முன்பு ஒரு காலத்திலே  -15 

அணில் கடிச்ச கொய்யாவை நீங்க சாப்பிட்டீங்களா? நான் சாப்பிட்டு இருக்கேன். அவ்வளவு ருசியா இருக்கும். அது எப்படித்தான் அந்த அணிலுக்கு கொய்யா மரத்துல  காய்ச்ச நல்ல பழுத்த ருசி தெரிஞ்சிருக்கும்னு  தெரியல?! அது கடிச்சிடுச்சுன்னு சொன்னா … அந்த பழத்த நீங்க  கண்ண மூடிக்கிட்டு சாப்பிடலாம்.ரொம்ப ருசியா இருக்கும். பல முறை  நான் சாப்பிட்டு இருக்கேன். அப்படி ருசிக்கும். நீங்க சாப்பிட்டீங்களா ன்னு தெரியல ?! கிடைச்சா வாய்ப்ப நழுவ விட்றாதீங்க..அணிலு லேசுப்பட்டதில்ல. அணில் பத்தி சொல்லனும்னா ஒரு விசேஷமான ஒரு கதை இருக்கு. அதுவும் ராமாயணத்துல தான்.அது என்ன சார் ராமாயணத்திலதான் அணில் கதை இருக்கா அப்படின்னு கேக்காதிங்க ?

ராமர் இலங்கைக்கு போறதுக்காக ஒரு பாலம் கட்டற குறிப்பு இருக்கு. ராமர் பாலம் கட்ட எல்லோரும் உதவி செய்யறாங்க.அப்போ பாத்துகிட்டு இருந்த அணிலு தான் அந்த பாலத்துக்கு உதவி செய்யணும் அப்படின்னு நினைச்சு… இது என்ன பண்ணிச்சுன்னா.. நேரா போயிட்டு மணல் மேல இந்த பக்கமும் அந்த பக்கமும் முதுக போட்டு எடுத்துட்டு போயி…அந்த பாலத்தை கிட்ட முதுகுல இருந்த மணலை உதறிட்டு வந்தது. தல செஞ்ச உதவ.ராமர் பார்த்தார்.பாலம் கட்டுவதற்கு அணில் கூட உதவி செய்யுதே… அப்படின்னு ஆச்சரியப்பட்ட ராமர் அந்த அணில தூக்கி முதுகில மூன்று விரலால தடவிக் கொடுத்தார். ‘நன்றி அணிலே ‘அப்படின்ற மாதிரி.. அந்த அணிலுக்கு அன்று  கொடுத்த மூன்று விரல்கள்தான் அணில் மேலே இப்பவும் படிஞ்சு  இருக்காங்கங்கறது இதிகாச  வரலாறு.அப்படிப்பட்ட அணில் இந்த கொய்யாப்பழத்தை தேர்ந்தெடுத்து நல்ல பழம் அப்படின்னு பதம் பார்த்துவிடும். அந்த பழத்தை எடுத்து சாப்பிடலைன்னா நியாயமா?

அதுல அவ்வளவு சுகம் இருக்கும். சின்ன வயசுல நாங்க எல்லாம் தேடித்தேடி சாப்பிட்டு இருக்கோம். இது ஒரு குறிப்பா சொல்றேன் நீங்க கூட கொய்யாப்பழத்தை நோக்கி போகும் போது அதில் அணில் கடிச்ச பழம் கீழ கிடைச்சதுன்னு விட்டுறாதீங்க சாப்பிடுங்க.எங்க வீட்டு தோட்டத்துல இரண்டு கொய்யா மரம் இருந்தது.ஒரு ஆளுயர மரம் தான். ஆனா அது வந்து நல்ல சீசன்ல கொய்யாப்பழம் காய்ச்சுத் தொங்கும். ஆனா அது பழுக்கற வரைக்கும் விடமாட்டோம். ஏன்னா அது வரைக்கும் யார் பொருத்துகிட்டு இருக்கிறது? அப்படிங்கறது தான். ஆனா எங்கப்பா ஓடி வந்து திட்டிட்டே இருப்பாரு.ஏன் அவ்வளவு அவசரம் பழுக்கட்டுமே அப்படின்னு சொல்றாரு  அட  இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல வுட்டுட்டு நான் என் வேலய பார்ப்பேன். காயா சாப்ட்டு  மறுபடியும் பழமாவும் சாப்பிட்டு இருக்கோம்.

பள்ளிக்கூடம் படிக்கிற வயசுல 2,3 கொய்யாப்பழத்தை டிராயர்ல போட்டுக்கிட்டு அதை எடுத்து எடுத்து காமிச்சிட்டு அப்புறம் ரொம்ப கெஞ்சி கேட்ட பிற்பாடு கொடுத்து அவங்க சாப்பிடுவதைப் பார்த்து சந்தோஷப்படுவது ஒரு பெரிய கெத்து தான்.எங்க வீட்டில் இருந்த கொய்யாப்பழத்தை ரெண்டு எடுத்துட்டு போயிட்டு  என் கூட படிக்கிற பொண்ணுங்களுக்கு கொடுத்து அசத்தலாம்னு நினைக்கும் போது பக்கத்து ஊருக்கு போயிட்டு பழத்த வாங்கிட்டு வந்து எங்க தோட்டத்துல விளஞ்சது அப்படின்னு சொல்லி முன்னாடியே கொடுத்து நல்ல பேர் வாங்கிட்ட என்னுடைய நண்பன் மேல இன்னிக்கும் எனக்கு கோபம் இருந்துகிட்டே இருக்கும். இப்படி பொய் சொல்லி தான் புடிக்கணுமா? ஆனா அப்படி பொய் சொல்லி ஃப்ரெண்ட்ஷிப் புடிச்சி பேரு வாங்கிட்டான் அப்படிங்கறது தான் உண்மையான தகவல்.

எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம். எங்க வீட்டுல இரண்டு மரம்  இருந்துச்சு. ஒரு மரத்தில் பழம் வட்டிப் பாத்தா வெண்மையாக இருக்கும். இன்னொரு மரத்து பழம் இளம் சிகப்பு கலரா இருக்கும்.அது எப்படி ஒரு மரத்துல வெள்ள, இன்னொரு மரத்துல செகப்பு அப்படி என்கிற குழப்பம் எனக்கு இருந்துகிட்டே இருந்தது. சரி இது யார் கிட்ட போய் சரி பாத்துக்கலாம் அப்படிங்கும் போது, எங்க சயின்ஸ் வாத்தியார் ஞாபகம் வந்தது .அவர் கொஞ்சம் கருப்பாக குண்டா இருப்பார். பேசிக் கொண்டிருப்பார்.இருந்தாலும் அவரிடம் போய் சந்தேகத்தை கேட்கலாம் அப்படின்னு போனேன்.

‘சார் எனக்கு ஒரு சந்தேகம் ‘ அப்படின்னு  கேட்டேன்.

‘ யாரு உனக்கா? ‘அப்படிங்கற மாதிரி நிமிர்ந்து பார்த்தார் .

‘சந்தேகம் சார்’

‘என்ன சந்தேகம் சொல்லு பாடத்திலேயா ?’அப்படின்னாரு.

‘இல்ல சார் இந்த கொய்யாப்பழத்தை தான் ‘அப்படின்னு டிராயரில் வைத்திருந்த இரண்டு கொய்யாப்பழத்தை எடுத்து காமிச்சேன்.

இதுல என்னடா சந்தேகம் உனக்கு சாப்பிட வேண்டியதுதானே அப்படின்னார்.

‘இல்ல சார் ஒரு கொய்யாப்பழத்தை வெட்டினா வெள்ளையா இருக்கு , இன்னொரு கொய்யாப்பழத்தை வெட்டினா செகப்பா இருக்கு ஏன் சார் இந்த ரெண்டு வித்தியாசம் எதுல சக்தி ஜாஸ்தி ‘அப்படின்னு கேட்டேன்.

‘ உனக்கு நல்ல சந்தேகம் வருது .

2 கொய்யாப்பழத்திலும் ஒரே சக்தி தான் இருக்கு.

நீ சாப்பிடலாம்.போடா

அப்படின்னு சொல்லி அனுப்பி அவர் எழுத ஆரம்பிச்சார்.

சந்தேகம் தீரல.

எதுத்த வீட்டு பாட்டி  கிட்டப் போய்,இந்த இரண்டு விதமான கொய்யாவுல எது சக்தி ஜாஸ்தி இரண்டும் ஒரே செடியில் தான் காய்க்குது.அப்பதான் எனக்கு அந்த சந்தேகம் தீர்ந்தது.இந்த கொய்யாப்பழம் அதோட நிக்கல என் வாழ்க்கையோட புகுந்து விளையாட ஆரம்பிச்சது .சொல்றதுக்கு என்ன ? எங்க கிராமத்துல நாங்க ரொம்ப ஏழ்மையான குடும்பம் .ஒரு வயசுல அம்மா தவறிட்டாங்க. எங்க அப்பா வந்து கைத்தறி நெசவு. கூட இருக்கிற தாய்மாமன்கள் பங்காளிங்க யாரும் உதவி பண்ணல.வயசுக்கு வந்த இரண்டு மூத்த சகோதரிகள் வேற. காப்பாத்தணும் என்ன பண்றதுன்னு தெரியல . சரின்னு சொல்லிட்டு கடன் வாங்கிட்டு பக்கத்தில் இருக்கிற நகரம் . அது நகரம் தான்.டவுனு. திருவண்ணாமலையில் போயிட்டு ஒரு கூட கொய்யாப் பழத்தை வாங்கி அதுல வர்ற காசு வைத்து குடும்பம் நடத்தலாம் அப்படின்னு நினைச்சார் அப்பா முன்னபின்ன கொய்யாப் பழ வியாபாரம் தெரிஞ்சா தானே பிழைக்க முடியும்.?எங்க அப்பா இளகின மனசு கொண்டவர். அதனால அள்ளிக் கொடுத்தார் .கொஞ்சம் பேருக்கு வந்து ஃபிரீயா கொடுத்தாரு .கடைசில கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்தா ஒன்னும் கைல நிக்கல.இப்படியே ஒரு மாசம்  கொய்யாப் பழத்தால் நாங்க மறுபடியும் பெரிய கடன்காரனாக மறுபடியும் அந்த ஊரை விட்டே நாங்க வெளியூருக்குப் போக வேண்டியதா ஆயிடுச்சு .ஒரு தொழில் செய்யும் போது தெரிஞ்ச  தொழில செய்யணும் .ஒரு கிராமத்து பழமொழி உண்டு .தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்.  அப்படியுமாக  கொய்யா பழ வியாபாரம் தெரியாமல் கெட்டதில் என் குடும்பமும் ஒன்று.

ஒரு முறை எனக்கு மலச்சிக்கல் வந்த பிற்பாடு கொய்யா பழச்சாறு கசாயம் மாதிரி செஞ்சி எங்கப்பா குடித்தால் சரியாகிவிடும்னு சொன்னாரு. அது வந்து பல் ஈறு வீக்கம் இருந்தால் கூட அது கொடுத்தா சரியாகும். கொய்யாப்பழம்  டெய்லி ஒரு முறை சாப்பிட்டால் மலச்சிக்கல் போகும் என்பது ஐதீகம். எங்க அப்பா அப்படி எல்லாம் கொடுக்கும்போது என்னமோ தெரியல வேணாம்னு சொல்லி நான் மறுத்திட்டேன். ஒருவேளை கொய்யாப்பழம் எங்க வாழ்க்கைக்கு உதவல  அப்படிங்கற கோவமா கூட இருக்கலாம்.ஆனா ஒரு கொய்யா மரம் வீட்டு தோட்டத்தில் இருக்கும் அதுல கொய்யா பழம் காய்க்கும் நீங்க அத ஓடியாடி விளையாடி கொத்தி சாப்பிடுவதும் அதை பாக்கவே ஒரு மிகப் பெரிய அனுபவம் என்றுதான் நினைக்கிறேன். அப்படி கொய்யா மரம் இருந்தா ஒரு கொடுப்பினை .கொய்யாப்பழம் நிஜமாகவே ஒரு ஏழைகளின் ஆப்பிள் . அப்படித்தான் சொல்லுவாங்க. ஆப்பிள்ல இருக்குறது அனைத்தும் இந்த பழத்துல இருக்குன்னு சொல்றாங்க .சின்ன வயசுப்பசங்க கொய்யாப் பழத்தை சாப்பிடுவது ரொம்ப நல்லது. அது வந்து உடலுக்கு சத்து கொடுக்கும் அப்படின்னு சொல்றாங்க. அதுல வந்து வைட்டமின்-சி இருக்கு அதனால பற்களின் வளர்ச்சிக்கும்,  எலும்பு வளர்ச்சிக்கு எல்லாம் அது ரொம்ப உதவுது. சரியா சொல்லணும்னா கொய்யாப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து , இரும்புச்சத்து , மாவுச்சத்து , தாது சத்து , புரதம் , கொழுப்பு நமக்குத் தேவையான கொழுப்பு இதெல்லாம் இருக்கு.

எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட். அடங்கொய்யால அப்படின்னு சொல்றாங்களே அது கொய்யா வணக்கம்? அப்படி இல்ல மிகச்சிறப்பாக இருக்கிற கொய்யா பழம் அப்படின்னு சொல்வதற்காக  ங்கொய்யால அப்படின்னு சொல்றாங்களோ . இப்ப கொய்யாப்பழம் எங்கெல்லாம் விளைவிக்கிறார்கள் .? வெப்பப் பகுதியில் குறிப்பாக மத்திய அமெரிக்கா தென் அமெரிக்கா கரீபியன் நாடுகளில் இருந்து வந்ததுன்னு சொல்றாங்க .எப்படி வந்தது ?

எப்படின்னா 1526 ல அங்கிருந்து புறப்பட்டு நம்ம இந்தியத் தீவுகள்ல அது வந்து பரவியது. அதுக்கப்புறம் ஒரு கிராமம்  கிராம்மா  நம்ம தோட்டம் அப்படின்னு வந்ததா சொல்றாங்க. சரி இந்த கொய்யா பழம் அப்படிங்கறது வந்து வாசனை ரொம்ப வீசும். நம் வீட்டு தோட்டத்தில் இருந்தாலே கமகமவென வாசனை வரும் .அது ரொம்ப விசேஷமானது டாக்டருங்க கொய்யாப்பழத்தை பத்தி சொல்ற விஷயம் என்னன்னா ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும் .அதனால டெய்லி ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது .இரண்டாவது நம்ம பல் ஈறு  எல்லாமநல்லா  இருக்குன்னு சொன்னாங்க. அடுத்தது கசாயம் வச்சி வீங்கின ஈறு  சரியா போயிடும்னு சொல்றாங்க. இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா அப்படின்னு கேக்கறது புரியுது..தேயிலை போட்டு டீ சாப்பிடற பழக்கம் நமக்கு இருக்கு பாருங்க ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. எதுக்கு கொய்யா இலை போட்டு டீ சாப்பிடலாம் அப்படின்னு சொன்னா அதுல ஒரு ரகசியம் இருக்கு .கொஞ்சம் கிட்ட வாங்க .காது கிட்ட சொல்றேன் .இந்த விந்தணு குறைபாடு யாருக்கெல்லாம் இருக்கோ அவங்க இந்த கொய்யா இலை போட்டு டீ சாப்பிட்டாச்சா சரி ஆயிடும் சொல்றாங்க. வேற எங்கேயும் போகாதீங்க பக்கவிளைவுகள் இருக்காது அப்படின்னு சொல்றாங்க .இது ரொம்ப முக்கியமான ஒரு தகவல்.வழக்கம் போல தான் .

என்ன தாத்தா பண்றீங்க அப்படின்னு எட்டிப்பார்த்த பேத்தி.

கொய்யா மரத்தை பற்றி எழுதுறீங்களா

கொய்யாப்பழம் மிகச் சிறந்தது,

இது  Myrtecese அப்படிங்கிற ஃபேமிலி வகையைச் சார்ந்தது .

அப்படினா  ? கூடவே இன்னொரு தகவலையும் சொன்னாங்க.தாத்தா எழுதிக்குங்க.  அப்படின்னா என்னன்னா இந்த கொய்யாப்பழத்தை கொய்யா மரத்தை வளர்த்து பெரிய அளவில் வியாபாரம் பண்ற நாடுகளில் இந்தியா கென்யா தாய்லாந்து இந்தோனேசியா பாகிஸ்தான் மெக்சிகோ பிரேசில் நாடுகள்.கொய்யா மரம் பயனுள்ள மரம் அப்படின்னு எல்லார்கிட்டயும் சொல்லுங்க அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.பேத்தி சொல்லை தட்ட முடியுமா தவறாமல் எங்கிருந்தாலும் கொய்யா பழத்தை சாப்பிட கத்துக்கோங்க .“ங்கொய்யால “என்றும் சிறந்தது அல்ல.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
  2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
  3. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
  4. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
  5. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
  6. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
  7. அரச மரம் :ராசி அழகப்பன்
  8. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
  9. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
  10. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
  11. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
  12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
  13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
  14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
  15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
  16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்