முன்பு ஒரு காலத்திலே-5
கைய நீட்டுங்க..சத்தியம் அடிச்சு சொல்றேன் .இந்தப் பழத்தை சாப்பிட்டா துவர்ப்புல ஒரு இனிப்பு இருக்கும் எச்சில் ஊறி சாப்பிடற சுகம் உலகத்துல வேற எதுவும் கிடைக்காது ..
கொடுக்கப்புளி பழம் அவ்வளவு ருசி. முதல்ல துவர்க்குற மாதிரி இருக்கும்.சாப்பிடும்போது வரட்டுன்னு தொண்டைல ஒரு மாத்ரிரி இருக்கும்.அதுக்கப்புறமா பார்த்தீங்கன்னா குத்தலத்துல குளிச்சா சுகமா இருக்கும்ல அப்படி ஒரு தித்திப்பு அதுல ஊறும் .அதுல அவ்வளவு ரசனை இருக்கு.
இதெல்லாம் இத்தாக்கால புள்ளைங்களுக்கு கிடைக்குமான்னு தெரியலை.எங்க வீட்ல ஒரு பெரிய கொடுக்காப்புளி மரம் இருந்தது.நான் பள்ளிக்கூடம் முடிச்சிட்டு பையைத் தூக்கி வீட்ல ஒரு மூலையில போட்டுட்டு நேரா கொடுக்காப்புளி மரத்துக்கிட்ட போயி நிப்பேன் .
அணிலண்ணே நம்ம வர்றதுக்குள்ள கொடுக்காப்புளி பாசத்தை கடிச்சி பதம் பாத்து மிச்சத்த கீழ போட்டுறுவாரு .அதைத் தேடி முள்ளு செடிக்கு மத்தியில கைய விட்டு கீறிக்கிட்டு எடுத்து மண்ண ஊத்தி பச்சைன்னு இருக்கிறதையும்,சிவந்து கிடக்கிறதையும் எடுத்து டிராயர்ல போட்டு ரொப்பிக்குவேன்..
தறி நெஞ்சிக்கிட்டிருக்கிற எங்கப்பாகிட்ட “அப்பா வயிறு ஒரு மாதிரி கடாமுடான்னுது கொல்லைக்கு போயிட்டு வந்துர்றேன்’பேன் .அவரு பதிலுக்கு தறியில இருந்துகிட்டே ,”டேய் டிராயர்ல பேண்டு வைக்காதடா …மாத்து இல்ல..துவைக்கப் போட்டிருக்குக்கன்னு ‘னு வெள்ளந்தியா கத்துவார்.
நம்ம டெக்னிக் அவருக்கு எப்பிடி தெரியும்.”சரிப்பா”ன்னு பதிவுசா சொல்லிட்டு ஒரே ஓட்டம் ..ஊருக்கு வெளிய இருக்கிற ஒரு பாறை மேல போய் உக்காந்துகிட்டு பரப்பி வைச்சி பாப்பேன்.
மூக்குல வேத்த மாதிரி அடுத்த செகண்ட்ல அஞ்சாறு பசங்க வந்து பக்கத்துல ஒக்காந்து கெஞ்சுவானுங்க..
“டேய்..டேய்..சிவப்பா இருக்கே அதுல ஒண்ணு குடுறா..வெடிச்ச பழத்த இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லடா..”ன்னு ஒல்லிப்பையன் கெஞ்சுவான் .நடிக்கிறதுல அவனை விட்டா வேற ஆளே கிடையாது.அப்படி முகத்தை வச்சிக்கிட்டு பாவமா கேட்டான்..எனக்கென்ன பிரச்சனைன்னா..இருக்கிறது அவன் கேக்கிற மாதிரி பழம் ரெண்டு.இவனுக்கு கொடுத்துட்டா மத்த பசங்க சங்கடப்படுவானுங்க .”ஏண்டா எண்களைப்பாத்தா எப்படியிருக்கு.நேத்து கூட அவன் அவங்க மரத்துல காய்ச்சதை துன்னான் .இப்ப அப்படியே ஒன்னும் பாக்காதவன் மாதிரி முகத்தை வச்சிக்கிறான்னு சொல்ல அவன் வேஷம் கலைந்தது .
இப்ப அவன் கேட்டானா ?நீயே ஏண்டா போட்டுக்குடுக்கற “இனி வா…வீட்டாண்ட வந்து வாடா விளையாடலாம்பீல்ல பாத்துக்கறேன்”என்று ஜம்பம் காட்டுவான்..”அட போடா …நீ தான் பெரிய இவனா…நான் இவனோடயே போயிக்கறேன் “னு என்னை காய் காண்பிப்பான் .
மத்தவர்கள் மத்திமர்கள் …பேசிக் கிடைக்காமல் போனால் வம்புன்னு முழிச்சிகிட்டு நிப்பாங்க..என்னக்கு சில்லுன்னு இருக்கும்.பெரிய மனுஷத் தோரணை வந்துடும். “ஏண்டா மகாபாரதம் கணக்கா மல்லு கட்டறீங்க …
“இருக்கிறத ஆறா பிரிப்போம்..சிவப்புப் பழத்தை உறிச்சி ஆளுக்கு கொஞ்சம் பிரிச்சி சாப்பிடுவோம் “ஒரு மாதிரி சபை ஏத்துக்கும் .இப்படியாக நாட்கள் அப்போது மலர்ந்தும் மலராம போயிகிட்டே இருக்கும்.
ஜனவரி மாசம் ஆரம்பிச்சி ஏப்ரல் வரைக்கும் இந்த கூத்து தான்.விடிஞ்சா ஓடிப் போய் கொடுக்காப்புளி மரத்துல நிப்போம்.மரமேர்றது கஷ்டம் .ஏன்னா முள்ளு முள்ளா மரம் இருக்கும்.சரியான உசரம்.அதனால தொரட்டி செஞ்சி பழத்தை பறிப்போம் ..தொரட்டிக்கு என்ன பண்ணுவேன்னா ..அப்பா நெசவு நெய்ய சிக்கு நீக்க சின்ன அழகான கழிங்க பயன்படுத்துவாரு.அதுல கனமா இருக்கிறத கீழ வச்சி மெல்லிசா இருக்கிறதை மேல கட்டி உசரமாகி,அதன் நுனிவட்டத்துல கொக்கி மாதிரி பழத்த பிடிச்சு இழுக்கிறமாதிரி சின்ன குச்சியை கட்டிக்குவோம்.அதனால் பதமா பாத்து பழம் இருக்கிற சந்துக நுழைச்சி ஒரு இழுப்பு இழுப்பேன்.அப்புறமென்ன சடார்ன்னு கொடுக்காப்புளி கீழ விழும்.
சில சமயம் கட்டின குச்சி கிளையில மாட்டிகிட்டு பெப்பே காமிக்கும் நமக்கு.அதை அப்புறம் தொரட்டிய விட்டு தட்டி கீழ விழா வைப்பேன்.எல்லாம் மூச்ச பிடிச்சிக்கிட்டு ஆசயாப் பண்ற வேலை..சுருள்சுருளா பழத்தை மெதுவா மேல இருக்கிற தோலை எடுத்தா உள்ள பழம்.அதுக்குள்ள கருப்புக்கொட்டை இருக்கும். அத எடுத்துப் போட்டுட்டு சாப்பிட்டா அவ்வளவு சுவாரசியமா இருக்கும்.
அந்த கொடுக்காப்புளி கூடிய வேஸ்ட் பண்ணமாட்டோம்.எடுத்து அத பத்திரமா சேத்து வைச்சு தாய கட்ட ஆடும்போது இந்த கொட்டைங்கள வைச்சி ஆடுவோம்.இதுக்கு எதிரா ஆடறவங்க புளியாங்கொட்டை,இல்லேன்னா சின்னக்கல்லுங்க வச்சி ஆடறது ..
என்ன விஷேஷம்னா கொடுக்காப்புளி மரத்துல அதிகமா அணிலுங்க ஆட்டம் போட்டுக்கிட்டு ஒரே கீச்கீச் சத்தம் போட்டு மரத்துக்கு மியூசிக் போட்டு பழத்த பறிச்சிடும் .பச்சைகிளிங்க எப்பவாச்சும் வந்து பழத்த கொத்தி சாப்பிட்டு பாத்துட்டு கீழ போட்டுடும்.பழத்த பறிக்கிறேன்னு சாக்குல சித்தாமூர்லயிருந்து தாடியை ஒரு அம்மா வந்து கிளையை ஒடிச்சி போட்டுருச்சி.எங்கப்பா காச்சுமூச்சுன்னு கத்திட்டாரு .’அவங்க தெரியாம நடந்திடுச்சி’ன்னு சொல்லிட்டாங்க
“போ கழுதைன்னு வுட்டுட்டு தறி நெய்யப் போயிட்டாரு ‘.அதான் சாக்குன்னு நாலஞ்சு கிளையை ஓடிச்சி இழுத்துகிட்டு போயிடுச்சி …’இது என்னடா குத்துன்னு அப்பா ,,இந்தம்மா கிளையை ஒடிச்சிட்டா”ன்னு கத்தினேன் .
“தெரியும் வீட்ல வந்து படிக்கிற வேலையாய் பாரு”ன்னார்.அப்பனுக்கு ஒரு கிள ஒடிஞ்சது தானே தெரியும்.போனது அஞ்சாறு…கடைசில ஏண்டா இப்படி பொய் சொல்லிட்டு போறாங்கன்னு பாத்தா அஞ்சாறு ஆட்டை வச்சு மேய்க்குது..அது இந்த கொடுக்காப்புளி இல்லை சாப்பிட பயன்படும் னுஎன்னக்கு தெரியாது ..காஞ்சு போன கிளைங்க .அடுப்புல சுடுதண்ணி போடா உதவும்.ஆனா அது சந்தடி சாக்குல கைய கிழிச்சிப்புடும் .
அந்த மரம் மாதிரி சென்னையில எங்காவது இருக்கான்னு தேடிப்பாப்பேன் அடிக்கடி …எங்க வெக்கைல வேது புடிக்கிற கதை தான்.எங்கண்ணுக்கு எங்கயும் தெம்படல..எங்க காலேஜ் வாத்தியார் வேலுச்சாமின்னு பேர் . அவர்கிட்ட கேட்டேன்.அவரு அத அப்படியே சொர்க்கபுரி வாசல் மாதிரி வந்து வகுப்பெடுத்துட்டார்.”இப்ப தான் தம்பி திங்க பலகாரம் பலது இருக்கு.கிராமத்துல இது பெரிய திம்பண்டம் ..பனம்பழம் ,எலந்தப்பழம் ,நாவப்பழம்,புளியம்பழம்,கொடுக்காப்புளி இதெல்லாம் அப்ப ருசிப்பண்டங்கள் .நாம வேலிக்கும் காய்ச்சலுக்கும் வேளையாட்டா வச்சோம்.நிஜமா இப்ப அது பணம் காய்க்குற மரம்’ன்னார்.”என்ன சார் சொல்லறீங்க?””ஆமாம்.தம்பி..ஒரு கிலோ கொடுக்காப்புளி நானூறு ,ஐநூறு ரூபாய் விக்கித்து.ஒரு ஏக்கர்ல 50 செடி வச்சா இரண்டு வருஷம் கழிச்சி ஒரு மரம் நூறுலருந்து நூத்தம்பது கிலோ காய்க்கும்.அடுத்த வருஷம் அதைவிட ஜாஸ்தி .கனக்குப் போட்டு பாத்தா ஒன்னுல இருந்து ஒண்ணரை லட்ச ருபாய் சம்பாதிக்கும்.கரம்பா போடாம இத நடலாம்.தண்ணி வேணாம்.பெயரை மழைல தப்பிச்சி பொழைச்சிக்கும்ன்னார் .
இது கேக்கவே ஆச்சரியமா போச்சு எனக்கு .சரின்னு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட கேட்டேன் ..பழையாளுங்க சில பேர் “ஆமா அப்பு அத நான் சாப்பிட்டிருக்கேன் .அதும் பேரு கொடுக்காப்புளி இல்ல கொறிக்கலிக்கா அப்படின்னு சொன்னாங்க .அப்பால புரிஞ்சுது .கோணப்புளியங்கா,கோணக்காய் ,சீனிப்புளியங்காய் அப்படிங்கிற பெரு பரவலா வெவ்வேற மாறி சொல்றாங்க.எல்லாம் ஒண்ணுதான் .
கொடுக்காப்புளி சாப்பிட வாதநோய் வராது .ஜீரண சக்திக்கு நல்லது.வயித்துப் போக்கு யாருக்காச்சும் இருந்தா கொடுக்காபுளிய சாப்பிடலாம்.குண்டா இருக்குறவுங்க சாப்பிட ஒல்லியாயிடுவாங்கன்னும் சொல்லுறாங்க.கர்ப்பப்பை ஸ்ட்ராங் ஆகுமாம்.புண்ணுங்கல்லாம் கூட சீக்கிரம் ஆற இது நல்லதாம்.அப்படி நல்ல மரத்தை ஏன் இஞ்சியும் காணோம்ன்னு தெரியல..கிராமத்துலயும் குறைஞ்சிபோச்சு..எங்க வீட்ல அது ஒரு புயலுக்கு விழுந்து,,அத்தோட எங்கப்பா கொடுக்காபுளிக்கு கும்பிடு போட்டுட்டாரு.தெருவுல நெசவு நீட்டி சரி செய்யும்போது மறதிலேயிருந்து முழுங்க,காயுங்க விழுந்து இழைங்க அப்பப்போ அருந்துடும்.அது தொல்லைதானா விழுந்ததும் அதோட போவட்டும்னு விட்டுட்டாரு..அது நான் ஒம்பதாவது படிக்கும்போது நடந்தது.அதுக்கப்புறம் கொஞ்சம் வளர்ந்துட்டோம்ல சின்ன பசங்ககிட்ட மிரட்டி வாங்கி சாப்பிட ஆரம்பிச்சோம்.
எப்பவாவது திருப்பி பொண்ணுங்க கேட்டா அப்பா புதுசா கிளம்பி கொடுக்காப்புளி பறிச்சி பெருமையை தேடிப்போம் .இப்படிப்பட்ட துவர்ப்புல ஆரம்பிச்சி இனிப்பான கொடுக்காப்புளி நம்ம மூதாதையர்கள் எப்படி விட்டிருப்பாங்கன்னு தோண்டித் துருவிப் பாத்தா “உகா மரம்”அப்படின்னு இத சொல்லி வளைத்திருக்காங்க.அத எம்பேத்திகிட்ட சொல்ல.வழக்கமா கூகுள்ல போய் பத்து சொன்னா …”இது பூக்கும் தாவரம்.”fabaceae “குடும்பம் வகையை சார்ந்தது .இது p .dulea இனம் .என்ன வேணும்னாலும் இருந்துட்டு போவட்டும் .அணிலுங்க போடறகொண்டாட்ட சத்தத்தோட அது கடிச்சி போட்ட பழ ருசின்னா அது கொடுக்காப்புளி மட்டும்தான்!
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
- தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
- கொய்யாமரம் : ராசி அழகப்பன்
- அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
- கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
- தென்னை மரம் : ராசி அழகப்பன்
- முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
- அரச மரம் :ராசி அழகப்பன்
- வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
- பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
- “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
- கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
- புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
- பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
- வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
- முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்