பஞ்சைத்திரித்து அந்த நகத்துளைக்குள் நுழைத்து  நுனியை தக்கிலியில் இணைத்து நூற்பார்களாம். அப்படி நூற்கும்போது நகத்தால் நூலை நீவியபடியே செல்வார்கள். நூல் மெல்லிய இழையாக மாறுவதோடு பிசிறற்று ஒரே சீராக வலுவானதாகவும் இருக்குமாம். நகம் வளர்ப்பது, பொறுமை போன்ற விஷயங்களை வைத்து பார்க்கும்போது பெரும்பாலும் இந்த வேலையை பெண்களே அதிகம் செய்துள்ளார்கள் என்று தெரிகிறது. 

இந்த மஸ்லின் துணிகளை இங்கிலாந்துக்கு அதிகம் ஏற்றுமதி செய்த இரண்டு நாடுகள் இப்போதிருக்கும் பங்களாதேஷ் மற்றும் இந்தியா.

வங்கத்தின் டாக்காவுக்கும் மதராஸப்பட்டினத்துக்கும் கப்பல் வணிகம் நடந்துள்ளது. பிறகு மதராஸிலிருந்து லண்டனுக்கு கப்பலில் துணிகளை எடுத்துச் சென்றுள்ளார்கள். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசு இங்குள்ள பருத்தி,  துணிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு அங்கிருந்த பருத்தியை, துணிகளை இங்கே இறக்கினார்கள். குறிப்பாக பிரிட்டனின் மான்செஸ்டர், லங்காஷயர், லிவர்புல் நகரங்களில் இயந்திரத்தறிகளை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட துணிகளை இந்தியச்சந்தையில் விற்க ஆரம்பித்தார்கள். மான்செஸ்டர் பருத்தியை இங்கே கொண்டுவந்து விவசாயிகளை பயிரிட வைத்தார்கள். அப்படித்தான் இந்தியாவின் பாரம்பரிய பருத்தி விவசாயத்தையும் , பாரம்பரிய நெசவுத்தொழிலையும் ஒழித்துக்கட்டினார்கள். தங்கள் பருத்திக்கு கடும்சவாலாக இந்த இந்திய மஸ்லின் துணிரகம் இருப்பதாக நினைத்து மஸ்லின் துணிகளுக்குக் கடுமையான வரிகளை விதிக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில்  எந்த நெசவாளரும் நகம் வளர்க்கக் கூடாது என்று மஸ்லின் துணிகளைத் தடைசெய்து மீறி அதை நெசவுசெய்த நெசாவளிகளின் கட்டை விரல்களை வெட்டியதாகவும் கதைகள் உண்டு.     

நமது பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளில்கூட  இந்த மஸ்லின் துணிப்பற்றி எண்ணற்ற தகவல்கள் உள்ளன.  மஸ்லின் துணியை வடிகட்டிபோன்று பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. தேனை வடிகட்ட மஸ்லின் துணியைப் பயன்படுத்தியுள்ளார்கள். பாலாடைக்கட்டி தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளார்கள். சருமத்தில் ஏற்படும் காயங்கள், தீப்புண்களுக்கு காயங்களுக்கு தேங்காய் எண்ணையை மஸ்லின் துணியில் நனைத்து காயங்களின்மீது வைத்து வாழையிலையை வைத்துக் கட்டியுள்ளார்கள்.   டாக்கா நெசவாளிகளுக்கு முன்னரே நெடுங்காலமாக இங்கு மஸ்லின் துணி நெய்யும் கலை இருந்துள்ளது. குறிப்பாக மசூலிப்பட்டிணம், ஆரணி என்று பல இடங்களில் மஸ்லின் நெசவாளிகள் இருந்துள்ளார்கள்.    

மசூலிப்பட்டினத்திலிருந்த துறைமுகத்தை  புயல், பெருமழை போன்ற இயற்கை சீற்றங்களால் மதராஸபட்டினத்துக்கு மாற்றியதும் அங்கே  இருந்த மஸ்லின் நெசவாளர்களும் இடம்பெயர்ந்து மதராஸ்க்கு வந்துவிட்டார்கள். அன்றைய மெட்ராஸில் வெள்ளையர் கோட்டையை  சுற்றி நெசவாளர்களுக்காக பலவேறு சிறுசிறு பேட்டைகள் காலடிப்பேட்டை, சிந்தாதரிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை என்று பெயர் வைத்தார்கள்.  1640ஆம் ஆண்டு நெசவுத்தொழிலை பிரதானமாகக் கொண்ட சுமார் நாநூறு சாலிய குடும்பங்கள் வடக்கே இருந்து தெற்கு நோக்கி வந்து இங்கு குடியேறியுள்ளார்கள். 1690ஆம் வருடம் அப்போதைய கவர்னர்  தாமஸ்பிட் மேலும் ஐம்பது நெசவாளர் குடும்பங்களைக் குடியமர்த்தியுள்ளார்.

ஆரம்பத்தில் நெசவாளர் தெரு என்றும் போகப்போக நைனியப்ப நாயக்கர் தெரு என்றும் மாறியுள்ளது. 1719ஆம் வருடம் கவர்னர் ஜோசப்காலட்  திருவொற்றியூர் அருகே ஒரு பேட்டையை உருவாக்கினார். அது காலட்பேட்டை என்று பின்னாட்களில் காலடிப்பேட்டையாக மாறியது. 1734 ஆம் வருடம் நெசவாளர்கள் கணிசமாக தேவைப்பட கூவம் நதியோரமாக இன்னொரு பேட்டை உருவாக்கப்பட்டது. சிறுசிறு தறிகள் கொண்ட நெசவாளர்கள் அங்கு  இருந்ததால் அந்தப்பகுதி சின்னத்தறிப்பேட்டை என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. ஒரு விஷயம் உன்னிப்பாக கவனித்தால் துணிகளுக்கு சாயமேற்ற, துவைக்க என்று நீரின் தேவை இருந்துள்ளது. அதனால்தான் நெசவாளர்களின் பேட்டைகளைக் கூவமாற்றின் கரையோரமாக உருவாக்கியுள்ளார்கள்.

டாக்கா மஸ்லின் நூலைக் கப்பலிலிருந்து இறக்கி நெசவுசெய்வது அல்லது உள்ளூர் மஸ்லின் பருத்தியைக் கொண்டுவந்து நூற்பது, நெய்த துணிகளுக்கு சாயமேற்றுதல் என்று அந்த இடமே நெசவுத்தொழிலில் மும்முரமாக இறங்கியுள்ளது. பிறகு மஸ்லின் மறைந்து பருத்தியாடைகள் வந்துள்ளன.  எப்போதும் தறிகளின் ஓயாத சத்தம் ஒலித்தபடியே இருந்துள்ளது. பின்னாட்களில் பின்னிமில் வந்தபிறகு கைத்தறித்தொழில் நசிவடைந்து நெசவாளர்கள் எல்லாரும் சொந்தத்தொழிலை விட்டு மில் வேலைக்குச் சென்று பிரிட்டிஷ் பெருமுதலாளிகளிடம் சம்பளத்துக்கு வேலை பார்க்கத் தொடங்கியுள்ளார்கள்.  நமது பாரம்பரிய நெசவான மஸ்லின் துணி என்ற ரகமே அழிந்துப்போனது. பின்னிமில்லும் மறைந்தபிறகு நெசவாளர்கள் வேறு எங்கெங்கோ செல்ல, எஞ்சியவர்கள் மீன்பிடித்தொழில் செய்ய தறிப்பேட்டை மறைந்து சிந்தாந்திரிப்பேட்டை என்ற புதுமுகத்தை காலம் அங்கு கொண்டுவந்து வைத்தது.                         

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
 2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
 3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
 4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
 5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
 6. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
 7. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
 8. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
 9. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
 10. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
 11. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
 12. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
 13. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
 14. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
 15. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
 16. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
 17. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
 18. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்