முன்பு ஒரு காலத்திலே-4-ராசி அழகப்பன்
எப்ப எங்க புங்க மரத்த பாத்தாலும் மொத மொதலா அழகான பொண்ணு ஒண்ணு என் தலையில செல்லமா கொட்டுன ஞாபகம் வரும்.
ஆமாங்க..
இளம் பிராயத்து சில்லென்ற தென்றல் காற்றோடு தவழ்ந்து வந்த காற்றின் சுகம்!
அட ஆமாங்கறேன்.
கொஞ காலத்துக்கு முந்தி விஜய் சேதுபதியும்,த்ரிஷாவும் தியேட்டர்ல தன்னோட இளவட்ட சங்கதிகளை கோத்து வாங்கன படம் ஓடிச்சே..
96- அது மாதிரிதான் என் நினைப்பு புங்க மரத்த சுத்தி சுழட்டி அடிக்குது…
என்ன பண்ணாலும் சரி..சிறுசுல மொத முறை தாவணி முகத்துல பட்ட சிலிர்ப்பு.அப்புறம் குறுகுறுன்னு பாத்த பார்வை,அழுத்தமா கொஞ்சலோட நம்ம பேரைச் சொல்லி கேக்கும் போது தோணற நினைப்பு இதையெல்லாம் மறுவாட்டி அந்த மாதிரி கிடைக்காது.நான் ஆறுலருந்து எட்டு வரைக்கும் எங்கூருலருந்து மூணு மைல் தூரத்துல இருக்கிற ரெட்டியார் பள்ளிக்கூடத்துல போயி படிச்சேன்.
அப்ப படிக்கிறப்பதான் எனக்கு அந்த பொண்ணு பழக்கம்.அட பழக்கம்னதும் வேற மாதிரி நினைக்கப்படாது…ஆம..சொல்லிட்டேன்.அந்த வயசுல பொண்ணுங்க கூட பேசுறது ,சாப்பிடும்போது கிறுக்குப் பய மாதிரி அவங்க தட்டுல இருக்கிற சாதத்தை ஒரு பிடி சாப்பிடறதுன்னு ஒரு அங்கலாய்ப்பு…அத நான் செஞ்சிடுவேன்.
அதுல பழக்கமானவங்க தான் முத்தரசி.பேர மாத்திருக்கேன்.நிசமான பேரச் சொல்லி இது இப்போ வம்புல மாட்டி…எதுக்கு அவஸ்தை..இப்ப பாட்டி கூட ஆயிருக்கும்.அப்போ கணக்கு பாடத்துல ஆம்பளப் பசங்களும் பொட்ட பசங்களும் சேர்ந்து ஒண்ணா படிப்போம்.சந்தேகத்தை தீத்துகிட்டா கணக்குல நூற்றுக்கு நூறு எல்லோரும் வாங்க முடியும்ன்னு கணக்கு வாத்தியார் திட்டம்.
அவரு திட்டம் அவரோடது.பய புள்ள நம்ம திட்டம் அந்த வயசுல பேசிப்பழகுறதுல,குறும்பு செஞ்சி அடி வாங்கிறதுல ஒரு இஷ்டம்.அப்படித்தான் கணக்கு தெரிஞ்சும் தெரியாத மாதிரி முழிப்பேன்.
அந்த முழியப் பாத்துட்டு ,”முண்டம் முண்டம் கணக்குல கழிக்கும்போது பக்கத்து எண்ணுல ஒண்ணு கடன் வாங்கி சேத்துக்கணும்.அப்புறம் கழிக்கணும்..கழித்தல் கணக்குன்னு சொல்வாங்க.இது தெரில உனக்குன்னு நறுக்குன்னு கொட்டுவா.
அதப் பாத்து மத்த பசங்க அசந்து நிப்பாங்க..சிவாஜி கணேசன் ஒரு படத்துல “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே”அப்படின்னு பாடுவார்.அதுல கைய காமிப்பார்.பறக்கற பறவங்கல்லாம் அப்பிடியே வானத்துல நிக்கும். காத்து , மரம் , செடி , கொடி , கடல்ன்னு சகலமும் நிக்கும். அது மாதிரி அந்தப் பொண்ணு என் மண்டைல கொட்டும்போது பாத்து அசந்து நிப்பானுங்க.அந்த வயசுல அப்படி தோண்றதுதானே..அந்த கொட்டு சொகம் காத்துல பறந்து போற இலவம் பஞ்சு மாதிரி கன்னா பின்னான்னு கொஞ்ச வருஷம் சுத்திகிட்டு இருந்திச்சி…
எல்லாப் பசங்களும் என்ன பொறாமையா பாத்தானுங்க..“உம்மேல என்னவோ அதுக்கு இருக்குடா”ன்னு சொல்லி உசுப்பேத்தி திங்கற சோத்துல பாத்தி கட்டி பங்கு போட்டுறுவானுங்க..இதத்தான் இப்ப டாக்டருங்க ‘இன்பேச்சுவேஷன்’ பருவத்துல வர்ற உணர்வுங்கறாங்க..
அது ரொம்ப காலம் நீடிக்கலை.நான் காலேஜ் நுழையற சமயம் தாலி கட்டி சைக்கிள்கார கடை வச்சிருந்த மாமனை கல்யாணம் பண்ணிகிட்டு போயிட்டா…அதுக்கப்புறம் புங்க மரக் கதைக்கு இடைவேளை விட்டாச்சு…புங்க மரத்தோட தொடர் கதை வேற ரூபத்துல வந்து சிக்கிகிச்சு.எங்கூர்ல சுப்புராயன்னு ஒரு வளர்ந்த இளைஞர் ஸ்கூல் மாஸ்டர் மூவீஸ் கம்பெனில நடிக்கப் போனார்.அதுக்கு டிரெயினிங் புங்க மரம் பக்கத்துல கிணத்துலருந்து தண்ணியிறைக்கிற கவலை இடம் தான்.
கவலைன்னா சோகமில்ல..கிணத்து கரையில ரெண்டு பக்கம் கம்பு அதுல ராட்டினம்.அதன் நடுவுல கயிறு.கயிற்றுக்கு கீழே வாரி எடுக்கிற தண்ணி இரும்பு குடம்னு வச்சுக்குங்களேன்.அதோட முனையிலே தோல்ல செஞ்ச குழாயிருக்கும்..அதை கயிற்றுல கட்டி வெளில கொண்டு வந்து நுகத்தடியில மாட்டி அதை ரெண்டு மாடு சறுக்கலான பகுதி வரை இழுத்துகிட்டு போகும்.தண்ணி மேல வரும்போது இன்னொரு கயித்தால இழுக்க தண்ணி வாய்க்கால்ல கொட்டும்.
இததான் அந்தக் காலத்துல கிணத்துலயிருந்து தண்ணியிரைக்கிற முறை.அட கருமத்தே அப்ப ஏது கரண்ட் கிரண்ட்.அந்த சறுக்கலான இடம் கவலை.அதுல மேட்டிலிருந்து பள்ளம் சறுக்கலா இருக்குமில்ல.அதுல வசனம் , பாட்டு பாடிகிட்டே நடிச்சு பாக்கறது வேலை..நடு வெய்யில் உச்சி மண்டைல பொளந்தாலும் பக்கத்துல நிக்கற புங்கமரம் அப்படியே சில்லுன்னு குளிர் காத்து அடிச்சி வெக்கைய விரட்டிபுடும்.அப்புறம் புங்க மரத்து கிளையில உக்காந்து காதல் வசனம் பேசறது. துண்டு போட்டு அங்ஙனயே அக்கடான்னு படுத்து தூங்கி எந்திரிக்கின்ற காலம் போச்சு.
ஏன் புங்கமரம் வெய்ய காலத்து சொர்க்கங்கறாங்கன்னா..இந்த புங்க மட்டும்தான் மத்த மரம் மாதிரி இல்லாம 200% ஆக்ஸிஜனை வெளியேத்துது..தான் சில சமயத்துல பாம்புங்க புங்க மரத்துல ஜில்லுன்னு காத்து வாங்க படுத்துக்கும்.புங்க மரத்தாண்ட பாம்பு கடிச்சு செத்தவங யாருமில்ல.ஏன்னு கேளுங்க. நம்மளாட்டம் அதுவும் ஓய்வெடுக்க வந்ததுதானே..ஏன் மத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்கப் போகுது,.
புங்க மரத்துல இன்னொரு விஷேசம் இருக்கு.அத கொட்டைய நசுக்கி எடுத்து உள்ள இருக்கிற வெள்ள பருப்ப எடுத்து சாப்பிட்டா அவ்வளவு நல்லாருக்கும்.ஏன்னு தெரியல..வீடுகள்ல பெரும்பாலும் புங்க மரம் வச்சி நான் பாத்ததில்லை. பாம்பு,பூச்சிபட்டு வந்து அண்டும்ன்னு நினைச்சி ஒதுக்கிட்டாங்களான்னு தெரியலை.இந்த புங்கமரம் பத்தி இன்னொரு கதையிருக்கு.சங்ககாலம்ன்னு வச்சுக்கோங்க.புங்க கிளைங்கள மேல இருக்கிற தோலை சீவிட்டு அதுல கல்ல கட்டி கடலுக்கடியில போட்டுறுவாங்களாம்.மறுநாள் வந்து பாத்தா புங்கக்கிளை சுத்தி நோத்துக் கணக்கான எறால்ங்க புடிச்சிக் கிடக்குமாம்.மெதுவா நோவாம கல்லை கழட்டி உட்டுட்டு புங்ககிளைய எடுத்து அவ்ளோ எரால்ங்க கிடைக்குமாம்.
இப்படி எறால் புடிக்கிற டெக்னிக்க அந்தக் காலத்துல பண்ணியிருக்காங்க. இத இப்ப நேங பாக்க முடிஞ்சா பாத்துக்கோங்க..சங்க காலத்து சங்கதி அதான் உங்க்ஜ கிட்ட சங்கூதிட்டேன்.பொறவு ஒண்ணு சொல்லணும்.பிங்க மரம் எந்த இடத்திலயும் வளரும்.அதோட பூ,காய்,இலை,வேர் எல்லாமே மருந்து தான்.ஒருவாட்டி பக்கத்து தெரு கண்ணாடிக்காரர் மாட்டை புடிச்சுகிட்டு கொல்லையில நடந்தேன்.எவனோ ஒருத்தன் கிறுக்குப்பய மோளம் அடிச்சி உசுப்பிட்டான்.அதான் சாக்கின்னு மாடு பயந்து என்னை இழுத்துகிட்டு ஓட ஆரம்பிச்சுடுச்சு.
எவ்ளோ தூரம் ஓடறது. நம்மால ஆகல,கயிறு கைய வுட்டு போயி நான் தொப்புன்னு கீழே விழுந்து சிராய்ச்சிகிட்டேன்.ஒடம்பெல்லாம் இரத்தக் கோடு.அதென்னமோ உள்ளங்கைல ஓடற ரேகை மாறி உடம்புல ஆயிருச்சி.அப்பா அதப்பாத்துட்டு வந்து நாலு விளாசு விளாசிட்டு “உக்கார்றா நாயே”அப்படீன்னு சுத்தும் முத்தும் பாத்துட்டு புங்க இலைய தண்ணில போட்டு கொதிக்க வச்சு அதுல குளிப்பாட்டுவுட்டாரு.
அப்புறம் சில நாள் கழிச்சு புங்க இலைய அரைச்சி குடிக்கச் சொன்னாரு.அத எவனாவது குடிப்பானா என்ன?”டேய் இது ரத்த மூலத்துக்கு நல்லதுன்னாரு.இந்த அக்கரமத்த எதுத்து ஊட்டு அம்மட்டன் பாட்டிகிட்ட புலம்புனா அந்தக்கிழவி, “உனக்கு சின்ன வயசுல மாந்தம் வந்ததுக்கு புங்கன் இலைய குடிக்கிற தண்ணில போட்டு குடுத்தேன்.சரியாயிடுச்சின்னாங்க”.அட அப்படில்லாமா இருக்கும்.அப்புறம் தான் தெரிஞ்சுது புங்க மரம் தங்க மரம்னுட்டு.ஆமா.மேகநோய் , நீரிழிவு நோய் , நரை, திரை, இதுக்கெல்லாம் புங்கம்பூ பயன்படுது.இதுமாதிரியே புங்க மரத்தோட ஒவ்வொன்னுலையும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கு.
புங்க மரத்துல தொட்டில்ல தூங்கற குழந்தை அக்கடான்னு காத்துபட்டு கண்ணமூடி தூங்கும். பசியாவது, கிசியாவது புங்கக் காத்து எல்லத்தையும் மறக்கடிச்சிட்டு தூங்கவிட்டுடும்.நான் இதோ வந்திடறேன்னு சொல்லிட்டு போய் புங்க மரத்துக்கு கீழ அசந்து தூங்கி அடி வாங்கின கதைய சொன்னா..அம்புட்டு அலுப்பையும் புங்கக்காத்து சாப்டிடும்.என்ன மரத்துல ஏறும்போது பாத்து ஏறணும்.இந்த செவ்வெறும்பு ஏறி டூர் போயிகிட்டுஇருக்கும்.தொந்தரவு பண்ணா கடிச்சி அழவுட்டுடும்.
இப்படி புங்க மரத்த ஆராய்ச்சி பண்ண திருவண்ணாமலையில இருக்கிற சித்தர்கிட்ட பேசப்போக அவரு,”அடப் போக்கத்தப்பயலே.புங்க மரம் என்ன லேசுபட்டதா?அகத்தியரே இதை சொல்லியிருக்காரு’ன்னு போதனை பண்ண ஆரம்பிச்சுட்டார்.என்ன அதுன்னு கேக்கப் போவ,
’புங்கின்விதை காற்கிரந்த புண்கரப்பான் காதெழுச்சி
அங்கசன்ன கண்ணோய்க்கும் ஆம்பேதி–யுங்கட்கும்
காட்டுப்புங் கின்விதைக்கு கண்டதே மற்சொறிமேய்ப்
பூட்டுப்பங் கின்வாய்வும் போம்’-
பாடியே காமிச்சுட்டார்.
ஒண்ணுமில்ல இது வைத்தியப் பாட்டு.அகத்தியர் குண பாடத்துல இருக்கு.கொஞ்சம் தமிழ் பேராசிரியை கிட்ட காத நீட்டினேன்.அவங்க ,ஆமாம். புங்க மரம் ஐங்குறுநூறுலயே வந்திருகேன்னாங்க.
”என்னான்னேன்”
“புன்னை மணி மலர் துறை தொறும் வரிக்கும்” 117 வது பாடல்ல வருது’ன்னாங்க.புங்கை மரம் பெயர்ச்சொல்.அத ‘புன்கு’ன்னும் சொல்லலாம்ன்னாங்க.குறிஞ்சி நில மகளிர் வச்சு விளையாடுற பூக்கள்ல புங்கைப்பூவும் ஒன்னு.
சரி போவட்டும்.நம்ம கணக்கு புங்க மரத்துல தலையில கொட்டு வாங்கின சரிதிரக்குறிப்பு அம்புட்டுதான்.எங்கப்பா கிட்ட சாடை மாடையா சொன்னேன்.வீட்டு முன்னாடி புங்க மரம் வச்சா நல்லதுன்னேன்.ஏன் வர்ரவன்லாம் வாசல்ல குரட்டை விட்டு தூங்கறதுக்கா,,போடா போயி வேலைய பாரு’ன்னுட்டாரு..
புங்க மரத்த பத்தி பேத்தி கூகிள்ல போனா-போயி சொல்றேன் கேளு தாத்தான்னு பாடம் எடுத்துட்டா.புங்கை அல்லது புங்கு அல்லது பூந்தி அல்லது கிரஞ்ச மரம் (Millettia pinnata) பட்டாணி சார்ந்துள்ள பேபேசியேக் குடும்பத்தைச் சார்ந்தது.
இது வெப்பமண்டலப் பகுதிகளான ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இது இந்தியா சீனா, சப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளிலும் இருக்கு..மருத்துவமரம்பாங்கனா..
அம்மா போதும் நன்றின்னு கையெடுத்து கும்பிட்டு..என் ச்ஹின்ன வயசுக்குள்ள போய் மறுபடியும் புங்கமரத்து நிழல்ல கணக்கு பாடம் படிக்க ஆரம்பிச்சிட்டேன்.
”புங்கக் காற்றோடு
உன் விரலசைய’
ஏதோ-
ஒரு ரவி வர்மா
ஓவியம் வரைவதாய் தோன்றியது..
உன் விரல்
என் தலையைத் தொட-
என்னுள்
ஒரு ஆம்ஸ்ட்ராங்
ரசவாதக்கொடி ஏற்றினான்”
சொற்கள் குழைந்து பால்யமாக-
இப்போதும் சாலைகளில் எங்காவது புங்கைமரம் பார்த்தால் பேசத்தொடங்கி விடுவேன்.இன்று கூட கடற்க்கரை ஓரச் சாலைகளில் நடை பயிலும்போது அழகாய் தலையசைத்து நின்ற புங்கை மரத்தின் கீழ் நின்று சலனப்பட்டேன்.என்னோடு உடம் வரும் ஸ்ரீராம் மெடிக்கல் முதலாளி ஆர்.சதீஷ்குமார் ,”என்ன சார் பழங்கனவா’ன்னார். அட அவருக்கும் புங்க மரக் கதை இருக்கும் போல.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
- தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
- கொய்யாமரம் : ராசி அழகப்பன்
- அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
- கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
- தென்னை மரம் : ராசி அழகப்பன்
- முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
- அரச மரம் :ராசி அழகப்பன்
- வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
- பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
- “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
- கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
- கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
- பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
- வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
- முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்