மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது.மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

கிளின் பார்லோ

கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின்  கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்த தொடர்

மதராஸ்மண்ணும் , கதைகளும் -3   

The Map Against the World என்ற கொரியன் திரைப்படம். அதில் ஒரு மனிதன் தன்வாழ்நாளெல்லாம் தன்தேசம் முழுக்க நடந்தபடியே இருப்பான் . காடு, மலை, அருவி, சமதளம் என்று பயணித்தபடியே செல்வான்கோடையில் பாலையை கடப்பான். குளிரில் உறைந்துப்போன ஏரியின் மேல் நடந்துச்செல்வான் . வசந்தகாலத்தில் மலர்கள் பூத்திருக்கும் இடங்களின் வழியாக செல்வான். காட்டை,மலைகளை கடப்பான். ஆபத்தான விலங்குகளை எதிர்கொள்வான். கடலில் பயணம் செய்வான்.  கடற்கொள்ளையர்கள் தாக்குவார்கள். அவனது பயணம் மட்டும் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கும். பல ஊர்கள் சுற்றியலைந்து வெகுநாட்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பும் அவனை யாருக்கும் அடையாளம் தெரியாது. அவன் இறந்திருப்பான் என்றே நினைத்திருப்பார்கள். அவனது மனைவிக்கே முதலில் அடையாளம் தெரியாது. ஊரைவிட்டுச்செல்லும்போது குழந்தையாக இருந்த மகள் பெரியவளாக வளர்ந்திருப்பாள்அந்த மனிதன் பெயர் கிம். அவனது வேலை மேப் தயாரிப்பது. ஆங்கிலத்தில் இந்த வேலையை கார்ட்டோகிராபர் (Cartographer) என்று சொல்வார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கொரியாவில் வாழ்ந்த வரைபடம் தயாரிப்பாளர் ஒருவரின் உண்மைக்கதை அந்த திரைப்படம்.   

தொழில்நுட்பம் வளர்ந்து செயற்கைக்கோள் வரை வளர்ந்துவிட்ட இந்த யுகத்தில் நமக்கு மேப் தயாரிப்பவர்களின் சிரமம் பெரிதாக தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் வாகன வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் அந்த முயற்சி எவ்வளவு பெரிய இமாலய சாதனையாக இருந்திருக்கும். ஆம். இமையத்தை கால்களால் அளப்பது என்ன சாதாரண விஷயமா என்ன? அந்த சாதனையின் முதல் புள்ளியை எங்கு வைத்தார்கள் தெரியுமா? மெட்ராஸில் உள்ள பரங்கிமலையில்தான்.   பண்டைய இந்தியாவின் சிதறுண்ட நிலப்பகுதிகளின்  மேப்பை இங்கு ஆண்ட பல்வேறு அரசர்கள், மாலுமிகள், கடலோடிகள், யாத்ரீகர்கள், வணிகர்கள் என்று சிலர் உருவாக்கியிருந்தாலும் அறிவியல்பூர்வமாக துல்லியமான தகவல்களோடும் விரிவாகவும் ஒரு முறையான மேப்பை உருவாக்கும் பணிகள் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் தொடங்கப்பட்டது. அதை பரங்கிமலையில் தொடங்கினார்கள். அந்த பணி அப்படியே சென்று இறுதியாக எவரெஸ்ட் சிகரத்தை அளப்பதில் முடிந்தது.   

 கிழக்கிலிருந்து கடல்வழியாக மதராஸ்க்குள் நுழைபவர்களுக்கு இரண்டு மலைகள் தெரியும். ஒன்று நாகலாபுரம் மலை. இப்போதைய ஆந்திராவில் உள்ளது. அருகே தடா போன்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இன்னொன்று மதராஸ் பரங்கிமலை. மதராஸ்க்கு கடல்வழியாக வந்த முதல் ஐரோப்பியர்கள் என்றால் போர்த்துகீசியர்களைத்தான் சொல்வார்கள். பிறகே பிரிட்டிஷ்காரர்கள் வந்தார்கள். இங்கு வந்த போர்த்துக்கீசியர்களுக்கு பரங்கிமலையின் தட்வெப்பநிலை பிடித்துப்போக அங்கு வசிக்க ஆரம்பித்தார்கள். சிலர் சாந்தோம் பகுதியில் வசித்தார்கள். அப்போதைய போர்த்துகீசிய, ஆர்மீனிய வணிகக்கப்பல்களுக்கு  வழிகாட்டும் கலங்கரைவிளக்கமாக பரங்கிமலை இருந்துள்ளது. பின்னாட்களில்தான் ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்திய நிறுவனத்தால் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டுள்ளது. பரங்கிமலை எப்போதுமே எல்லா ஐரோப்பியர்க்கும் பிடித்த இடமாக இருந்துள்ளது.   பின்னாட்களில் இங்கு  வந்து மற்ற ஐரோப்பியர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு  ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷார்க்கு மதராஸ் ராஜதானியை சுற்றி இருந்த சிக்கலான நிலவமைப்பையும், மலைகளையும், அடர்ந்த காடுகளையும்    புரிந்துகொள்வது குழப்பமாகவும், அயர்ச்சியாகவும் இருந்தது.  மதராஸ் நிலப்பரப்பு என்பது மேற்கிலிருந்து கிழக்கே கடலை நோக்கி சரியும் நிலவெளி. இதில் இரண்டு பெரிய ஆறுகள் ஓடும். அடையாற்றுக்கு தெற்கே பரங்கிமலை. கூவமாற்றுக்கு வடக்கே நாகலாபுரம் மலை. இடையில் சிறுசிறு குன்றுகள். அடர்ந்த காடுகள், ஏரிகள்,குளங்கள், கிராமங்கள். இன்னொருப்பக்கம் பரந்த வங்கக்கடல் என்று பல்வேறு கலவையிலான நிலவமைப்பை கொண்டிருக்கும்.         

பிரிட்டிஷ் அரசுக்கு சிம்மசொப்பனாக இருந்தவர் திப்புசுல்தான். திப்புவின் வீரர்கள் பிரஞ்சுக்காரர்களுடன் சேர்ந்துக்கொண்டு பிரிட்டிஷ் அரசுக்கு தொடர்ந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறார்கள்.  ஒருக்கட்டத்தில் தொடர்ந்து நடக்கும் பல்வேறு மைசூர்போர்களின் முடிவில் இந்தியாவை  இழக்கும் அபாயத்துக்குகூட போகிறார்கள்எப்படியாவது திப்புவை ஒழித்துக்கட்டவேண்டும் என்று களமிறங்கும் ஆர்தர் வெஸ்லிக்கு உதவியாளராக வில்லியம் லாம்ப்டன் என்ற மேஜர்ஜெனரல் பணிக்கு சேர்கிறார். வெஸ்லி அன்றைய காளிகாட் தலைமையகத்துக்கு கடிதம் எழுதி லாம்ப்டனை  இந்திய சர்வே பணிக்கு பரிந்துரை செய்கிறார். வில்லியம் லாம்ப்டன் வீரர் மட்டுமல்ல. கணித நிபுணர். குறிப்பாக கார்ட்டோகிராபர்இந்த சர்வே எடுக்க அவர்களுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று எங்கெங்கே எவ்வளவு வரி வசூல் செய்வது என்று தீர்மானிப்பது. இரண்டாவது எந்தெந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி  திப்புவின் படைகளை தோற்கடிப்பது. அதற்காக நிலசர்வே எடுக்க முடிவெடுக்கிறார்கள்ஆனால் போரின்முடிவில் திப்பு கொல்லப்பட்டாலும் பிரிட்டிஷார் சமாதானமடையவில்லைதொடர்ந்து வேறுயாரும் தாக்காமல் தங்களை இருக்க  உடனடியாக மதராஸ் ராஜ்தானியை அளக்கும் தேவையை உணர்ந்தார்கள்பொறுப்பை லாம்ப்டனுக்கு வழங்கினார்கள். 1799-ஆம் ஆண்டு திப்பு  கொல்லப்படுகிறார்.  1802 –ல் மேப் தயாரிக்கும் பணிதொடங்குகிறது.

லாம்ப்டன் குழுவினர் பரங்கிமலையில் தங்கி அந்த பணியை தொடங்கினார்கள்.  மதராஸின் நிலப்பரப்பை சிறுசிறு முக்கோணமாக பிரித்துக்கொண்டு அளக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முக்கோணமாக வரைந்துக்கொண்டேபோனார்கள். கிழக்கே கடல் வந்ததும் அந்த முக்கோணம் நிறைவுறும் . பிறகு அதை நீட்டித்து மேற்கு,வடக்குப்பக்கமாக முக்கோணங்கள் வரைந்தபடியே பயணிக்க ஆரம்பித்தார்கள்ஒவ்வொரு பத்து மைல்களுக்கும் ஒரு முக்கோணம் வரைந்துகொண்டே போனார்கள். அந்த முக்கோணத்தின் மூன்று புள்ளிகளில் மலைகளோ, ஆறோ, கடலோ இருக்கும். சமவெளி என்றால் இவர்களே செயற்கையாக ஒரு தூணை நிறுவியோ அல்லது பெரிய மூங்கில்கழியை நட்டு வைத்தோ அளந்தார்கள். இப்படியே அவர்கள் குமரி முதல் இமையம் வரை பரந்துக்கிடந்த  இந்த அகண்ட நிலப்பரப்பை சிறு சிறு முக்கோணங்களாக வரைந்து ஒவ்வொரு முக்கோணங்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தினார்கள். புள்ளிகளையும், இடங்களையும், திசைகளையும் வைத்து கடல்மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் எந்த புள்ளி உள்ளது. எந்த திசையில் உள்ளது. ஒரே முக்கோணத்தில் உள்ள மூன்று புள்ளிக்கும் உள்ள தொலைவு. ஒரு முக்கோணத்துக்கும், இன்னொரு முக்கோணத்துக்கும் உள்ள தொலைவு போன்றவற்றை துல்லியமாக கணக்கிட்டார்கள். இந்த முறைக்கு  கோணவியல் அளத்தல் (Trigonometrical Survey) என்று பெயர். இந்தியாவில் நடந்த இந்த மேப் தயாரிக்கும் வேலைக்கு Great Trigonometrical Survey என்று பெயர்இந்தியாவில் பின்பற்றிய இந்த முறையை இன்றும் மேல்நாடுகளில்  பல பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் மாணவர்களிடம் சிலாகித்து சொல்கிறார்கள்

இந்த வேலையை தொடங்கிய வில்லியம் லாம்ப்ட்டன் மேப் தயாரிக்கும் அர்ப்பணிப்பில்  உடல்நலம் குன்றி  தனது உயிரையே விட்டார்.    1823-ஆம் வருடம் நாக்பூர் அருகே உள்ள ஹான்காட் என்ற கிராமத்தில் இறக்கிறார். வில்லியம் லாம்ப்ட்டன் தென்னிந்திய பெண் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மட்டுமே. லாம்பட்டன் உயிரோடு இருந்த காலத்தில் அவரது பன்னிரண்டு வயது மகனையும் தனது மேப் தயாரிக்கும் பணிகளுக்காக ஊர் ஊராக அழைத்துச்சென்றுள்ளார். வில்லியம் லாம்ப்ட்டன் மறைந்தபிறகு அவரது உதவியாளர் ஜார்ஜ் எவரெஸ்ட் (ஆம் இவர் பெயரைத்தான் பின்னாளில் எவரெஸ்ட் சிகரத்துக்கு வைத்தார்கள்அந்தப்பணியை தொடங்குகிறார்எவரெஸ்டின் உதவியாளர் ஆண்ட்ரு ஸ்காட் வாக். இருவரும் ராதாநாத் சிக்கந்தர் என்ற இந்தியருடன் இணைந்து மேப் தயாரிக்கும் பணிகளை முடிக்கிறார்கள். லாம்ப்டன் மென்மையானவர் என்றால் எவரெஸ்ட் சற்று கோபக்காரராக இருக்கிறார். மேப் தயாரிக்கும் பணிகளில் உதவியாளர்களிடம் மூர்க்கமாக நடந்துக்கொள்கிறார். காடுகளில் தவறு செய்யும் வேலையாட்களை தண்டிக்கிறார். சுமைதூக்கும் நோயுற்ற வேலையாட்கள் கீழே விழும்போது சுட்டுக்கொல்கிறார். மெதுவாக செல்லும் குதிரைகளை சவுக்கால் விளாசுகிறார். சுமை தூக்கி வரும் குதிரை நொண்டி கீழே விழும்போது கோபத்தில் அதை சுட்டு கொல்கிறார். எத்தனையோ தடைகள். அடர்ந்த காட்டுக்குள் பலர் விஷப்பூச்சியால் கடிபட்டு இறக்கிறார்கள். காட்டுவிலங்குகள் தாக்குகின்றன. ஆட்கள் கிடைப்பதில் சிரமம். மலையேறும்போது பொருட்கள் வந்து சேர்வதில் தாமதம். மேப் தயாரிக்க வரும் உதவித்தொகை  கிடைப்பதில் தாமதம். எண்ணற்ற தடைகளைத்தாண்டி சோர்வடையாமல் முன்னேறி செல்கிறார்கள். பல நேரங்களில் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேகரித்த தகவல்களை எல்லாம் வைத்து மேப் தயாரிக்கும் வேலைகளையும் செய்யவேண்டும்இறுதியாக எவரெஸ்ட்டும் பணி ஓய்வுபெற  அவரது உதவியாளர் ஆண்ட்ரு ஸ்காட் வாக் அந்த பணியை தொடர்கிறார்

ஸ்காட் வாக்காலும் பணியை நிறைவு செய்ய முடியவில்லை. உடல்நலம் சரியில்லாமல் போகிறது. 1843 ஆம் ஆண்டு ராதாநாத் சிக்தர் என்ற வங்காளி இளைஞன் அந்தப்பணியை தொடர்கிறான்.  பழைய கணக்கீடுகளில் சிறுசிறு மாற்றங்களை செய்து இமையத்தை அளக்கத்தொடங்குகிறான்    முடிவில் எவரெஸ்ட் சிகரமே உலகின் உச்சம் என்று பரிந்துரை பரிந்துரைக்க  உலகம் ஏற்றுக்கொள்கிறது.. பனிச்சிகரத்திற்குப் பெயரிடப்படும்போது உள்ளுர் பெயர் முன்னுரிமை வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆனால், ஆண்ட்ரு ஸ்காட் வாக்கும், இராதானாத் சிக்தாரும் சேர்ந்த தங்கள் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்த திரு. எவரெஸ்ட்டின் பெயரை சூட்டுகிறார்கள்.  இந்த நீண்ட பயணத்தில் குமரி முதல் இமையம் வரை நீண்டிருந்த 2400 கிலோமீட்டரை அளக்க மொத்தம் எழுபதாண்டுகள் பிடித்தன.

தியோடலைட் என்ற நில அளவியல் கருவியை பற்றி இங்கு குறிப்பிடவேண்டும். லண்டனிலிருந்து இந்தியாவுக்கு கப்பலில் கொண்டுவந்த தியோடலைட் கருவியை மதராஸ் கடற்கரையில்தான்  முதன்முதலாக இறக்கினார்கள். விதவிதமான உருப்பெருக்கி ஆடிகளை நீளமான குழாய்களில் பொருத்தி 360 பாகையில் சுழலக்கூடிய சக்கரங்களை வைத்து பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட கருவி தியோடலைட்.   இந்த கருவி முதன்முதலில் இங்கு கொண்டுவரப்பட்டபோது பார்த்த எல்லாரும் மிரண்டிருக்கிறார்கள். இங்குள்ளவர்கள் கருவியைப்பார்த்து அது புதையல் எடுக்க உதவும் கருவி, என்றெல்லாம் நினைத்துள்ளார்கள். டெல்லியருகே சலீம் சிங் என்ற ஜமீன்தாருக்கு சொந்தமான அந்தப்புரத்தருகே  நிலஅளவை செய்யும்போது அங்குள்ள பெண்களை தியோடலைட் கருவி நிர்வாணமாக தலைகீழ் உருவமாக காட்டுவதாக வதந்தி பரவ பலரும் அந்த கருவியை களவாடவும் முயற்சித்துள்ளார்கள். அரைடன் எடைக்கு மேலே இருந்த இந்தக்கருவியை தூக்க பன்னிரண்டு பேர் தேவைப்பட்டுள்ளார்கள். யானைகளின்மீதும், குதிரைகளின் மீதும்  ஏற்றி கொண்டுச்சென்றுள்ளார்கள். தஞ்சை பெரியகோவிலின் கோபுரத்தின் மீதிருந்து கீழே விழுந்து உடைந்திருக்கிறது. இதைப்பற்றி ஜான் கே எழுதிய The Great Arc என்ற புத்தகத்தில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம். இந்த கருவி பலமுறை பழுதடைந்து சீர்செய்யப்பட்டு பிறகு லண்டனிலிருந்து புதிதாக கொண்டுவந்துள்ளார்கள்.   ஆரம்பத்தில் பிரமாண்டமாக இருந்த தியோலைட் கருவியையும் காலப்போக்கில் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து உருவத்தை குறைத்துக்கொண்டே வந்தார்கள். தியோடலைட் கருவியை சுமந்துக்கொண்டு இந்தியாவின் குறுக்கும்,நெடுக்குமாக  சென்ற இந்த நீண்டப்பயணம் பற்றிய தகவல்களை ரமணனின் கடைசிக்கோடு புத்தகத்தில் படிக்கலாம்.  

இன்றைய செயற்கைக்கோள் காலத்தில் நாம் நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள தூரத்தை அளந்துகொண்டிருக்கிறோம். இப்போது மேப் தயாரிப்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இருந்தாலும் அன்றைய காலத்தில் இந்தப் பணியில் தங்கள் உயிரையே கொடுத்துள்ள மனிதர்களை நினைத்தால்  பிரமிப்பாக உள்ளது. லாம்பட்டனின் மகத்தான பணியை நினைவுகூறும் வகையில் 2003- ஆம் ஆண்டு பரங்கிமலையில் சிறு சிலையொன்றை நிறுவினார்கள். லாம்பட்டன் முதல்முதலாக அந்த பிரமாண்ட மேப் தயாரிக்கும் பணியில் அளந்த  புள்ளிகள் எது தெரியுமா? பரங்கிமலையிலிருந்து பல்லாவரத்தையும், பட்டினப்பாக்கத்தையும் வரைந்தது.  இந்த மூன்று பகுதிகளுக்கும் இடையே இருந்த தூரத்தைத் துல்லியமாக அளந்து முதல் மேப்பை உருவாக்கியபிறகே அதைப் படிப்படியாக விரிவாக்கியபடியே இந்தியாவெங்கும் பயணித்தார்கள்.  இங்கிருந்து தொடங்கிய பயணம்தான் இமையத்தில்  முடிவடைந்ததுபரங்கிமலையை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அது எவரெஸ்ட்டின் சுருக்கப்பட்ட வடிவமாக பெரிய முக்கோணத்துக்குள் இருக்கும் ஒரு சிறுமுக்கோணமாக தெரியும்.   மதராஸ்தான் எத்தனை வரலாற்று சாதனைகளை, அற்புத பொக்கிஷங்களை தனக்குள் ஒளித்து வைத்துள்ளது     

முந்தைய தொடர்கள்:

2.ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை – https://bit.ly/3db1vWN
1.தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் – https://bit.ly/2J0okyC

  

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
 2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
 3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
 4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
 5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
 6. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
 7. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
 8. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
 9. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
 10. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
 11. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
 12. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
 13. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
 14. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
 15. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
 16. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
 17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
 18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்