முன்பு ஒரு காலத்திலே பகுதி-16

பலாவுல அப்படி என்ன பெரிய விசேஷம் ?அப்படின்னா.. முக்கனியில்  ஒண்ணு பலா மா பலா வாழை இது முக்கனி .

இந்த முக்கனியில் மற்ற ரெண்டு சுவைகளையும் விட அதிகமான சுவைன்னா அது பலாச்சுளை அப்படின்னு சொல்லுவாங்க..

கிராமத்துல பொதுவா அப்பாக்களுக்கு ஒரு பெயர் உண்டு.

அப்பாக்களை பாலா மாதிரி உதாரணம்  காட்டுவாங்க. அப்பாங்கல்லாம்  பாக்குறதுக்கு கடுகடு ன்னு இருப்பாங்க. அப்படி இரு, இப்படி  இரு அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பாங்க . ஆனா உள்ளுக்குள்ள பலாப்பழத்தை பிரிச்சி பாத்தோம்னா உள்ள இருக்கிற பலாச்சுளை மாதிரி அவங்க அன்போடு இருப்பாங்க  அப்படிங்கறதுக்காகத்  தான் நிறைய அப்பாக்களை பலாப்பழத்தை உதாரணம் சொல்லுவாங்க.ஊர் சொல்றது இருக்கட்டும் சார். நீங்க என்ன சொல்றீங்க   அப்படின்னு கேட்டா எனக்கு பலா அப்படின்னதும்  சட்டுன்னு மூணு பேர்

ஞாபகத்துக்கு வர்றாங்க..முதல்ல இயக்குநர் தங்கர்பச்சான்.

இரண்டாவது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மூணாவது இலங்கைக் கவிஞர் காசி ஆனந்தன்.

ஏங்க தங்கர்பச்சான் நினைவுக்கு வரணும் அப்படின்னா ?!

முதல்முறையா நானும் பாவலர் அறிவுமதி யும் ஒரு நிகழ்ச்சிக்கு  போகும்போது முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில போய் அங்கிருந்த பலாப்பழத்தை முழுசா எடுத்து பாவலர் அறிவுமதிக்கு  ஒன்னும் ,எனக்கு ஒன்னும் காரில் ஏற்றி அனுப்பி.. போங்க …வீட்ல போய்  வச்சு நல்லா சாப்பிடுங்க அப்படின்னு சொன்னது

தங்கர்பச்சான் உடைய அன்புதான்..

என்னைக்கேட்டா தங்கர்பச்சான் கூட பலாப்பழம் மாதிரி தான் ..

பார்த்தா முள்ளு மாதிரி இருப்பாரு ஆனா உள்ளுக்குள்ள ஒரு கனிவான மனமிருக்கும் .

மொழி மீதும் மக்கள் மீதும் நிறைய பாசமும் அன்பும் வைத்திருக்கிற மிகச் சிறந்த கலைஞன் அப்படின்னு இன்னிக்கு வரைக்கும் நினைக்கிறேன்.

சரி எதுக்கு பாரதிதாசன் மேல  ஞாபகம் உங்களுக்கு வருது அப்படின்னு சொன்னா …அவர்தானே

“கோரிக்கைய ற்று  கிடக்குதண்ணே

இங்கு வேரில் பழுத்த பலா “

அப்படின்னு சொன்னவரு..

பெண்கள் மனநிலை பற்றி அவர் கவலைப் பட்டு பாடி இருக்கிறார் .

பலருக்கும் பயன்படும்  வேரில் பழுத்த பலா என்று பெண்களைப் பற்றி கவலைப் பட்டவர் பாரதிதாசன் தானே வேற யார் சொல்லுங்க?

மூணாவதா காசியானந்தன்.மிகவும் உணர்ச்சிப்  பிழம்பாக தமிழ் மக்களுக்காக யோசித்து பாடிக்கொண்டிருக்கும் மிகச் சிறந்த கவிஞர் .

அவர் சொன்னது  ஒரு பாட்டுல…

“வேரோடு பலாக்கனி

பழுத்துத் தொங்கும்

வெள்ளாடு அதன் மீது

முதுகு தேய்க்கும் “

அப்படின்னு சொல்லிருக்காரு. அந்த காட்சி வந்து அப்படியே கண்முன் விரியும் போது ,அந்த பலாப்பழ விளைச்சல் பூமி கண்முன்  தெரியுதே…

அந்த பலாக்காட்டில்  ஒருவன் ஆடுகளை மேய்த்து போறதும்,

அதுல முதுகு தேய்ச்சிட்டு போற ஆடும் படம் தெரியுதே…

அப்போ அந்த கால பூமி எவ்வளவு செழிப்பா இருக்கும் யோசிங்க ..

காசி ஆனந்தன் எனக்கு நெஞ்சில இன்றும் நினைவில் வாழ்கிறார்.

சரி நம்ம சொந்த கதைக்கு வருவோம்.சின்ன வயசுல பலாப் பழத்தை சாப்பிட வழியில்லை.பட்டிக்காட்டில் பொறந்த எங்களுக்கு எலந்தப் பழம் , நாவல் பழம், கொய்யா ,கொடுக்காப்புளி வரைக்கும் சரி .ஆனா பலாப்பழம்  வேறென்ன பகல் கனா.கடைசியில நான் காலேஜில்  சேர்ற ஒரு வாரத்துக்கு முன்னாடி வரைக்கும் பலா  சாப்பிட்டதில்லை .

இல்ல்ல ஒருமுறை எங்க அப்பா பலாச்சுளைகள் எடுத்துட்டு வந்து வீட்டில் வந்து கொடுத்து சாப்பிட சொன்னார் அது நல்லா ஞாபகம் இருக்கு

அதுல  நிறைய வேணும்னு  சொல்லி அழுது புரண்டு அக்கா கிட்ட அடி வாங்கி சாப்பிட்ட பலாச்சுளை ஒரு தனி சுவைதான்னு வையுங்களேன்.

நான் இருக்கிறது பட்டிக்காடு .அதாவது சிறிய கிராமம் .

எப்படி  பலா கிடைக்கும் ?வாசனையே வர்றது ரொம்ப கஷ்டம்.

நான் கேள்விப்பட்ட வரைக்கும் பண்டரக் கோட்டை ,விழுப்புரம் ,அப்புறம் வந்து புதுப்பேட்டை சிதம்பரம் இந்தப் பக்கமாக அதிகமாக விளையும் அப்படின்னு கேள்விப்பட்டிருக்கேன்.

அடங்கொப்புரானே திடீர்னு நேரில் பலா மரத்தை பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. அது எப்படிய்யா அப்படின்னு கேப்பிங்க ?

கிடைச்சது .எப்படி தெரியுமா ?

ஒருமுறை காவேரியில இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட மாட்டோம் அப்படின்னு அந்த கர்நாடகா மாநிலம் சொன்னது .தமிழ்நாட்டில் இருக்கிற சினிமா  சங்கங்கள் அத்தனை பேரும் ஒண்ணா சேர்ந்து அதற்கு  எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நெய்வேலில ஒன்று கூடி போராட்டம் நடத்தினோம்  .

இந்த சங்கதியில பலா மரத்தை ஏன் நுழைக்கிற அப்படின்னு கேப்பீங்க?

அதான் சுவாரசியமான விஷயம்.எப்படின்னா ..அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பிற்பாடு தங்கர்பச்சான் தன்னுடைய கிராமம் வீடு அப்படின்னு தனக்கு பிடிச்ச இடமெல்லாம் காமிச்சாரு. அட பாக்க அப்படி  ஒரு செழுமை. செம்மண் பூமியா இருக்கு.

மரம் சாய்ந்து ஒய்யாரமாபடுத்துகிட்டு ஓய்வு எடுக்கிற மாதிரி பலாமரம் நிறைய இருந்தது.அடேங்கப்பா பொண்ணுங்க வந்து ..தண்ணி இல்லாத இடத்துக்கு போயிட்டு இடுப்புல ஒன்னு தோள்ல ஒன்னு  தண்ணி குடம் தூக்கிட்டு வருவாங்க அது மாதிரி  இருந்திச்சு.

பலா மர தோட்டத்தை வாசனையோட பார்த்து நடந்து போன நினைவு இன்னிக்கும் எனக்குள்ள இருக்கு .அந்த பார்த்த பிற்பாடுதான் ஒரு முழு பலாப்பழத்தை எங்களுக்கு தங்கர்பச்சான் நினைவாக கொடுத்தனுப்பினார்.

கொஞ்ச காலம் கழித்து பலாப் பழத்த  நல்லா பிரிச்சி எடுத்து அதை தேனில் தொட்டு சாப்பிட்ட அனுபவத்தை கவிஞர் பாஸ்கர தாசன், கவிஞர்  மு மேத்தா, நர்மதா ராமலிங்கம் சேர்ந்து ஒரு முறை ஏதோ ஒரு மலையுச்சியில் சாப்பிட்ட ஞாபகம் எனக்கு இருக்கு. அது ஒரு  காலம்.

சரி  அத விடுங்க. இது தோட்டத்துல விளையறது ன்னு சொல்றாங்க.

ஆனா நான்  எங்க பக்கம் பெரும்பாலும் பார்த்ததில்லை .நாமதான் காஞ்சி போன பூமியில் இருக்கறமே?ஆனா இதுக்கு நிறைய தண்ணீர்  தேங்கக் கூடாது. தண்ணீர் இல்லாமயும் இருக்க கூடாது .அது மாதிரி பகுதியில் இது நல்லா விளையும்னு சொல்றாங்க..

பலாப்பழ மரத்தோட பொறப்பு.இது சரியா தெரியல.

ஆனா இந்தியாவுல மேற்கு தொடர்ச்சி மலைப் பக்கத்தில் இருந்து ஆரம்பித்திருக்கலாம் .அப்படியே பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா  வரைக்கும் போய் இருக்குன்னு சொல்றாங்க.

அனேகமா  இப்போ ஒரு லட்சம் மரங்கள் இந்தியாவுல இருக்கணும் அப்படின்னு ஒரு அறிக்கை சொல்லுது.ரொம்ப விசேஷமா இலங்கையில் தான்னு சொல்றாங்க. அதனோட மரத்த விரும்பறாங்க.

பழத்த  விரும்புறது தாய்லாந்து. பழத்த ருசிச்சி் நல்லா சாப்பிட்டு பழகுறாங்க.

ஒரு மரம் எத்தனை பழம் பழுக்கும்  அப்டின்னு தானே  கேக்கறீங்க?

அது 100 லிருந்து 150 பழங்கள் காச்சி தொங்க விடும் .

பலாப்பழத்தில் மிகச் சுவையானது தேன் பலா . 1949 சிங்கப்பூர் மலேசியா இங்கெல்லாம் சீக்கிரமா பலா மரத்திலிருந்து பழத்தை எப்படி காச்சி சாப்பிடுவது அப்படின்னு ஒரு ஆராய்ச்சி எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க.

சஹரன்பூர் கள்ளார்  அப்படிங்கற இடத்தில் பலா மரத்தை வைத்து ஆராய்ச்சி பண்ணி புதிய புதிய ரக வகைகள் கொண்ட பலா மரங்களை உற்பத்தி பண்ணி இருக்காங்க.

முறையான பயிர் செஞ்சி  பலாப்பழத்தை வைத்து வியாபாரம் பண்ணி பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் ஆகி இருக்காங்க. ஒரு மரம் எத்தனை வருஷத்துல  காய்க்கும்?

 மூணு வருஷத்துல இருந்து ஏழு வருஷத்துக்குள்ள காய்க்க ஆரம்பிச்சிடும்.பலா மரம் சின்னதாகவும் இருக்கும்  விட்டா. 21 மீட்டர் வரைக்கும் அது வளரும். பலா இலையை பார்த்திருக்கீங்களா ?

நீளமா இருக்கும் பார்த்தா ஒரு கோள வடிவத்தில் பாக்குறதுக்கு ரொம்ப ரசிக்கிற மாதிரி இருக்கும்.

பலா மரத்தில் பூ பூத்திருச்சுன்னா .. மூணு மாசத்துல இருந்து 8 மாசத்துல காய்க்க ஆரம்பிச்சுடும். பலா  இதுல ஒரு விஷயம் ஒன்னு இருக்கு.

நம்ம ஜனங்க கிட்ட இருக்கற ஆம்பளைங்க பொம்பளைங்க மாதிரி

பூவுல ஆண் பூ ,பெண் பூ ரெண்டு வகை இருக்கு. ஆண் பூ. கொத்துக்கொத்தாக பூக்கள் எல்லாம் கிளைகள்ல பூக்கும்.பெண் பூ அப்படி இல்ல..தடிமனாக இருக்கிற கிளைகள்ல  பூக்கும். இல்லன்னா கீழே அடியில பூ பூக்கும் .அப்படி ஒரு விசேஷம் அந்த பலா மரத்தில் இருக்கு.

எனக்குத் தெரிஞ்சி  புட்டு கூட பலாப்பழம் சேர்த்து சாப்பிடுவது இலங்கையில, கொஞ்சம் கேரளாவுல அப்படின்னு நினைக்கிறேன் .

சாப்பாடு மாதிரியே சாப்பிட்டிருக்காங்க..ஒரு காலத்துல இலங்கைல பஞ்சம் வந்த  1977 பண்டாரநாயகா இருந்த காலகட்டத்தில் இந்த பலாக் கொட்டையும் பலா வையும் சாப்பிட்டாங்க அப்படின்னு சொல்றாங்க.

பலாச்சுளை சாப்பிட பிடிக்கும். ஆனா அந்த மரத்துல ஏதாவது ஒரு வெட்டு பட்டா பால் கசிஞ்சிகிட்டே இருக்கும் பிசுபிசுன்னு இருக்கும் .ரொம்ப பிரச்சனை ஆயிடும் அடடா அந்த மரத்துல ஏறி  ஏண்டா மாட்டிகிட்டோம் அப்படின்னு இருக்கும் .பார்த்து ஏறணும்.

பலாப் பழத்தில் என்ன சத்து இருக்கு அப்படின்னா எல்லாந்தான் நிறைய இருக்கு .நிறைய பயன்பாடு கொண்டதுதான் பலாப்பழம் அதை சாப்பிடலாம்.

பலாப்பழம் கிடைச்சதுன்னு நிறைய சாப்பிட்டீங்கன்னா சூடு அப்படின்னும் சொல்றாங்க .அதனால கொஞ்சம் அளவா சாப்பிடுங்க.முடிஞ்சா கடைசியில் பால் சாப்பிட்டு கொஞ்சம் வயித்த  காய விடுங்க.அப்பதான் நல்லா இருக்கும்.

நல்லா இப்படி  சொல்லிகிட்டு இருக்கும்போது திடீர்னு வந்து பக்கத்துல நின்னு  தலைல ஒரு கொட்டு கொட்டி என்ன தாத்தா அப்படின்னு கேட்டாங்க. திரும்பி பார்த்தா பேத்தி.

“ என்ன கேக்க கூடாதா “

முறைக்கறாங்க.

சரி சொல்லுங்க ன்னேன்.

இது என்ன இனம் தெரியுமா ?

இது  எ ஹீட்டர்  ஒப்பிலிஸ் ( A Heater Ophyllus)

குடும்பம் : மொராசிஸ் (Moraceae)

திணை:நிலைத்திணை

அப்படின்னு சொன்னாங்க. சரி ரொம்ப நன்றி அப்படின்னு நான் கை எடுத்து கும்பிட்டேன்.

இது எதுக்கு அப்படின்னு கைய தட்டி விட்டு சிரிச்சிகிட்டே போனாங்க..

இந்த பலா மரம் பூ வகையைச் சேர்ந்த தாவரம். நமக்கு என்றும் சுவை கூட்டுவது     என்னவோ தெரியல. இது முடிக்கும் போது கூட “வேரில் பழுத்த பலா “ அப்படிங்கிற வார்த்தை ஞாபகம் வந்துகிட்டே இருக்கு.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
 2. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
 3. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
 4. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
 5. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
 6. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
 7. அரச மரம் :ராசி அழகப்பன்
 8. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
 9. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
 10. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
 11. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
 12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
 13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
 14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
 15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
 16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்