நாம் வாழும் காலம் – 9
‘நீங்கள் குறுக்கெழுத்துப் புதிரோ சுடோகுவோ விளையாடுவதில் ஆர்வமுள்ளவரா? இதைப் படியுங்கள். நீங்கள் மூளைக்கு வேலை கொடுப்பவர் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும் உங்கள் இடுப்பின் சுற்றளவு அதிகரிக்க இந்த ஆர்வம் முக்கியமான காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.’ இதை நான் சொல்லவில்லை. இப்படியொரு செய்தி டெய்லி மெயில் என்ற பிரிட்டிஷ் நாளிதழில் சென்ற வாரம் வெளியானது.
குறுக்கெழுத்துப் புதிரும் உடற்பயிற்சியும்
‘சைக்காலஜி அண்ட் ஹெல்த்’ – உளவியலும் உடல்நலமும் என்ற அறிவியல் இதழ் நடத்திய ஓர் ஆய்வின் முடிவு இது. புதிர் விளையாட்டில் அதிகம் ஈடுபடுபவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது எளிதில் களைப்படைந்து விடுகிறார்கள். ஆனால் புதிர்களைப் போடும் பழக்கமில்லாதவர்களால் நீண்டநேரம் உடற்பயிற்சி செய்யமுடிகிறதாம். புதிர்களுக்கான விடையைக் கண்டுபிடிப்பதற்கான மனத்திண்மையை மூளை உடலின் ஆற்றலில் இருந்து பெறுகிறது. இதே மனத்திண்மைதான் சோர்ந்துகிடக்கும் உடலை வலுக்கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய இழுத்துக்கொண்டு போகவும் தேவையாக இருக்கிறது. அலுவலகத்தில் வேலை கடுமையாக இருக்கும் நாட்களில் வீட்டில் எந்த வேலையும் செய்யப்பிடிக்காது. இதற்குக் காரணம் மூளையைப் பயன்படுத்திச் செய்யும் வேலைகளும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திச் செய்யும் பணிகளும் உடற்பயிற்சி செய்யத் தேவையான சுயக்கட்டுப்பாட்டையும் மனத்திண்மையையும் தன்னைத்தானே நெறிப்படுத்திக்கொள்ளும் ஆற்றலையும் வெகுவாகக் குறைத்துவிடுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மனத்திண்மை ஒரு தசையைப் போன்றது, அதை உறுதிப்படுத்துவதற்குச் சீரான தொடர்ச்சியான பயிற்சி தேவை. காஃபியோ சாக்லெட்டோ சாப்பிடவேண்டும்போலத் தோன்றும்போது சாப்பிடாமல் கட்டுப்பாட்டோடு இருப்பது, அறவே பிடிக்காத வேலையொன்றைச் செய்துமுடிப்பது இவையெல்லாம் மனத்திண்மை சார்ந்த செயல்கள். இவற்றை மீண்டும் மீண்டும் செயல்படுத்துவது மனத்திண்மைத் தசையை வலுப்படுத்துகிறது. சோம்பேறி மூட்டைகள் இந்த ஆய்வின் முடிவைச் சாதகமாக எடுத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்யாமல் தப்பிக்க முயலவேண்டாம். இசையில் இலயிப்பது, மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது போன்றவற்றை மனத்திண்மைத் தசையை வலுபடுத்த புதிர் விளையாடுபவர்கள் மேற்கொள்ளலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
செய்தியைப் படித்ததும் ‘என்னைப் பார்த்து ஏன் இதைச் சொன்னே’ என்பதோடு தொலைக்காட்சித் தொடர்களிலும் சமூக ஊடகங்களிலும் மூழ்கிக்கிடப்பவர்களின் மனத்திண்மைத் தசையின் வலிமையையும் உடல் ஆற்றலையும் ஆராய்ச்சிக்கு ஏன் எடுத்துக்கொள்ளவில்லை என்ற கேள்வியும் தோன்றியது. கூடவே மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்கள் என்ற சொற்றொடரை அடிக்கோடிட்டுக் கொள்ளவேண்டும் என்ற விளக்கு ஒளிர்ந்தது.
மூளையைக் கசக்கிப் பிழியவைக்கும் குறுக்கெழுத்துப் புதிர் உலகமுழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை இரசிகர்களைக் கொண்டிருக்கிறது. குறுக்கெழுத்துப் புதிர்களைப் போடுவதும் வார்த்தை விளையாட்டுக்களில் ஈடுபடுவதும் அல்சீமர்ஸ், மறதிநோய் போன்ற முதுமையில் ஏற்படும் மூளைச் செயற்பாட்டுக் குறைபாட்டை ஒத்திப்போட உதவுகிறது என்கிறது மற்றொரு ஆய்வு. தினமும் செய்யாவிட்டாலும் வாரத்துக்கு ஒருமுறையாவது குறுக்கெழுத்துப் புதிரைப் போடுவது நினைவாற்றலை உறுதிப்படுத்துவதோடு மூளை சுறுசுறுப்பாகச் செயல்பட வைப்பதில் பெரும்பங்கு ஆற்றுகிறது. அதுவும் ஒரு குழுவில் இணைந்து எல்லோரும் ஒன்றாகப் புதிரை விடுவிக்க முயலும்போது பலன் அதிகமாகிறது.
குறுக்கெழுத்துப் புதிரின் வரலாறு
குறுக்கெழுத்துப் புதிர் 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சதுர வடிவமான கட்டத்தில் மேலும் கீழுமாகவும் இடமிருந்து வலமாகவும் எப்படிப் படித்தாலும் ஒன்று போலவே இருக்கும் சொற்கள் இந்தக் கட்டங்களில் அமைக்கப்பட்டன. இவை பெரும்பாலும் குழந்தைகளுக்கான புதிர் மற்றும் கேளிக்கை புத்தகங்களில் வெளிவந்தன. நாமும் தமிழில் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’, ‘கரடி ரயில் டில்லி’, ‘கோமதி மகன் தின்னி’ போன்ற புதிர்களைப் பார்த்திருக்கிறோம் அல்லவா.
1913-ஆம் ஆண்டில் ‘நியூ யார்க் வேர்ல்ட்’ நாளிதழில் ஆர்தர் வின் என்பவர் உருவாக்கிய குறுக்கெழுத்துப் புதிர் வெளியானது. நாளிதழில் வெளியான முதல் குறுக்கெழுத்துப் புதிர் இதுதான் என்று சொல்லப்படுகிறது. ஞாயிறு பதிப்பின் கேளிக்கை இணைப்பிதழுக்காக ஆர்தர் வின் உருவாக்கிய குறுக்கெழுத்துப் புதிரின் கட்டம் வைர வடிவத்தில் இருந்தது. அதற்கு ‘வேர்ட்-க்ராஸ்’ என்று பெயரிட்டு இருந்தார். பின்னொரு நாளில் நாளிதழின் வடிவமைப்பாளர் தவறுதலாக ‘க்ராஸ்-வேர்ட்’ என்று எழுதிவிட்டார். அதிலிருந்து அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
அடுத்த பத்து வருடங்களில் எல்லா முன்னணி அமெரிக்க நாளிதழ்களும் குறுக்கெழுத்துப் புதிர்களை வெளியிடத் தொடங்கின. இதைத் தொடர்ந்து பிரிட்டனில் பிறந்த ஆர்தர் வின் உருவாக்கி அமெரிக்காவில் பிரபலமான குறுக்கெழுத்துப் புதிர்களின்மீது பிரிட்டிஷ் நாளிதழ்களுக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. இலண்டனின் ‘சண்டே டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட புதிர்கள் மிகவும் பிரபலமானவை.
இன்றும்கூட ‘நியூ யார்க் டைம்ஸ்’ இதழுக்கு யார்வேண்டுமானாலும் குறுக்கெழுத்துப் புதிர்களை அனுப்பிவைக்கலாம். வாரநாட்களில் வெளியாகும் புதிர்களுக்கு 300 முதல் 450 அமெரிக்க டாலர்கள் வரையிலும் கொடுக்கிறார்கள். ஞாயிறன்று வெளியாகும் தனித்தன்மைவாய்ந்த புதிர்களுக்கு 1200 அமெரிக்க டாலர்கள் சன்மானமாகக் கிடைக்கும். தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிர்களை அனுப்பிவைப்பவர்களுக்குக் கூடுதல் சன்மானம் கிடைக்கும். இந்தச் சன்மானம் 2021 முதல் இன்னும் அதிகரிக்கும் என்ற அறிவிப்பையும் பார்த்தேன். ஆஹா, குறுக்கெழுத்துப் புதிர்களை உருவாக்கத் தொடங்கினால் காலை ஆட்டிக்கொண்டே வாழ்நாளைக் கழித்துவிடலாம் போல இருக்கிறதே.
முதல் குறுக்கெழுத்துப் பதிப்பாசிரியர்
உலகின் முதல் குறுக்கெழுத்துப் பதிப்பாசிரியர் ஒரு பெண் – பெயர் மார்கெரெட் பெதெர்பிரிட்ஜ் ஃபரார். ‘நியூ யார்க் டைம்ஸ்’ இதழில் 26 ஆண்டுகள் பணியாற்றிய அமெரிக்க இதழாளர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான குறுக்கெழுத்துப் புதிர் விதிமுறைகளை உருவாக்கியவர் இவர்தான். முதல் குறுக்கெழுத்துப் புதிர் புத்தகத்தை எழுதி வெளியிட்டதோடு தொடர்ச்சியாகப் பல புதிர்ப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
முதலில் ஆர்தர் வின்னுக்கு உதவியாளராக ‘நியூ யார்க் வேர்லடில்’ பணியில் சேர்ந்த மார்கெரெட், வாசகர்களிடம் இருந்து வந்த புதிர்களைப் போட்டுப் பார்க்காமல் அப்படியே வெளியிட்டார். உடன்பணியாற்றிய எழுத்தாளர் இதைச் சுட்டிக்காட்டியதும் தானே புதிர்களைப் போட்டுப் பார்த்துத் தவறாக இருந்தால் திருத்தம் செய்து வெளியிட்டார். விரைவிலேயே மார்கெரெட்டின் புதிர்கள் ஆர்தரின் புதிர்களைவிடவும் சிறப்பானவையாக இருந்ததோடு மக்களின் வரவேற்பையும் பெற்றது. 1984-ஆம் ஆண்டில் தன்னுடைய 87-வது வயதில் மறைந்தபோது தன்னுடைய 134-வது குறுக்கெழுத்துப் புதிர்ப் புத்தகத்தைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மார்கெரெட் ஃபர்ரார் ஒரு ‘குறுக்கெழுத்துப் புதிர் மேதை’ என்று போற்றப்படுகிறார்.
குறுக்கெழுத்துகள் பலவிதம்
சில வருடங்களுக்கு முன்னால் வரை, நாளிதழைக் கையில் எடுத்ததும் இணைப்புப் பக்கத்துக்குத் தாவுவேன். கார்ட்டூன்களை மேய்ந்துவிட்டு மெல்லச் சிரித்தபடியே குறுக்கெழுத்துப் புதிருக்கான விடையை மனதிலேயே போட்டுப் பார்ப்பேன். அதற்குப் பிறகுதான் தலைப்புச் செய்தி, தலையங்கம் படிப்பது எல்லாம். மதிய இடைவேளையின்போது குறுக்கெழுத்தைப் போட்டுமுடிக்கும் முயற்சி தொடங்கும். இணையம் வருவதற்கு முன்னால் விடையைத் தெரிந்துகொள்ள மறுநாள் நாளிதழ் வரும்வரை காத்திருக்கவேண்டும். இப்போது விடை தெரியாவிட்டால் இணையத்தில் தேடினால் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. கூடவே, எப்படி விடை கண்டுபிடிப்பது என்பதைக் கற்றுத்தர அகராதிகளும் வலைப்பக்கங்களும் காணொளிகளும் இணையமுழுவதும் இறைந்து கிடக்கிறது. அதேபோல, கூகுள் ப்ளேஸ்டோரில் பலவிதமான குறுக்கெழுத்துப் புதிர்ச் செயலிகள் கிடைக்கின்றன. அவற்றைத் தரவிறக்கம் செய்துகொண்டால் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் விளையாடலாம். ஆனால் நாளிதழில் பென்சில் அல்லது பேனாவைக் கொண்டு கட்டங்களில் எழுதும்போது கிடைக்கும் நிறைவு கிடைப்பதில்லை.
மேலைநாடுகளில் குறுக்கெழுத்துப் புதிர்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றவை. ஒவ்வொரு நாளிதழிலும் வெளிவரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் வடிவமைப்பிலும் புதிரின் தன்மையிலும் தனித்தன்மைகொண்டவையாக இருக்கும். சில குறிப்புகளைத் திரும்பவும் வேறு ஒரு புதிரில் சேர்த்திருப்பார்கள். தொடர்ச்சியாகக் குறுக்கெழுத்துப் போடுபவர்களுக்கு இந்த விடையைக் கண்டுபிடிப்பது எளிது. சில குறிப்புகளில் வாக்கியத்துக்குள்ளேயே விடையும் ஒளிந்திருக்கும். சில குறிப்புகள் விடுகதை வடிவத்தில் இருக்கும். சில புதிர்களில் ஒரு சொல்லின் எழுத்துக்களை இடம்மாற்றிப் போட்டால் புதிய சொல் கிடைக்கும். சில புதிர்கள் குறிப்பிட்ட தலைப்பையோ கருப்பொருளையோ மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். சில புதிர்களில் ஒன்றுபோன்ற தொடக்க அல்லது ஈற்றெழுத்துக்களைக் கொண்ட சொற்கள் விடையாக இருக்கும். ஒரு சொல்லின் ஈற்றெழுத்துக்கள் தொடர்ந்து வரும் சொல்லின் தொடக்க எழுத்துக்களாக அமையும். இப்படி பல விதமான சொல் விளையாட்டுகளும் புதிர்ப்போட்டிகளும் மனதைக் கட்டிப்போட்டுவிடும்.
குறுக்கெழுத்தைப்போலவே வார்த்தை விளையாட்டுக்களும் மிகவும் சுவாரசியமானவை. ஆங்கிலத்தில் கூட்டெழுத்துக்களே கிடையாது. ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியானது. எனவே ஒரு சொல்லைப் பிரித்தும் கலைத்தும் இடம்மாற்றியும் முற்றிலும் புதிய சொற்களை அமைக்கும் புதிர்களை உருவாக்குவது கொஞ்சம் எளிது. இதை அனகிராம் என்கிறார்கள். இந்திய மொழிகளில் கூட்டெழுத்துக்களும் ஒற்றெழுத்துக்களும் இருப்பதால் குறுக்கெழுத்துப் புதிர்களை அமைப்பது கொஞ்சம் கடினம். ஆனாலும் தமிழில் பயன்படுத்தும் இடத்துக்கேற்ப சொற்களின் பொருள் மாறுவது சுவாரசியமான விஷயம். தமிழில் சிலேடையும் விடுகதையும் மொழியின் நெகிழ் தன்மைக்குச் சான்று, மாலைமாற்றுப் பதிகமும் அந்தாதிச் செய்யுளும் தமிழின் வளத்துக்குச் சான்று.
‘எனிக்மா‘ என்ற குறியீட்டு மொழி இயந்திரம்
‘தி இமிடேஷன் கேம்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் இரண்டாம் உலகப் போரில் அலைட் நாடுகளில் ஒன்றான பிரிட்டனைச் சேர்ந்த அலன் டுரின் என்ற கணிதவியல் வல்லுனரைப் பற்றியது. நாஜிக்கள் ‘எனிக்மா’ என்ற மின்னியந்திரக் கருவியைப் பயன்படுத்தி குறியீட்டுச் சொற்களாக அனுப்பும் தகவல்களில் பொதிந்திருக்கும் போர் குறித்த உண்மையான தகவலைக் கண்டுபிடித்து பிரிட்டிஷ் இராணுவத்துக்குத் தெரிவிக்க இவருடைய உதவியை நாடினார்கள். அலன் டுரின் நாஜி கப்பற்படையின் குறியீட்டு மொழியை புரிந்துகொள்வதற்கான இன்னொரு மின்னியந்திரத்தை வடிவமைத்தார்.
‘எனிக்மா’ என்றால் புதிர் என்று பொருள். குறியீட்டு மொழியை உருவாக்க உதவும் இந்தக் கருவியை ஆர்தர் ஷேர்பியாஸ் என்ற ஜெர்மானியர் முதலாம் உலகப் போர் முடிந்த சமயத்தில் உருவாக்கினார். 1923-ஆம் ஆண்டுவாக்கில் அவரே தன் நிறுவனத்தின் மூலம் அதை விற்கவும் செய்தார். அந்தச் சமயத்திலேயே பல நாடுகளின் அரசாங்கங்களும் இராணுவங்களும் இந்தக் கருவியை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கின. நாளடைவில் எனிக்மாவின் வெவ்வேறு வடிவங்கள் உருவாகிப் பயன்பாட்டுக்கு வந்தன. அவற்றுள் நாஜிக்கள் பயன்படுத்திய வடிவம் சிக்கலான குறியீட்டு மொழியை உருவாக்கும் திறன் பெற்றிருந்தது.
ஆங்கில அகரவரிசையில் இருக்கும் 26 எழுத்துக்களையும் சுழலி பொறிநுட்பத்தின் உதவியால் எனிக்மா கலைத்துப்போடும். அதன் விசைப் பலகையில் ஓர் எழுத்தைத் தட்டினால் மேலே இருக்கும் பகுதியில் அதற்கு இணையான இன்னொரு எழுத்தின் அருகில் இருக்கும் விளக்கு ஒளிரும். விளக்கு ஒளிரும் எழுத்துக்களை ஒன்று திரட்டினால் தகவல் முழுவதும் குறியீட்டு மொழியில் மாறியிருக்கும். சுழலி பொறிநுட்பம் ஒவ்வொரு நாளும் விசைக்கும் விளக்குக்கும் இடையே இருக்கும் மின்தொடர்பை மாற்றியமைத்துக்கொண்டே இருக்கும். இப்படி அனுப்பப்படும் குறியீட்டுச் செய்திகளை எப்படிப் படிக்கவேண்டும் என்பதற்கான விடைக் குறிப்புப் பட்டியல் முன்கூட்டியே அனுப்பப்பட்டிருக்கும். தகவலைப் பெறும் குழுக்கள் இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் மட்டுமே தகவலைப் புரிந்துகொள்ளமுடியும். நாஜிக்கள் எனிக்மாவில் பல முன்னேற்றங்களைச் செய்திருந்தாலும் குறியீட்டு மொழியைப் புரிந்துகொள்ளும் உத்தியை அலைட் படையினர் கண்டுபிடித்ததால் போரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதோடு விரைவில் முடிவுக்கு வந்தது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சொல்லவந்தது என்னவென்றால் தன்னுடன் பணியாற்றும் குழுவினரைத் தேர்ந்தெடுக்க வித்தியாசமான தேர்வுமுறையை அலன் டுரின் கையாள்வதாகத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டது. நாளிதழ்களில் மிகவும் சிக்கலான குறுக்கெழுத்துப் புதிரொன்றை வெளியிட்டார் டுரின். அதற்கான விடையைக் கண்டுபிடிப்பவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வின் அடுத்த கட்டத்துக்குப் போகமுடியும். ஹாலிவுட் திரைப்படங்களில் ஒருவரைப் புத்திக்கூர்மையுள்ளவராகக் காட்டவேண்டுமென்றால் குறுக்கெழுத்துப் போடுவதில் ஆர்வமுள்ளவராகச் சித்தரிப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழ்த் திரைப்படங்களில் இதுபோன்று எந்தக் குறியீடும் பயன்படுத்தப்பட்டதை இதுவரை நான் பார்த்ததில்லை. நீங்கள்?
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
- நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
- வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
- மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
- குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
- ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
- நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
- நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி
- நாம் வாழும் காலம் - 15 : வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
- கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி
- வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
- பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி
- மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
- நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
- மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி
- உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி
- வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
- வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
- மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி
- பழங்களின் அரசனின் பயணக் கதைகள் : கார்குழலி
- வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி
- நாம் வாழும் காலம் : கார்குழலி