முன்பு ஒரு காலத்திலே-8

பூவரச மரம்

 1978 பாரதிராஜா கொடிகட்டிப் பறந்த சமயம். “கிழக்கே போகும் ரயில் “படம், தேவி பாரடைஸ் தியேட்டரில் படம் பார்க்கிறோம். வேற எப்படி ? காலைல  நாலு மணிக்கு க்யூல நின்னு , 9 மணிக்கு டிக்கெட் வாங்கி பகல் காட்சி பத்தரை மணிக்கு பார்க்கிறோம்.

 அடேங்கப்பா இளையராஜா பாட்டுல தியேட்டரே அல்லோகலப்பட்டது.என்ன பாட்டுன்னு தானே கேக்குறீங்க ? கேட்காட்டாலும் சொல்லித்தான் தீருவேன். என்னோட சின்ன வயசையும் , தெருவையும் ஞாபகப்படுத்தின பாட்டு.

“ பூவரசம்பூ பூத்தாச்சு

 பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு

காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ”

கங்கை அமரன் அப்படியே கரைந்து போய் ராதிகா துள்ளளுக்கு ஏத்த மாதிரி எழுதி இருந்தார். கங்கை அமரன் பார்க்கத்தான் ஒல்லி பாட்டெல்லாம் மகனே, பிச்சு உதறி விடுவார் கில்லி அதுல.

 இப்படி அறிவுமதி அண்ணன் கூட படம் பார்க்கிறது, பாட்டு எழுத முயற்சி பண்றதும்னு இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

 ஆனா இங்க நான் சொல்லவந்தது  பூவரச மரம் பற்றி.

 இது ஒன்னும் லேசு பட்ட மரம் இல்லை. கொப்புரானே நல்ல சில்லுன்னு காத்து கொடுக்கிற ஆக்சிஜன் மரம். இதுக்கு கீழே படுத்திருந்தா  வைங்க நல்லா குறட்டை விட்டு  தூங்கலாம்.

 இதயம் மாதிரி இலை, மரத்துல சலசலக்கிறது பார்த்துக்கிட்டே கண்ணை மூடினால் போதும். அப்படி ஒரு தூக்கம் வரும்.

 நான் பள்ளிக்கூடம் போறப்ப வர்றப்ப சனி ,ஞாயிறுல பூவரச மரத்தடியில் படுத்து தூங்குவது வழக்கம்.

 என்ன தெரியுமா? பூவெல்லாம் பார்க்க நல்லா மஞ்சளும் பல கலர்ல இருக்கும். அதோட பிஞ்சு இருக்கே அத படிச்சு அதும் பின்னாடி தென்னந்தொடப்பம் குச்சியை சொருகி தெருவுல பம்பரம் விடுவோம். இது எங்களுக்கு விளையாட்டு. நிஜ பம்பரம் விலை ஜாஸ்தி. அது பணக்காரப் பயலுக கூடும் போது நைசா கேட்டு வாங்கி விடுவேன்.

 மத்த நேரத்துல பூவரசங்காய் தான் எங்க ஊரு பம்பரம். சுத்தி கீழே விழ பார்க்கணுமே. குடிகாரன் குடித்துவிட்டு போதையில் தள்ளாடி விழற மாதிரி விழும்.

 பூவரச மரம் ரொம்ப உயரமா இருக்காது. அதனால நானும், கூட படிக்கிற பசங்களும் சேர்ந்து ஆளுக்கு ஒரு கிளையில் உட்கார்ந்து அந்தராக்ஷி  பாடுவோம். அது என்னன்னு தானே கேப்பீங்க. ஒருத்தன் ‘த’ அப்படின்னு ஆரம்பிக்கிற பாட்டு பாடிட்டு இருப்பான். டக்குனு நிப்பாட்டிட்டு காத்து என்னும் வார்த்தையில் முடிப்பான் . அப்படியே ஆரம்பிக்கிற வார்த்தையை வைத்து பாடுவோம் .அதுல யார் தோக்கரானோ அவனை குனிய வைத்து தாண்டுவோம். இது ஒரு விளையாட்டு.

 ராத்திரியில கோலிகுண்டு அடித்து விளையாடி ஆடுவோம். அது எங்க வீட்டு எதிர்ல தேவேந்திரன் வீடு, பக்கத்துல எங்க பெரியப்பா வீடு. இரண்டு பேருக்கும் நடுவுல அங்கிட்டும் இங்கிட்டும் இலைய கொட்டி வைத்து காலையில்  எழுந்து பெருக்கித் தள்ள இதுல வாய்த்தகராறு கொல்ல நாள் நடக்கும்.

 அந்தக்கதையை சொல்றதுக்கு பூவரச மரத்துக்கு வாய் இருந்தா அது இன்னொரு ராமாயணம் ஆகிடும். நல்லவேளை அதுக்கு வாயில்லை தப்பிச்சோம்.அந்தப் பூவரச மரம் எங்களுக்கு பீப்பீ ஊதற மரம் வேற. இலைய நல்லா சுருட்டி முனையில லேசா அழுத்தி ஊதுனா அடேங்கப்பா குட்டி நாதஸ்வரமா அது  மாறிடும் .ஆளுக்கு ஒரு பீப்பீ  வெச்சிக்கிட்டு ஊதிகிட்டே இரயில் வண்டி விடுவோம்.

ஒருதடவை பூவரச மரத்தில ஏறி டான்ஸ் ஆட தவறி விழுந்து சின்ன சிராய்ப்பு ஆகி அப்பாகிட்ட அம்புட்டு உதை. ஆனா அதுல என்ன விஷயம்னா, அந்தக் காயத்திற்கு அந்த மரப் பட்டையே பயன்பட்டுச்சு,

 எங்கப்பா என்ன பண்ணாருன்னா பூவரசம் பட்டையை பொடியாக்கி, அது கூட சந்தனம் ,கொஞ்சம் கட்டைத் தூள் ,கொஞ்சம் சேர்த்து தடவி விட்டார்.. அப்புறம் என்ன சில நாள்ல சரியா போச்சு அதுக்கு மருந்து கடையில் மருந்து விக்கிது அப்ப அது எது?

 ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும் இந்த டெக்னிக் இருக்கு இல்ல இது சொறி சிரங்கு தோல் நோய்க்கு சரியான வைத்தியம்.

 முகத்துல கருப்பு கருப்பா வரும் அதுக்கு எதுத்த வீட்டு கிழவி பூவரசங்காய் இடி இடிச்சா பால் வரும் இல்ல அதோட மஞ்சள் நிற சாறும் சேர்த்து கருப்பான இடத்தில் தேய்த்து விட்டால் கருப்பு காணாம போயிடும்பாங்க,,எங்க அக்கா ரெண்டு பேரு புள்ளைங்க கூட சேர்ந்துகிட்டு ஆத்துல குளிக்க போவாங்க.அப்போ பூவரசங்காய் ,செம்பருத்திப்பூ ,பூவரச பழுத்த இலை ,இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளிப்பார்கள்.

ஏன்னா தலையில இருக்கிற பொடுகு போய்விடும். உடம்பில் தேச்சாலும் நல்லது. கருவளையம் கண்ணுக்கு கீழே விழுதுல்ல ,அது வராதும்பாங்க.

 இந்த மரத்தை நூறு வருஷ மரம்ன்னு சொல்லுவாங்க.

 சுப்புராயலு ஒருத்தரு கிட்டத்தட்ட சித்தன் மாதிரின்னு வையுங்களேன் அவரு எங்குரு பூவரசம் பட்டை கடிச்சு மென்னு சாப்பிடுவார் கேட்டா சாப்பிட நல்லா இருக்கும் பார் நாங்களும் சாப்பிட்டோம் நீ இருக்கிற மாதிரியும் இல்லாத மாதிரியும் இருந்துச்சு.அப்ப சின்ன வயசுல அந்த காய்ஞ்ச பட்டய சாப்பிட்டோம் .சென்னையில இருக்கிற சித்த வைத்தியர் ஒருத்தர் கிட்ட சும்மா சொன்னேன் .நாளான மரம் சுவைக்கும்னு சர்டிபிகேட் கொடுத்தார்.

அந்தக் காலத்துல குழந்தை வேணாம்னு வைங்க பூவரசம் பட்டையை காயவைத்து பொறை செஞ்சி தேனில் கலந்து சாப்பிடுவார்களாம் அத இப்ப எல்லாம் செஞ்சு  கிஞ்சு வைத்து விடாதீர்கள். ஆனால் இது ஆம்பளைங்களோட ஆண்மையை வலுப்படுத்தும் மூலக்கிருமிகள் போயிடும்.

 அகத்திய மாமுனிவர் இந்த பூவரசத்த  ரெகமெண்ட் பண்ணியிருக்கார். எப்படின்னா மேகநோய் சிகிச்சைக்கு பூவரசம் தான் பெஸ்ட் என்கிறார் .

 இந்தப் பூவரச மரத்தை அவ்வளவு  லேசில் வெட்ட மாட்டாங்க. ஏன்னா மார்கழி மாசம் வந்துச்சுன்னா நீங்க காலை கலர் கலரா வீட்டு வாசலில் கோலம் போட்டு நடுவுல சாணி  பிடித்து, அதுல பூவரசம்பூ தான் குத்தி வைப்பார்கள் .இன்னிக்கி இதெல்லாம் இருக்கான்னு தெரியல. அப்ப அது வழக்கம். இதோட பளு ரொம்ப ஜாஸ்தி .அதாவது கட்டில் பீரோ நாற்காலியில் பூவரச மரத்தில செய்வாங்க ஏக கிராக்கின்னு வைங்களேன்.

 பூவரசம் அப்படின்னா பூமிக்கு அரசன்னு ஒரு பொருள். இந்த மரம் நம் நாட்டில் நிறைய இடத்தில இருக்கும்.முன்னாடிலாம் கிணத்துல இருந்து வயலுக்கு நீர் இறைக்க இருக்கும்ல துவலை.. மாடு மூச்சிரைக்க துவலைப்பக்கத்தில் ஒரு ரெண்டு பூவரசமரம் இருக்கும்.

 பூவரச மர காத்து அதுக்கு தெம்பையும் ஆக்சிஜனையும் கொடுக்கும் சில்லுன்னு காத்து வேற.இலங்கை யாழ்ப்பாணம் பக்கத்துல புங்குடு தீவில் பூவரசமரம் நிறைய இருக்கிற காடே இருக்குதாம். இந்த மரத்தை பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை புத்தகத்தில் குறிப்பு இருக்காம்.இன்னொரு முக்கியமான விஷயம் இந்த செயின் கழுத்துல போட்டுட்டு சுத்தறவங்களுக்கு சொல்லணும். செயி ன் பட்டு பட்டு அந்த இடத்துல கருப்பாக மாறிவிடும். இது போகணும்னா பூவரசம் பூவின் இதழ்களை நல்லெண்ணெய் விட்டு கொதிக்க வச்சு சூடு ஆறினதும் தடிப்பான இடத்துல தடவிட்டு வந்தா கொஞ்ச நாள்ல அடையாளம் தெரியாமல் போய்விடும்.நீங்கள்லாம் கூட சின்ன வயசுல விளையாடி இருப்பீர்கள் .பூவரச மரத்தில இந்த மரம், காய், பூ பட்டை, இலை எல்லாம் பயன்படும் வீண்  அப்படின்னு சொல்லவே முடியாது.ஸ்ட்ராங்கான மரம். இப்படி கதையை சொல்லிக் கொண்டே போகலாம். என்னன்னு எட்டிப் பார்க்க வந்த எங்க பேத்தி ,அட இந்த மரமா ?அப்படின்னு விஞ்ஞான விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சுட்டா.

பூவரசு-மூலிகைப் பெயர்

THESPESIA POPULNEA-தாவரப் பெயர்

குடும்பம்-LVACEAE

 கொட்டைப் பூவரசு ,சாதாரணப் பூவரசு இரண்டு இருக்கு எனக்கு சந்தேகம். ஆமா ,நாம சின்ன வயசுல  ஏறி விளையாடும் மரம் என்னவாயிருக்கும்?இந்த நேரத்தில கே. ஏ. கே. அப்படிங்கற முன்னாள் அமைச்சர் கே. என். கிருஷ்ணசாமியோட உதவியாளராக இருந்து இப்ப சித்தர் நூல்கள் எழுதற சின்னதுரை கிட்ட இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.

 என்ன பண்ற ராசி’ன்னார்.

 பூவரசு மரத்தை பற்றி எழுதுறேன்னேன்.

 அடப்பாவி ,அது ஒரு ஞான மரம்டா அப்படின்னு, ஒரு பாட்டை எடுத்து விட்டார்.

“பெற்றோர் தந்த ரோகங்கள்

 பிழையால் பெற்ற பாழ் நோய்கள்

பற்றிய தொழுநோய் புண்புரைகள் படர்தாமரை

கரப்பான் முற்றும் பற்றாது வரும்

பூவரசென்னும் மூலிகையால்

சற்றே பிள்ளை பெற்றுக் கொண்டால்

தாழ்ப்பாளாகும் பூவரசே’ன்னு பாடி முடிச்சார்.

 இது என்ன உங்க பாட்டான்னேன்,

 ஏன்டா இது கும்பமுனி எழுதினது, பூவரசு மரத்தை எங்க பார்த்தாலும் கும்பிட்டு வை’ன்னார்.நாம அப்படிப்பட்ட ஆனா என்ன சரின்னேன்.உங்களுக்கு எப்படின்னு தெரியலை.

 பூவரச மர நிழல்ல தூங்கி பாருங்க எங்க பார்த்தாலும் முடிஞ்சா பூவரசு மரத்தை நட்டு வையுங்கள் அது நூற்றாண்டு கடந்தும் நமக்கு குளுமை தரும் வாழ்வு தரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
  2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
  3. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
  4. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
  5. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
  6. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
  7. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
  8. அரச மரம் :ராசி அழகப்பன்
  9. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
  10. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
  11. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
  12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
  13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
  14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
  15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
  16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்