நாவ மரத்தின் கதை 

எப்பிடி ஆரம்பிக்கிறதுன்னே தெரில .. முன்பு ஒரு காலத்திலே சொன்னதுமே ரொம்ப பழசோன்னு ஓடிருவாங்களோன்னு கூட ஒரு பக்கம் சஞ்சலமா இருக்கு .

இருக்கட்டும் …

பழச..என்னதான் மறைச்சாலும் கைலில உள்ள பொத்தலை மறைக்க முடியுமா என்ன?

அப்பன் ஆத்தாளையும்,பழசுன்னு ஒடுங்குன சொம்பு மாதிரி மூலையில தூக்கி போட்டுடவா முடியும்.

போவட்டும்.விஷயத்துக்கு வர்றேன் .

கரண்ட், கார், ஏரோபிளேன்,திங்க ஸ்பூனு, நடக்க ஷூன்னு ஏகப்பட்டதா மாறிட்டு.  விஞ்ஞான யுகத்துல நாங்க பூந்து  பொளந்துகட்டி வாழறோம்னு சொல்லுறாக ..

பிசா ,பர்கர் ,அட என்னத்த சொல்ல , ‘செல்’லாமே கைல குட்டிப்பிசாசு…அதுல நாலு பட்டன குத்தி அமுக்கி சொன்னா அடுத்த அஞ்சு பத்து நிமிஷத்துல பேய் மாதிரி வந்து பைக்ல நின்னு சார் ..இந்தா …துட்டு குடு ன்னு கேக்கறான், ஒருத்தன். அவன் யாரு? திங்கறத  சப்ளை செய்றவனாம்.

காலம் மாறிடிச்சிங்கிறாங்க

அட கழுதை மாறட்டும்

எவன் வேணாங்கறான்..

மண்ணுல வெளஞ்சத ஊதித் தின்னாமா  என்ன மண்ணாங்கட்டியோ புதுசு புதுசா தினுசு தினுசா தின்னுவச்சு ஆஸ்பத்திரிக்கு காசு கொட்டரானுங்க.

ஆவி புடிக்காம சுத்துற பாவிப்பய வீட்டுல கூட இப்ப சின்னஞ்சிறுசுக குக்கூ ..குக்கூ” ன்னு கத்துதுக ..

அட..இது என்னடா புதுசான்னு காது கொடுத்து கேட்டா. ரொம்ப பழசுங்க பேசற பேச்சை மடக்கி கிடக்கி போட்டு கத்திக் கூச்சல் போடுதுங்க ..

இப்ப என்னடா ஆச்சி? பழசுக்கு?ன்னு கேட்டு வைக்கணும் .

எவனும் இதுவரைக்கும் மாட்டல …
எங்கூட்டு ஒருவயசு ஆவாத பொடிசு தெனக்கும் மூணுவாட்டி சாப்பிடறதுக்கு இதத்தான் பாக்குது ..ஆனா அதுல ஒரு உசுறு தைக்கிற மாதிரி ஒண்ணு கிடக்கத்தான் செய்யுது.

“அன்னக்கிளி அன்னக்கிளி

அடி ஆல மரக்கிள வண்ணக்கிளி

நல்லபடி வாழச் சொல்லி

இந்த மண்ணக் கொடுத்தானே

பூர்வக்குடி..”

பூர்வக்குடின்னதும் ஆதிவாசின்னு சொல்லி அங்கலாய்க்காதீங்க..

ஆமாம்..ஆண்டவன் பொறக்கறதுக்கு முன்னாடி வாழ்ந்தவங்கன்னு இந்திரன்னு எழுதுற ஆசாமி கெட்டியா சொல்லிருக்கு ..

பூர்வகுடிங்க அடுத்தவங்க வாழணும்னுதானே பூமிய பொன்னாக்கி விட்டுட்டுப் போயிருக்காங்க ..

அத நாம உக்காந்து தின்னு ஊதி விட்ற வேணாம். சொல்லிபுட்டேன் ..

இந்த சத்தத்தை கேட்டதும் ராப்பூரா தூக்கம் கெட்டுப்போயி எழுந்து உக்காந்து   நாலு வார்த்தை நாமளும் தோணுறத எழுதிவிடலாம்னு இருட்லயே எழுந்து உக்காந்து முழிக்கிறேன் ..எம் பொஞ்சாதி “சீ படு..பேய் உலாத்துற நேரத்துல நீயும் ஒரு பேய் மாதிரி ..”ன்னு ஒரு அதட்டல் போட்டா…வேற வழி ..

நத்தை மாறி லுங்கிக்குள்ள உடம்புவிட்டுட்டு கெடந்து நவுத்துனேன்..ஆனாலும் மனசு ஆறல….எங்கூரு …எங்க ஜனம் ..அட…புடிச்ச பொண்ணு கட்டித் தழுவுற மாதிரி தோள்ல தொட்டுப் போற .புங்கக் காத்து..இதெல்லாம் கண்ணுக்குள்ள வந்துபோகுது ..ஒரு அம்பது அறுவது வருசத்துக்கு முன்னாடி இருக்குற கதைய சொல்றேன் .

நாலு நாலரை வயசு இருக்கும். விடிஞ்சும் விடியாம டவுசர் கழல்றது கூட தெரியாம ஓடிபோயி நிக்கிற இடம் நாவ மரம் .

அது அண்ணாந்து பாத்தா இரண்டு பனமரம்  உசரமா கைய்ய கால நீட்டி பெரிசா ஆகாயம் கணக்கா நிக்கும் .

நான் வர்றதுக்கு முன்னாடி மூக்கு ஒழுகிகினு ஊர்பசங்க வந்து நின்னு நாவ பழத்த ஊதி ஊதி எடுத்து தின்னுகிட்டே டவுசர்ல பதுக்கிக்கிட்டு இருப்பாங்க .

இதுல கொஞ்சம் பெருசுங்களும் சேர்ந்துக்கும் .

டேய்..டேய்….எல்லாத்தையும் நீயே பொறுக்குனா எப்படி …இந்த மேக்குப் பக்கம் பொடிசுங்க வரக்கூடாதுன்னு அதட்டி அவங்களும் பொறுக்கி திம்பாங்க ..

எனக்கு என்ன பண்றதுன்னே  தெரியாது ..ஓடி ஓடி தரயில விழுந்து கிடக்கிறதை கையில வச்சிக்கிட்டு வாயில ஒண்ணு போட்டு திம்பேன் .

நாவப் பழக் கொட்டை கொஞ்சம் பெருசு …வாயில நாக்குல உருட்டி மேல தோலோட கடிச்சி உள்நாக்குக்குள்ளயே மாவு மெஷின்ல மாட்ன புளியங்கொட்டை மாதிரி லாவகமாக சாப்பிட்றுவேன்.

அத நீங்க சாப்டுப்பாக்கணுமே?

அப்பாடா …தேவாமிர்தம். எங்களுக்கு மேல் தோலு  கொஞ்சம் கசக்குறமாறி தெரியும் .ஆனா அது அம்புட்டு ருசி .

நாலஞ்சு நாவப்பழம் சாப்பிட்டதும் நாக்கு கறுத்து கலராயிடும்,

இத வச்சிதான் எங்கப்பா ,எங்கடா போயிட்டு வந்தேன்னு புளிய விலார்ல விளாசு விளாசுன்னு  விளாசுவாறு .

நாவ மரம் போகலேன்னு அடிச்சு அய்யனார் மேல சத்தியம் பண்ணாலும் கடைசில இந்த நாக்கு காட்டிக் கொடுத்துபுடும் .

அதான் அந்த நாவ மரத்துமேல கொஞ்சம் கோபம் .எதுக்கு நாவ பழத்துல கலரு…அந்தக் கலர் இல்லேன்னா சத்தமிலாமா தப்பிசிருக்கலாம்னு நெனப்பு..

நாவ மரத்த தினமும் நாங்க மந்திரிச்சி  சுத்துவோம்,. வருசத்துல ரெண்டு மூணு மாசம் நாவ மரம் தான் கோயிலு …

கும்பிட தெய்வம் தான் நாவப்பழம். நாவப்பழம் கதை கேட்டா நீங்க சிரிப்பீங்க ..

நாவப்பழம் வீசற  காத்துக்கு ஓ..ஓ…ன்னு கிளைங்க ஒண்ணுக்கு ஒண்ணு ஆடி பழம் கீழ பொத்து பொத்துன்னு விழும் .

அந்தா அந்தாண்டி தூரத்துல இருந்து பழம் விழுந்தா மண்ணுல நசுங்கி விழாதா என்ன?

அப்படி கொஞ்சம் நசுங்கி விழற நாவப்பழத்துக்குதான் ருசியும் ஜாஸ்தி .பொறுக்க போட்டியும் ஜாஸ்தி .

கீழ விழுந்த நாவப் பழத்தை எடுத்து ஒட்டின மண்ணு போக  ஊதரதைப் பாத்தா ஏதோ சூடான சின்னக் கொழுக்கட்டயை ஊதி சாப்பிடற மாதிரி தெரியும் .

அப்படி சாப்பிடும்போது போக்கத்தப் பயலுங்க .நம்ம ஜோடிங்கதான் “ டேய் பாத்து சாப்டுடா ..நெருப்பு பத்திக்க போவுது ”ன்னு கிண்டல் பண்ணுவானுங்க .

இந்த ஊதற கதைய  கோவணாண்டி முருகன் ,அவ்வையார் கதைய முடிச்சுபோட்டு பாக்குது ..

அட ஆமாங்கறேன் ..அவ்வையார் அக்கடானு காட்ல நடந்து போக அங்க முருகன் நிக்க,கீழ கிடந்த நாவப் பழத்தை கிழவி  எடுத்து ஒட்டின  மண்ண ஊதி நவுத்த – இதப் பாத்த முருகன் “என்ன பாட்டி பழம் சுடுதா?” அப்படின்னு கேக்க முழிச்சா பாட்டி. ஓ.. அதான் சுட்டபழம் ..சூடாத பழம் கதையான்னு புரிஞ்சிக்கிட்டு “அட..இந்த எழவு நமக்குத் தெரியாம போச்சேன்னு” அரைநாழி அசந்து நின்னா  தமிழ்க்கிழவின்னு கேட்ட கதை.

அந்த புராணக் கதையாட்டம் நிசத்துல நாவ மரம் சுத்தி நிறய கதைங்க நடக்கும் .

எங்கூரு நாவ மரம் குளத்தங்கரை பக்கத்துல தலைய விரிச்சி போட்ட பச்சை சாமியா கிடக்கும். குளத்த சுத்தி பாஞ்சிபேரு நடந்து போற அளவுக்கு பாதை…

சதுர வடிவுக்குள்ள இருக்குற குலத்துலதான் ஊர் ஜனங்க மொட்டை அடிச்சி ,காது குத்துற வரைக்கும் சடங்கு செய்வாங்க. ஆடி ஓடி வாழ்ந்தவங்க சுடுகாட்டுல அடக்கம் பண்ணி சாங்கியம் பண்றது கொளத்தாங்கரையில தான் .இங்கதான் ஏகாலி,வண்ணான்,கொட்டடிச்சவன், பள்ளம் தோண்டினவன்னுட்டு எல்லாருக்கும் ஊர் வழக்கப்படி காசப் பிரிச்சி குடுப்பாங்க .

முக்கியமானவங்க தவிர ஊருல உள்ளவங்க ,பசங்க எல்லாம் பக்கத்துல நிக்குற நாவ மரம் பக்கம் அண்டி நின்னு அதை எட்டிப் பாத்து தெரிஞ்சுக்குவாங்க .

நாவ மரம் பாதி நேரம் வெய்யில்ல போற வர்ற பாதசாரிகளுக்கு பெரிய நிழற்குடை தான்.

ஒருமுறை நாவற் பழம் மரத்துலயிருந்து அடிக்கிறதுக்கு இளவட்டப்பயலுக எல்லோரும் முடிவு செஞ்சோம் .

ஆளாளுக்கு பக்கத்துல வயக்காட்டு வரப்புல ,பாதையில ஒதுங்குன சின்னதும் பெருசுமாக  வீசற அளவுக்கு ஜோபியில கல்லு அள்ளி போட்டுகிட்டு பந்தயம் வச்சி யார் அதிகமா அடிச்சி நாவப்பழம் சேக்கிறதுன்னு போட்டி போட்டு ஆரம்பிச்சோம் .

அதுக்கு அங்கு வந்த கவுண்டர் வயசானவர் நடுத்தரமா இருந்து தீர்ப்பு சொல்றேன்னு தானே வந்து நின்னுக்கிட்டார்.

சரி.கிடக்கட்டும்னு நாங்க கல்ல குறிபாத்து நாவப்பழம் தொங்குற இடம்பாத்து வீசுனோம்.

நான் என்னமோ அர்ச்சுனன் குறிபாத்து அடிக்கிறமாதிரிதான் வீசறேன் .ஆனா அது சரியாப் படாம எங்கெங்கயோ போயி  விழுந்து என்னை இம்சை கொடுக்குது .

பசங்க விடற கல்லுல டக் டக்குன்னு விழுது .அது எப்பிடின்னு தெரியல .பெரியவர் கண்ணடிச்சார் .

“என்னாண்ணேன்”

“இங்க வாடா”

“போனேன்”

“கல்லை கண்ணுல வச்சி அடிச்சா எப்படிடா பழம் விழும் …கல்லு கைய நீட்டி வீசுற தூரம் பாத்து கிளையயும் பாத்து வீசுடா …அப்புறம் பாருன்னார்
அதே மாறி செஞ்சேன் .

 

கல்லு விர்ண்னு போயி ஒரு கிளையில பட்டு ஆடி நாவல் பழம் பொலபொலன்னு கொட்டிச்சு .

அதே சமயத்துல அய்யோன்னு  கருவாப்பய தோஸ்து மண்டைய பிடிச்சிக்கிட்டு கீழ விழுந்தான் .அடப்பாவி!. என் கல்லு அவன் மண்டைய பதம் பாத்திருச்சி.

அதுவரைக்கும் பேசாமலிருந்த பெரியவர் “டேய் மண்டைய உடைச்சிட்டியா”ன்னு கூச்சல் போட்டுக் காட்டிக் கொடுத்துட்டார் .எங்கப்பா தறிக்குழிலருந்து எழுந்து கோவணத்துணியோட ஓடி வந்து “ஏண்டா ஊட்டோட அடங்கி இர்ரான்னா …ஊர் வம்பையா  வாங்கிட்டு வாறேன்னு காலால எட்டி உதச்சி துரத்துனாரு.

நம்புறீங்களோ இல்லியோ …டவுசர் கழண்டு விழுந்தது தெரியாம நான் கண்ணு மண்ணு தெரியாம அடிக்கு பயந்து காஞ்சிபோன வயக்காட்டுப்பக்கமா ஓடுறேன்.துரத்தராரு.அதும் பக்கத்துல அப்பதான் சோளக்கதிரு அறுத்த பூமி..அதுல காலு குத்த ஓடிப்போய் கத்தாழை முள்ளு வரப்புக்கு பின்னாடி ஒளியறேன்..அங்கயும் வந்து மயிரப்புடிச்சி தூக்கி இழுத்து உதைக்கிறாரு ..

ஒத்தையடிப் பாதையிலே வெக்க வாங்கி சுமந்துகிட்டுப் போன ஒருத்தர் நியாயம் கேக்கறார் .”ஏன்யா  பெத்த புள்ளய போட்டு அடிக்கிறே,,”

“ஏன்.நீ போயி ஊட்ல ஒக்கார வச்சி சோறு போடு .இட்டுகிட்டு போ…”

இதுக்கப்புறம் வாயே தொரக்காம “என்னா அப்பன்யா நீ”ன்னு போயிட்டார்..

தேம்பித் தேம்பி அழுது அடுத்த நாள் எழுந்திரிச்சேன் ..நாவ மரம் நினைப்பு அடியோட வரலை .

இரண்டொரு நாள் கழிச்சு சொரடு ஒண்ணு செஞ்சி வந்து அப்பா ,”வாடா “ன்னு என்ன கூப்டுகிட்டு போயி நாவக்கிளைய உலுக்கி பழம் எடுத்துக்கோன்னு சொன்னார்.

பழம் ஜோபி நிறைய கிடைச்சது .ஆனா இப்ப நிசமாவே நாவப்பழம் கசப்பா இருந்தது .

முன்ன நானே ஓடிப்போய் பசங்களோட பசங்களா முண்டியடிச்சு பொறுக்கி சாப்ட நாவப் பழம் ருசியே அலாதி.

கொஞ்ச நாள் பேசாம இருந்த அடிபட்ட சிகாமணி மெதுவா வந்து சொன்னான் …”டேய் நீ அடிச்ச கல்லு என் மண்டைல விழல .நான் அடிச்ச கல்லே என் மண்டைல  வந்து விழுந்துச்சு “

என்னத்த சொல்ல?

எப்பவுமே பாவம் ஒருபக்கம். பழி ஒரு பக்கம் .திரும்ப போய் “ஏண்டா என்ன அடிச்சேன்னு அப்பன கேக்க முடியுமா ?கேட்டாதான் வாங்கின அடி மறந்திடுமா ?போடான்னு விட்டுட்டேன் .ஒரு நாள் அப்பா ராத்திரி, நாவமரம் நம்மூரு சாமிடா..அந்தப் பழம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது .எந்த வியாதியும் வராது .அதோட பட்டைய பொடி செஞ்சி தண்ணில கரைச்சு குடிக்கலாம்னார் .

ரத்தத்துக்கு ,சிறுநீரகத்துக்கு,கோழைக்கு ,சுறுசுறுப்புக்கு எல்லாம் நல்லது நாவப்பழம் சாப்டுன்னார் .ஆனா வம்ப கொண்டுவந்து சேத்துடாதே …போடான்னார்.

இவரு சொல்றது நம்பறதா வேணாமா ,அடிப்பாரா மறுபடியும் அப்படின்னு நினைச்சிக்கிட்டு நாவப்பழம் அதிகம் சாப்பிடறதை விட்டுட்டேன் .கொஞ்சம் கொஞ்சமா போறதையும் குறைச்சிக்கிட்டேன் .

நாவமரம் கீழே பல பஞ்சாயத்துக்கள் நடக்கும்  .புருஷனை விட்டு ஓடிப்போன பொண்ணு ,சாராயம் குடிச்சிட்டு வந்து வம்பிழுத்த கதைன்னு கொஞ்சம் அங்க நடக்கும்.

நாவமரத்துல நிலா காலத்துல போயி பாக்கணுமே …ஏதோ நூத்துக்கணக்கா மரக்கிளைகள்ல உக்காந்து ஆட்றமாதிரி சத்தம் வரும் .அத தாண்டி போறவரைக்கும் பயம் தொண்டைக்குழிக்குள்ளயே இருக்கும்.

இப்படி நாவ மரம் சின்னஞ்ச்சிறுசுலேர்ந்து பழகின மரம் .எனக்குத் தெரிஞ்சு எண்பது வருசத்துக்கு மேல இருந்த மரம்.நான் வளர்ந்து பட்டணம் போயிட்டு திரும்ப வர்றப்ப மரமே காணோம்.

எனக்கு அழுகையே வந்திடுச்சி ஊரோட  அடையாளம் ,நாவமரம் தான் .உக்கார, பஞ்சாயத்து பண்ண ,சடங்கு செய்யன்னு எப்பவும் ஊரோட ஒண்ணா சேர்ந்து இருந்த நாவமரம் இல்லாம ஏதோ ஊரு விதவையான மாதிரி தோணிச்சு .

புயல்லயும் ,மழையிலயும் விழாத மரத்தை ரோடு போடறோம்னு வெட்டி எடுத்துட்டாங்க .
அதோட சாபமோ என்னவோ குளத்துல இப்போ  சொட்டுத் தண்ணி நிக்கிறதில்ல.குளமும் இளைச்சிடுச்சு .

நாவ மரத்தோட கதைய பேத்திக்கிட்ட சொன்னப்போ …அவ தலைய ஆட்டி கேட்டுட்டு அடுத்த நாள் சொன்னா…

நாவல் மரம் –மிர் தேசிய தாவரக் குடும்பம்.இந்தியா,இந்தோனேசியாவிலே இருக்கும் .வெப்ப மண்டலத்துல வளரும்.1300 மீட்டர் உயரம் வளரும்.நூறாண்டு வாழும்.ஜனவரி-பிப்ரவரில இலை கொட்டும் .ஜூலை ,ஆகஸ்ட் .செப்டெம்பர் ல நன்றாக பசேல்னு இருக்கும்.

நாவற்பழம் பத்துவகையான மருத்துவகுணங்கள் கொண்டது .விட்டமின் சி இருக்கும்.புற்று நோய் ,இரத்தசோகை வராது.இதயத்துக்கு நல்லது என்று கூகிள் விவரங்களை சொல்லிக்கொண்டே போனாள்.

”நான் கூட கல்லெடுத்து அடிச்சி நாவற்பழம் பொருக்கணும் “என்றாள் .

எங்க போக?

அதான் எல்லாமே போச்சே!

நாவற்பழத்த விக்கும் போது இப்பவும் எங்கூரு நாவ மரம் நினைப்பு வருது .

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
  2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
  3. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
  4. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
  5. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
  6. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
  7. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
  8. அரச மரம் :ராசி அழகப்பன்
  9. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
  10. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
  11. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
  12. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
  13. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
  14. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
  15. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
  16.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்