விட்டு விடுதலையாகி
ஒரு வீடு, அதன் பாத்திரங்கள் வாயிலாக ஒட்டுமொத்த இந்திய மனநிலையைப் படம் பிடித்துக் காட்ட இயலும் என்பதை நிரூபித்துள்ளார் பக்லைட் திரைப்பட இயக்குநர் உமேஷ் பிஸ்ட்.
சான்யா மல்ஹோத்ரா நடித்துள்ள சந்தியா கதாபாத்திரம், திருமண வாழ்வில் அகப்பட்டுக்கொண்ட இந்தியப் பெண்களின் பிரதிநிதி. இளவயது மகனை இழந்துநிற்கிறது குடும்பம். அப்பா, அம்மா, தம்பிகள், உறவுகள் கூடி நிற்கின்றனர். மகனுக்குத் திருமணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. அப்படியெனில் அந்த வீட்டில் பெரும் இழப்பை சந்தித்திருப்பவள் அவரது மனைவி சந்தியா. அவள் தன் அறையில் அமர்ந்துகொண்டு முகநூலில் வந்துள்ள இரங்கல் கமெண்டுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இந்தத் திருமண வாழ்வில் அவளுக்குப் பெரிதாகப் பிடிப்பில்லை என்பதை அவளின் அறிமுகக் காட்சியே பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுகிறது. ஆனாலும் அதன் காரண காரியங்கள், அவளின் நடத்தை, அவள் கணவன் குறித்த கதைகள் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் பார்வையாளர்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. பக்கத்து வீட்டுச் சுவர்களில் காதை வைத்துக் கேட்பதில்தான் நமக்கு எத்தனை ஆனந்தம்!
ஒரு சமூகத்தின் மினியேச்சராக இருக்கும் அந்தக் குடும்பத்தில் இந்திய மனசாட்சியை நாம் பார்த்துக்கொள்ளலாம். குறிப்பாக இந்து சமூகப் பின்னணி உள்ள ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களை, அவர்களது நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கிறது.
நாசியா என்ற சந்தியாவின் தோழி, ஆகான்ஷா என்ற சந்தியாவின் கணவருடைய முன்னாள் காதலி ஆகிய இரு பெண்கள் சந்தியாவோடு இணைந்து இந்திய சமூகத்தில் பெண்களை, அவர்தம் தனி வாழ்வு, சமூக வாழ்வை அங்கங்கே தொட்டுக் காட்டுகின்றனர்.
இரண்டு வயதானவர்கள் வருகிறார்கள். இருவரும் வேறு வேறு துருவங்களில் நிற்கின்றனர். முதிய பெண், பெண்களை நுட்பமாகப் புரிந்து உள்வாங்குகிறார். பப்புகிரி என்கிற முதிய ஆண்,இந்தியக் குடும்பத்தில் ஆணாதிக்கப் பிரதிநிதியாக வந்து இந்து சமயத்தின் ஆண்வேரைப் பொத்திப் பாதுகாக்கிறார்.
தொடக்கத்திலிருந்தே பார்வையாளர்களுக்கு சந்தியாவின் நடவடிக்கைகள் புதிராக இருக்கின்றன. படம் நகர நகர, அந்தப் புதிரும் ஒரு தெளிவை நோக்கி செல்லத் தொடங்குகிறது. நம் மடிமீது இருக்கும் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும் சுகம்.
படத்தின் பெரும்பகுதி அந்த வீட்டுக்குள்தான் நிகழ்கின்றது. ஆனாலும் கதையின் போக்கு நமக்கு அலுப்பை வரவழைக்கவில்லை. சந்தியாவின் தோற்றமும் நடிப்பும் அத்தனை கச்சிதம்.மேலும் எந்தப் பாத்திரமும் தனது தேவையை மீறி வெளிப்படுத்தவில்லை என்பது படத்திற்கு ஒரு நேர்த்தியைத் தந்துவிடுகிறது.
கணவனின் முன்னாள் காதலிக்கும் அவளுக்கும் இடையே கணவனின் இறப்புக்குப் பிறகு உருவாகும் நட்பு தனித்துவமாக இருக்கிறது.சந்தியா அவளிடம் தன் கணவனுக்கும் அவளுக்குமான உறவு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறாள்.அவளும் அந்த கேள்விகளை தயங்கி தயங்கி எதிர்கொண்டு பதில் தருகிறாள்.அப்பொதெல்லாம் சந்தியாவின் மனதுக்குள் பல்வேறு எண்ண அலைகள் எழும்பி புரள்வதை அவளின் முகப் பாவனைகளில் உணர வைக்கிறார்.
படம் முழுவதும் சந்தியா பதற்றமாகவே காணப்படுகிறாள்.அதை பார்வையாளர்களுக்கும் கடத்திவிடுகிறாள்.ஏற்கனவே இருந்த கல்யாண வாழ்வும் நிறைவு இல்லை.இனி எதிர்காலமும் என்னவாகும் என்ற குழப்பத்தில் இருக்கும் பெண்ணின் நிலை அது. ஐந்து மாதங்களில் இழந்து நிற்கும் மண வாழ்வு, அவளின் எதிர்காலம் என்ற ஒருவழிப் பாதையில் படம் செல்கிறது.
வாழ்ந்த நாட்களில் தன் கணவன் தனக்கு நேர்மையாக இல்லை என்ற எண்ணமே அவளை அலைக்கழிக்கிறது.அதன் வெளிப்பாடாக அவள் ஏதோதோ செய்கிறாள்.அதை அவளின் தோழிகூட புதிராகவே பார்க்கிறாள்.
பதின்மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கும் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு கலகத்தை யாரும் அறியாமல் நிகழ்த்தி தன் கணவரின் ஆன்மாவின் அமைதியின் மீது கற்களை எறிகிறாள் சந்தியா.இரண்டாம் நாளே பெப்சி கேட்பவள்,அவனின் அஸ்தியை நதியில் கரைக்கும் நிகழ்வில் உறவுகள் பயபக்தியோடு இருக்கையில் வீட்டை விட்டு வெளியேறி பானிபூரி சாப்பிடுகிறாள்.
இதே இடத்தில் நமக்கு ஒரு கேள்வி எழாமல் இல்லை.கணவனை இழந்து நிற்கும் சந்தியாவிடம் இந்த சமூகம் நிறைய கட்டுபாடுகளை விதிக்கிறது.அவளிடம் நிறைய சோகங்களை,விரதங்களை எதிர்பார்க்க்கிறது.இதே நிலையில் சந்தியா இறந்து கணவன் உயிரோடு இருந்திருந்தால் இதே எதிர்பார்ப்புகள்,கட்டுப்பாடுகள் ஆணுக்கும் பொருந்துமா?
கணவனை இழந்த பெண்ணை சுமக்க யாருமே தயாரகவில்லை.பெற்றவர்களும் கணவன் வீட்டாரும் அவளை பராமரிப்பதில் இருந்து விலகி நின்றுக் கொண்டு அவளை ஒரு பந்தை போல எதிர்பக்கத்திற்கு உருட்டி விளையாடுகின்றனர்.
மறுபக்கம் கணவனை இழந்த பெண்ணின் மீது ஆண்களின் கரிசனம் உள்நோக்கத்தோடு கரைபுரண்டோடுகிறது.
ஒரு பெண் தன் வாழ்வை இழந்து நிற்கும்போது சுற்றி நிற்கும் உறவுகள் அவளது வாழ்வைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு அத்துமீறுவதையும் உணர்வுபூர்வமாகப் படம் பேசுகிறது.
இவற்றை எல்லாம் சந்தியா ஒரு அறையில் இருந்து கவனிக்கிறாள். மணவாழ்வின் அதிருப்தியும் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வியுமாக தன்னைச் சுற்றி நிகழும் பலவற்றைக் கொண்டு யோசிக்கிறாள்.
அவள் நிதானமாக தன் வாழ்வை கவனிக்கத் தொடங்கும்போது அவளுக்கு ஒரு தெளிவு பிறக்கிறது.அதையொட்டி அவள் எடுக்கும் முடிவுகள் பெண்களுக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது.
வீட்டுக்குள் உலவும் மூன்றுக்கும் மேற்பட்ட தலைமுறைகள் வழியாக நம் சமூகத்தின் பரிணாமத்தைத் தெரிந்து கொள்ளலாம்.மூத்தவர்கள் என்ற பெயரில் வீடுகளுக்குள் உலவும் அபத்தங்களை படம் அம்பலப்படுத்துகிறது.
சந்தியாவின் தோழியாக வரும் பெண் வேற்று மதத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவளுக்குத் தரப்படும் புறக்கணிப்புகளை ஒரு கட்டத்தில் சந்தியாவே உடைக்கிறாள். அதற்கான இடத்தை நோக்கி ஒரு பெண் நகர்வதுதான் தேவையாக இருக்கிறது.எலிகளுக்கான சுதந்திரத்தை பூனைகளிடம் எதிர்ப்பார்ப்பது எவ்வளவு பெரிய மடமை என்ற பெரியாரின் கூற்று நினைவிலாடுகிறது.
குடும்பமும் சமூகமும் வேறு வேறு அல்ல.இரண்டிலும் சில உடைப்புகளை செய்ய வேண்டியது பெண்களின் தேவை.அதை பெண்களே செய்ய முன் வருவது முக்கியமானது.
ஐந்து மாதங்களில் ஒரு பெண் அந்த வீட்டில் உள்ள அத்தனை பாத்திரங்களையும் புரிந்து கொள்கிறாள். அவர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து அதை நிறைவேற்ற முயல்கிறாள். ஆனால் ஒரே அறையில் கூடவே வாழ்ந்த கணவனுக்குப் பிடித்த சட்டை நிறத்தைக் கூட அவள் அறிந்தவளாக இல்லை. ஆண்-பெண் தாம்பத்திய உறவு எவ்வளவு புதிரானதாக இருக்கிறது?! இருவரும் ஒருவருக்கு ஒருவர் அவர்களின் எல்லைக் கோட்டை அழித்து அவர்களை அனுமதித்துக் கொள்வது அத்தனை அவசியமாக இருக்கிறது.
மேலும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் எத்தனை இழப்புகளுக்குப் பிறகும் தேவையாக இருப்பது பொருளாதாரமோ, உறவுகளின் பச்சாதாபமோ, பாதுகாப்போ அல்ல, சுயமரியாதையும் சுதந்திரமும்தான். அதையே திரைப்படம் முன்வைக்கிறது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
- திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
- "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
- கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
- கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
- பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
- மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
- நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
- கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
- துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
- அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
- காஸி-உணர்வு யுத்தம் : ஸ்டாலின் சரவணன்
- காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
- ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
- Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
- ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
- "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்