முன்பு ஒரு காலத்திலே-12

 உன்ன மாதிரி புள்ளைய பெத்ததுக்கு ஒரு தென்னம் புள்ளைய நட்டு இருந்தாலும் புண்ணியமாய் இருந்திருக்கும்.வயசான காலத்துல குடிக்க இளநீர் கொடுக்கும் பெத்தவங்க வயிறு எரிஞ்சு வையறதை நான் பல வாட்டி பார்த்திருக்கேன்.பெத்த பிள்ளைகள திட்டறத்துக்கு காரணம் என்ன?நான் கஷ்டப்பட்டு வளர்ப்பேன்,தள்ளாத வயசுல தாங்கிப்பிடிக்கும் புள்ளைங்க என்கிற அங்கலாய்ப்பு தான் காரணம்.வேறென்ன வழி வழியா செய்ய வேண்டிய கடமைகள் தானே அது. நாம புள்ளைங்கள பாத்துக்கணும்,புள்ளைங்க நம்பள பாத்துப்பாங்க ,அவன் புள்ள வயதாகும் போது அவங்க பெத்தவங்கள பாத்துக்கணும் . இது தவறும்போது தான்

“பிள்ளைய பெத்தா கண்ணீரு

தென்னையப் பெத்தா கண்ணீரு” ன்னு நாமளும் சேர்ந்து பாட வேண்டி வரும்.

சரி அதுக்கு ஏன் எல்லா மரத்தையும் விட்டுட்டு தென்னம்பிள்ளை சொல்றாங்கன்னா, தென்னை தன்னையே கொடுக்கும்மரம். வெப்பப் பிரதேசத்தில் வேகமாக வளர்ந்து நிற்கும். 30 மீட்டர் உயரம் வளரும். நீளமா 6 மீட்டர் வரைக்கும் இருக்கும்.நம்ம சாப்பாட்டுல தேங்காய் இல்லாத நாள் இருக்கா என்ன? தேங்காயைத் துருவி சாம்பார் சட்னி எல்லாத்துலயும் பயன்படுத்துகிறோம்.தேங்காய்ச் சட்டினின்னா இன்னும் இரண்டு இட்லி சேர்த்து வயித்துல இறங்கும்.

நான் வளர்ந்த கிராமத்துல தென்னமரம் ஜாஸ்தி இல்லை.ஆனால் தென்னந்தோப்பு வச்சிருக்கிற பக்கத்து ஊர்ல பழகி தென்னை மரமேறி சறுக்கி விழுந்து மாரெல்லாம் சிராச்சுகிட்டு வலி பொறுக்காம அப்பாகிட்ட சொல்லி அவர் பத்தாததுக்கு “உனக்கு இது தேவையா”ன்னு முதுகுல நாலு அடி வாங்கின சம்பவம் இன்னிக்கும் கண்ணு முன்னாடி நிக்குது.

அப்படியே இருங்க இரண்டு சமாச்சாரம் கண்ணு முன்னாடி வந்து நிக்குது

  1. பாரதியாரோடா கனவு வாசகம் என்ன வேணுமுன்னு பாடினார் தெரியுமா?

 காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும்,

 இப்படி கற்பனையை வளர்த்துக் கொண்டே போறாரு.குயில் கூவு கேட்கணும்,மனம் மகிழும் தென்றல் காற்றோடு பத்தினிப் பெண் வேணும்.அப்படி இருக்கிறப்போ கவிதைகள் வரணும்.காற்றுவெளியில் அம்மா உன்றன் காவல் வேணும் அப்ப என் பாட்டுத்திறத்தாலே உலகத்தை பாவித்துடவேணுங்கறார். பெரிய கனவு ,ஆனா அது அவரோட வாழ்க்கையில நடக்கல. ஆனால் அவர் நினைச்ச வாழ்க்கைல பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் வேணும்கறார் .அதுதான் இங்க முக்கியம்.பத்து பன்னிரண்டு மரத்தில விளையாட வர்ற சிலு சிலு காத்து நினைச்சுப் பாருங்க.அட..அட..அட…அதானே சொர்க்கம்.வேறென்ன?

 அத விட்டுட்டு நாம சதுர அடியில் அடுக்குமாடிக் குடியிருப்புள்ள சுத்தமா ஜன்னல மூடிட்டு பெரிய பணக்கார வாழ்க்கை என்று பெருமை பேசிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்க போகுது.இரண்டாவது சமாச்சாரம் ஜெயகாந்தன் இளநீர் அறுத்து சாப்பிடுற கனவுஎப்படி தெரியும் என்று கேட்காதீங்க அவரு அதைப்பற்றி ஒரு கதையை எழுதி இருக்காரு அது என்னன்னா சுருக்கமா சொல்லிடறேன்.அவர் வீட்டு தோட்டத்தில் ரெண்டு மூணு  தென்னைமரம்.அதுல இளநீர் கொத்துக்கொத்தாக காய்ச்சி தொங்குது.ஆனால் அதை இறக்கி சாப்பிட முடியல.போறவங்க வர்றவங்க கிட்ட எல்லாம் கேக்குறாரு. “யாருக்காவது மரம் ஏற தெரியுமா? இளநீர் வெட்டி குடிக்கணும்”னு ஆனா அது சாத்தியப்படலை.

ஒரு நாள் ராத்திரி தோட்டத்துல பொத்து பொத்துன்னு சத்தம் கேட்குது.தூக்கம் கலைஞ்சி என்னடா ன்னு எட்டிப் பார்த்தா தென்னை மரத்தில ஏறி ஒருத்தன் இந்த வேலைய பாத்துட்டு இருக்கான்.போய் அவர் முன்னாடி நிக்க,திருட்டுப்பய பயந்து கையை கட்டினான்.இருக்கும்தானே போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துட்டா கதை கந்தல்னு பயப்படுறான்.அவனைப் பார்த்து சிரித்தவாறு தட்டிக்கொடுத்தார்.முதல்ல ரெண்டு இளநீர் வெட்டுன்னு சொன்னார் .அவன் பயத்தோடு வெட்டி கொடுத்தான். திருப்தியா ஏம்பா எவ்வளவு பெரிய வித்தைய கையில வச்சிகிட்டு ஏன் இப்படி இருட்டுல வந்து பண்ற?நாளைக்கு பகல்ல மீதி  இளநீர் வெட்டி போடு. மீதி காய அவனையே எடுத்துட்டு போக சொல்லுகிறார். திருட வந்தவனுக்கு ஒண்ணுமே புரியல, “என்ன இவரு”ன்னு போயிட்டான்.நான் தென்னை மரத்தை எப்ப எல்லாம் பார்க்கிறானோ அப்பல்லாம் இந்த ரெண்டு விஷயம் வந்து ஞாபகப்படுத்திக் கொண்டு போகும். சிதம்பரம் தாண்டி தெற்குப்பக்கம் மாவட்டங்களில் போய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான ஆவணப்படம் தமிழக அரசுக்கு 10,15 வருடங்களுக்கு முன்னாடி எடுத்துக் கொடுக்கப் போனேன்.அப்ப பெரும்பாலும் சுயதொழில் தென்னைமரம் சுத்தி தான்.தென்னை மரத்திலிருந்து நாரெடுத்து கயிறு திரிப்பாங்க. தேங்காயை வைத்து பொம்மைகள் செய்வாங்க. துடைப்பம் வேற. தேங்காய் எண்ணெய்,கொப்பரை ,தென்னங்குறுத்து வெச்சு அலங்காரம்,

 அட ஏன் ? நான் சின்ன வயசுல தென்னை மட்டையில் உட்கார்ந்திருப்பேன்.தென்னங்கீற்று கார் கணக்கா எடுத்து இழுத்துகிட்டு போக,அட அந்த விளையாட்டு சுகம் தனி டவுசர் சமயத்தில் பொத்தல் ஆகிடும் மண்ணுல தேஞ்சுக்கறது தனிக்கதை.ஒரு முறை தென் மாவட்டம் கற்பகம் பதிப்பகம் நல்லதம்பி அவரோட நண்பர் நடத்துகிற பள்ளிக்கு சிறப்பு அழைப்பாளரா அழைச்சிட்டுப் போனார். அப்ப பேசிட்டு அவரோட தென்னந்தோப்பு ரொம்ப பெருசு.அப்படியே சாப்பிட்டு தரையில் தலை சாய அஞ்சாறு  மணி நேரம் அசந்து தூங்கிட்டேன்.உள்ள போன பதநீர் உபயம்.

இப்பவும் என்னோட படங்கள்ல சில காட்சிகள் தென்னந்தோப்புல இல்லாமல் இருக்காது.குகன் படத்துல ஒரு பாட்டோட பெரும்பகுதி அதுல தான் எடுத்தேன்.வரிசையா நிற்கிற தென்னமரம் அழகே தனி தான் போங்க.

 தென்னை மட்டையில் ஒன்னுக்கு போற மாதிரி பேசறன்னு சொல்ல கேட்டு இருக்கீங்களா?அது வேற ஒண்ணுமில்ல காத்துல அதன் சலசலப்பு கொஞ்சம் ஜாஸ்தி சத்தம் கேட்கும்.பழைய படங்கள்ல இளநீர் திருடனை  மரத்தில் கட்டி வைத்து உதைக்கற காட்சி நிறையா வரும்.  தென்னங்கள்ளு உடம்புக்கு நல்லதுன்னு சொல்லுவாங்க.அதைவிட பதநீர் உடம்புக்கு குளிர்ச்சி.ஊருல சின்னபோ தெருவுல வந்து கூவி விப்பாங்க,வாங்கிக்குவோம். துண்டு ஐஸ் மாதிரி வழுக்கிக்கிட்டு போயி கிச்சுகிச்சு செய்யும்.அந்த உணர்வு ரொம்ப நல்லா இருக்கும்.இளநீர் சாப்பிட்டு வழுக்கையை சுரண்டித் சாப்பிடணும் அட அது அவ்வளவு சுகம் தெரியுமா? இதுல கொழுக்கட்டை செய்யறதையும் கேள்விப்பட்டிருக்கேன்.

 பீச்சோரம் ரிசார்ட்டில் பார்த்தா ரெண்டு தென்னை மரத்துக்கு நடுவுல கட்டி ஊஞ்சல் ஆடுறாங்க. 1960இல் “பாதை தெரியுது பார்” என்று ஒரு படம்.அது புரட்சிகரமான படம்.அதுல கே.விஜயன் , எஸ்.வி.சுப்பையா நடிச்சு இருப்பாங்க.அதுல ஜெயகாந்தன் பாட்டு எழுதி இருப்பார்.அதை ஜானகியம்மாவும் பி.பி.சீனிவாசன் பாடி இருப்பாங்க.

“தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
ஹ்ம்ம் ம்ம்
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது”

 தென்னை மரம் நல்ல மழை, சூரிய ஒளி போதும் வளர்ந்திடும். அதான் கேரளா சாப்பாட்டுல எல்லாத்துக்கும் தேங்காய் தான்.தென்னந்தோப்பு வைத்து வியாபாரம் செய்கிறது இப்ப டிரெண்டு. தென்னை எண்பது நாடுகளுக்கு மேல வளர்க்கிறாங்க. அதுல டாப் டக்கர் யாருன்னா இந்தியா கூட இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் தான்.அதுவும் நம்ம நாட்டுல நாமதான் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா,ஆந்திரா எப்படி தென் இந்தியா? இதுல அப்படி என்ன லாபம். அதாவது எப்படின்னா முதல்ல உடம்பு குளிர்ச்சி-இளநீர்.தேங்காய் பால் சமையலுக்கு,தேங்காய்ல சில சமயம் பூ இருக்கும். அதை சாப்பிட செம. தேங்காய் போட்டு  இனிப்பு பண்டம் செய்யலாம்.தேங்காய் எண்ணெய்,பாமாயில், கருப்பட்டி,தென்னோலை கிடுகு, மரம் விறகுக்கு பயன்படுது.மட்டையிலிருந்து நார் கயிறு தயாரிக்க பயன்படும்.விசிறி கரண்ட் கட் ஆனா அதான் நமக்குப் பயன்படுது. இப்படி அடிமுதல் நுனிவரை பயன்படுவது தென்னைமரம்.இப்ப புரியுதா ஏன் தென்னம்பிள்ளை வளர்கிறது அவ்வளவு நல்லதுன்னு.இது நூறு வருஷம் வாழ்ந்து பேர் தரும்,இத வளர்க்கிறது  சுலபம் .மண்,குப்பை,ஈரம்ன்னு இருந்தா போதும்.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ‘தானே புயல்’ வந்து நாசம் பண்ணிட்டு போயிடுச்சு. நிறைய மரங்கள் காய்ந்து வெடித்து பல பேர் கண்ணீர் விட்டு அழுத கதை பார்த்து மனசு உடைஞ்சு போச்சு. அப்புறம் நிறைய மரம் காய்ச்சி  பட்டு போச்சு.மீதி நின்னு இப்ப கொஞ்சம் ஆறுதலா இருக்கு.டைரக்டர் பரதன் வீட்டுக்கு நான் கதை விவாதம் பண்ணப் போகும்போது  புட்டுல அதிகம் தென்படுவது தேங்காய் வகை,நேந்திரம் பழம், கொண்டைகடலை தான்.இப்படி சொல்லிக்கொண்டே இருக்கும்போது பேத்தி வந்து புத்தி புகட்டிட்டு போனா

தென்னை மரம் பூக்கும் தாவரம்

குடும்பம்-பனைக்குடும்பம்

துணைக்குடும்பம்-Arecoidae

சிற்றினம்-Cococeae

பேரினம்-Cocos

இனம்-C.nucifera .சொன்னதைக் கேட்கும் போது மனசு சரத்குமார் ஒரு படத்துல தென்னை மரம் ஏறி இளநீர் வெட்டற கேரக்டர் நினைவுக்கு வந்து போவுது கூடவே கவுண்டமணி ஒரு படத்தில் தென்னை மரமேறி நடிக்கிற கதாபாத்திரம் பண்ணி இருப்பாரு.கவுண்டமணி பாணியில் தென்னைய பத்தி யோசிச்சா இப்படி சொல்வார்.“டேய் தென்னங்கீற்று மண்டையா இது தென்னைமரம் இல்லடா மனுஷனுக்கு தண்ணி ஊத்தி தாகம் தீர்த்து வாழ கற்றுக் கொடுக்க வந்த மகான்”.அதுக்காக தென்னை மரத்துல நாலு மரம் சைடுல வளருதுன்னு சாமி கும்பிடாதீங்க.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
  2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
  3. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
  4. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
  5. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
  6. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
  7. அரச மரம் :ராசி அழகப்பன்
  8. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
  9. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
  10. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
  11. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
  12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
  13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
  14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
  15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
  16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்