திரையில் விரியும் இந்திய மனம்-7
“மாடனைக் காடனை வணங்கும் அறிவிலிகாள்” என்று பாரதி பாடியதன் உள்நோக்கத்தைப் பின்வந்தவர்கள் எடுத்துரைத்துவிட்டார்கள். நாட்டார் தெய்வ வழிபாட்டை “சிறு தெய்வ வழிபாடு” என்று சுருக்கியதன் பின்னணியில் கூட அரசியல் இருப்பதை உணர முடியும். பலநூறு காலமாக நாட்டார் வழிபாடு இங்கு இருந்துவருகிறது. பிராமணர்களும் சைவப் பிள்ளைமார்களும் தவிர்த்த ஏனைய தமிழ்ச்சாதியினர் ஏதேனும் ஒரு வகையில் நாட்டார் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையவர்களாக இருந்துள்ளதாகவே சாதி வரலாற்றுக்கட்டுரைகளின்வழி நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்து மதம் நாட்டார் தெய்வ வழிபாட்டை உட்செரித்தலையும் விட்டுவைக்கவில்லை. நாட்டார் கடவுளர்களின் வழிபாட்டில் உள்ள தனித்தன்மையையும் அது தகர்க்க முயன்றுவருகிறது. ஆனாலும் நாட்டார் தெய்வ வழிபாட்டுக்கான நெறிமுறைகளைத் தமிழ்ச்சமூகம் கவனத்துடன் காத்து வருகிறது.
நிறுவனமயமாகிவிட்ட மதக்கடவுள்களின் வழிபாட்டைப் புறக்கணிக்கும் பண்பாட்டு அமைப்புகள்கூட நாட்டார் தெய்வ வழிபாட்டுக்கான எதிர்ப்பை வலியுறுத்துவது இல்லை. நாட்டார் கடவுள்களுக்குரிய வரலாற்றுக் கதையாடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களைக் கொண்டவை.
“மாடத்தி” என்ற நாட்டார் கடவுளுக்கான கதையாடலின் சாதிய வரலாற்றுப் பின்புலத்தை ஆய்வு செய்து அதற்குப் பின்னால் இருக்கிற சாதிய ஒடுக்கு முறைகளின் கொடூரமான பின்னணியை 90 நிமிடங்களில் சுயாதீன திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை திரைப்படமாகத் தந்துள்ளார். Coalition of South Asian Film festivals (Cosaff) அமைப்பு நடத்திய திரைவிழாவில்தான் மாடத்தியைப் பார்த்தேன்.
ஆவணப்படங்கள், கலைப்படங்களைப் பாலியல் சமத்துவம், சாதிய அரசியல் புரிதலோடு மக்களுக்குத் தருவதை லீனா மணிமேகலை தொடர்ந்து செய்துவருகிறார்.
மாடத்தி, தலித்துகளிடையே இருக்கும் தலித்துகள் என்று அழைக்கப்படும் புதிரை வண்ணார்களின் வாழ்க்கை அவலத்தைப் பேசுகிறது. 1976இல் சட்டநாதன் அறிக்கை சுமார் ஐந்து லட்சம் மக்கள்தொகை கொண்டதாக புதிரை வண்ணார் சமூகத்தை மதிப்பிட்டது. இன்னமும் கிராமங்களில் சிறு எண்ணிக்கையில் மட்டுமே இருக்கும் இவர்கள் நகரங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
புதிரை வண்ணார்கள் எனப்படும் இவர்களுக்கு சேரி வண்ணார், ஹரிஜன் வண்ணார், துரும்பர் என்று பல பெயர்கள் உண்டு. பார்த்தாலே தீட்டு என்றவகையில் சாதி இந்துக்களால் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். பகலில் வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது. இரவில் மட்டுமே இவர்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டிருந்தனர். 1932ல் நீதிக்கட்சி ஆட்சியின்போது இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக அறியமுடிகிறது. ஊர் வண்ணார், சாதி வண்ணார் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்ட வண்ணார் சமூகத்தில் இவர்கள் சாதி வண்ணார்கள் பிரிவில் வருவார்கள். பள்ளர், பறையர் போன்ற தலித்துகளுக்குத் துணி துவைப்பது இவர்களது கடமை. விடாய்த்துணி, பிணங்களைப் போர்த்திய துணி, குழந்தை பெற்ற தாய்மார்களின் துணியைத் துவைப்பது, வசிப்பிடமற்ற வாழ்வு என்று இவர்களின் இருப்பு, மிகுந்த இன்னலுக்குள்ளான ஒன்று. புதர்களில் வாழ்ந்து வந்ததனால் புதிரை வண்ணார் என்ற பெயர் வந்திருப்பதாகவும் கருதப்படுகிறது. மிக சமீபத்தில், 2015ல் நடந்த ஒரு ஆய்வில்கூட 90% புதிரை வண்ணார்கள் இன்னும் தலித்துகளின் துணியைத் துவைக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. அதே ஆய்வு, 45% புதிரை வண்ணார்கள் கல்வியறிவு கிடைக்காதவர்களாகவும் , 75% புதிரை வண்ணார்கள் சொத்து இல்லாமலும் இருப்பதாகத் தெரிவிக்கிறது. பல ஊர்களில் இறந்தவர்களைப் புதைப்பதற்கான இடம்கூட இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. புறம்போக்கு நிலத்தில் மட்டுமே இவர்கள் வசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் எனும்போது சொத்து எப்படி வரும்!? நிலமற்றவர்களாகவே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சாதி உருவானது பற்றிய கதைகள் பல உண்டு. சிவபெருமான் வெளுக்கக் கொடுத்த துணிகளில் வண்ணார் பரிவட்டத்தை மட்டும் தன் மகனிடம் கொடுத்து யானை மீதும், மீதியைக் குதிரையில் சென்ற பணியாளரிடமும் அனுப்பி வைத்தார். யானை மீது சென்ற மகன், தாமதமானதால், பூட்டப்பட்ட கோவிலின் வாயிலிலேயே நின்றுவிட்டார். அதனால் வண்ணார் மகன் புறத்து வண்ணார் ஆகிவிட்டார். இதுபோன்ற கதைகள், ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகத்தினர் தங்களின் அவலநிலைக்கு அமைதி காணும் வகையில் படைக்கப்பட்டவை என்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். மேலும் கடவுளோடு சேர்த்துப் புனையப்படும் இதுபோன்ற கதைகளை,, செய்யும் வேலையைப் புனிதப்படுத்தி அவர்களை அதைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு விழிப்புணர்வற்ற நிலைக்குத் தள்ளும் திட்டங்களாகவும் பார்க்கமுடிகிறது.
மாடத்தி திரைப்படத்தைப் பார்ப்பதும், முழுமையாக உள்வாங்குவதும் புதிரை வண்ணார் வரலாற்றின் அடிப்படையை அறிவதன் வழியேதான் சாத்தியப்படும்.
கிராமத்தின் வெளிப்பகுதியில் தாய், தந்தை, பாட்டியோடு வாழும் யோசனா என்ற பதின்பருவப் பெண்ணின் வாழ்வை சமூக வரலாற்றுப் பின்புலத்தோடு காட்சிப்படுத்துகிறது மாடத்தி.
கிராமத்திலிருந்து தனித்த நிலம் ஒதுக்கப்பட்டு வாழ்ந்தாலும் புதிரை வண்ணார் சமூகத்தின் பெண்கள் பாலியல் ரீதியாக சித்திரவதைக்குள்ளாவதை முன்னிறுத்துகிறது படம். அந்த மக்களின் வாழ்வியலோடு அதில் அங்கமாக இருக்கும் பெண்களின் நிலையை எடுத்துரைப்பதே படத்தின் நோக்கம்.
யோசனாவாக அஜ்மினா காசிம், வேணி என்னும் அம்மா கதாபாத்திரத்தில் செம்மலர் அன்னமும் பெண் கதாபாத்திரங்களாக வரும் திரைப்படத்தில் பேட்ரிக்ராஜ், அருண்குமார் ஆகியோர் நடித்துள்ள ஆண் பாத்திரங்களின் பங்களிப்பும் சிறப்பானதாக அமைந்துள்ளது. கவிஞர் யவனிகா ஸ்ரீராம், ரபீக் இஸ்மாயில், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, ஒளிப்பதிவாளர்கள் கார்த்திக் முத்துக்குமார், அபிநந்தன் ராமானுஜம்,ஜெப் டோலன் என பலரின் நேர்த்தியான வேலைகள் படத்தை முழுமையடையச் செய்துள்ளன.
அவலமான வாழ்வுக்குள் வந்துவிட்டதற்காக வேணி நாள்தோறும் சலித்துக்கொள்கிறாள். ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வுக்காகக் குரல் கொடுத்த அம்பேத்கர், புதிரை வண்ணார்களைப் போல சபிக்கப்பட்ட இனம் இல்லை என்று கூறுமளவுக்குக் கொடுமை. அதனுள் இருந்துகொண்டு யோசனா என்னும் சிறுமலரைக் காப்பாற்றுவது குறித்து அம்மா வேணி தினமும் கவலைப்படுகிறாள். அந்தத் தவிப்பை செம்மலர் அன்னம் தனது நடிப்பில் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். சாதிய ஒடுக்குமுறை மனிதர்களை எவ்வாறு அலைக்கழிக்கிறது என்பதற்கு காட்சிக்குக் காட்சி சாட்சியாக நிற்கிறது இத்திரைப்படம்.
தங்கள் முகத்தைப் பார்த்தாலே தீட்டு என்று நினைக்கும் சாதி ஆண்களின் கண்ணில் படாமலேயே வாழவே வேணியும் நினைக்கிறாள். பெண்மீது உடமை கொண்டாடும்போது மட்டும் ஆண்களுக்கு இந்தத் தீட்டு ஒதுங்கிக்கொள்கிறது. இந்த முரணும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வேணியின் கணவனுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்துவிட்டு வேணியை வன்புணர்வு செய்யும் சாதி ஆண், அவள் முகம் பார்க்காமல் பாலியல் வன்புணர்வை நிகழ்த்தும்போதும் சாதியக் கட்டுப்பாட்டை மீறாமல் பார்த்துக்கொள்கிறான்.
வன்புணர்வுக்குப் பிறகு வேணி உடனே துணி துவைக்கும் வேலைக்குத் திரும்புகிறாள். சமூகத்தின்மீது சாதியக்கட்டமைப்புகள்மீதும் ஆண்கள்மீதும் இருக்கும் கோபத்தையெல்லாம் துணிகள்மீது தீர்த்துக்கொள்கிறாள். குருதி தோய்ந்த தூமைத்துணிகளைத் துவைக்கும்போது அவள் உதிர்க்கும் வசைச்சொற்கள், சாதியக் கட்டுமான வரலாற்றை உருவாக்கியவர்கள் முகத்தில் காறி உமிழும் எச்சில்.
பதின்பருவத்தில் இருக்கும் மகள் யோசனாவை அம்மா வேணி கட்டுப்படுத்திக்கொண்டேயிருக்கிறாள். ஊருக்குள் செல்லவோ ஊர்சாதி மக்களின் கண்ணில்படவோகூடாது என்று அடிக்கடி அறிவுறுத்துகிறாள். படத்தின் முதல் காட்சியில் ஊர்சாதிமக்களைக் கண்டவுடன் புதரில் சென்று தாயும் மகளும் ஒடுங்கும் இடத்திலேயே அதனைப் புரியவைத்துவிடுகிறது படம்.
யோசனா வேறு வழியின்றிக் காட்டையே தன் வீடாக எண்ணிக்கொள்கிறாள். காட்டின் பறந்தோடும் பட்டாம்பூச்சியாகத் தன்னை வரித்துக்கொள்பவள், ஆற்றில் மீனாகிறாள், வானில் நிலவாகிறாள், சூரிய ஒளியைத் தன்மீது பூசிக்கொண்டு சிரிக்கிறாள். பருவத்தில் அவள் கண்ணில்படும் ஆணை ரசிக்கும்போது அவள் கண்களில் அத்தனை குறுகுறுப்பு. எவ்வளவு கட்டுப்பாடுகளையும் மீறி வயது அந்த பூப்பூத்தலைக் கொண்டு வந்துவிடும். ஒடுக்குதல் என்பதையே வாழ்வின் இயல்பாக அனுபவித்த யோசனா, முதன்முறையாக ஆணின் உடலை நிர்வாணமாக கண்டதும் பாறைக்குள் மறைந்துகொள்கிறாள். அதையும் தாண்டி மலர்கிறாள். பாறைக்குள் பூ மலர்வதாகவே இந்தக் காட்சியைப் புரிந்துகொள்ள முடிகிறது. தன் விருப்பத்துக்குரியவனின் வளர்ப்புக் கழுதையைத் திருடுகிறாள், அவன் சட்டையை அணிந்துகொள்கிறாள்.
ஆனால் பெண்கள் உடல்மீது நடத்தப்படும் வன்முறை அவர்களுக்குள் தோன்றும் மென் உணர்வுகளைக் கூட கசக்கி எறியச் செய்து விடுகிறது. விருப்பமானவர்கள் என்றாலும் அனுமதியின்றித் தொடும்போது அங்கு ஏதோ ஒன்று கருகுவதையும் காட்சிப்படுத்தும் நுட்பமான குறியீடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த சமூகம் பெண்ணுக்கு ஒரு கோட்டை வரைந்து, அந்தக் கோட்டை அவள் தாண்டும்போது அதையே சொல்லி எளிதாக தண்டித்துவிடுகிறது. அது உடை, நிலம், இனம், பொழுது என்று பலவற்றை வரையறுத்துள்ளது. அதே நேரம், இவர்களுக்குத் தேவையெனில் அந்தக் கோட்டை அழித்துவிட்டு ஆண்களே வன்முறையை நிகழ்த்துகின்றனர்.
நிலத்தோற்றம் என்பது இத்திரைப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. வேணி குடும்பத்தின் வாழ்விடம், யோசனா அலைந்து திரியும் வனம், பாலியல் வன்முறை நிகழ்த்தப்படும் காட்டுப்பாதை, இரவு நேரப் பாறைகள் அவை அனைத்தும் படத்தின் மொழியைப் பேசுகின்றன.
2020ம் ஆண்டு வெளியான புல்புல் என்ற இந்தித் திரைப்படத்திலும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கும் குடும்ப வன்முறைக்கும் ஆளாகிறாள். பெரிய குடும்பத்து ஆண்களால் சீரழிக்கப்படும் புல்புல், அரூபமாக அவர்களைப் பழிவாங்குகிறாள். அப்போது பலரும் ஒரு கேள்வி எழுப்பினார்கள். ஒரு பெண் தனக்கு நேர்ந்த அநியாயங்களைப் பேய் வடிவில் வந்துதான் நேர் செய்து தண்டனை வழங்கவேண்டுமா என்று கேட்டார்கள். மாடத்தியின் யோசனாவும் தெய்வ உருக்கொண்டுதான் தண்டனை தருகிறாள். பழிவாங்குதல் என்பது இப்படியான வழிகளில் மட்டுமே இங்கு சாத்தியப்படுகிறது. இந்த நிதர்சனம் காலத்தின்மீது துயர வடுவாக நிலைத்திருக்கிறது.
இயற்கையை நேசிக்கிற யோசனா, விலங்குகளோடு ஒட்டியே வாழ்கிறாள். அவள் தோளில் தானாகவே ஒரு கிளி வந்து அமரும் அளவுக்குப் பறவைகளை ரசிக்கிறாள். தண்ணீரில் மிதக்கிறாள். ருசியோடு ஒரு ஆணை ரசிக்கிறாள். வாழ்வின் பரிமாணங்களை அனுபவிக்கக் காத்திருந்த ஒரு பெண்ணுக்கு சமூகம் வழங்குவது என்னவோ வல்லுறவுதான்.
சாதியப் படிநிலைகளால் மிக மோசமாக பாதிக்கப்படும் ஒரு குடும்பம், அதனினும் கொடூரமாக மனதாலும் உடலாலும் சீரழிவுக்கு உள்ளாகும் அந்தப் பெண்களின் துயரம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் மாடத்தி, காலத்தின் மனசாட்சியை ஆற்றுநீரில் வெளுக்கிறது.
ஓட்டைகளும் கிழிசல்களுமான அந்த வரலாற்றைத்தான் பலரும் இங்கே ஆடையாக அணிந்து பெருமிதம் அடைகிறார்கள். நாற்றம் வெளியே தெரியாத வண்ணம் பழமைவாதம் என்ற வாசனைதிரவியம் பூசப்படுகிறது. எல்லாவற்றையும் வெளுக்கவும் மாற்று உடைக்கு மாறவும் நேரம் நெருங்கிவிட்டது.
Name: Maadathy
Year: 2019
Language: Tamil
Platform: NeeStream
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
- திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
- "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
- கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
- கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
- பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
- மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
- நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
- கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
- துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
- அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
- காஸி-உணர்வு யுத்தம் : ஸ்டாலின் சரவணன்
- ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
- இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
- Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
- ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
- "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்