முன்பு ஒரு காலத்திலே-9

வாழையடி வாழையாக தழைக்கணும் என்று ஊருல பெரியவங்க வாழ்த்து வாங்க. உவமைக்கவிஞர் சுரதா போன்ற முற்போக்கு எண்ணம் கொண்டவங்க, சர்தான் போய்யா,“வள்ளுவரும் குறளும் போல”, “வானகமும் வையகமும் போல”ன்னு தன் பாணியில் வாழ்த்து வாங்க.போற போக்க பார்த்தா பேஸ்புக்கும்  இன்டர்நெட்டும் போலன்னு வாழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

காலத்துக்கு ஏத்த மாதிரி வாழ்த்தும் மாறும் ,வாழ்க்கை வசதியும் மாறும்.

 எது எப்படி மாறினாலும் வாழை மரம்  நம்ம கலாச்சார பண்பாட்டு அடையாளம் இன்னிக்கும் திருமணம் நடந்த அந்த விழாவில் பூ பூத்து காயோட தொங்குற வாழை மரத்தை  வெட்டி தான் வாசல்ல வெச்சு நடத்துவது வழக்கம்.

 அது என்ன வாழை மரம்தான் வெட்டி வைக்கணுமா அதுல என்ன அப்படி இருக்குன்னு கேப்பீங்க

இப்ப ஈச்சம் கிளை, தென்ன மட்டை, போதாததுக்கு நல்லா இருக்கிறதை வெச்சி கட்டி தொங்க போட்டு படமெடுத்துக்கிறாணுவ.

அது ஒரு பக்கம் இருக்கட்டும் .வாழை கட்றது விளையாட்டு சமாச்சாரம் இல்ல. அதுல வாழ்க்கையோட சூட்சமம் சுத்தி இருக்கு.

இது என்னடா பொடி போட்டு பேசலாம்னு மண்டையை தேய்க்காதீங்க.

 நம்ம குளம் விருத்தியாகணும்.எப்பிடி?வாழையடி வாழையாக தழைச்சு இருக்கணும்கிறது ஐதீகம்.அத வாழை மரம் தான் காலா காலமா செஞ்சிட்டு வருது.அதனால அதை வெட்டி கொண்டாந்து சுபகாரியத்துல வெச்சா குலம் சுபமாகும்கிறது ஒரு நம்பிக்கை.அதோட நிக்கல. கூட்டம் கூட்டமா ஜனங்க சொந்தக்காரங்கன்னு வந்து கூடுனா கார்பன்-டை-ஆக்சைடு மூச்ச எம்புட்டு தாங்குகிறது .மூச்சு முட்டும்ல. அதை சரி பண்ணனும்னா ஆக்சிஜன் வெளியேத்துற  வாழை மரத்த வாசல்ல கட்டி சரி பண்ணிட்டாங்க. விஞ்ஞான வாசல்ல நின்னு காலநீட்டி பேசறவங்களுக்கு இத பதில்னு வையி,,

வாழை மரத்தில எதுக்கு அக்கப்போர் பேசிகிட்டு .இது வீட்டுக்கு பின்னாடி தோட்டத்தில வச்சு வளர்த்தா நல்லதும்பாங்க,

 எங்க வீட்ல இதை வைக்கவே இல்லை.பொதுவா எங்க ஊர்ல யாரும் வச்ச மாதிரி தோணலை.ஏன்னா அது நிறைய தண்ணி குடிக்கும்,அதான் காரணமான்னும் தெரியாது.

 ஆனா நான் சென்னைக்கு வந்து கட்டின வீட்ல நாலஞ்சி வருஷம் தோட்டத்துல மூன்று வாழை மரம் நட்டு வளர்த்தேன்.

வெள்ளிக்கிழமை ,அமாவாசை ,பவுர்ணமிக்குன்னு நல்ல நாளாகட்டும் விருந்தாளிங்க வந்தா வாழை இலை பறித்து விருந்து படைக்கறதகட்டும் ,வாழை மரம் தான் நல்லா உதவிச்சு.

 இதுல ஒரு விசேஷம் .வாழைக்காய் குலை தள்ளும் .அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க பாசமா வாழைமரத்தை பத்தி பேசுவாங்க. என்னடான்னா அது பழுத்த பிறகு தான் சங்கதியே விளங்கிச்சு,,

 பழம் குலை தள்ள அவ்வளவும் என்ன பண்ணப்போறோம், கடையில் கொடுத்து விடலாம் என்று யோசிக்கும்போது எங்க மனைவி நறுக்குன்னு கேட்டா, உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியல, ஊரும் உலகமும் தெரியல, எப்படி கடையில கொண்டு போய்  குடுப்பீங்க? நாம சாப்பிட மாட்டோமா? “கொலையை வெட்டியா முழுங்க போறோம்” நியாயத்தை பேசினேன்.அட நகருங்க போய் கத்தி எடுத்திட்டு வாங்கன்னு தள்ளிவிட்டு போய் ,அவங்களே எடுத்துட்டு வந்து சீப்பு சீப்பா ஒரு பத்து வெட்டி வெச்சாங்க.

 மீதி சின்ன சின்னதா இருந்தது தள்ளிவைத்துவிட்டு இது நமக்கு சாப்பிட்டுக்கலாம்’னாங்க.என்னது நல்ல பழம் எல்லாம் என்ன பண்ண போற? பந்தி வெச்சிருக்கே.இதெல்லாம் தெருவுல இருக்கிறவங்களுக்கு ன்னு சொல்லி முறையா குடுத்துட்டு வந்தாங்க

 ஏன் இப்படின்னேன்? “ஏன் இத்தனை நாள் மரத்தைப் பற்றிய பேசினாங்க காய்ச்சா நமக்கும் கொடுப்பாங்கன்னு தானே”

” அவங்க மரத்துல  காய்ச்சா?” கிடுக்குப்பிடி போட்டேன்

குடுப்பாங்க நாம எப்படி நடந்துகிறோமோ அப்படித்தான் அதுவும்’னாங்க.இதப் பார்றா வாழையில தெருவுக்கும் பார்வை, பங்கு இருக்குன்னு அப்படி தான் தெரிஞ்சுகிட்டேன்.மீதி கொலையை கடையில போட்டதுக்கு நானூருக்கு மேல கிடைத்தது இது நாலஞ்சு வருஷம் நடந்துச்சு. வாழை மரத்தை வெட்டினால் கூட வாழைத் தண்டையும் பங்கு போட்டுகொடுத்தோம்.அக்கம்பக்கம் உறவு வலுவாவறதுக்கு வாழை சரியான உதாரணம்.வாழைப்பூ வடை , வாழைத்தண்டு கூட்டு ,வாழைக்காய் பஜ்ஜி, வாழை இலை விருந்து உபசாரம்கிறது வாழைமரம் இருந்தவரைக்கும் ஜெகஜோதியாக இருந்தது.

 அப்புறம் ஒரு ரூம் போடலாம்னு முடிவு பண்ணி வாழை மரத்தோட கதைக்கும் முடிவு கட்டினார்கள்.ஆனா அக்கம் பக்கத்து வீட்டில் வாழை மரம் இருக்கு தப்பிச்சோம்.

வாழை தோப்பு வச்சு வசதியான கொல்ல பேர நான் பார்த்திருக்கேன்

 நம்ம கே.கே. சாலை டோல்கேட் பக்கத்துல ஒருத்தர் வாழை இலையை வெட்டி வியாபாரம் பண்ணி ஓஹோன்னு இருக்கார்.

 சாப்பாட்டு இலை எட்டு ரூபா, டிபன் இலை ஆறு ரூபா ,ஒரு பெரிய வாழை இலை மூன்று சாப்பாடு இலை 2 டிபன் இலை தரும். அப்படின்னா மூவெட்டு இருவத்திநாலு , 24 2 டிபன் இலை எட்டுன்னு முப்பதி ரெண்டு ரூபா சம்பாதிச்சு தருது. தோப்புல அத அஞ்சாறு ரூபாய்க்கு வாங்குவாங்க. ரொம்ப கிழிஞ்சு போச்சுன்னாலும்  வேஸ்ட் இல்லைன்னு யாரும் வெளியே தூக்கி போட மாட்டாங்க அதுவும் மாட்டுத்தீவனம் ஆயிடும்.

 முக்கனியில் ஒன்று வாழையின்னு சும்மாவா சொன்னாங்க. சாப்பாடு வீட்டுல இல்லைன்னு வைங்க நாலு வாழைப்பழத்தை புட்டு வாயில போட்டுகிட்டு வயிறு ரொம்ப தண்ணி சாப்பிட்டு அக்கடான்னு படுக்கலாம். தூக்கம் அப்படி வரும்.

 வாழைப்பழத்துல பார்த்து சாப்பிடுவதில் ஒரு டெக்னிக் இருக்கு.

 அதுல பேயம், மோந்தன், பூவன், ரஸ்தாளின்னு இருக்கு ரஸ்தாலிக்கு மவுசு கூட.வாழை மரத்தை வளக்குறதுக்கு பெருசா ஒன்னும் திட்டம் போட வேண்டாம். குருத்த  வெட்டி வச்சு கழுவுற பாத்திரத்தோட  தண்ணி போதும்.தோப்பா வச்சா தான் நிறைய தண்ணி வேணும் அதுவும் இப்போ புது டெக்னிக் வந்துடுச்சு. சொட்டு நீர் பாசனம் அதை வைத்து விளாசி  விடலாம்.

நான் எடுத்த குகன் படத்துக்கு திருநெல்வேலியில் வாழைத்தோப்பு கேட்டேன் கொடுத்தாங்க. ஒத்த பைசா காசு கேட்கல.மொத மாச சம்பளத்தை வாங்கிட்டு வந்து வாழைப்பூ இதழில் வைத்து சாமி படத்தை கிட்ட வச்சு எடுத்து செலவு பண்ண செல்வம் சேரும் வாங்க இதே வழிதான் நகை சமாச்சாரத்துக்கும்.

 அது என்னமோ நகையோ பணமோ ஏழைங்க கிட்ட தான் தகராறு பண்ணுது.தத்துவம் பூரா தண்ணி காட்டுறது நம்பறவங்க கிட்ட தான் போல.திருப்பைஞ்ஞீலியில் ஞீலிங்கற கல் வாழையும் திருமருகலில் மலை வாழையும் தான் தல மரம்பாங்க. அது என்ன தலமரம்ண்ணா இந்த ரெண்டு வகை கனிகள் தான் பூஜைக்கு உகந்தது என்று ஒரு மரபு.

 தல மரமா எங்கெல்லாம் கோயில் கட்டனாங்கண்ணா திருப்பழனம்,திருத்தேவூர் ,திருமருகல், திருத்தருமபுரம்,  திருக்குடவாயில், திருப்பைஞ்ஞீலி, திருக்கழுகுன்றம், திருத்தென்குரங்காடுதுறை.

 வாழை மரத்தில் என்ன பயன் ?இது முக்கியமான கேள்வி

பதில் என்னென்னா? பயன் இருக்கு.

அது என்ன அப்படின்னா

பூ ,பிஞ்சு ,காய் -ரத்தசீழ் கசிவை அடக்கும்

 சாறு -குருதி பொக்கடக்கும்

 தண்டு- சிறுநீர் பெருக்கி பித்தத்தை சமப்படுத்தும்

 பழம் -மலச்சிக்கல் போக்கி உடல் உரமாக்கும்

 அதனாலதான் சொல்றது தினமும் சாப்பிட்டு தூங்க போகையில மறக்காம வாழைப்பழம் சாப்பிடணும்னு. ஏன் சோத்துல வாழைப்பழம் வைக்கிறாங்கங்கிறது இப்ப புரியுதா.கேரளாகாரங்க நேந்திரம் சிப்ஸ் போட்டு அலப்பறை பண்ணுவாங்க அட ஏன் சொல்றீங்க கொண்டைக்கடலை யோட வாழைப்பழத்தை போட்டு பிசைந்து சாப்பிடுவாங்க.தேவர்மகன் படம் டைரக்ட் பண்ண பரதன் சார் வீட்ல தினமும் காலை இப்படித்தான் நானும் சேர்ந்து சாப்பிட்டேன். வேற வழி ,எது கிடைக்குதோ அதை சாப்பிட்டு கத்துக்கணும்கிறது தான் என் வழி.நான் சாப்பிடுவதை மட்டும் தான் சொல்றேன்.

வாழைத்தார் பொதுவா உச்சியில்தான் வைக்கும். ஆனா பாருங்க தஞ்சாவூர் கரந்தை கண்ணன் தோப்புல நடு மரத்திலயே குலை வாழை மரத்தில் தொங்க அதை சுத்தி இருக்கிற ஜனங்கள் கூடிக்கூடி பார்த்தார்களாம்.நல்லவேளை கோயில் கட்டல தப்பிச்சோம்.வாழை மரத்துக்கும் நமக்கும் பெரிய கதை எல்லாம் ஒன்றும் இல்லை ஆனால் தார் கரை பட்டு வீணாப்போன பனியனுங்க கதை 1,2 கரை போகாம இருக்கு.

 வாழை தோப்புக்குள்ளே பூந்து சினிமா படம் எடுக்கலாம். காசு வாங்கிடுவாங்க. ஆனா நாமெல்லாம் நினைச்ச மாதிரி உள்ள பூந்து போனா வெட்டுவாங்க. காவல் பலமாக இருக்கும் வாழைத்தோப்பில.

 ஏன்னா வாழைமரம் பணம் காய்க்கிற மரம் என்று வைங்க.இது தென்கிழக்கு ஆசியா பூர்வீகம் .மெதுவா எல்லா வெப்ப நாடுகளையும் பரவி வளர ஆரம்பிச்சிடுச்சு இந்தியா வாழைப்பழ பிசினஸ்ல பிரபலம் ஈக்வெடார் பிரேசில் போட்டி போடுது.

 இதோட சரித்திரம் மூலம் தேடிப்பார்த்தால் அகழ்வாராய்ச்சியில் கிமு 5000 இருந்து கிமு 8000த்துல பயிர் பண்ணி இருக்காங்கன்னு சொல்றாங்க. நமக்கு புத்தமத ஏடுகளில் கிமு 600 ஆண்டு ஏடுகளில் இருக்கு.கிபி 200-ல் சீனாவுல பயிர் பண்ணி இருக்காங்க கிமு 327 ல அலெக்சாந்தர் வாழைப்பழம் சாப்பிட்டு இருக்காருன்னு குறிப்பு இருக்கு.அரேபியா ஆளுங்கதான் போற இடமெல்லாம் வியாபாரம் ஆகும்னு வாழைய பரப்பினார்கள்னும் சொல்றாங்கசரி போகட்டும் பக்கத்துல வந்து நின்ன பேத்தி சடார்னு கூகுள் தட்டி விவரத்தைச் சொன்னா

வாழை -ஒரு தாவர இனம்

திணை:நிலைத்திணை

குடும்பம்:MUSACEAE

பேரினம்: மியூசா(musa)

போதுமான திரும்பினா திருஞானசம்பந்தர் ஓட பாட்டு ஒன்னு என் மனைவி தமிழாசிரியை செண்பக வடிவு படித்து காமிச்சாங்க

    “வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின் னொலியோவா

    மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியா மதிளெய்தார்

    ஈளைப்படுகில் இலையார்தெங்கிற் குலையார் வாழையின்

    பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழன நகராரே.  “

 புரியுதா மெதுவா சேத்துப் படிச்சு பாருங்க.வாழை மகிமை புரியும். எனக்கு என்னன்னா வாழை மரத்தில வாழமட்ட என திட்டுவதை பார்த்திருக்கேன்.பத்திக்காது அதான் விஷயம். அதையும் பத்திக்க வைப்பாங்க கற்புக்காறங்கங்கிறாங்க.

 ஆகா இந்த விளையாட்டுக்கு நான் வரலை. வாழையை நம்பினவன் வாழாம போகமாட்டான்னு சொல்லுவாங்க. என்ன மழை,புயல்ல கவுத்துடாமல் இருக்கணும். தானே புயல் வந்தப்ப நான் ஆவணப்படம் எடுக்க போனேன் கடலூர் பக்கத்துல கடனுக்கு வாழைத்தோப்பு குத்தகை எடுத்து அழுது நின்னு அவங்கள பாத்து இருக்கேன் என்ன செய்ய? இயற்கை எதுக்கு கட்டுப்படும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
 2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
 3. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
 4. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
 5. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
 6. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
 7. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
 8. அரச மரம் :ராசி அழகப்பன்
 9. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
 10. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
 11. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
 12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
 13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
 14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
 15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
 16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்