முன்பு ஒரு காலத்திலே -17

மாம்பழத்துக்கு எப்படி ஒரு சீசன் வந்தா உடனே நாக்கிலிருந்து எச்சில் வருமோ அதே மாதிரி சீத்தாப்பழ சீசன் வந்தா எங்க வீட்டில் நினைப்பாங்க ..

குறிப்பா என்னுடைய மனைவி சீத்தாப்பழம்னா விடவே மாட்டாங்க..

உறிச்சி சாப்பிடுவாங்க..

எங்க வீட்ல அதாவது சென்னையில ஒரு வீடு வாங்கி சின்ன ஒரு தோட்டம் வைச்சோம்.

அப்படி வைக்கும் போது ஒரு வாழைமரம் கூடவே சீதா மரத்த வச்சாங்க..

சீத்தா மரம் எதுக்கு வைக்கிறாங்க அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன்..

ஏன்னா அத உடனே பறிச்சி சாப்பிட முடியாது.

பாக்குறதுக்கு ஒரு சின்ன பலாப்பழம் காச்சி தொங்குற மாதிரி தெரியும்.

பழம் பழுத்த மாதிரியே தெரியாது.

பார்த்துக்கிட்டே இருக்கணும். அந்த மரத்துல எப்ப இந்த பழம் பிளந்து இருக்கும் அந்த நேரம் பார்த்து நாம எடுத்து வீட்டில் வக்கணும்.

அப்போல்லாம் நான் அந்தப் பழத்தை வந்து தொட்டுத் தொட்டுப் பார்ப்பேன்.ஆனா கொஞ்சம் கொழ கொழன்னு ஆகற மாதிரி தெரிஞ்சா அப்ப அந்தப் பழத்தை எடுத்து வீட்டில் வச்சுக்கணும் .அப்படித்தான் அதை சாப்பிட முடியும்.

என் மனைவி அதுல கைதேர்ந்தவர் .பழத்த எடுத்து வச்சுக்கிட்டு சாவகாசமா பதுவுசா  சாப்பிடுவாங்க.

நான் கிண்டல் பண்ணுவேன் ஒரு மாதிரி வழவழன்னு இருக்கே அத போய் சாப்பிடறியேன்னு?!

“என்ன பேசாம இருங்க கிண்டல் பண்ணாதீங்க முதலில் சாப்பிட்டு பாருங்க அப்படின்னு அதட்டி சொல்லுவாங்க..

அது எனக்கு ஏதோ ஒரு சின்ன பசங்க படம் வரைஞ்ச மாதிரி வட்ட வட்ட வட்ட வட்டமாக இருக்கிற மாதிரி இருக்கும்.

இது என்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு இதைப் போய் சாப்பிட்டுகிட்டு அப்படின்னு நான் கிண்டல் பண்ணிட்டு இருந்தேன்.

அவங்க தலையில் தட்டி முதலில் இந்தக் கிண்டல் பண்றது நிறுத்துங்க. ஒரு பொருளை என்ன எதுன்னு தெரியாம முன்கூட்டியே ஒரு கருத்து வச்சிகிட்டு  இளக்காரமா பேசக்கூடாது அப்படின்னாங்க .நான் முறைச்சேன்.

வேறென்ன பண்ண?

என்ன பாக்கறீங்க? அப்படின்னு சொல்லி சீத்தாப்பழத்தை அழகா பிரிச்சி காமிச்சாங்க.உள்ள விதையா இருந்தது.

சாப்பிட்டு பாருங்க அப்படின்னு கொடுத்தாங்க .

வேண்டா வெறுப்பா நான் சாப்பிட ஆரம்பிச்சேன். சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது ரொம்ப இனிப்பா இருந்தது .

அப்புறம் உடம்பு ஏதோ குளிர்ச்சியாய் இருக்கிற மாதிரி தெரியுது .இது என்ன குளிர்ச்சியா இருக்கு அப்படின்னு கேட்டேன்.

இது குளுமைக்கு ஏத்த பழங்க அப்படின்னு சொன்னாங்க.

அன்றிலிருந்து சீதாப்பழம் எனக்கு எப்ப கிடைச்சாலும் விரும்பி சாப்பிட ஆரம்பிச்சேன்.

அது என்னது சீத்தாப்பழம் அப்படின்னு கேட்டா ஒருவேளை இது ராமருக்கும் சீதைக்கும் தொடர்பு இருக்குமோ அப்படின்னு நான் ஒரு புலவர்  கிட்ட கேட்டேன்.

அந்த புலவர் யார்னா?

பாண்டிச்சேரியில் இருக்கிற சின்ன சேகர்.

அவர் வந்து இரண்டு நாள் கழித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆமா இருக்குது அப்படின்னு சொன்னார்.

அவரு எங்க போய் அலைஞ்சி தகவல் சேகரிச்சாரோ தெரியல.

என்ன தொடர்பு அப்படின்னு கேட்டேன்

“ இராமாயணத்துல ஒரு குறிப்பு இருக்கிறது அது என்ன குறிப்பு அப்படினா ராமரும் சீதையும் காட்டில் நடந்து போகிறபோது சீதைக்கு பசிக்கும் போது ஒரு பழம் பார்த்தார்கள் . அது பிடித்து இருந்தது . அதை பறித்து சாப்பிட்டாங்க.

சீதை அந்தப் பழத்தை சாப்பிட்டதால் சீத்தாப்பழம் என்ற பெயர் வந்திருக்கக் கூடும் “அப்படின்னு சொன்னார் .

நான் நிஜமாவா அப்படின்னு கேட்டேன் .

“நான் ஒரு குறிப்பு என்று சொல்லி இருக்கிறேன் பெயர் காரணத்திற்கு இதுவும் ஒரு நிகழ்வாக இருக்கலாம் “ என்று சிரிச்சிகிட்டே வைத்துவிட்டார்.

எனக்கு நம்பிக்கை வரல .

சரி மறுபடியும் யாருகிட்ட கேக்கலாம்  அப்படின்னு யோசிச்சி எங்க வீட்டுக்கு அருகாமையில் சுப்பிரமணியம் அப்படின்னு சொல்லி  ஒரு ஓய்வு பெற்ற கிராம அலுவலர்.

அவர் வந்து இயற்கை  உணவையும் இயற்கை மரங்களை நடுவது ரொம்ப ஆர்வமாக  இருக்கிறவர்.

அவர்கிட்ட கேட்டேன்.

அவருடைய துணைவியார் திடீரென்று இடையில புகுந்து ஒரு கருத்து சொன்னாங்க.

அந்த பழத்திற்கு பேரு  சீதளப் பழம்.

சீதம்னா குளிர்ச்சி ன்னு அர்த்தம்.

அது குளிர்ச்சியான காலத்தில் அது காய்ப்பதால் சீதளம் அப்படின்னு சொல்லுவாங்க . அது அப்படியே சீதளப்பழம் சீதளப்பழம் னு சொல்லி ச் சொல்லி பிறகு சீத்தாப்பழம் அப்படின்னு பேரு வந்து இருக்கு .

அப்படின்னு விளக்கம் சொன்னாங்க.

அது எப்படியோ இருந்துட்டு போகட்டும் .

அது சீதை சாப்பிட்ட பழமோ அல்லது சீதளப் பழமோ .. குளிர்ச்சியா இருக்கு .

அப்புறமா ஏதுவான இருந்துட்டு போவட்டும்.

சீதாப்பழம் உடம்புக்கு நல்லது குளிர்ச்சியானது இனிப்பானது .

கொழுப்பு சத்தை குறைக்கக்கூடியது.

சீதாப்பழம் இருக்கே இது

தைவான்ல புத்தர் தலை அப்படின்னு சொல்லுவாங்க .

ஈழத்துல அன்னமுன்னா பழம் அப்படின்னு சொல்றாங்க .

அது என்ன அன்னமுன்னா அப்படின்னா அன்னம் சாப்பிடுவதற்கு முன்பாக அப்படின்னு எடுத்துக்கலாம்.

இது சீத்தாப்பழம் -மரம் அப்படின்னா கூட குட்டையாக இருக்கும் .

ஒரு எட்டு மீட்டர் வரைக்கும்தான் வளரும் .

அதுல என்ன விசேஷம்னா ..

இது நட்டு ரெண்டு அல்லது மூணு வருஷத்துக்கு உள்ளேயே இது காய்க்க ஆரம்பிச்சிடும் .

இது எங்கே இருந்து முதலில் வந்தது அப்படின்னா..

அமெரிக்காவில் இருந்து வந்ததா சொல்றாங்க  அனோனா ஜாதி வகையைச் சார்ந்தது . வெப்பமண்டலம் அது வெப்பமாய் இருக்கிற பகுதியில் அது அதிகமாக வளரும் அப்படின்னு சொல்றாங்க ..

என்ன சார் இதுவும் அமெரிக்காதானா அப்படின்னு கேக்காதிங்க ..

மரம் வளர இடத்தை பொருத்து சொல்றேன்.

எங்க வீட்டில இருக்கிறதப் பார்த்துட்டு பக்கத்துல இருக்கிற ஒரு பெரியவர்

ரெண்டு மூணு இருந்தா குடுங்க பா ன்னார்.

ஏன் பா ன்னேன்?

ரத்த அழுத்தத்துக்கு நல்ல பழம் அப்படின்னு சொல்றாங்க.

சுகர் பேஷண்ட் க்கு கூட ரொம்ப நல்லது அப்படிங்கறாங்க..

மனச் சோர்வு இருந்தால் கூட இது சாப்பிட்டா சரி ஆகிடும்னு சொல்லுறாங்க .

சாப்பிட்டுட்டு சரியா செரிமானம் ஆகலன்னா சீதாப்பழம் போய் சாப்பிடுங்க அது நல்ல செரிமானத்தை உருவாக்கிக் கொடுக்கும் அப்படின்னு சொல்றாங்க .

அது மட்டுமல்ல எலும்புக்கு நல்லது தசைக்கு நல்லது இதயத்திற்கும் ரொம்ப நல்லது சீத்தாப்பழம் சாப்பிடுவதால் னு சொன்னார்.

அவருக்கு சும்மாவே கொடுத்திருப்போம்  இவ்வளவு விளக்கம் சொன்ன பிறகும் கொடுக்காமல் விடுவோமா?

அவர் தொடர்ந்து வந்து சாப்பிட்டுவிட்டு போயிட்டு ருந்தார்.

ஒரு டாக்டர்கிட்ட சீத்தாப்பழத்தை பற்றி நான் பேசினேன் .அவர் சொன்னார்.

இல்லையே இது புற்றுநோய் கூட  நல்லதுன்னார்.

இதுவே மருந்தா பயன்படும் அப்படின்னாரு .

அப்புறம் நீங்க ஒல்லி யா ?

அதுக்கு வேற என்ன பண்றீங்க ?

குண்டாகணும் அப்படின்னா இந்த சீத்தாப்பழத்தை கூட சாப்பிடலாம் அப்படின்னு சொன்னார்.

சரியா சொல்லணும்னா  இதுல வைட்டமின் சி இருக்கு .பி காம்ப்ளக்ஸ் இருக்கு .வைட்டமின் ஏ .

நார்ச்சத்து இருக்கு .அப்புறம் கால்சியம் இருக்கு .பொட்டாஷியம் இருக்கு .இரும்பு இருக்கு .கொழுப்புச் சத்தை இது நல்லா குறைக்க முடியும்னு சொல்றாங்க .

பிறகென்ன ரொம்ப நல்ல பழம் சாப்பிடலாம்.

இந்த விஷயம் சொன்னால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும் .அது என்ன சார் அப்படின்னு கேட்டா ..

இந்த சீத்தாப்பழம் வந்து தலையில இருக்கிற பேனை எல்லாம் ஒழிச்சி  கட்டிடும்.

அப்படின்னா எவ்வளவு முக்கியம்னு பாருங்க .

அதனாலதான் கூந்தல் தைலம் தயாரிக்க இந்தப் பழம் ரொம்பவும் பயன்படுது .இனிமே நீங்க பழத்த விடுவீங்களா?

குழந்தை பாக்கியம் இல்லை கரு சரியான  பட கூடலன்னா சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் பயன் இருக்கும் அப்படின்னு சொல்றாங்க .

இன்னும் ஒன்னு ஆஸ்துமா இருக்கு பாருங்க எப்ப பாரு இருமிகிட்டே இருந்தா அதுக்கு சீதாப்பழம் சாப்பிட்டால் குணமாகி அதற்கான நல்ல வாய்ப்பு உண்டு அப்படிங்கிறாங்க…

சீதாப்பழம் நல்லது அப்படின் ன் கூட  சுகர் பேஷண்ட் இருக்கிறவங்க டாக்டர் கிட்ட கொஞ்சம் கேட்டுகிட்டு சாப்பிடுவது ரொம்ப நல்லது .

சீதாப்பழம் ரொம்ப நல்லது அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கேன் எங்க வீட்ல ஒரு சம்பவம் நடந்தது.

சீதாப்பழம் பார்க்கிறதுக்கு பச்சையா இருக்கும்  மேசை மேல நாலஞ்சு வச்சிருந்தாங்க. பேத்தி பாத்தா..

கிரிக்கெட் பால்  பச்சையா இருக்குன்னு  சொல்லி எடுத்து  வீசினா அது எதிர்ல இருந்த கதவுல பட்டு வீடு பூரா விதை பரவி கொழ கொழன்னு ஆயிடுச்சி.

அதுக்கப்புறம் எங்க மனைவி வந்து இது சாப்பிடணும் உடம்புக்கு நல்லது  விளையாடற பால் கிடையாது கிரிக்கெட் மாதிரி பயன்படுத்தாத அப்படின்னு சொன்ன பிற்பாடு இப்போ அதுவும் சீதாப்பழம்  வச்சி  விளையாடுவதில்லை எடுத்து சாப்பிட ஆரம்பிச்சுடுச்சு.

அதோடு நிக்கல ..வழக்கம் போல என் கிட்ட வந்து சீதாப்பழத்த எழுதிகிட்டு இருக்கீங்க அப்படின்னு சொல்லி ஒரு விஞ்ஞான விளக்கத்தை கொடுத்து எழுதுங்கன்னு மிரட்டினா.

சீதாப்பழம் – பூக்கும் தாவரம்

வகுப்பு – மக்நோலியோப்ஸிடா

குடும்பம் -Annonaceae

பேரினம் -அனோனா

இனம் – A SQUAMOSA

இதெல்லாம் ஏற்கனவே கூகுள்ல இருக்குமே அம்மா அந்த தகவல்தானே சொன்னே அப்படின்னேன்.

“இல்ல தாத்தா நீங்க ஒரு பழத்தைப் பற்றி எழுதும்போது இந்த விஞ்ஞான குறிப்பையும் சேர்த்து எழுது ங்க.படிக்கிற வங்களுக்கு பயனுள்ளதாகவும் ஈஸியாகவும் இருக்கும் “அப்படின்னு சொல்லி சிரிச்சுக்கிட்டு போயிட்டாங்க .நானும் மறக்காம இதை சேர்த்திருக்கேன்.

சீத்தாப்பழத்தை பொருத்தவரைக்கும்  பயிர்  கூட செய்யலாம் .

திட்டமிட்டு நாம பயிர் செஞ்சா  ஒரு நல்ல வருமானத்தை அடைய லாம் .

எனவே சீத்தாப்பழம் என்பது ராமாயணத்தில் வர்ற சீதையோடு சம்பந்த பட்டதா இல்லையா என்பதைவிட நம்ம உடம்புக்கு தேவையான முக்கியமான ஒரு பழ வகையைச் சேர்ந்தது .

தயவுசெய்து கிடைச்சா விட்டுறாதீங்க ..சாப்பிடுங்க.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
  2. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
  3. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
  4. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
  5. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
  6. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
  7. அரச மரம் :ராசி அழகப்பன்
  8. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
  9. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
  10. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
  11. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
  12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
  13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
  14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
  15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
  16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்