திரையில் விரியும் இந்திய மனம் -10
“விவசாயியாக இருப்பவர் யாரும் விதர்பாவில் வசிக்க முடியாது. அத்தனை மோசமான இடம் அது” என்கிறார் பத்திரிக்கையாளர் சாய்நாத். விவசாயிகளின் பூமி என்றழைக்கப்பட்ட விதர்பா, மகாராஷ்டிரா மாநிலத்தின் முப்பது சதவிகித நிலப்பரப்பு, இருபது சதவிகித மக்கள்தொகையைக் கொண்டது. வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட விதர்பா 2014ம் ஆண்டுக்குப் பிறகு துயரமான ஒரு காரணத்துக்காக வரலாற்றில் இடம்பெற்றது. அந்த பத்தாண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பகுதியாக விதர்பா ஆகிப்போனது. கிட்டத்தட்ட தினமும் ஒன்று முதல் ஏழு வரையிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை நடப்பது மகாராஷ்டிராவில். அதில் பெரும்பாலான தற்கொலைகள் விதர்பாவில் நடக்கின்றன. தொடர்ந்து நடப்பதால் மராட்டிய ஊடகங்களுக்கு இது பழகிப்போன ஒன்றாகிவிட்டது. 2006ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஃபேஷன் வீக் நடைபெற்றது. அதன் ஆடை வடிவங்கள், கவர்ச்சி வளைவுகள் குறித்து பத்திரிக்கைகள் எழுதிக்கொண்டிருந்தபோதுகூட விதர்பாவில் தினமும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 512 பத்திரிக்கையாளர்கள் ஃபேஷன் வீக்கை கவனித்து எழுதிக்கொண்டிருந்தபோது, விதர்பாவில் ஆறு பத்திரிக்கையாளர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். இதில் வேடிக்கையான முரண் என்னவென்றால் முப்பது பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட அந்த காலகட்டத்தில், பருத்தியை முதன்மைப் பொருளாகக் கொண்டு ஃபேஷன் வீக் நடந்திருக்கிறது.
விவசாயக் கொள்கை, விலை நிர்ணயம் பற்றிய பிரச்சனைகள், குறைவான மழை, அரசியல் தலைமையில் உள்ள குளறுபடிகள், மண்ணில் குறையும் ஊட்டச்சத்து, பாசனத்திட்டத்தில் உள்ள போதாமைகள், மரபணு மாற்றப்பட்ட பருத்தியால் விளையும் பிரச்சனைகள், விலையேற்றம், பாசனத்துக்குத் தரவேண்டிய தண்ணீர் தொழிற்சாலைகளுக்குத் தரப்படுவது, கடன்பிரச்சனை இவற்றில் ஏதோவொன்றின் தாக்கத்தால் விதர்பாவில் பூலாம்பரி கிராமத்தில் ஒரு இளம் விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான். அங்கு இருந்துதான் ஏக் ஹசார்ச்சி நோட் (Ek Hazarchi Note) படத்தின் கதை தொடங்குகிறது. இயக்குநர் ஸ்ரீஹரி சாதேவுக்கு இதுதான் முதல் படம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மராத்திய மொழிப்படமாக இருந்தாலும் வட்டார மொழியான வர்ஹாதியில் வசனங்கள் வருகின்றனர்.
பார்வதி என்கிற வயதான பெண்மணி அக்கிராமத்தில் புதி என்று அழைக்கப்படுகிறாள். லட்சத்தில் ஒருவன் எனும் தற்கொலை விவசாயிகளின் பட்டியலில் அவள் மகனும் வருகிறான். மருமகளையும் அவளது தந்தை அழைத்துச் சென்றுவிட, அனைவராலும் கைவிடப்பட்ட அந்த விதவைத் தாய் வாழ்க்கையைத் தன்னந்தனியாக எதிர்கொள்கிறாள்.
மழைக்கு ஒழுகும் கூரைவீடு, வசதியான வீடுகளில் எடுபிடி வேலை, மறுவேளை உணவுக்கு நிச்சயமற்ற தன்மை என இந்தியாவின் வறுமையால் சபிக்கப்பட்ட அவளது வாழ்வுக்குள் திடீரென வந்துபோகும் ஒரு அதிர்ஷ்ட நிகழ்வு எவ்வகையான் மாற்றங்களை விளைவிக்கிறது என்பதே படத்தின் கதை.
ஒரு புள்ளியிலிருந்து விரியும் படம், பார்வையாளனுக்கு எண்ணற்ற அனுபவங்களைத் தருகிறது. கிராமங்களில் இருக்கும் வாழ்வின் தன்மை, எளிய மனிதர்களின் பாசாங்கற்ற அன்பு, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் கிராமங்களுக்கு வந்து சேராத வசதி, அரசியல்வாதிகளின் கறைபடிந்த நடவடிக்கைகள், அதிகாரத்தின் கோரமுகம் எனப் பலவற்றை முன்வைத்து சிலமணிநேரத்தில் ஒரு திரைப்படத்தால் உரையாட முடிகிறது. சினிமாவின் கொடைதான் எத்தனை பரந்து விரிந்த ஒன்றாகிறது!
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் ஒரு விவசாயி தற்கொலை என்பது ஊடகங்களுக்கு ஒரு செய்தி, அவ்வளவே. அதன் பிறகு அக்குடும்பத்தில் இருந்து ஆதரவற்று நிற்கும் ஒரு மனுஷியை எந்த அரசு நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை.
அவளின் காலணியைப் போலவே உறவும் வாழ்வும் தேய்ந்து போகிறது அவளுக்கு. அதை அவள் தைக்க வரும் ஒரு காட்சி, அவளது நிலையையும் கதாபாத்திரத்தின் தன்மையையும் துல்லியமாக வெளிப்படுத்திவிடுகிறது. செருப்பு தைக்கும் தொழிலாளி அரை ரூபாய்க்கு வேலை செய்ய முடியாது என்று மறுக்க, அவளே அங்கு அமர்ந்து தன் காலணியை அவன் கடையின் ஆணியைக் கொண்டு தைக்கிறாள். முடித்ததும் அரைரூபாயை வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறாள். கடைப்பொருட்களைப் பயன்படுத்திக்கொண்டதற்காகக் குறைந்தபட்ச காசையேனும் தந்துவிடும் நேர்மையில் மிளிர்கிறாள். இரண்டு ரூபாய்க்கு ரொட்டி, வெல்லம், தீப்பெட்டி, பால் எனக் குறைந்த காசில் தனது தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறாள். ஊர்மக்களும் ஏதோ ஒரு வகையில் அவள் பிழைக்க ஏதுவாக இருக்கின்றனர். திடீரென அவளது மகன் வயதையொத்த பக்கத்து வீட்டு நண்பன் சுதாமா மூலம் அரசியல் கட்சிக் கூட்டத்தில் சில ஆயிரங்கள் நன்கொடை கிடைக்கிறது.
“நன்கொடை” என்பது தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக வழங்கப்படும் பணத்திற்கான நாகரீக வார்த்தைப் பிரயோகம். அந்த பணப்பட்டுவாடாவும் தற்செயல் நிகழ்வு. இலவசமாக உணவு கிடைக்கும் என்று தன் குடும்பத்தினருடன் புதியையும் அழைத்துச் செல்கிறான் சுதாமா. புதியை வேட்பாளரிடம் அறிமுகம் செய்யும்போது தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் மகன் என்று கூறியதால் நூறு ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ஆயிரம் ரூபாய்த்தாள்களை அவள் கையில் திணிக்கிறார் வேட்பாளர்.
அந்தப் பணத்தில் சுதாமாவுக்கும் அவன் குடும்பத்திற்கும் புதுதுணிகள் எடுத்துத் தர விரும்புகிறாள். உடைந்துபோன தன் கண்ணாடியையும், இறந்த மகனின் புகைப்படத்துடைய கண்ணாடிச் சட்டகத்தையும் மாற்ற நகரத்துக்குப் போக விரும்புகிறாள். சுதாமாவை அழைத்துக்கொண்டு பக்கத்து நகரத்துக்குப் பயணிக்கிறாள். எளிய மனிதர்களின் கையில் இருக்கும் பெரிய தொகை பலரின் கண்களை உறுத்துகிறது. அடித்தட்டு மக்களின் வாழ்வில் பூட்ஸ் கால்களுடன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரம் நுழைகிறது. அது அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தை நுட்பமாகப் பேசுகிறது படம்.
அச்சு அசலான கதாபாத்திரங்களின் வாயிலாக, வாழ்க்கையையே நம் முன்வைத்துவிடுகிறது திரைக்கதை. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தின் உண்மைத்தன்மைக்கு சேதாரம் விளைவிக்காமல் பலம் சேர்க்கின்றன. ஒரு சில முதன்மைப் பாத்திரங்கள், நீரில் இட்ட கல் ஏற்படுத்தும் நீர் வளையமாகக் கதையை விரிக்கின்றன. பாத்திரங்களின் பங்களிப்பு நீர் வளையத்தைக் காலத்தின் சித்திரமாக மாற்றித் தருகிறது. புதியாக நடித்த உஷா நாயக், சுதாமாவாகப் பங்களித்த சந்தீப் பதாக் இருவரும் மாநில, சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளனர். சிறந்த மராத்தி திரைக்கதைக்காக புனே சர்வதேச திரைவிழா விருதினைப் பெற்றுள்ளது படம்.
புதிக்கும் சுதாமாகவுக்கும் இடையே இருக்கும் கனிந்த நட்பு அவ்வையார்-அதியமானின் பிணைப்பைத் தமிழ்ப்பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தலாம். சூழல் மாறும்போது இருவரும் ஒருவர் கரத்தை மற்றொருவர் அன்பால் இறுக்கிக்கொள்ளவே விரும்புகின்றனர்.
இருவரும் உரையாடிக்கொள்ளும் இடங்கள் அற்புதமானவை. ஆடுமேய்த்துக்கொண்டிருக்கும் சுதாமாவைத் தேடிப்போய் புதி பேசும் காட்சி மிகைத்தன்மை இன்றி சகமனிதர்கள் பரிமாறிக்கொள்ளும் அன்பைக் காட்சிப்படுத்துகிறது. இவர்களின் நட்பு சுதாமாவின் மனைவிக்குப் பொறாமை கலந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது. நிஜமான மாமியார்-மருமகள் உறவின் பிணக்காகவே அவள் அதை வெளிப்படுத்துகிறாள். அன்பின் நெகிழ்வு பேசப்படும் காட்சிகள் கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் திகட்டிவிடும் ஆபத்து உண்டு. அந்தப் பொறுப்புணர்வோடு அவை மென் இனிப்போடு வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒளிப்பதிவின் வழி பார்வையாளர்கள் அந்த கிராமத்தை அணுக்கமாக உணர்கின்றனர். வறுமையில் சிக்கிய இதுபோன்ற கிராமங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்வதும் அவர்களின் அறியாமையும் இந்தியாவின் சக வாக்காளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை. உணவுக்காகவும் பணத்துக்காகவும் வாக்குகள் விலைக்கு வாங்கப்படுவதில் மட்டும் எல்லா மாநிலங்களிலும் ஒற்றுமையைக் கடைபிடிக்கிறது தேசம்.
உடைந்த அவளின் மூக்குக்கண்ணாடி ஒரு படிமமாக அடுத்தடுத்த காட்சிகளுக்குச் செல்வதும், ஆன்மீகமும் அரசியலும் இந்தியர்களின் வாழ்வில் கலந்து இருப்பதையும் உணர முடிகிறது. பணம்-அடித்தட்டு மக்கள்- அன்புசார் வாழ்வு போன்ற கதையாடல்களில் ரொமாண்டிசிஸம் மிகுந்துவிடும் ஆபத்து நிழல்போல வந்துகொண்டேயிருக்கும். அதை உணர்ந்து கவனமாகக் காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குநர்.
அதிகாரத்தின் எதிர்மறையான முகம் மட்டுமே பார்வையாளர்கள் மனதில் உருவாக்கப்படுகிறது என்ற எண்ணம்கூட நமக்கு எழலாம். அதிகாரம் எப்போது எளிய மனிதர்களின் பக்கம் எந்தப் பிரதிபலனும் பாராமல் நின்றிருக்கிறது? அதிகாரத்தின் கால்களில் நசுக்கப்படாமல் எந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விரல்கள் தப்பியிருக்கின்றன? அரசியலும் அதிகாரமும் தேவைப்பட்டால் கைகோர்த்துக்கொள்வதும், முதுகுக்குப் பின்னால் கத்தியை வைத்துக்கொண்டு கட்டி அணைத்துக்கொள்வதும் சிரிப்பதும் நடைமுறையாகிவிட்டது.
ஆயிரம் ரூபாய் நோட்டு கிடைத்தபிறகும், புதி இரண்டு ரூபாய்க்கே பால்வாங்குகிறாள். பால் விற்பனை செய்யும் பெண்மணி, “இப்போதாவது கூடுதலாக வாங்கலாமே” என்று கேட்கும்போது, “ஆயிரம் ரூபாய் இருக்கிறது என்பதற்காகப் பாலை நிறைய வாங்கிக் குளிக்கவா முடியும்” என்று புதி கேட்கிறாள். இதுபோன்ற அவளது கிண்டல்களை கிராம மக்கள் சிரித்தபடியே கடக்கின்றனர். கிராமத்தில் அத்தனை வறுமையிலும் உற்சாகத்துடனே இருக்கும் புதி, வேலை செய்யும் இடத்திலும் பயணம் போகும் நகரத்திலும் நாக்கு கட்டப்பட்டவள் போல நடந்துகொள்கிறாள். அடித்தட்டு மக்களின் குரல் எங்கே விலைபோகும் என்று அவளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது!
மனிதர்களின் மகிழ்ச்சி ரூபாய் நோட்டுகளில் இல்லை. பணம் இல்லாமல் வாழப் பழகியவர்களுக்கு அதைக் கையில் ஏந்தாமலும் கண்ணில் பார்க்காமலுமே மகிழ்ச்சியாக வாழத்தெரிகிறது.எவ்வளவு இடர்வந்தபோதும் நேர்மையை விட்டுவிடாத வாழ்வையே அவர்கள் குறைந்தபட்சமாகக் கேட்கின்றனர். அது நடக்கவேண்டுமானால் அதிகாரமும் அரசியல் சூழலும்தான் மனதுவைக்கவேண்டும்.
Movie: Ek Hazarchi Note
Year: 2014
Language: Marathi
Platform: Netflix
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
- திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
- "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
- கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
- கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
- பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
- மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
- நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
- கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
- அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
- காஸி-உணர்வு யுத்தம் : ஸ்டாலின் சரவணன்
- காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
- ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
- இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
- Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
- ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
- "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்