முன்பு ஒரு காலத்திலே -3
“ஏண்டா பனைமரம் மாதிரி நிக்கிறே”ன்னு வைவாங்க..
வையுறதுல ஒரு நியாயம் இருக்கு.அது என்னன்னா..அது உசரமா நின்னு நிதானிச்சு நிக்கறதுமில்லாம நாம செத்த பிறவும் அது உசுரோட இருக்கும். அம்புட்டு காலம் ஆயுசு அதுக்கு.
பனைமரத்துக்கும் எனக்கும் என்ன பூர்வாஜென்ம பந்தமோ தெரியல.ஆயுசுக்கும் நிழலாட்டம் கூட வந்துகிட்டே இருக்கு.
அப்படித்தான் சின்ன வயசுல…டவுசர் நிக்கிற காலம்.பசங்கல்லாம் சேந்து உசுப்பிவிட்டானுவ..“டேய் அந்த பனை மரத்துல ஏறி பனங்காய் பறிச்சு போட்டுட்டா நே ஆம்பள… இல்லன்னா பொட்டப்பய.”
பக்கத்துல என்கூட படிக்கிற பொண்ணு இதப் பாத்துகிட்டே நிக்கறா…
எனக்கு மூக்கு செவந்து அவமானமாப் போச்சி.
வேணாம் கழுதைன்னு வுட்டு கிடாசிட்டு போயிட்டா அந்தப் பொண்ணு எல்லார்கிட்டயும் சொல்லி மானத்தை வாங்கிபுடும்..
“டேய் முடியாதுன்னு சொல்லி நவுர்றா…இந்த முனுசாமி மூணு நிமிசத்துல சரசரன்னு ஏறி மூணு கொலைய வெட்டி சாய்ச்சிடுவான்”
வெட்டிப்பய மூக்குறிஞ்சான் ஏகத்துக்கும் அளந்து வுடறான்..
வெக்கக் கேடு.என்ன பண்ண?
பனைமரம் முன்னபின்ன ஏறி பழக்கமில்ல..அது மட்டுமல்லாம அஞ்சாறு ஆள் கணக்கா உசரமா நின்னு கடுப்பேத்துது.
எவனாவது வெட்டி குடுத்தா நுங்க மூக்குல முட்ட உறிஞ்சி சாப்பிடுவேன்..அவ்ளோதான் நம்மோட திறமை.
என்ன செய்ய பொட்ட புள்ள எதிர்ல சீண்டிப் பாத்துட்டானுங்க..
யாரும் பாக்காத மாதிரி அந்த பொட்டபுள்ளய ஓரக் கண்ணால் பாத்தேன்.
அவ வேணாம்னு சாடை காட்டறா?.
‘என்னது வேணாமா?’
அப்புறம் அந்தப் பயலுவ காலத்துக்கும் பொட்டன்னு கூப்பிடவா?ன்னு ரோஷம் உள்ளருந்து குபுக்குன்னு ஏறிச்சு..
அடுத்த செகண்டு..
“டேய்..உங்களுக்கு என்னடா பனங்காய் திங்க நான் ஏறி தரணும்..”
“ஆமாண்டா..ஆக்கங்கெட்ட கூவே…எத்தினி தடவ சொல்றது’ன்னு ஊடால பூந்து உசுப்பினான் மார காமிச்சிகினு நிக்கிற மாசாணம்.
இருக்கிறதுலயே உயரம் கம்மியா இருக்கிற பனை மரத்துல ஓடிப்போய் ஏறினேன்.எப்பிடிதான் ஏறினன்னு எனக்குத் தெரியாது.
ஒரு வேகத்துல ஏறிப் போய் பனங்காய தனித்தனியா ஆட்டி ஆட்டி முறுக்கி கீழே தள்ளினேன்.
அஞ்சாறு விழுந்துச்சு.
ஆளுகொண்ணா பொறுக்கி எடுத்துக்கிட்டானுவ.பொட்டபுள்ளயும் ஒண்ணு எடுத்துகிட்டு என்னைப் பாத்து லேசா சிரிச்சா..
அடங்கொப்புறானே என்னகு என்னவோ ஆகாசத்துல அம்பதடிக்கு மேல பறக்கிற பட்டம் மாறி அந்தாண்டயும் இந்தாண்டயும் சந்தோஷத்துல அலபாய்ஞ்சிடுச்சி.
இது போதும். இனிமே எவனும் ‘பொட்டப் பய’ன்னு சொல்ல மாட்டான்..
“அவனுங்களப் பாத்து டேய்..ஆம்பளப் பசங்களா இன்னும் வேணுமா சொல்லு ஆட்டிப் போடறேன்’னு சவால் விட்டேன்..
ஒருத்தன் திடீர்னு, “ஆங் போடு போடு மரத்துக்காரன் வரான்..அவனக் கேட்டுப் போடு”ன்னு கத்திட்டு ஓடிட்டானுவ… கூடவே அந்தப் பொண்ணும்..
கொஞ்ச தூரத்துல லுங்கி கட்டிகிட்டு மீசையும் தாடியுமா மரத்துகாரர் வரார்…
“டேய் எவனக் கேட்டுட்டு எம் மரத்துல ஏறுன..அடி செருப்பால முதல்ல மரத்துலயிருந்து இறங்குடா..பதநிக்கு வச்ச பானையத் தட்டி வுட்றாதே..அப்புறம் உங்கொரவளய கடிச்சித் துப்பிடுவேன்.”
சொல்லிக்கிட்டே கிட்ட வர,நான் எப்படி இறங்கறதுன்னு தெரியாம இறங்க.அந்த பனைமர செதிலுங்க மார பதம் பாக்க…அய்யோ வலிதாங்க முடியாம சரிச்சிகிட்டே வந்து கீழே விழுந்தேன்.
அவ்ளோதான் தெரியும்..ரெண்டு நாள் ஜுரம்.கண்ணு தெறந்து பாக்கமுடியல.
மாரெல்லாம் இரத்த காயம்.பனைமரத்துல இருக்கிற செதில்ங்க எல்லாம் என்னை கீறி தண்டிச்சிருச்சி..
வேப்பிலை அரைச்சு மஞ்சள் சேத்து பூசி ஒரு வழியா காஞ்சி காயம் ஆறிடுச்சி..
அதுக்கப்புறம் “எங்கப்பா ஒரு நாள் பக்கத்தூரு சித்தாமூருக்கு கூட்டிட்டு போயி எங்க நிலத்த பாத்துக்கற கருப்பக் கவுண்டர்கிட்ட இவனுக்கு நாலு காய் நுஙு உறிஞ்சி உறிஞ்சி குடிச்சேன்.
‘ஏன் மரம் ஏறுனன்னு இன்னி வரைக்கும் அவரு கேக்காம விட்டது தான் மனசெல்லாம் வலிக்குது”
என்னவோ பசங்க அப்படித்தான்னு புரிஞ்சி வச்சிருந்தாரோ என்னவோ?
அதுகப்புறம் விவரம் தெரிஞ்சு நான் வளஞ்சு நிக்கிற பனைமரத்துல ஏறி குதிரை ஓட்டிப் பழகினேனே ஒழிய வேற எதுக்கும் நான் ஏறினது இல்ல..
ஆனா பனைமரம் என் வாழ்க்கைல ஒட்டிப் பொறந்தது மாதிரி கூடவே வந்துகிட்டு இருந்தது.
அஞ்சாம் கிளாசு முடிச்சிட்டு ஆறாம் கிளாஸ் எங்கூருலருந்து பக்கத்தூருல ஸ்கூல்ல போய்தான் படிக்கணும்.. நடவண்டி தான்.ஊர்ல ஒருத்தர் ரெண்டுபேர் சைக்கிள் வச்சிகிட்டிருந்த பணக்காரங்க இருந்தாங்க.பட்டினிக்கு பொறந்த நாமல்லாம் அத எதிர்பார்க்க முடியுமா? நடந்தேதான் ஸ்கூல் போயிட்டு வருவோம்.
போக மூணு மைல்-வர மூணு மைலு..ஆக ஆறு மைல தினத்துக்கும் நடக்கணும்.
கருங்காலிகுப்பம் ஸ்கூல் இருக்கிற ஊர்பேரு.அங ரெட்டிமாரு ஜாஸ்தி.கொஞ்சம் கவுண்டரு.மீதி ஒதுக்குப்புறமா காலனி.ஆனா எல்லாரும் ஒண்ணாதான் படிப்பாங்க..பெரிசா வேத்துமை இருந்த மாதிரி தெரியல.உள்ளுக்குள்ள இருக்குமோ என்னமோ?
மதியச் சோறு இலவசம்.அந்தப் புண்ணியத்துலதான் நானெல்லாம் கரையேறினேன்.
போவட்டும் கருங்காலின்னு அந்தூருக்கு பேரு ஏன் வந்திச்சு..நாங்களா பேசிப்போம்.கருங்காலின்னா காட்டிக் கொடுக்கறப்பய ஊருன்னு..நிசமாவே அங்க எதக் காட்டிக் கொடுக்க? ஒரு வேள கருங்காலி மரம் அதிகமா இருக்கிற ஊரா இருந்திருக்குமோ?தெரியல.இன்னிக்கு வரைக்கும் மர்மமாவே இருக்கு.
சரி அத வுடுவோம். என் கதைக்கு வரேன்..
போற வழில இரண்டு மூணு பனைமரச் சாலையிருக்கும்.அங்க வுழற பனமட்டை,பனம்பூ,சருகுன்னு தேடிப்புடிச்சு வீட்டுக்கு எடுத்துட்டு வருவேன்.அதான் ராத்திரி அடுப்புக்கு…அப்பா தறிநெஞ்சிட்டு அலுப்பா வர்ரப்போ சுடுதண்ணி காய்ச்ச நான் பொறுக்கிட்டு வந்த பனமட்டைங்கதான் பயன்படும்.
அது மட்டுமல்ல எங்கூருல ஒரு ஓடை இருந்திச்சி..இப்ப அது ரொம்ப இளைச்சி நிக்குது..அப்போ மழை பெஞ்சா ஓடையில கால்முட்டி நனையற வரைக்கும் தண்ணி ஓடும்.நாங்க போயி அதுல குதிச்சு குதிச்சு ஓடுவோம்.விழுந்து எந்திரிப்போம்.இரண்டு கரையிலயும் பனைமரங்க வரிசையா நின்னு பாக்கவே ஜோரா இருக்கும்.
இங்கியும் நான் பனமட்டை சமாச்சாரம் பொறுக்க வருவேன்.
விடிஞ்சும் விடியாம அணில் கடிச்சு போட்ட பனம்பழம் பொறுக்க ஓடையில ஓடுவோம் . பனமரத்த சுத்தி கள்ளிச்செடி ,முள்ளுச்செடிலாம் மொளச்சி கிடக்கும் .நம்ம போதாத காலம் கத்தாழை செடிக்கு நடுவுல பனம்பழம் ஒன்னு பாத்து சிரிக்கும் . கைய வுட்டு எடுத்த … அடங்கொப்பன் மவனே என்கிட்டயா உன் வேலய காமிக்கிறேன் ’ னுட்டு கைய கிழிக்கும்.
அட… கெடக்கட்டும் கழுதைன்னு நிரய பழங்கள் பொறுக்குவேன். மோப்பம் புடிச்ச மூஞ்சூறுப் பசங்க வந்து ‘ டேய் எனக்கொன்னு குடுறா ..‘
ன்னு கெஞ்சுவானுங்க … ‘ டேய் முன்னாடி உங்க நிலத்துல கிடச்ச காரமணிய எனக்கு கொஞ்சமாவது குடுத்தியா . இப்ப வந்த கேக்குற ‘ ம்பேன். அவன் வெதும்பி ‘ இந்த வாட்டி தர்றேண்டா ‘ ம்பான் .
வீம்புக்கு பேசறதுதான தவிர கொடுக்காம இருக்க முடியுமா ? நாலஞ்சு பசங்க புதுசா கட்டுன பிரிட்ஜ்ல உக்காந்து காலாட்டிக்கிட்டு பனம்பழத்தை கொட்டைய மட்டும் விட்டுட்டு நக்கி நக்கி சாப்ட ருசியிருக்கே இன்னிக்கு சாப்றானுவலே பிஸா … பர்கர் .. அதுக்கு கால்வாசி வருமா ? .
கார்த்திகை மாசம் வந்தாபோதும் ஜோடி சேர்ந்துக்கிட்டு பனம்பூ பொறுக்க போய்டுவோம் . கோணில எடுத்துட்டு வந்து காய வப்போம்.
எல்லா வூட்லயும் இதான் நிலமை… பொறவு கரித்துண்டு , உப்பு எல்லாம் இடிச்சி சேத்து ஒண்ணா கலந்து துனில அழகா வளைச்சி சுத்தி நெருப்பு பத்த வச்சி ராத்திரில “திரி திரி பந்தம் திருமால்பந்தம் “னு கார்த்திகை தீபத்துக்கு சுத்துவோம்
அப்படியே பொறி பொறியா பறந்து பாக்க ஜெகஜோதியா இருக்கும் . ஊரே சுத்தும் .ஊருக்கு புதுவெளிச்சம் வந்த மாதிரி தெரியும்.
எப்படா கார்திகை வரும் பந்தம் சுத்துவோம்னு மனசு கிடந்து தவிக்கிறது அலாதியான சுகம் .
அட இத சொல்லப்போய் அத வுட்டுட்டேன் பாருங்க.
பனங்கள்ளு சாப்டு பாழாப் போனவன் எவனும் இல்லன்றதுதான் எனக்கு தெரிஞ்சது.
பதநீர்ல கொஞ்சம் சுண்ணாம்பு சேர்ந்த சுவை இருக்கும் . எங்கூருக்கு பதநீர் விக்கிறக்குன்னே ரெண்டு மூணு பேர் பக்கத்துல இருந்து வருவாங்க … வரிசைகட்டி வாங்குவோம்.
பதநீர் அவ்வளவு ருசியா இருக்கும் . சில்லுன்னு உள்ளுக்குள்ள போய் இறங்குறது ஏதோ கரண்ட் பாஸாவுற மாதிரி தோணும் ..
பதநீர் குடிச்சா அவ்வளவு குளுமை. பனங்காய் கொலை கொலையா வெட்டிக்கிட்டு வந்து சாப்பிடக் குடுப்பாங்க.. அப்பலாம் அத காசுக்கு வித்ததா எனக்கு ஞாபகமில்ல… தெரிஞ்சவங்க வந்து கொடுப்பாங்க. வெட்டித் தர அத உறிஞ்சி உறிஞ்சி வயத்த ரொப்பிக்குவோம், பதிலுக்கு எதுனா கஞ்சியோ , கூழோ வாங்கி சாப்டு போவாங்க.
காசுக்கு விக்கிறது எல்லாம் இப்போதான் . அதுவும் ஹைவேஸ்ல பாக்கனுமே காரையெல்லாம் பாக்கும்போது ‘ பரவாயில்லையே டவுன்காரங்களுக்கும் நுங்கு ஆசை இருக்குதே ‘ன்னு நினைச்சுக்குவேன் .
பட்டணத்துல இருக்குறவங்க என்ன பாகிஸ்தான்காறங்களா எல்லாம் பஞ்சத்துக்கும் பவுசுக்கும் ஆசப்பட்டு போனவங்கதான . முழு டவுசர் சொக்கா அயர்ன் பண்ணி போட்டுகிட்டா என்ன மனசு மாறிடுமா என்ன ?
நானே அப்படித்தான் கிடக்கேன் . வயக்காட்டு வாசனைய கற்பனை பண்ணிக்கிட்டு பத்துக்கு பத்து ரூம்ல பாய் போட்டு தூங்குறேன் .
ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் . இந்த நுங்கு இருக்கே அத உடம்பெல்லாம் எங்கப்பாரு தேய்ச்சி விட்டு கொஞ்ச நாழி கழிச்சி குளிக்க வைப்பாரு .
”என்னப்பா இதுக்கதைம்பேன் ”
“குளுமைடா , வெக்கய மாய்ச்சிடும் … வேர்க்குறு வராதும்”பார்
எங்க வீட்டுக்கு ஏகாலி பாட்டி வருவா. ஒரு முறை அவங்ககிட்ட கேட்ட நினைவு…
“ உங்க வூடு எங்க இருக்கு “
“அதோ அந்த ஒத்த பனைமரம் தெரிதுல…அதுக்கு சோத்துக்கைக்கு பக்கத்துல இருக்கு “
“அத ஏன் அடையாளமா சொல்றே பாட்டி “ன்னேன்
”சொல்றதுக்கு அதுவாது இருக்கே ! அதான்பா எனக்கு துணை. வூட்டுக்காரன் அல்பாயுசுல போயிட்டான்.எனக்கு துணை இந்த ஒத்த பனைமரம்தான். நல்லது கெட்டது அதுங்க்கிட்ட்தான் கொட்டித்தீத்துக்குவேன்”
” பேசுமா என்ன “
“ பேசினாத்தனா..என் வூட்டுக்காரன் என்ன மைக் செட்டு போட்டா பேசிட்டு செத்தான். பனமரம் என் ஆயுசுக்கு உதவுது..ஓலைக்கு ஓலை , திங்க நுங்கு, பொதைச்சி வச்சா பனங்கிழங்கு , சப்பினா பனம்பழம் , வெய்யகாலத்துல பதநீர் , படுக்க தடுக்க பன ஓலை , மழைக்காலத்துல தலைல மாட்டிக்க ஜம்பக்கூடை ,அடுப்பெரிக்க தும்பு ,அசலூர்காரனுக வந்து கள்ளு இறக்குவானுங்க , அட வூட்டுக்கு நெடுக்கால வெட்டி போட்டா குறுக்கு கழியா காப்பாத்தும்..எனக்கு பனைமரம் பக்கதுணை ராசா ”னு புலம்பித் தீத்துடுச்சி..
ஒரு தடவ எங்கூருல ஒரு வயசு பொம்பள புருசன விட்டு ஓடிருச்சி…நான் அப்போ பதினொண்ணாவது படிச்சிட்டு இருந்தேன். அப்போ சின்ன சின்ன உபகாரம் ஊர்ல செய்ய ஆரம்பிச்ச நேரம் .
இப்படி ஓடிப்போறாண்ணதும் நானும் மோகன் , ராமமூர்த்தின்னுட்டு ரெண்டு பின்னாடி துரத்திக்கிட்டு ஓடுறோம். அந்தம்மாவும் மெனக்கெட்டும் ஓடுது ..வுடுவமா துரத்தி அந்த ஒத்த பனைமரத்தாண்ட பிடிச்சிட்டோம் .
“ஏம்மா இப்படி புருசனவுட்டுட்டு ஓடறீங்க ?”
“ என்னடா புரியும் உங்களுக்கு அந்தாளால எனக்கு ஒரு சந்தோஸமும் இல்லை ” வீட்டுக்கு எவனும் வரவும் வுடமாட்டேன்றாரு ”ன்னு ஒப்பாரி வச்சி வுக்காந்துட்டாங்க.
என்ன சந்தோஷம் இல்ல.. அதான் கோயில் பூசாரி வேலை பாத்துட்டு வூட்டுக்கு வேண்டியதை வாங்கிப்போடுறாரு.
அப்பறம் வேற என்ன சந்தோஷம் வேணும்”
“அட கெம்மனாட்டிக்குப் பொறந்தவனே கோயில்ல மூணு வேளையும் மணி ஆட்டிகிட்டு இருந்தா போதுமா?வூட்டுல வந்து ஆட்ட வேணாமா?”
எனக்கு புரிஞ்ச மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்தது.என்ன விட இரண்டு வயசு பெரியவரு இராமமூர்த்தி.”டேய் குடும்பம் நடத்தலைன்றாங்க..புள்ள வேணாமா?”எண்ட்ரு கிசுகிசுத்தான்.
அட கருமத்த இது எங்க நமக்கு புரியுது..அதுக்கப்புறம் ஒருவழியா அவங்கள சமாதானம் பண்ணி,குடும்ப மானம்,ஊர் மரியாதைன்னு என்னமோ எடுத்துச் சொல்லி கூப்டுகிட்டு வந்துட்டு மொதல்ல பூசாரிய கோயில்லருந்து நிப்பாட்டினோம்.
அவரும் தறி நெய்ய ஆரம்பிச்சிட்டாரு வீட்டிலேயே..
ரெண்டு மூணு வருஷம் கழிச்சி ஒரு பொட்டப்புள்ள பொறந்துது..சந்தோஷமா குடும்பம் நடத்துனாங்க.
ஆன இப்ப கூட ஊருக்குப் போனா தூரத்துல தெரியற ஒத்தப் பனைமரம் இந்தக் கதைய ஞாபகப்படுத்திகிட்டே இருக்கும்.
எதுக்கும் பனை மரத்தை நிறைய கொல்லையில வளர்க்கிறாங்கன்னு யோசிப்பேன்.அதுக்கு யாரும் தண்ணி ஊத்தி வளர்க்கிறதுல்ல..வரப்பு பூரா பனைமரம்தான்.இது எதுக்குன்னு யோசிச்சா அதுக்கும் ஒரு வரலாறு இருக்கு. நம்பாலுங்க விவரமில்லாம எதையும் செய்யறதில்ல..
பனைமரம் வரப்புல வரிசையா நட்டுவச்சி அது உசரமா வளந்து நிலத்தோட அளவை தூரத்துலயிருந்தே சொல்றதுக்கு சாட்சியா நிக்கும்.
அதோ தெரிதுல்ல தெக்காலே சுத்தியும் பனைமரம்.அந்த நாலுகானி நம்பளது..அதுக்கு வடக்கால இரண்டு காணி அசலானது”ன்னு சொல்ற குரியீடா பனைமரங்க பயன்பட்டது.
பனைமரம் நம்ம தமிழ்நாட்டோட ஐக்கியமாயிருச்சு…
இத யார் எடுத்துட்டு வந்து போட்டிருப்பாங்க.அப்படின்னு தோண்டி துருவிப்பாத்தா ஆப்பிரிக்காவுலயிருந்து வந்திருக்கலான்றாங்க..
அடப்பாவி பயலுவளா அவ்ளோ தூரத்திலிருந்து எப்படிடா வரமுடியும்னு கேட்டா..
பக்கத்துல ஓடும்போது போற இடமெல்லாம் போட்டதுதான் பனைங்கறாங்க..
எப்படியோ ஆப்பிரிக்கா,இலங்கை,இந்தோனேஷியா,மியான்மர்,தாய்லாந்து,வியட்நாம்,சீனா,ன்னு பரவலாயிருக்குதாம்.
நமக்குத் தெரிஞ்ச செளரிராஜன் நிறைய படிச்சவர் அவர்கிட்ட கேட்டப்போ பனைமரம் கேட்லாக்கே கொடுத்துட்டார்.
“தம்பி..பனைமரம் நாம செத்த பிறகும் உசுரோட பல வருஷம் இருக்கும்.அதுங்கிட்டருந்து 150 லிட்டர் பதநீர்,1 கிலோ தும்பு,ஒண்ணரை கிலோ ஈர்க்கு,எட்டு ஓலைகள்,16 நார்முடிகள் கிடைக்குது.அதோட 24 கிலொ பனைவெல்லம்,2 கூடைகள்,2 தூரிகைகள்,6 பாய்கள் கிடைக்கும்னார்.
இந்தியாவில வருஷத்துக்கு 200 கோடி அந்நியச் செலவாணி கிடைக்குது.இது நம்ம தமிழ்நாட்டுல ஒரு தொழில். 7 லட்சம் பேர் இதை நம்பி இருக்காங்க.ஒரு நாளைக்கு முப்பது,நாப்பது மரம் ஏறுற தொழிலாளில்லாம் இருக்காங்க; என்றார்.
‘சரிதாண்ணே’ன்னுட்டு ஒப்புகிட்டு வந்துட்டேன்.
எனக்கு 2007ல நார்வேயிலிருந்து ஒருத்தர் பனைமரப்பாட்டு எழுதியிருக்காரு.அதை படமா..அதான் ஆல்பமா டைரக்ட் பண்ணிகுடுக்கனும்ன்னு இசையமைப்பாளர் உதயன் விக்டர் அப்போ கேட்டாரு..
நாம மாட்டேன்னு சொல்ற நிலையில அப்போ இல்ல..சரின்னு சொல்லிட்டு செஞ்சி குடுத்தேன்.
‘ஒரே ஒரு கண்டிஷன்னாரு.’
“என்னன்னேன்”
இலங்கைல படம் எடுக்கணும்.அது இப்ப முடியல.அதனால நம்மூரு வாடை வராம பனைமரம்,ஏரி,ஆத்தங்கரைன்னு அங்க எடுக்கிற மாதிரி தெரியனும்னார்.
சரின்னுட்டு படமெடுக்கிற இடத்த பாக்க போனேன்.அட…தாழாம்பூரி,கேளம்பாக்கத்துக்கு மேக்காலே உள்ள போனா அவர் சொன்ன மாதிரி பனைமரங்க உசந்து நின்னு பாக்கவே சந்தொஷமாயிருச்சு.
ஊரு பூரா பனைமரம்தான்.அதுக்குள்ள அந்த படத்தை எடுத்து முடிச்சேன்.அதுல டான்ஸ் மாஸ்டர் புதுசு.கேமிரா பி.எஸ்.தான்..பாட்டுல நடிச்சது பாடகர் ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ன்னு சினிமாப் பாட்டு பாடின கிருஷ்ணராஜ். இப்படித்தாம் ஆரம்பிக்கும் “பனங்கா பனியாரமே”…ஏன்னா இலங்கை பனங்காய் பனியாரம் பிரபலம்.
அதுல முதல்ல வரிகள்னா..
“வல்லை வெளியிலே காற்றடிக்கும்
திட்டலி மேன் துள்ளியெழும்
கொடியல் கூழ் குடித்தால்
மனமெங்கும் தேன் கூடும்”
பனைமரத்தப்பத்தி ஏதாவது இலக்கியத்துல குறிப்பு இருக்கான்னு எங்க பேராசான் மறைமலை இலக்குவனார்கிட்ட கேட்டேன்.
‘தொல்காப்பியத்துல இருக்குன்னார்’’
‘என்னன்னேன்?’
“புறக் காழனவே புல்லெனப் படுமே(630)
அகக் காழனவே மரமெனப் படுமே (631)
அதுவுமில்லாம இது தேவலோகத்து மரத்தை ஒப்பிடலாம்.ஒன்னா கற்பகத்தரு மாதிரி மனிதனுக்கு உதவுறதுன்னார்.
தலை சுத்தி கீழே விழலாம் போலிருக்கேன்னு நினைச்சப்போ..எம் பேத்தி வந்தா…பனைமரம்னதும் google தட்டி சொன்னா..
பனை-புல்லினத்தைச்ஹ் சேர்ந்த பேரினம் (palmyra palm)
இளம் பனை வடலின்னு பேர்.
பதினஞ்சு வருஷம் கழிச்சிதான் பெரிசாகும்.30-40 மீட்டர் உயரம் வளரும்.தமிழ்நாட்டுல 5கோடி மரமிருக்கு. நெல்லை,தூத்துக்குடி,இராமநாதபுரம்ன்னு அடுக்கிகிட்டே போனா..
எனக்குச் சட்டுன்னு ஞாபகம் வந்தது.கமல் சார் மருதநாயகம் படமெடுக்கும்போது ஒற்றைப் பனைமரம் தாண்டி எருதுமேல ஏறிப் போன மருது பத்தி சொன்னது பட்டுன்னு பளிச்சிட்டது..
பனைவிதைப்பதை நம்ம திருமா ஒரு இயக்கமாகவே நடத்துனது ஏன்னு புரிஞ்சது.பனை மரம் நம்மோட நாட்டின் சொத்து!
‘பனை ஓலையில மழை பெய்யற மாதிரி’ ஏண்டா பேசறேம்பாங்க..
“பனை மரத்துக்கு கீழே பால் குடிச்சாலும் கள்ளு குடிச்சேன்னு” சொல்லுவாங்க-இப்படியெல்லாம் பழமொழி இருக்கு.
இருந்துட்டு போவட்டும்.
எனக்கு புண்ணு வந்தப்போ பனம்பூவ சுட்டு சாம்பலாக்கி-அதுல தேங்காய் எண்ணெய் சேத்து குழைச்சி புண்ணு மேல தடவ-அது காணாம போய் குணமாச்சு.
என்னவோ தெரில..பன்மரம் பாத்தா எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் இப்பவும்..எப்ப ஊருக்கு போலாம்.. எப்ப மறுபடியும் ஏரிக்கரை பனஞ்சாலைல நடப்பேன்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
- தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
- கொய்யாமரம் : ராசி அழகப்பன்
- அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
- கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
- தென்னை மரம் : ராசி அழகப்பன்
- முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
- அரச மரம் :ராசி அழகப்பன்
- வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
- பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
- “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
- கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
- கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
- புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
- வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
- முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்