மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

– கிளின் பார்லோ

மதராஸ் – மண்ணும் , கதைகளும் -8 

கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின்  கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்த தொடர்

இப்போது மெட்ராஸ் பற்றி எழுதப்படும் எல்லா கட்டுரைகளுக்குமான ஆதாரங்கள், தரவுகள் எல்லாமே பிரிட்டிஷ்காரர்களால் ஆங்கிலத்தில் முறையாக ஆவணப்படுத்தப்பட்டவை. நுட்பமான தகவல்களோடு, படங்களோடு குறிப்பாக அந்தக்கால நிலவியல் வரைபடங்களோடு பிரிட்டிஷ் ஆவணங்கள் கிடைக்கின்றன. கடுமையான உழைப்பில் பண்டைய தமிழ் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து  மொழிப்பெயர்ப்பது போன்ற வேலை இல்லை பிரிட்டிஷ் ஆவணங்களிலிருந்து தகவல்களை எடுத்து கட்டுரைகள் எழுதுவது.  நமது தமிழ்மரபிலேயே  கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளில் ஆவணப்படுத்துதல் என்று வரலாற்றை பதிவுசெய்வது மரபில் ஊறியிருந்தாலும் அவை எல்லாம் பெரும்பாலும் அரசர்களின் பெருமைகளை புலவர்கள் பாடுவதோ, சித்த வைத்தியக்குறிப்புகளோ, அல்லது கடவுள் வாழ்த்தோ , அல்லது  அகத்திணை, புறத்திணை பாடல்கள் என்ற மட்டிலுமே  நின்றுவிட்டன.ஆனால் பிரிட்டிஷார் வந்தபிறகு ஆவணப்படுத்துதல் புதுப் பரிமாணத்தை அடைந்தது.

இந்த நிலத்தை அங்குலம் அங்குலமாக அளந்து மேப் தயாரித்தார்கள். இங்குள்ள ஒவ்வொரு ஜாதியையும் அதன் எண்ணற்ற துணை ஜாதிகளையும் குறித்துக்கொண்டார்கள். ஒவ்வொரு ஊரையும் அங்குள்ள சாதாரண மக்கள் வாழ்வியல், சமுக , உணவுப்பழக்கவழக்கங்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் பிரிட்டிஷார் தொகுக்க ஆரம்பித்தார்கள். காரணம் இந்தியாபோன்ற பல்வேறு முரண்பட்ட சமூக பழக்கம், நம்பிக்கை கொண்ட சிக்கலான நிலவமைப்பை அதற்குமுன்பு வேறெங்கும் பார்த்ததில்லை. தேசத்தை திறமையாக நிர்வகிக்க தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள்.  1805 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் வில்லியம் பெண்டிங் எழுதிய ஒரு குறிப்பு இன்றும் எழும்பூரில் ஆவணக் காப்பகத்தில் உள்ளது.

அதில் அவர், “நமது பிரிட்டிஷ் ஆட்சியில் நிர்வாகம் தொடர்பான ஆவணங்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருவதால் அதை எல்லாம் பாதுகாக்க ஒரு கட்டடம் மட்டும் அரசு அலுவலர் தேவை” என்று சொல்லியுள்ளார். அவருடைய குறிப்பை ஏற்று அன்றைய ஜார்ஜ் கோட்டையின் வடக்கு மூலையில் ஒரு சிறு கட்டிடத்தை உருவாக்கினார்கள். அதுதான் தமிழ்நாட்டின் முதல் ஆவணக்காப்பகம். பிறகு அந்தக்கட்டடம் சென்னை எழும்பூருக்கு மாற்றப்பட்டது.

சென்னப்ப நாயக்கர் பிரான்சிஸ்டேவுக்கு சென்னையை விற்ற ஆவணம் (தங்கமுலாம் பூசப்பட்ட தகடு) பிர்மான் என்று சொல்வார்கள் ஒன்று இங்குள்ளது. அதுதான் இங்கு வந்த முதல் ஆவணம். தஞ்சாவூரின் மோடி ஆவணங்கள் முதல் டச்சுக்காரர்கள் ஆவணங்கள் வரை அந்நாளில் நரிவேட்டை எங்கெல்லாம் நடந்தன என்ற மேப் வரை எல்லாமே இங்குள்ளன. ஆவணங்கள் மட்டுமல்ல. அங்கு ஐந்து லட்சம் அரிய புத்தகங்கள் உள்ளன. அது ஒரு அறிவு சுரங்கம். இப்போது தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக்காப்பகம் ( Tamil Nadu State Archives for Historical Studies ) என்ற பெயரில் இது செயல்படுகிறது.

ஆவணத்தயாரிப்பில் எட்கர் தர்ட்ஸனின் உழைப்பு மகத்தானது.  எழும்பூர் மியூசியத்தில் 1885–1908 ஆம் ஆண்டுகளில் மேற்பார்வையாளராக இருந்தவர் எட்கர் தர்ட்ஸன்.  இவரும், கே.ரங்காச்சாரி என்ற இந்தியரும் இணைந்து Castes and Tribes of Southern India என்ற ஏழு பெரிய ஆவணங்களை உருவாக்கியுள்ளார்கள். தென்னிந்தியாவில் முந்நூறுக்கும் மேற்பட்ட ஜாதிகள் (பழங்குடி தனி) பற்றி ஆராய்ச்சி செய்து பெரிய ஆவணத்தை உருவாக்கியுள்ளார். அந்தக்காலத்தில் எட்கர் தர்ட்ஸன் ஆராய்ச்சியின்பொருட்டு ஒவ்வொரு கிராமமாக சென்று உங்கள் ஜாதி என்ன? உங்கள் தொழில் என்ன? உங்கள் வருமானம் என்ன? உங்கள் வாழ்க்கைத்தரம் என்னவென்று கேட்டு அவர்களை பற்றி தகவல்களை சேகரிப்பாராம். என்ன இருந்தாலும் நாம் படிக்காதவர்கள்தானே? நம்மை கொன்று நமது உடல்களை பதப்படுத்தி எக்மோர் மியூசியத்தில் வைத்துவிடுவார்கள் என்று அந்தக்கால மக்களில் பலர் பயந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தூக்குமேடைகளை பற்றியும் தூக்குப்போடும் கயிற்றை நவீனப்படுத்தும் ஆராய்ச்சி செய்யவும் பிரிட்டிஷார் நமது தகவல்களை கேட்கிறார்கள். தகவல்களை கொடுத்தால் நம்மை தூக்கில் போட்டுவிடுவார்கள் என்று பயந்துள்ளார்கள். அதை மீறியும் அவர் ஜாதிகளை பற்றி எடுத்த கணக்கெடுப்பே இன்று அனைவராலும் கட்டுரைகள் எழுத, நாவல் எழுத பயன்படுகிறது.

பிரிட்டிஷ் காலத்தில் மதராஸில் தொடங்கப்பட்ட அருங்காட்சியகத்தை மேற்பார்வையிடும் பொறுப்பை பிரிட்டிஷ் அதிகாரிகள்தான் செய்தார்கள். அவர்களில் அநேகர் மருத்துவர்கள். இந்தியாவில் பல ஊர்களிலிருந்து பணிமாறுதலாகி அல்லது இராணுவத்தில் மருத்துவர்களாக இருந்து பிறகு பணியிடம் மாறி மெட்றாஸ்க்கு வந்தவர்கள். அதில் டாக்டர் ஜார்ஜ் பைடி குறிப்பிடத்தக்கவர். பைடிக்கு பிறகு எட்கர் தர்ஸ்டன் என்பவர் வருகிறார். இவர் இலண்டனில் உள்ள கிங்சு கல்லூரியின் மருத்துவப்பள்ளியில் படித்திருந்தாலும் மருத்துவத்தொழிலை தொடரவில்லை. மெட்ராஸ் அருங்காட்சியக பொறுப்பை ஏற்கிறார். இவருக்கு பழங்கால நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் அதிகம். அதைப்போல இறந்த விலங்குகளின் எலும்புக் கூடுகளை சேகரிப்பதில் ஆர்வம் அதிகம். அதைவிட ஆர்வம் இறந்துபோன மனிதஉடல்களை சேகரிப்பது. திராவிட சாதிகள் பற்றியும் பழங்குடியின மக்கள் பற்றியும் ஆய்வு செய்யும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசு தர்ஸ்டனுக்கு வழங்கியது. எட்டாண்டுகள் கடுமையான உழைப்பில் இந்த ஆய்வு நடக்கிறது. ரங்காச்சாரி அய்யங்கார் இவருக்கு உதவியாளராக சேர்கிறார். அந்த ஆய்வின்முடிவில் தென்னிந்திய இனவரைவியல் குறிப்புக்கள் (Ethnographic Notes on Southern India) என்னும் தலைப்பில் இரண்டுதொகுதிகளை வெளியிடுகிறார். தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும் (Castes andTribes of South India) என்ற நூலை ஏழு தொகுதிகளாக வெளியிட்டார். அந்த நூலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த இரண்டாயிரம் சாதிகள் மற்றும் பழங்குடியினரது இனவரைவியல் தகவல்கள் பழக்கவழக்கங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டுள்ளன. எட்கர் தர்ட்ஸனுக்கு மனித உடல்கள் கிடைப்பது சிரமமாக இருந்துள்ளது.    காரணம் இங்குள்ள உடல்களை எரிக்கும் பழக்கம். உடல்களை புதைத்தால்கூட அதை தோண்டி எடுக்கமுடியாது. காரணம் இங்குள்ள மக்களின் நம்பிக்கை. அதற்காக அநாதை சடலங்களை சேகரிக்க ஆரம்பித்தார்.

இந்த உடல்களை வைத்து என்ன செய்தார் என்றால் தினமும் கையில் ஒரு டேப்பை வைத்துக்கொண்டு அந்த மண்டையோட்டை அளப்பார். பற்களை ஆய்வு செய்வார். எலும்புகளின் உறுதியை சோதிப்பார். ஆமாம் தர்ட்ஸன் செய்தது மானிடவியல் (Anthropology) என்னும் மனித இனம் பற்றிய அறிவியல் ஆய்வு. திராவிட குடும்பங்களில் எப்படி மண்டையோடு (அப்போதெல்லாம் டிஎன்ஏ ஆய்வு வந்திராத காலம்) உள்ளது. இவர்கள் எல்லாரும் ஒரே இனக்குழுவா? அல்லது ஆரியர்களாக? இந்த மண்ணின் பூர்வகுடிகள் யார் என்று ஆய்வுசெய்துக்கொண்டிருந்தார். இவரென்ன  சுடலைமாடன் சாமிபோல இப்படி பிணத்தை வைத்து ஆய்வுசெய்கிறாரே என்று எல்லாரும் பயந்தார்களாம். ஆனால் தர்ட்ஸன் பார்க்கும் வேலைதான் அப்படி அச்சமூட்டியதே தவிர அவர் கனிவானவர். இந்த மண்ணை நேசித்த ஆங்கிலேயர்களில் அவரும் ஒருவர். மண்ணையும் மக்களின் உணர்வுகளையும் மதித்து அவர்களின் கலாச்சாரத்துக்கு மதிப்பளித்தவர்.

தர்ட்ஸனின் ஆங்கில நூல்களை க.ரத்னம் மொழிப்பெயர்த்துள்ளார். ரத்னம் தஞ்சை சரபோஜி மன்னர் அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நூலின் ஏழு தொகுதிகளையும், ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்ற தலைப்பில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்காக மொழிப்பெயர்த்துள்ளார்.

எட்கர் தர்ஸ்டன் ஒரு மானுடவியல் ஆய்வாளர்.  ஊர், ஊராக அலைந்து மண்டையோடுகளை சேகரித்து ஆய்வு செய்தார். தோடர்,இருளர்,பளியர் , காடர் என்று தேடித்தேடி காடுமலை எங்கும் சுற்றி அவர்களோடு தங்கி அவர்களின் திருமணம், இறப்புச் சடங்குகளை உன்னிப்பாக கவனித்து எல்லாவற்றையும் பதிவுசெய்துள்ளார். பழங்குடிகளை தேடியலைந்த தனது பயணம் பற்றிக்கூட தர்ட்ஸன் அவரே எழுதியுள்ளார். ஒருமுறை வால்பாறைக்கு போனபோது அங்குள்ள மக்கள் தர்ட்ஸனை ஒரு கட்டிலில் உட்காரவைத்து தூக்கிச்சென்றிருக்கிறார்கள். யானைகளின் தொந்தரவு. அந்த பழங்குடி மக்கள் தானிய மூட்டைகளைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு உறங்குவார்களாம். யானைகள், அவர்களின் தூக்கத்தைக் கலைக்காமல் தானியங்களை தின்றுவிட்டு அமைதியாக போய்விடுமாம். தர்ஸ்டன் பதிவு செய்த தகவல்கள் எல்லாமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  Castes and Tribes of Southern India பிடிஎப் வடிவில் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. அந்த நூலில் இந்தியர்களின் மனித மண்டையோடு படங்கள் பக்கத்தில் அளவீடுகள் அவர்கள் என்ன ஜாதி என்று விலாவரியாக குறிக்கப்பட்டிருக்கும்.

எட்கர் தர்ஸ்டனின் நூலில் சில தகவல் பிழைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. கொங்கு வெள்ளாளர் சமூக திருமணங்களில், இறப்புகளில் பிராமணர்களின் பங்கு இருக்குமென்று தகவல் உள்ளது. ஆனால் வெள்ளாளர்  வீட்டு நிகழ்வுகளில் பெரும்பாலும் மருத்துவர்கள் (நாவிதர்கள்)  பங்கேற்பார்கள். பின்னாட்களில்தான் வெள்ளாளர்,பிள்ளைமார் வீட்டு விசேஷங்களில் பிராமணர்கள் உள்ளே வருவது நடந்திருக்கிறது. அதுபோலத்தான் நாடார் சமூக நிகழ்வுகளில் பிராமணர்கள் உள்ளே வந்ததும் நடந்தது. செட்டியார்கள் பொதுவாக வணிகர்கள். வணிகம் செய்ய பர்மா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று போனார்கள். ஆனால் எட்கர் தர்ஸ்டன் அவர்களை நாடோடிகள் என்று பதிவு செய்திருப்பார்.  மதராஸ் பற்றி எண்ணற்ற கட்டுரைகளை எழுதிய நரசய்யா நூல்களில்கூட  சில  விடுபடல்கள் இருக்கும். மதராசப்பட்டிணம் நூலில்  பிரிட்டிஷார் விளையாடிய நரிவேட்டை என்ற வேட்டை பற்றி குறிப்பிடும்போது ஓநாய் வேட்டை என்று அச்சடித்துள்ளார்கள். மதராஸில் ஓநாய்கள் வசித்ததில்லை. நரிகள் மட்டுமே இருந்தன.

பொதுவாக எந்த வரலாற்று ஆவணங்கள் என்றாலும் அதில் ஒரு சில தகவல் பிழைகள் இருக்கும். அது மனித தவறுகளால் நடக்கும். பின்னாட்களில் வரும் வரலாற்றாசியர்களால் அது திருத்தப்படும். பொதுவாக இந்தியா போன்ற பன்முக தேசத்தில் ஒரு அயல்நாட்டவரால் தொகுக்கப்படும் ஆவணங்களில் உள்ள இதுபோன்ற சிறுசிறு தவறுகள் உறுத்தலான விஷயமும் இல்லை. இதுபோன்ற சிறுசிறு தவறுகளை எல்லாம் ஓர்  அளவுகோலாக வைத்துப்பார்த்தால் நம்மால் எந்த நூலையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆவணங்கள் என்பது வெறுமனே கடந்தக்காலத்தை காட்டும் கண்ணாடி மட்டும் இல்லை. நாம் யார்? வரலாறு எப்படி அதிகாரவர்க்கத்தால் மாற்றப்பட்டது? என்று தெரிந்துக்கொள்ளவும்,  நாம் இழந்த உரிமைகளை அடையும் போராட்டத்துக்கு தேவையான ஆயுதமாகவும் ஆவணங்களே உள்ளன.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
 2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
 3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
 4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
 5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
 6. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
 7. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
 8. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
 9. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
 10. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
 11. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
 12. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
 13. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
 14. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
 15. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
 16. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
 17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
 18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்