முன்பு ஒரு காலத்திலே-6

.ஓடுவாங்க,ஓடுவாங்க.தெறிச்சு ஓடுவாங்க. “ஏன் தெரியுமா?” சின்ன வயசுல  கொளஞ்சிக்கா  தோலை இரண்டா  மடிச்சு பிதுக்கினா பீச்சி அடிக்கும்.தண்ணி அது கண்ணுல பட்டா பயங்கரமா எரியும்.

அந்தத் தோலை யாருக்கும் தெரியாம கிட்ட வாடா உனக்கு ஒன்னு தருவேன்னு கூப்பிடுவேன்..கிட்ட வந்ததும் கண்ண மூடு அதிசயம் என்பேன்.மூடிக் கண் திறந்து பார்க்கும்போது சரியா அந்த கொளஞ்சி தோல் மடிக்க தண்ணி கண்ணுல விழ,அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவாங்க… எரிச்சல்ன்னா எரிச்சல்,அப்படி ஒரு எரிச்சல் வரும். வேணும்னு செய்யறதில்ல. தடிமனான இருக்கும்ல கொளஞ்சி தோல். அத மடிச்சி பீச்சி அடிக்கும் தண்ணி பார்க்க ஒரு அலாதி மகிழ்ச்சி.

சின்ன வயசுல படிக்கும்போது விளையாடுற விளையாட்டு.அது எத்தனை பேர் விளையாடி இருக்காங்கன்னு தெரியல. நான் வீட்ல இருக்கிற பசங்க, வெளியில வளர்ந்த பசங்களை கேட்டேன்.

ஏம்பா கொளஞ்சிக்கா சாப்பிட்டு இருக்கீங்களா?

என்னது கொளஞ்சிக்காவ கேள்விப்பட்டதே இல்லையே.நாங்க அடப்பாவத்தே,, என்ன சொல்ல,, நான் வளரும்போது எதையாவது திங்கணும்னு ஆசைப்பட்டு வாய் நமநமன்னு  ஊர்னா  உடனே தோட்டத்துல இருக்குற கொளஞ்சி மரத்துல இருக்குற கொளஞ்சி காய அறுத்து சாப்பிடுவேன்.

புளிப்பா இருக்கும்.ஆனால் நல்லா எச்சில் ஊறும்.,, சாப்பிடும்போது புளிக்கிறது மட்டுமல்ல பல்லு கூசும்,,அதுக்கப்புறம் தண்ணி குடிச்சா ஏதோ ஒருவித ரசனையா சில்லுன்னு தோணும்.அதுக்கப்புறம் வேற எதுவும் சாப்பிட தோணாது.

இப்ப நான் இதை எழுதும் போதே எனக்கு எச்சில் ஊறுது.சொல்லனும்னா இது ஏழைங்களோட ஆரஞ்சு. வீட்டுக்கு  ஒன்னு ரெண்டுமரம் இருக்கும். எப்ப வேணாலும் காய்க்கும்.எங்கப்பா   கூழ், கஞ்சித்தண்ணி,   காலையில எழுந்ததும் நாங்க தினமும் அப்ப குடிக்கிற நீசத் தண்ணி எல்லாத்துக்கும் காஞ்சி உப்பு போட்டு வச்ச கொளஞ்சிய  கடிச்சுக்கிட்டு குடிப்போம்.கொளஞ்சி ன்னா  பாதிப் பேருக்கு தெரியாது நார்த்தங்காய் சொன்னா தெரியும் .ஆமா கொளஞ்சி தான் நார்த்தங்காய்.நாரத்தங்காய் அதான் கொளஞ்சி காய் அறுத்து உப்பு போட்டு ஊற வச்சு பின்னாடி காயவைத்து மண்சட்டியில் எடுத்து வச்சுகிட்டு காலம் பூரா சாப்பிடலாம். சைட் டிஷ் தேவை இல்லை.எங்க அப்பா தான் முதல்ல சாப்பிடக் கற்றுக் கொடுத்தார். ஏம்பா ஒரு மாதிரி இருக்கேன்னு முகம் சுளிச்சேன்.

டேய் மண்ணாங்கட்டி இதை சாப்பிட்டா நல்லா பசிக்கும்,,,  செரிக்கும்,, வயித்துல புழு அண்டாது, கண்டதை சாப்பிட்டு இரண்டுக்கு போகாம  அடம் புடிச்சா,மகனே இதை சாப்பிட்டால் எல்லாம் சரியா போயிடும்னு சொன்னார்.

இப்ப ஒரு மருத்துவர் கிட்ட போன்ல பேசி கேட்டேன்.நீங்களும் சாப்பிடுவீங்களா பிரதர். ரத்தம் சுத்தமாகறதுக்கு கொளஞ்சி அதான் நாரத்தங்காய் பெஸ்ட்னு சர்டிபிகேட் கொடுத்தார்.

கொழுப்பு கரையும், வைட்டமின் இருக்கு சொல்லப்போனால் வேர், பூ, காய் எல்லாமே மருத்துவகுணம் கொண்டதுன்னு சொல்லி பேசாம கிராமத்துல நாம வாழ்ந்திருக்கலாம்,வசதி வேணும்னு வந்து அல்லாடறோம் என்று  அங்கலாய்த்து முடித்தார்,

கொளஞ்சிக்காய் சொல்லனும்னா நல்ல பச்சையாய் இருக்கும்.கிட்டத்தட்ட ஆரஞ்சு மாதிரி.மேல் தோல் ரொம்ப கெட்டியாக இருக்கும். இது பழுக்கும்போது மஞ்சளும், பச்சையும், கலந்து பார்க்க கமலா ஆரஞ்சு மாதிரி தெரியும்.பழுத்து சாப்பிட்டால் அது ஒருவகை சுவை தெரியும் அப்பவும் புளிப்பு இருக்கும். கொளஞ்சி மரத்துல முள்ளா இருக்கும்.பார்த்துதான் காயப் பறிக்கணும், இல்லைன்னு வைங்க கையைக் கிழித்துவிடும். நான் பலதடவை ஆர்வக்கோளாறுல கிழிச்சு கிட்டு அப்பா கிட்ட வேற கதை விட்டு இருக்கேன்.

நாங்க தோட்டத்தில ரெண்டு,மூணு பெரிய மண் பானை வைத்து இருப்போம்.தோட்டத்தில தட்டு, டம்ளர் கழுவி ஊத்தறது, முகம், கை, கால் கழுவும்போது போற தண்ணிய எல்லாம் பாத்தி கட்டி இந்த கொளஞ்சி மரத்துக்கு விட்டுவிடுவோம். அதோட நாலஞ்சு கனகாம்பரம், வாடாமல்லி , அவரைச் செடிகளுக்கும்,பாகம்னு வைங்க,

பக்கத்து வீட்டு சுவர் நாலஞ்சு அடி இருக்கும்.பசங்க அந்தப் பக்கம் நின்னு குயில் மாதிரி கத்தி என்னைக் கூப்பிடுவாங்க,,  என்னத்துக்கு? எல்லாம் கொளஞ்சி காய்க்கு தான்.

அப்பா குயில் கூவுனதும் கம்பை எடுத்துக்கிட்டு மறைவா நின்னு பார்ப்பார். குயில் சத்தத்துக்கு மசியாமல் நான் நிற்கிறத பாத்துட்டு ,எகிறி குதித்து எங்க தோட்டத்துக்கு குதிப்பானுங்க பசங்க,, அவ்வளவுதான் எங்கப்பா சி.ஐ.டி சங்கர் மாதிரி வெளிய வந்து நின்னு என்னடா இது?எத்தனை நாள் இப்படின்னு சொன்னதும் நம்புனா நம்புங்க.இல்லாட்டி போங்க, டவுசர்லயே  ஒன்னுக்கு விட்றுவானுங்க,,, அத பாத்துட்டு எங்க அப்பா ஏண்டா இப்படி சுவர் ஏறி குதிக்திக்கிறீங்க.நேரா வாசல் வழியா வந்து  பறிச்சிக்கிட்டு போக வேண்டியது தானேன்னு மனம் மாறிடுவார்.அவ்வளவுதான் ஈர டவுசரோட எங்க அப்பாவை கட்டிப் பிடிச்சுக்குவானுங்க,,

ஏம்பா இப்படி மிரட்டினீங்கன்னு கேட்டா எதையும் குறுக்கு வழியில் அடையக்கூடாது என்று தத்துவம் பேசுவார்.அந்தத் தத்துவத்தை யார் காதுல கேட்டா.அன்னியிலேர்ந்து கொளஞ்சி காய் திங்கறதும், கொளஞ்சி தோல மடிச்சு கண்ணுல  பீச்சி விளையாடுவதும் தான் வேலையா போச்சு.

நூறு வருஷம் மரம் வாழும். வாந்தி வருது ன்னு நிப்பாட்டறத்துக்கு இந்த வாசனை ஊறுகாய் தான் நல்ல மருந்து. இப்ப கொஞ்ச பேர் பஸ்ஸில் போகும்போது வாந்தி வராமல் இருக்க எலுமிச்சம்பழத்தை மோந்து பாத்துட்டு போறது நீங்க பார்த்து இருப்பீங்க. அப்ப இந்த காய்தான் பயன்பட்டது.

எங்க ஊரு தோட்டத்துல சிலபேர் வீட்ல இன்னமும் இருக்கு. சொல்லப்போனால் எங்க வீட்ல நாரத்தங்காய் ஊறுகாய் தான் சாப்பிடுறோம்.அதுக்காக வேற ஊறுகாய் இல்லையான்னு கேட்டு வைக்காதீங்க. இருக்கு எலுமிச்சை,, பூண்டு,  மாவடு ன்னு… ஆனா  தனி ஆவர்த்தனம் நாரத்தங்காய் ஊறுகாய் தான்.இந்த மரத்துக்கு கீழே கிடக்கும் புழு, பூச்சி,கோழிங்க கிளறி கூத்தடிக்கிற காட்சியை பார்த்துகிட்டே இருக்கலாம். எங்க எதிர் வீட்ல மிலிட்டரிக்காரன் பொஞ்சாதி அஞ்சலை இருந்தாங்க.அவங்க தான் ஊருக்கே பிரசவம் பார்த்த டாக்டர்.

எப்பவாச்சும் இராத்திரி மிலிட்டரி சரக்கை ஊத்திக்கிட்டு பாட்டு பாடுவாங்க. கேட்க கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா அவங்க புள்ள பெத்துக்க போற பொம்பளைங்களுக்கு பார்க்கிறப்ப எல்லாம் காலையிலும் மாலையிலும் நாரத்தங்காய் சேர்த்துக்கோ, பிரசவம் பிசகு இல்லாம போயிடும் வாங்க. போதாகுறைக்கு கொளஞ்சி சாறு பிழிந்து தேன் கலந்து புள்ளத்தாச்சிங்களுக்கு குடிக்க சொல்லி பாத்துட்டு வருவாங்க. நாரத்தங்காய் சில பேர் சாப்பிட்டதும் திம்முனு இருக்கிற மாதிரி இருக்கும்.வேணா கொஞ்சம் வெந்நீர் சாப்பிட்டா சரியா போயிடும்.

 நாலு ஊரு போயி கெட்டவனும் இல்லை,கங்கா சாப்பிட்டு செத்தவனும் இல்ல’ன்னு  சொல்றது மருத்துவச்சியோட தின வாக்குன்னா  பாருங்களேன்.

நான் ஊர்ல இருக்கிற வரைக்கும் அதான் எனக்கு ஆரஞ்சு பழம், சரி இத இளவட்ட கிட்ட கேட்டா கூகுள்ல பாத்துட்டு விவரம் பதியறாங்க.

இது ruytaceae  குடும்பம் கிச்சிலி பேரினம் மருத்துவ மரம். கிடந்து போகட்டும் கொளஞ்சி மரத்தை நீங்க வெச்சு பாருங்க.அது நல்ல அனுபவமா இருக்கும். வீணா போற தண்ணிய குடிச்சிட்டு நமக்கு உபயோகமா இருக்கும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
  2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
  3. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
  4. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
  5. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
  6. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
  7. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
  8. அரச மரம் :ராசி அழகப்பன்
  9. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
  10. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
  11. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
  12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
  13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
  14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
  15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
  16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்