முன்பு ஒரு காலத்திலே -2

“வாதம் பண்ணி ஜெயிச்சவனும் இல்ல.

வேப்ப மரத்தால செத்தவனும் இல்ல. ”

இப்படி ஒரு பேச்சை இதுக்கு முன்னாடி எங்கியாச்சும் கேட்டிருக்கீங்களா ?

நூத்துக் கணக்கா எங்க எதுத்த வீட்டுப் பாட்டி  புலம்பி தீக்குறதை கேட்டு என்  காது கந்தலாகிப் போச்சு …

எங்கப்பா கிட்ட போயி நான் கிழவியப் பத்தி ,“தினமும் என்னப் பாத்தா இதைச் சொல்லி சாவடிக்கிறா  …அழுக்குத் துணியக் கூட பாறாங்கல்லுல பத்து தடவைக்கு மேல அடிச்சி தொவைக்க மாட்டாங்க ..இது என்னை பொத்தல் வர்ற வரைக்கும் கதற வுடுறா ?”ன்னு கதறுனேன்.

அதான் வம்பாப் போச்சு..அடுத்த நாளு காலைல வெளிக்குப் போகும்போது கையோட என்னை இழுத்துகிட்டுப் போயி வேப்பங்குச்சிய ஒடிச்சி இலையெல்லாம் கழிச்சுட்டு குச்சி நுனிய நல்லா பஞ்சு ஆவுற மாதிரி மென்னப்புறம் பல்லு  தேயின்னார் .

அதுக்கு முன்னாடி கோபால் பல்பொடியிலதான் பல்லு வெளக்குவேன்.

கோபால் பல்பொடி வெள்ளையா எடுத்து வாயில போட்டு வெளக்குனா அடங்கொப்புறானே எரிச்சலோட ஒரு வாசனை வரும்…ஒப்புக்கு நாலு ரவுண்டு கைவிரலாலே பல்லுக்கு பாலிஷ் போட்டுட்டு அப்பாகிட்ட ஈன்னு காமிச்சு சர்டிபிகேட் வாங்கிட்டு அடுத்த வேலைக்குப் போயிடுவேன் .

கோபால் பல்பொடிய சாதாரணமா நினைக்காதீங்க ..அந்த காலத்து பணக்கார பல்பொடி ..இலங்கை,மலேஷியா ,பர்மா,போன்ற நாடுகளில் அதிக விற்பனைன்னு விளம்பரம் பண்ணி கொடுப்பாங்க ..

கொஞ்சம் வசதி கம்மியாயிருக்கிறவங்க பம்பு சேட்டு குழாயில செங்கல்லை நுணுக்கி எடுத்து பல்லு தேய்ப்பாங்க.அட அது கரமர கரமரன்னும்,,,ஆனா பல்லு பளிச்சின்னு இருக்கும்.

பாத்தீங்களா ..சொல்ல வந்த கதைய வுட்டுட்டு பாதியில வந்தவனோட பாய்விரிச்ச கதையா போயிட்டேன் ..

வேப்பங்குச்சிய வாயில வைக்கும்போதே குமட்டும் .அட ..அம்புட்டு கசப்பு .. அதப்  போய் மென்னு ..அட இந்த அப்பங்காரனுக்கு பேய் பிடிக்கன்னு முணுமுணுத்துக்குவேன் .

அத எப்படிதான் இந்த டெலிபதி அப்பன் கண்டுபிடிப்பானோ மண்டைல படார்னு ஒரு தட்டு தட்டி “மெல்லுடா” ம்பார்.

என்ன பண்ண?எரிச்சலா வரும். கசக்கும்.மெல்லும் போது வாயில நீர் சுரக்கும் .

‘துப்பிடாதே, முழுங்கு’ வெளக்கும்போது துப்பும்மார் .

அப்பதான் எனக்கு சம்மந்தமில்லாம வாத்தியார் வகுப்புல சொல்லிக் கொடுத்த

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் ஞாபகம் வந்து போகும் .

வேப்பங்குச்சிய ஒரு வழியா மென்னு விளக்குவேன் …. அந்தாண்டையும் ,இந்தாண்டையும் குச்சியா அம்பதுவாட்டியாவது போய் வரணும் ..பிறகு வாய் கொப்புளிச்சிட்டு குளிக்கப் போவேன் .

அப்ப அப்பா அப்படி படுத்தி சொல்லிக்கொடுத்தது எட்டாம் கிளாஸ் வரைக்கும் கடைபிடிச்சேன் ..பொறவுதான் ஊர விட்டு போயி ஹாஸ்டல்ல படிக்க வேண்டியதா போச்சி …அங்கியும் எங்க வேப்பமரம் இருக்குதோ அங்க போயி நின்னு வேப்பங்குச்சி ஒடிச்சி  பல்விளக்க ஆரம்பிச்சிடுவேன்..

இப்பவும் எப்பவாவது எங்கப்பா ஞாபகம் வரும்போது பக்கத்துல தேடிப் போய் வேப்பங்குச்சி ஒடிச்சி பல்லு விளக்குவேன் ..பாக்கறவங்க கிண்டல் பண்ணுவாங்க..’என்ன பட்டிக்காட்டான்…திருந்தலயா?’ம்பாங்க…நான் சிரிச்சிப்பேன்.

‘அடப் போங்கடா…இதோட அருமை உங்களுக்கு எங்கடா தெரியப்போகுது ?’

ஏன் சொல்றேன்னா ?வேப்ப மரம் வாழ மரத்தை விட உபயோகமானது .அது எப்பிடின்னு    கேப்பீங்க ..?

அதுக்கு நான் இப்பிடிதான் பதில் சொல்லணும் !

வேட்டவலம் ஹாஸ்டல் பிராமணர் தெருவுல இருந்தது .அங்க வசதியில்லாத பசங்க அத்தனை பேரும் ஒண்ணா படிச்சோம் .

வெளிய வராந்தா மாதிரி பாய் போட்டு வரிசையா தூங்குவோம்.தனித்தனிப் பாய்க்கு ஏது வசதி?

அப்ப சுகாதாரம் பெரிசா இல்ல.எனக்கு கையில சிரங்கு வந்திரிச்சு ..இரண்டு கைவிரல் நடுவுலயும் வந்து தொத்திக்கிச்சு .

பாதி பசங்களுக்கும் அதே நிலைமைதான் .சொதசொதன்னு ..சொறி  சிரங்கும்பாங்க ..சின்ன வயசுல வந்ததுதான் …அதோட தண்ணியில  கை வச்சு கை கழுவுறது ,குளிச்சிட்டு வந்து துடைக்கிறதுன்னும் ரொம்ப கஷ்டமாயிருக்கும்.

அதே நிலமைல போய் கிளாஸ்ல உக்காந்தா ,அருவருப்பா நண்பர்கள் பாத்துட்டு ஒதுங்கி உக்காருவாங்க .அது மனசுக்கு கலக்கமா அவமானமா இருக்கும் .

இந்த வரைக்கும் கவர் பண்றதே நல்லது .உள்ளுக்குள்ளேயே சாபம் வுட்டுட்டு இருந்தேன்.

நீங்க நம்பமாட்டீங்க ..நாலஞ்சு நாளுக்குள்ள புண்ணு சரியாப்போச்சு …அதுக்கப்புறம் என் வாழ்க்கைல சொறியாவது சிரங்காவது ..’

அம்மா சின்னவயசுல இறந்துட்டாதால  எங்கப்பாதான்  சமைப்பாரு .வேப்பம்பூ ரசம் வைப்பாரு …சாப்பிடணும் ..தினமும் வெறும் வயித்துல இரண்டு மூணு கொழுந்து வேப்பலய வாயில போட்டு மென்னு முழுங்கும்பாரு ..செய்வேன் ..

அட..அத்தோட நிக்குமான்னா இல்லியே ? வேப்பங்கொட்டைய நல்லா கல்லுல நசுக்கி பொடி மாதிரி செஞ்சி மாசத்துக்கு ஒரு தடவை குடிடாம்பார் ..

இதுக்கு நாலு முறை எமலோகத்துல போயி எண்ணக்கொப்பறையில நாலு முங்கு முங்கி செத்தேபோயிடலாம் .

சிலசமயம் குளிக்கும்போது சீக்காய் உடம்புல போட்டு தேய்க்கிறதுக்கு முன்னாடி  வேப்பம்பட்டைய பொடியாக்கி வைச்சிருப்பாரு ..அதை உடம்புபூரா பூசிவுட்டுட்டு பிறகு குளிப்பாட்டுவாரு ..இதுக்கெலாம் காரணம் எங்க வீட்டு தோட்டத்துல இருந்த ஒரு வேப்ப மரம்தான் .

வேப்பமரத்துக்கு கீழே பாத்தீங்கன்னா அந்தப் பழத்த சாப்பிட்டுட்டு கொட்டைய போட்டிருக்கும் காக்கா குருவிங்க..

அந்த கொட்டைய பொறுக்கி காய வச்சி சேக்கிறது ,எனக்கு பழக்கம்.அந்தப் பழக்கம் எப்படி வந்திச்சின்னா …என் பக்கத்து தெருவுல மோகன்னு ஒரு நண்பன் இருந்தான்.அவன் நெலபொலம் வச்சிக்கிட்டு இருக்கிற வசதியான வூட்டு பையன். அவன் ஒரு நாள் கம்மர்கட்டு கையி நிறைய வச்சி சாப்டுகிட்டு இருந்தான். ‘ஏதுடா’ன்னேன் …

‘நான் சம்பாதிச்சதுடா’ன்னான்

‘புளுவாதடா’

“நிசமா?”

“எப்பிடி?”

வேப்பங்கொட்டைய பொறுக்கி ஒரு படி வித்தேன் .கம்மர்கட்டு கிடைச்சுதுன்னான் .அட.அப்பவே எங்கூர் அம்பானி .நானும் அவனோட வியாபாரத் திட்டத்துல சேர்ந்தேன் .

பள்ளிக்கூடம் போயிட்டு  வர்ற வழியெல்லாம் வேப்பமரத்தைப் பாத்துட்டா ஓடிப்போய் யாருக்கும் தெரியாம குனிஞ்சு ஒண்ணுக்கு அடிக்கிறமாதிரி பாவனை பண்ணிட்டு ஸ்கூல் பேக்குல வேப்பங்கொட்டைய பொறுக்கி போட்டுக்குவேன் ..

இப்படி நான் மொறையா சேத்த ஒரு படி வேப்பங்கொட்டைய எடுத்துக்கிட்டு போய் அவங்கிட்டே கொடுத்து வித்து குடுடான்னேன் .

அவன் ஒரு மளிகைக்கடைக்குப் போய் என்னை, நீ தூரவே இருன்னு நீக்க வச்சிட்டு அஞ்சு கம்மர்கட்ட கொடுத்து கணக்குப் பண்ணிட்டான் .அவன்தான் அம்பானியாச்சே! பாதிய ஆட்டய போட்டுட்டான் .கையில கம்மர்கட் வச்சி இருக்கிறதை எங்கப்பா பாத்துட்டு “ஏதுடா நூல்கண்டை வித்தியா?”ன்னு உதைக்க வந்தார் ..

கதைய சொன்னேன் .

நீ ஏண்டா அவங்கிட்ட போயி ஏமார்றே ….வாரத்துக்கு ஒரு தடவை சித்தாமூர்லயிருந்து சைக்கிள்ள ஒரு கவுண்டர் வந்து வேப்பங்கொட்டைய காசுக்கு வாங்கிட்டு போவார் .சேத்து வச்சி குடு’ன்னார் .

நம்பமாட்டீங்க …அப்பத்தான் வேப்ப மரத்துமேல மரியாதை வந்திச்சு ..அட…நாலானா…எட்டணா …சம்பாதிச்சு குடுக்கிற மரமா வேப்ப மரம் மாறிச்சு ..

படிக்கிறேன்னு சொல்லிட்டு சாயங்காலத்துல வேப்பமரத்துக்கு கீழ மல்லாக்க படுத்துட்டு கிடப்பேன் …சில்லுனு அப்படி ஒரு காத்து அடிக்கும்…அப்படி ஒரு சொகம் .

எங்கூர்ல நல்லது கெட்டது எல்லாத்துக்கும் வேப்பிலைய தோரணம் கட்டி வாசல்ல கட்டிடுவாங்க ..கூழ் ஊத்தற பழக்கம் எங்கூரு அம்மன் கோயில்ல இருந்திச்சு ..அத தறி வாத்தியார் தான் நடத்துவார் .அவருக்கு என்னன்னா ஊர்ல நாலு கோயில் இருக்கு.ஆளுக்கு ஒருத்தர் நான் தான் பூசை பண்ணுவேன்னு புடிச்சிட்டாங்க …”வேப்பமரத்து சுத்தி நாலு கல்லு நட்டு இதாண்டா என்  அம்மன் கோயில்னு பூஜை பண்ண ஆரம்பிச்சு, அதுக்கும் மனசு வந்து வெய்ய காலத்துல கூழ ஊத்த நாலூரு  ஜனங்களும் வந்து மொச்சுக்குவாங்க .

அப்ப பாக்கணுமே ..எல்லா கூழ் கொடத்துலயும்  வேப்பிலைல  தான் மாலை.விஷேசம் வேப்ப மரத்த தேடிப்போய் மரத்தை காலி பண்ணிட்டு வந்துடுவாங்க .

அப்பிடி வேப்பிலைக்கு ஒரு மரியாதை…நான் ஹைஸ்கூல் படிக்கும்போது திராவிடர் கழக மாணவர் அணில இருந்து கிராமங்களுக்கு ஊர் ஊரா மூட நம்பிக்கைகள் பற்றி பேசுவேன்.அப்ப திருவண்ணாமலை வட்டாரத்துல பகுத்தறிவும்,கம்யூனிசமும் பிரபலம் .

போதாக் கொறைக்கு வகுப்பு முடிந்ததும் மார்க் குறைவா இருக்கிற பசங்கள தனியா கூப்டுவச்சி ஸ்பெசல் கிளாஸ் எடுப்பார் க.அரிகிருஷ்ணன் னு ஒரு வாத்தியார் .இவருக்கு பெரியார்,வள்ளலார்,லெனின் மேல பற்று ஜாஸ்தி.எங்களுக்கும் சொல்லி கொடுப்பார் .

அப்ப நானே வேப்ப மரத்தைப் பத்தி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதுன பாட்டை டி.எம்.எஸ். ஸ்டைலில் பாடி முழங்குவேன் ..

“வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க..
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க..
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ
வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே”.

சில ஊர்ல கைதட்டல் கிடைக்கும். சில ஊர்ல வச கிடைக்கும் .அப்படியே ஓடியாந்துடுவோம் .

வேப்ப மரத்து மேல பேய் இருக்குன்னு ஒரு ஐதீகம் .அத நம்பினாவங்களும் இருந்தாங்க .நானும் நம்பி இராத்திரில வேப்ப மரத்துகிட்ட போகமாட்டேன் ..எங்க இரண்டாவது அக்கா யாரோ பயமுறுத்த, பேய் பயத்துல ஜன்னி கண்டு செத்து போயிட்டாங்க .இதுக்கெல்லாம் வேப்பமரம் என்ன பண்ணும்?

எங்க அப்பா ஒரு வேலை பண்ணாரு ..வெப்ப மரத்தை வெட்டி அதுல வாசக்கால் பண்ணி வீட்டுல வச்சிட்டாரு.காத்து கருப்பு அண்டாது ..

அது மெய்யோ,,பொய்யோ …அந்த வாசக்கால் இதுவரைக்கும் கரையான் அரிச்சது கிடையாது ..அதுக்கப்புறம் கதை கதையா சொல்றாங்க ..

வேப்பமரம் ஏன் கடவுளா வழிபட்டாங்கன்னா .அது ஒரு மருத்துவ மரம்.

இலை,கிளை,பூ,காய்,பழம்,பட்டை,மரம் இப்படி எல்லாமே பயன்பாடு கொண்டது .

வேப்பங்காத்து பட்டா நோய் நொடி அண்டாதுன்னு இப்ப வெளிநாட்டுக்காரங்களே ஆராய்ச்சி பண்ணி சொல்றாங்க ..வீட்ல வேப்பமரம் வக்கிறது சாங்கியப்படி நல்லதோ இல்லியோ ஆரோக்கியத்துக்கு கேரண்டி .

ஊரே வேப்ப மரம் சுத்தி இருந்தா விசேஷம் .

நான் இருக்கிற இடத்துக்கு கொஞ்சம் தள்ளி “வேப்பம்பட்டு’’ன்னு ஊரே இப்ப இருக்கிறத பாக்கறேன் .நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு  எங்க மாமியார் வீட்டுக்கு போனேன்,தலைதீபாவளிக்கு ..அப்பவா வரணும் அம்மை ..

’அப்படியே இரு மாப்ளே ‘ன்னு வாசல் பக்கத்துல சுத்தி வேப்பிலை கட்டி,தரைல வேப்பிலைய பரப்பி கொஞ்ச நாள் பாத்துக்கிட்டாங்க …அப்புறம் அம்மை சரியாகிடுச்சு ..அப்பதான் வேப்பம்படுக்கைல நாம படுக்க வேண்டிய கிரகம் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன் .

இப்பக்கூட சென்னைல சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை தெரு வீடுகள் எல்லார் வாசல்லயும் வேப்பிலை சொருகி வைச்சிருக்காங்க..,காரணம் பழைய பழக்கம்னாலும் கிருமிநாசினியாக அது பயன்படுதுங்கற விஷயம்தான் .

நம்ம புத்தி சும்மா இருக்குமா வேப்ப மரத்தைப் பத்தி சங்க இலக்கியத்துல ஏதாவது இருக்கான்னு தோண்டிப் பாத்தேன் .

’அட ஒரு குறிப்பு இருக்கே.”

“தெய்வம் சார்ந்த பாராரை வேம்பு “

இது இந்தியா,இலங்கை, பர்மா போன்ற நாடுகள்லதான் ஜாஸ்தி .

வேப்ப மர மகிமை சொன்னதுக்கப்புறம் திடீர்னு வேப்பம்பூ-வடகம்,பச்சடி,ரசம் அப்படின்னு சேத்து சமைச்சி சாப்பிடுங்கன்னு என்  தர்மபத்தினி மிரட்ட அதுக்கும் நாம சலிக்காம ‘சரின்னு’ மெரட்டி சாப்டுறது வழக்கமாயிடுச்சு .

சரி வேப்பஞ் சங்கதியா பக்கத்துல இருக்கிற நீலகண்டன் டாக்டர்கிட்ட போய் சொல்ல அவர் வேப்ப பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டார் .

இப்ப எங்க ஸார் வேப்பமரம் வைக்கிறானுங்க .ஷோவுக்கு வளக்கிறாங்க .வேப்பம் 123 பூச்சிகளை கட்டுப்படுத்தும்.. காச நோய் ,தோல் நோய் ,சர்க்கரை நோய் ,மஞ்சள்காமாலை,குடற்புண் ,பாம்பு கடி,வீக்கம்,காய்ச்சல்  எல்லாத்துக்கும் வேப்பம் மருந்துன்னுட்டார் .

டைரக்டர் ராம நாராயணனுக்கு இந்த சைக்காலாஜி தெரியுமோ என்னவோ , நாலு வேப்பங்கொத்தை ஒடிச்சி நாயகி கிட்ட குடுத்து ஆடச் சொல்லி ‘ஆடி வெள்ளி’ன்னு படமெடுத்து பணத்தை அள்ளி எடுத்துட்டாரு.

நான் கொஞ்சம் சேட்டையா “வீட்டுக்கொரு வேப்ப மரம் நடனும்’னு  சட்டம் கொண்டாந்தா நல்லாருக்கும் இல்லியான்னு என் கண்ணம்மாகிட்ட சொல்ல….”வெளக்கமாத்து கிண்டலா பண்ற….இருக்கிற மரத்தை வெட்டிட்டு என்ன கிண்டலு’ன்னு எதிர்ப்பு வரவே அடங்கிட்டேன் .நகரத்துல எங்க வைக்க?

ஒரு சதுர அடிக்கு ஆயிரக்கணக்குல விலை,போதாததுக்கு அடுக்குமாடி வாழ்க்கை .

தரை எவனுக்குமில்ல….ததிகிநத்தோம்  பாட்டு பாடுது …

வேப்பமரத்தை வேடிக்கையா பேசும்போது எங்க பேத்தி கூகுள்ல சர்ச் பண்ணி புரபஸர் கணக்கா விவரம் சொல்ல அரர்ம்பிச்சிட்டா ..

வேப்ப மரத்துக்கு ஆங்கிலத்துல ‘நீம்’ ‘neem’

வேம்பு meliazia –தாவரக் குடும்பத்தை  சேர்ந்தது .

இதுக்கு தமிழ் ல வேற பெயரெல்லாம் இருக்கு …’ஆரிட்டம்,துத்தை,நிம்பம்,பாரிபத்திரம் ,பிதமந்தம்,வாதாளி .”

வேப்பம்பூ –நிம்பஸ்டிரோல் ஹார்மோனில் ஒத்துப்போகுது …அதனால பித்தம்,வாந்தி,வாதம்,சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு இதுதான்.வேப்ப இலைல o3-ஓசோன் கலந்துருக்கு …இன்னும்”ன்னு  சொல்ல…

“அம்மா..போதும் உங்க லெக்ச்சர்க்கு கும்பிடுன்னு ஒரு கும்பிடு போட்டேன் …”

“தாத்தா இந்த மரத்தை நான் பாக்கணும்னா?”

“ஆமால்ல..நாமளும் பாக்கணும்.நகரத்துக்கு வந்து நாம இயற்கைய விட்டு ரொம்பத்தான் நகர்ந்துட்டோம் .

என்னைக் கேட்ட ..வெப்ப மரத்துல பேயிருந்தாலும் சரி.அதுக்கு ஒரு விசா எடுதுட்டு அனுப்பிடுவோம்.

வேப்ப மரத்த வீட்ல வைப்போம்.

மருந்து கடைக்கு லீவு தருவோம்.

இதுல ஒன்ன தான் சொல்லாம  விட்டுட்டு போறேன்..பேய் புடிச்சிக்கிட்டும்னு சொல்லி தலை மயிரை கட் பண்ணி வேப்ப மரத்துல ஆணி  அடிச்சுட்ட பொறவு பேய் மரத்தை சுத்தி இருக்குன்கிறதெல்லாம் எங்க ஊர்ல நடந்த சில சம்பவங்கள் .வேப்பமரதுல பால் கசிஞ்சி ஊரே கும்பிட கதையெல்லாம் தனி சங்கதி !

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
 2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
 3. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
 4. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
 5. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
 6. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
 7. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
 8. அரச மரம் :ராசி அழகப்பன்
 9. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
 10. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
 11. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
 12. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
 13. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
 14. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
 15. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
 16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்