முன்பு ஒரு காலத்திலே -11

வெறுங்கை வீசி வந்தவங்களை முருங்கை காப்பாற்றும்னு ஒரு சொலவடை இருக்கு.அட இல்லேன்னு கூட வைங்க.ஆனா அது நிஜம்.பொதுவா எங்கூர்ல எல்லார் வீட்லயும் முருங்கை மரம் ஒன்றுக்கு இரண்டாய் இருக்கும். ஏன்னா அது ஏழைகளோட விருந்தாளி மரம். அது என்னடாப்பா விருந்தாளி மரம் அப்படின்னு கேட்டா சொல்றேன்.வசதியானவர்களுக்கு விருந்தாளிங்க வந்தா கவனிக்கிறது அஞ்சும் மூணும் அடுக்காக இருக்கும். சட்டுனு பொங்க வச்சி  பவுச காப்பாத்துவாங்க.இல்லாதப்பட்டவங்க எங்க போறது? கைய கால பிசைஞ்சுகிட்டு என்னடா பண்றதுன்னு அங்கலாய்த்துதான் திரியணும்.அந்த நேரத்தில்தான் நான் இருக்கன்டா பாவி,எதுக்கு சங்கடம்னு முருங்கைமரம் கையாட்டி கூப்பிடும்.

முருங்கைக்காய்   பறித்து குழம்பு வைக்கலாம்.இல்ல கூட்டு பண்ணலாம். கீரையைப் பறித்து ஆஞ்சி குழம்பும் வைக்கலாம். கீரை சோத்துக்கு சேர்த்துக்கலாம். கீரையை ஆயும்போது இருக்கிற காம்பை வைத்து ரசம் வெச்சா,அடடா அவ்வளவு அற்புதமாக இருக்கும்.வெளியில வாங்கி சாப்பிடற சூப் கெட்டது போ.வாடா ,நீயா நானான்னு பாத்துக்குவோம்   என்று வம்புக்கு இழுக்கிற அளவுக்கு ருசியா இருக்கும்.முருங்கைப்பூ வதக்கி சாப்பிடலாம்.பொம்பளைங்களுக்கு பூவு வச்சு புஷ்டியான ருசியே செய்திடுவார்கள். நாங்க கைத்தறி நெசவாளர்கள். தானே போய் எதையும் நினைச்ச மாதிரி நிரப்பிக் கொண்டு வரமுடியாது.எப்ப வீட்ல ஒன்னும் இல்லையோ அப்பதான் சோதனைக்கு விருந்தாளிங்க வரிசைகட்டி வந்து நின்னு பாசத்தை   பொழிவாங்க. நாம என்ன நூல வித்தா வந்தவங்க வயித்த நிரப்ப முடியும்.ஏதோ சோத்துக்கு மளிகை கடையில அந்தா இந்தான்னு கடன் சொல்லி வாங்கிட்டு வந்து அரிசி பொங்கி போடுவோம்.காய்கறிக்கு எங்க போக?முருங்கை மரம் நான் இருக்கேன்னு கைகொடுக்கும்.அதை வைத்து சமாளிக்கும். அதனாலதான் முருங்கை வெறுங்கை அல்ல என்று புரிந்தது.முருங்கை மரத்துல ஏறி இறங்குவது ஆபத்து சட்டுன்னு ஒடிஞ்சு விழுந்திடும். முருங்கை என்றால் முரு  முறியும் என்று அர்த்தம்இது எங்க வேணும்னாலும் வளரும். தண்ணீர் இல்லாத இடத்தில தாக்கு பிடித்து நிற்கும்.மணல்வெளியில் இன்னும் பிரமாதமாக வளரும்.ஒன்னும் பெருசா எதுவும் மெனக்கெட வேண்டாம் பாருங்க.

என்ன ஒன்னு கம்பளிப்பூச்சி சமயத்தில் மரத்தில ஏறி மசமசன்னு நகர்ந்துகொண்டிருக்கும்.மேலப்பட்டு அரிப்பெடுக்கும்.அதுல இருந்து தப்பிக்க,முருங்கை மரம் இடம் கொடுத்து இருக்குன்னு தட்டி விட்டு தகராறு பண்ணாம கீரையை  எடுத்துக்க வேண்டியதுதான்.முருங்கைப் பூ விசேஷம்.வெள்ளையும் சொள்ளையுமா இருக்கும் .அதை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலையில் கஷாயம் செஞ்சு எப்பவாச்சும் பனைவெல்லம் கலந்து எங்க துணைவியார் கொடுப்பாங்க. தயங்கி நின்னா கண்ணால காய்ச்சி  உருகின நெருப்புத் துண்டாட்டம் இழுத்துடுவாங்க.அதனால பேசாம சாப்பிடுவேன். இது நரம்புத்தளர்ச்சி வராமல் பார்த்துக்கும். தாம்பத்திய வாழ்க்கை கிண்ணுன்னு இருக்கும்.

பாக்யராஜ் ஒரு படத்துல முருங்கைக்காய் வைத்து தாம்பத்திய வலிமைன்னு காட்சி எடுத்து பிரபலப்படுத்தி அதனால முருங்கைக்காய்க்கு ஏகக் கிராக்கி . சொல்லப்போனால் செலவில்லாத நாட்டு வயாகரா இதுதான்னு வையுங்களேன். டாக்டர் காமராஜ் கிட்ட போன் போட்டு கேட்டபோது சிரிச்சுக்கிட்டே பதில் சொன்னார்.முருங்கை சமாச்சாரம் உடம்பில் விந்து உற்பத்தி பண்ற மெஷின்யான்னார்.அதனால குடும்பத்துல வாரத்துக்கு இரண்டு நாள் பால் மாறாமல் சாப்பாட்டோட கீரை முருங்கைக்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.சின்ன வயசுல படத்துக்கு பிசின் முருங்கை மரத்தில் எடுத்து   ஒட்டின ஞாபகம் இப்ப வந்து கண்ணு முன்னால நிக்குது. இவ்வளவு ஏன் முருங்கை பட்டை வேர் கூட மருத்துவம் தான். முருங்கைக் கீரை குழந்தைகளுக்கு சேர்க்கணும்.ஏன்னா அதுல அதிகம் இரும்புச்சத்து இருக்கு. ரத்த சோகை வராது.முருங்கைப்பூ இருக்குல்ல அதை எடுத்து பாலில் வேக வைத்து, வடிகட்டி சாப்பிடுங்க .கண்ணுக்கு குளிர்ச்சி. வாதம், பித்தம், கபம் எல்லாம் சீரா இருக்கும்.பட்டணத்துல கீர கட்டு வாங்க வேண்டி இருக்கு. அட சொல்றதுக்கு என்ன அக்கம்பக்கத்துல கீரை மரம் இருக்கு அதுல   பறித்துக் கொள்வோம். விசேஷ நாள்ல கொஞ்சதூரம் போய் யாராவது விக்கிறாங்களா   என்று பார்த்து வாங்கிட்டு வர ,துண்டு கைப்பிடி அளவுக்கு முருங்கைக்கீரை 25 ரூபாண்ணா பாத்துக்கோங்க.

இதை சில இடத்துல வியாபாரம் செய்வதற்காக பயிர் செய்ய ஆரம்பிச்சு இருக்கிறதை பார்க்கிறேன்.30 அடி வளரும்.இந்த மரம் 200 லிருந்து 500  காய் வரைக்கும் மரம் வச்ச ஆறு மாசத்துல இருந்து கிடைக்கும். முருங்கைக்காய் யாரும் இப்ப சும்மா தருவதில்லை.கடையில எடை போட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு காய் ஐந்திலிருந்து பத்து ரூபா ஆயிடுச்சு.முருங்கை மரம் ஒன்னுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.ஆனா அது அப்படியல்ல. இதுல நிறைய இருக்கு.முள் முருங்கை,தவசு முருங்கை, இதெல்லாம் மூலிகை வகை  என வையுங்களேன். சித்தர்கள் இதை பிரம்ம விருட்சம் கற்ப தரு ன்னு சொல்லி இருக்காங்க.

கொல்லைப்புறத்தில் மல்லாட்டை போகும்போது வரப்புல நடுவாக இதை.சரி அதில் யாழ்ப்பாண முருங்கை ,கீரை முருங்கை ,பால் முருங்கை ,சாவகச்சேரி முருங்கை இப்படி நிறைய இருக்கு.படிக்கிற பசங்களுக்கு பொதுவாக நினைவாற்றல் அதிகம் வரணும்னு முருங்கைப்பூவை அதிகமாக தர  டாக்டர்களும் சொல்றாங்க.ஆரஞ்சு உரிச்சு சாப்பிடறோம்ல அதை விட 7 மடங்கு சத்து முருங்கை கீரைல இருக்கு.எப்பவுமே கீரை காய்கறிகள் நல்லதுன்னாலும்  சித்தருங்க அவங்க பாணியில் சொல்வாங்க தெரியுமா.அதுல அகத்தியர் குண வாகம் சொன்னதை இங்கே சொல்றேன்

தாளி முருங்கைத் தழை தூதனம் பசலை
வானிலறு கீரையுநெய் வார்த்துண்ணில் – ஆளியென
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாம்
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்…

புரியுதுங்களா?போதும் அதான் வம்ச விருத்திக்கு தோதாணதுன்னு சொல்றார்.முருங்கை இலையை காய வச்சு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யறாங்க. இதை வியாபாரம் செய்ய கொள்ளைல நடலாம்னு  நினைச்சா செடிக்குச் செடி 16 அடி இடைவெளி நடுவது நல்லது.நம்மூர்ல கரூர்,தாராபுரம, ஈரோடு பக்கம் மோகனூர் முருங்கை வளரும்.வருஷத்துக்கு 200 கிலோ காய்க்கும்ன்னு  வையுங்களேன்.வலையபட்டி முருங்கை நீளம் ஜாஸ்தி.அது ஆயிரத்திலிருந்து 1500 காய் வரைக்கும் தொங்கும்.இது உசிலம்பட்டி பக்கம் அதிகம். செம்முருங்கை சிவப்பாக இருக்கும்.இப்படி நிறைய காட்டு முருங்கை,கொடி முருங்கை, செடி முருங்கை இதிலேயே பி.கே.எம்.1,2 ஒன்னு ரெண்டுன்னு வந்துருச்சு.

முருங்கை விதை ஜப்பான்ல கிராக்கி அதிகம் ஒரு கிலோ 350 ரூபா போறபோக்குல முருங்கை மரத்துக்கு ஏக கிராக்கி வரும்னு தான் நினைக்கிறேன். கண்ணு மங்களா போறது. இப்படித்தான் எல்லாரும் செல் கம்ப்யூட்டர் டிவி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. கண்ணு என்னத்துக்கு ஆகும்.பார்வைக்கோளாறு வரும் இல்ல. அப்ப   கீரைகள் தான் தீர்வு. அல்லாட வேண்டி வரும் பாருங்க.இது அதிகமாக வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா, இமயமலை அடிவாரம்,ஆந்திரா,கர்நாடகம்,தமிழ்நாடு என முருங்கையை வளர்க்கிறார்கள்.வழக்கம் போலத்தான்,என்ன தாத்தா என எட்டிப்பார்த்து கூகுள் அஞ்சறைப் பெட்டியில் எடுத்து விஞ்ஞான விளக்கம் சொன்னாள் பேத்தி தன்யலட்சுமி.

முருங்கை மரம்-Moringaceae குடும்ப வகை

இனம்:M.oleifera

பேரினம்;Moringa

 பூக்கும் தாவரம் 

மொரிங்கங்கிறது முருங்கைங்கற தமிழ் சொல்லிலிருந்து போயிருக்கலாம்.

சரி இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.முருங்கை மரத்தில் பல வீடுகள்ல பெண்களுக்குள்ள சண்டை அதிகமாக வரும் ஏன் தெரியுமா? யாரும் பாக்கலன்னு சட்டுனு கீரையை நாலு இனிக்கிகிட்டு சேலையில் மறைச்சு வச்சுகிட்டு போயிடுவாங்க.ஏண்டி என் மரத்துல திருட்டுத்தனமா பறிச்சு வக்கணையா தின்றன்னு சண்டை வரும்.எந்த சிரிக்கி சொன்னா நான் ஒடிச்சேன்னு,அவ கண்ணுல கொல்லி வைக்கணும்னு சமாளிக்கிற சாகசங்கள் நிறைய நடக்கும்.ஆனா அதே சமயத்தில் காற்று,புயல் அடிக்க முதல்ல உடைந்து விழுவது இந்த முருங்கை மரம் தான்.அப்ப அந்த மரத்தை என்ன செய்ய?எல்லார் வீட்டுக்கும் வலியப்போய் அக்கா இந்தா  கீரைன்னும் கொடுப்பாங்க.அதை வாங்கிட்டு சும்மா நாலு கீரை அடிச்சதுக்கு என்ன பேச்சு பேசினா,,பாரு ! ஆண்டவன் அதுக்கு சரியான பதிலடி கொடுத்துட்டான்னு சொல்லி சமாதானம் ஆகி விடுவாங்க.அட இதெல்லாம் சகஜமான நடக்கிறது தானே என்று நினைக்கத் தோன்றும்.முருங்கை வெறுங்கை அல்ல

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
 2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
 3. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
 4. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
 5. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
 6. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
 7. அரச மரம் :ராசி அழகப்பன்
 8. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
 9. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
 10. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
 11. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
 12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
 13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
 14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
 15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
 16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்