நாம் வாழும் காலம் – 22

நம் நாட்டில் விளையாட்டு என்றாலே கிரிக்கெட்தான். இந்தியாவில் கிரிக்கெட் விளையாடாத குழந்தைப் பருவத்தை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. நானும் விளையாடி இருக்கிறேன். கிரிக்கெட் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்ட விளையாட்டு என்றாலும் இங்கிலாந்தில் பிரபலமாகவும் பரவலாகவும் இருக்கும் விளையாட்டு எது தெரியுமா? கால்பந்து. இங்கிலாந்தில் உழைக்கும் மக்களின் பொழுதுபோக்காக புதிய பரிணாமத்தை அடைந்தது. இங்கிலாந்து மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கடைக்கோடி மக்கள் வரையிலும் விளையாடுவது இதைத்தான்.

மத்திய, தென்னமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கால்பந்தாட்டம்  மக்களின் உயிர்மூச்சாக இருக்கிறது. பீலே, மாரடோனா, ரொனால்டினோ போன்ற பல முன்னணி தென்னமெரிக்க வீரர்கள் எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். கால்பந்தின் நீண்ட நெடிய வரலாறு சமூக பொருளாதார வர்க்க இனத் தாக்கங்களை உள்ளடக்கியது, சுவாரசியமானது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி

இணையத்தில் வெளிவரும் பன்னாட்டு விளையாட்டுச் செய்திகளில் அதிகம் இடம்பெறுவது கால்பந்துதான். 2022-ஆம் வருடம் ஜூன் மாதம் கத்தார் நாட்டில் நடந்த உலகக்கோப்பைக்கான கால்பந்து போட்டியை ஒட்டிப் பல சுவாரசியமான செய்திகள் வெளிவந்தன.

உலகக் கோப்பை போட்டியில் பெருவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த அரை இறுதிப் போட்டியில் பெரு நாட்டுக் குழு வெற்றி பெறுவதற்காக ஷமன் எனப்படும் மாந்திரீகர்கள் பதிமூன்று பேர் ஒன்றுகூடி தலைநகர் லிமாவின் மலைப்பகுதியில் சிறப்பு வழிபாடொன்றைச் செய்தார்களாம். வழிபாட்டில் பெரு நாட்டு விளையாட்டு வீரர்களின் புகைப்படத்தை வைத்து கிலுகிலுப்பைகளை ஒலித்து மலர்களைத் தூவி தூபம் போட்டார்கள். ஆஸ்திரேலியா வீரர்களின் புகைப்படத்தை குறுவாள்களால் குத்தினார்கள். வெற்றி பெருவுக்குத்தான் என்று முழங்கினார்கள். இத்தனை களேபரத்தையும் தாண்டி அரை இறுதிப் போட்டிக்குத் தேர்வானது என்னவோ ஆஸ்திரேலியாதான். ஓரிரு வாரத்துக்கு முன்னர் இந்திய கால்பந்து குழு நியமித்த ஜோசியர் பற்றிய இணையச் செய்தி நினைவுக்கு வந்தது. முறையான பயிற்சி, ஊழலற்ற தேர்வு முறையைத் தவிர வேறு எல்லாவற்றையும் செய்யத் தயாராக இருக்கும் கூட்டம் எல்லா ஊரிலும் இருக்கிறது போலும்.

கால்பந்தின் வரலாறு

கிறிஸ்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆண் பெண் என இருபாலரும் காலால் பந்தை உதைத்து விளையாடினார்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகள் காட்டுகின்றன.

பண்டைய தென்னமெரிக்கா, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா பகுதிகளில் கால்பந்தாட்டம் பரவலாக விளையாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் அங்கு வசித்த பழங்குடியினர் உலமா என்ற இரப்பர் பந்தை காலால் உதைக்கும் விளையாட்டை விளையாடினர். இரப்பர் மரங்கள் அடர்ந்து வளர்ந்த பகுதிகள் இந்த விளையாட்டின் பிறப்பிடமாக இருக்கலாம்.

பெண்களுக்கு இடையேயான கால்பந்தாட்டப் போட்டிகளும் பழங்காலத்தில் நடந்திருக்கின்றன. சீனாவில் இருக்கும் ஒரு சுவரோவியத்தில் இரண்டு பெண்கள் காலால் பந்தை உதைக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இது முதலாம் முதல் மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியமாகக் கருதப்படுகிறது.

மத்திய அமெரிக்காவின் இரப்பர் மக்கள்

ஒல்மெக் என்பது மத்திய அமெரிக்காவின் பழங்குடி இனத்தின் பெயர். இதன் பொருள் ‘இரப்பர் மக்கள்’ என்பதாகும். இறந்தவர்களைப் புதைக்கும் போது இரப்பர் பந்துகளைப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது அகழ்வாராய்ச்சிகளில் நிரூபணமானது. பந்துகளோடு கல் வளையங்களும் இருந்ததால் இவை சடங்குகளோடு தொடர்புடைய பொருட்கள் என்பது உறுதிப்பட்டது. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரப்பர் பந்துகள் கி.மு.1600-ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்றும் கால்பந்தாட்டத்தைக் காட்சிப்படுத்தும் உருவச் சிலைகள் கி.மு. 1200-ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்பதும் கரிமச் சோதனைகளின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்கங்களையும் கண்டுபிடித்தனர் ஆராய்ச்சியாளர்கள். மதத்தோடும் வழிபாட்டோடும் தொடர்புடைய விளையாட்டாக இருந்ததால் இந்த நிலப்பகுதியை ஆக்கிரமித்த ஸ்பானிய கத்தோலிக்க ஆட்சியாளர்கள் இதைத் தடை செய்தனர். ஆனால் ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத செனாலோஆ பகுதியில் மக்கள் தொடர்ந்து விளையாடினர்.

கால்பந்தின் பிறப்பிடம் எது

இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னர் இருந்தே சீனாவில் கால்பந்து விளையாடப்பட்டது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். காலால் பந்தை உதைக்கும் ‘கிக்பால்’ என்ற விளையாட்டு கி.பி. 960 முதல் 1279 வரையில் பிரபலமாக இருந்தது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதத்தில் விளையாடினார்கள். பந்து தரையைத் தொடாமல் காற்றில் பறந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது அவற்றில் ஒரு விதம். சீனாவின் ஹெனான் மாகாணத்தின் தலைநகரான கீபெங் பற்றி 1120-ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகமொன்றில் இந்த விளையாட்டைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. கிக்பால் குழுக்கள், அவற்றின் தலைவர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் குறித்த தகவல்களும் இருக்கின்றன. பெரும்பாலும் வசதியான குடும்பத்து இளைஞர்கள் பங்குகொள்ளும் விளையாட்டாக இருந்தது. அதே நேரம் தொழில்முறை விளையாட்டு வீரர்களும் இருந்தனர். இவர்கள் வெவ்வேறு குழுக்களுடன் விளையாடினார்கள். போட்டியில் பங்குபெறும் இரண்டு குழுக்களின் விளையாட்டு வீரர்களும் வெவ்வேறு வண்ணத்தில் உடை அணிந்தனர். குழு தலைவர் அணியும் தொப்பியில் இறக்கைகள் போன்ற வடிவம் பொருத்தப்பட்டிருக்கும். விளையாட்டு வீரர்கள் பந்தை துணைத் தலைவரை நோக்கி உதைப்பார்கள், அவர் தலைவரிடம் தள்ளுவார், தலைவர்  ‘கோல்’ போடுவார். வெற்றி பெற்ற குழுவுக்குப் பரிசாக வெற்றிக் கொடிகளும் மதுவும் பேரிகை முழக்கத்தோடு வழங்கினார்கள். சோங் பரம்பரையின் ஆட்சியில் பேரரசர்களும் கிக்பால் விளையாடினார்கள். வெளிநாட்டு தூதுவர்களை வரவேற்க அளிக்கப்பட்ட விருந்துகளில் கேளிக்கை நிகழ்ச்சியாகவும் இடம்பெற்றது. பேரரசர் டைஸூ கிக்பால் விளையாடும் ஓவியத்தில் அவருடன் இருப்பது நாட்டின் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களாக இருக்கலாமோ?.

நவீன கால்பந்தின் வரலாறு

நவீன கால்பந்து 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் விளையாடிய கால்பந்தின் மேம்படுத்தப்பட்ட நேர்த்தியான வடிவமாக இருந்தது, விதிமுறைகளும் மாற்றி அமைக்கப்பட்டன. தொடக்கத்தில் ஒவ்வொரு விளையாட்டுக் குழுவும் வேறு வேறு விதிமுறைகளைப் பின்பற்றின. 1843-ஆம் ஆண்டில் விதிமுறைகளை நெறிப்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடங்கியதால் கேம்ப்ரிட்ஜ் விதிகள் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இந்த விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. 1877-ஆம் ஆண்டு முதல் எல்லோரும் ஒரே விதிமுறையைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.

விக்டோரியா காலத்தின் தொழில்மயமாக்கல் , நகரமயமாக்கல் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டது நவீன கால்பந்து. கிராமப்புறங்களில் மக்கள் மேற்கொண்ட பொழுதுபோக்குகளை நகரத்தில் தொடரமுடியவில்லை. எல்லோரும் ஒன்றாக பொழுதைக் கழிப்பதற்கு புதிய வழிகளைத் தேட ஆரம்பித்தார்கள். எல்லோரின் தேர்வாக அமைந்தது கால்பந்து. தேவாலய சபைகளும் தொழிலாளர் சங்கங்களும் பள்ளிகளும் கால்பந்து போட்டிகளை நடத்தத் தொடங்கின. நாளடைவில் கால்பந்து தொழிலாளர்களின் முதன்மையான விளையாட்டானது.

பெண்களும் கால்பந்தும்

எப்போதும் போலவே இந்த விளையாட்டில் ‘ பெண்களின் பங்கு ?’ என்ற கேள்வி எழுந்தது. 1790- களில் ஸ்காட்லாந்தில் பெண்கள் கால்பந்து போட்டி நடைபெற்றது என்றாலும் ஸ்காட்லாந்தில் 1892-ஆம் ஆண்டிலும் இங்கிலாந்தில் 1895-ஆம் ஆண்டிலும் நடைபெற்ற போட்டிகள் குறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளன. நவீனகாலத்தில் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1991-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுதவிர பல்வேறு லீக் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளும் நடைபெறுகின்றன. மூன்று நூற்றாண்டுகளாக பாலின பேதமின்றி விளையாடும் கால்பந்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் ஆண் நடுவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர் என்பது கவனிக்கப்படவேண்டியது.

பெண் கால்பந்து நடுவர்கள்

உலகமெங்கும் நடைபெறும் லீக் போட்டியில் இங்கிலீஷ் கால்பந்தாட்ட லீக் (EFL) போட்டி முதன்மையானது. மொத்தம் 24 குழுக்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 2021-ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரு பெண் ஆட்ட நடுவர் நியமிக்கப்பட்டார். இந்தச் சிறப்பைப் பெற்றவர் ரெபெக்கா வெல்ச். தேசிய சுகாதாரச் சேவையில் பணிபுரிகிறார். இங்கிலாந்தின் டர்ஹாம் கௌன்டியில் இருக்கும் வாஷிங்டன் என்ற ஊரைச் சேர்ந்தவர். சிறுவயது முதல் கால்பந்தில் விருப்பம் கொண்டவர். 2010-ஆம் ஆண்டு டர்ஹாம் கௌன்டி கால்பந்து சங்கத்தில் ஆட்ட நடுவருக்கான பயிற்சி எடுத்துக்கொண்டார். பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து போட்டிக்கு ஆட்ட நடுவராகப் பணியைத் தொடங்கினார். அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை லீக் போட்டிக்கு நடுவராக நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்து பெண்கள் சூப்பர் லீக், தேசிய லீக், இங்கிலாந்து லீக் என வெவ்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றினார்.

இவருக்கு முன்னர் ஆமி ஃபியர்ன் என்ற பெண் EFL போட்டியில் ஆட்ட நடுவராகப் பணியாற்றியிருக்கிறார் என்றாலும் ஆண் ஆட்ட நடுவர் அடிப்பட்டு ஓய்வெடுக்க வேண்டியிருந்ததால் அவருக்கு மாற்றாகவே களம் இறங்கினார். அந்த வகையில் ரெபெக்கா வெல்ச் நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆட்ட நடுவர் என்ற சிறப்புப் பெறுகிறார்.

2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கத்தார் நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதன்முறையாக பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டனர். முதன்மை நடுவர்கள் பட்டியலில் மூன்று பெண்களும் துணை நடுவர்கள் பட்டியலில் மூன்று பெண்களும் இடம்பெற்றனர். நடுவர்கள் தேர்வில் திறமைக்கு மட்டுமே இடமுண்டு, பாலினம் ஒரு பொருட்டல்ல. இனி வரும் காலத்தில் பெண் நடுவர்களும் அதிகாரிகளும் குழுவில் இடம்பெறுவது இயல்பான விஷயமாகும் என நம்புகிறேன் என்று பிஃபா (FIFA) நடுவர் குழு தலைவர் சொல்லி இருக்கிறார். ஆனாலும் ஒரு விஷயம் உறுத்தலாக இருந்தது. இந்தக் கட்டுரைக்கான தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் சேகரிக்க ‘பெண் கால்பந்து வீரர்கள், நடுவர்கள்’ என்று இணையத்தில் தேடினேன். பட்டியலில் முதலில் இருந்த கட்டுரைகளின் தலைப்பு ‘மிக அழகான பெண் கால்பந்து வீரர்கள் மற்றும் நடுவர்களின் பட்டியல்’ என்பதாகும். பிரிட்டானிகா போன்ற முதன்மை கலைக்களஞ்சியங்களிலும் பெண்கள் கால்பந்து வரலாறு குறித்த தெளிவான தகவல்களோ குறிப்புகளோ இல்லை என்றால் பாருங்களேன்.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
  2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
  3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
  4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
  5. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
  6. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
  7. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
  8. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
  9. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
  10. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
  11. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
  12. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
  13. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
  14. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
  15. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
  16. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
  17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
  18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
  19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
  20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
  21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
  22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
  23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
  24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
  25. நாம் வாழும் காலம் : கார்குழலி