தோற்றத்தைப் பேணவும் மூப்பை மறைக்கவும் நட்சத்திரங்களும் பிரபலங்களும் போடோக்ஸ் ஊசி போட்டுக்கொள்வது பழங்கதையாகிவிட்டது. ஒட்டகங்களுக்கு அழகூட்டுவதற்காக போடோக்ஸ் ஊசி போடுவது குறித்த செய்தியை இணையத்தில் படித்தபோது கொஞ்சம் துணுக்குற்றேன். விஷயம் இதுதான்.

ஒட்டக அழகுப் போட்டி 

2007-ஆம் ஆண்டு முதல் சௌதி அரேபியாவில் ஒட்டகங்களுக்கான அழகுப் போட்டி நடைபெற்று வருகிறது. மசாயேன்-அல்-இபில் என்றும் அரசர் அப்தல் அஸீஸ் திருவிழா என்றும் அழைக்கப்படும் இந்தத் திருவிழாவுக்கு சௌதி அரேபியாவின் அரசரும் முடி இளவரசரும் புரவலர்களாக இருக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் இருக்கும் ஒட்டக மந்தைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விலங்குகள் போட்டியில் பங்குகொள்ளும். அழகுப் போட்டியோடு ஓட்டப் பந்தயம், ஒட்டகப் பாலை ருசிப்பது போன்ற வேறு பல போட்டிகளும் நடைபெறும்.

அரேபியாவைச் சேர்ந்த பெடூயின் இனத்தவர்களின் வாழ்க்கையிலும் வரலாற்றிலும் ஒட்டகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரபார்ந்த ஒட்டக இனங்களைப் பாதுகாப்பதற்காக இந்தப் போட்டி தொடங்கப்பட்டது. மஜாஹீம் (கருப்பு நிறம்), மகதீர் (வெள்ளை நிறம்), ஷீல் (அடர் பழுப்பு), சல்ஃபர் (இளம்பழுப்பு) என நான்கு வகை ஒட்டகங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும். தலையின் அளவு, உதடுகளின் அமைப்பு, கழுத்தின் நீளம், திமிலின் வடிவம் என நான்கு பிரிவுகளில் பரிசு வழங்கப்படும். அவற்றின் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய கால்நடை மருத்துவர்களும் போட்டிக் குழுவில் இருப்பார்கள்.

ஒட்டக வளர்ப்பு பல மில்லியன் டாலர்கள் புழங்கும் வணிகம். அழகுப் போட்டியில் வெல்லும் ஒட்டகம் மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை விலை போகும். அது தவிர வெவ்வேறு போட்டிகளில் 66 மில்லியன் டாலர்கள் வரை பரிசாக வெல்லலாம். இதனால் ஒட்டகங்களை வளர்ப்பவர்கள் அவற்றுக்கு அழகூட்ட செயற்கையான வழிமுறைகளை பின்பற்றுவதை அதிகாரிகள் தெரிந்துகொண்டனர். ஒட்டகத்தின் உதடு மூக்கு தலை போன்ற உறுப்புகளை பெரிதாக வளரச் செய்ய ஹார்மோன் மற்றும் போடோக்ஸ் ஊசி செலுத்துவதையும் உடலை ஊதிப் பெருக்கச் செய்யவும் முகத்தசைகளை தளர்ச்சியாக்கவும் ரப்பர்பேண்டுகளை பயன்படுத்துவதையும் கண்டறிந்தனர். இப்படி செயற்கையாக அழகூட்டப்பட்ட 40 ஒட்டகங்களை இந்த ஆண்டு போட்டியில் இருந்து விலக்கிவைத்தனர். சங்க இலக்கியத்தில் ஒட்டகம் பற்றிய பாடல்களையும் அவற்றுக்கான விளக்கத்தையும் தன் தேடலையும் குறித்து திரு. பாலகிருஷ்ணின் ‘தமிழ் நெடுஞ்சாலை’ தொடரைப் படித்த அதே நாளில் தற்செயலாக ஒட்டக அழகுப் போட்டி பற்றியும் படிக்க நேர்ந்தது.

வட அமெரிக்காவில் ஒட்டகமா 

ஒட்டகம் என்றாலே பாலைவனத்தின் கப்பல் என்ற தொடரும் பரந்து விரிந்த மணல்வெளியும் இராஜஸ்தானும் அரேபிய நாடும் கண்முன்னே காட்சியாக விரியும். ஒட்டகத்தின் பிறப்பிடம் வட அமெரிக்கக் கண்டம் என்று சொன்னால் நம்புவீர்களா? “நீங்க நம்பலேன்னாலும் அதுதான் நெசம்.”

ஒட்டகம் சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வட அமெரிக்காவில் தோன்றிய விலங்கு. பனி யுகத்துக்கு முந்தைய செனோசோயிக் யுகத்தில் பல ஒட்டக இனங்கள் அங்கே பரவலாக வசித்தன. குதிரை, தபீர் ஆகிய விலங்குகளும் இந்தக் கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவை. வட அமெரிக்காவின் கடைசி ஒட்டகம் கேமலோப்ஸ் எனப்படும் இனத்தைச் சேர்ந்தது, உருவத்தில் இப்போது நாம் பார்க்கும் ஒட்டகத்தை ஒத்திருந்தது. சுமார் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பனி யுகம் தொடங்கிய காலகட்டத்தில் அழிந்துபோனது. வட அமெரிக்க நிலப்பகுதிக்குள் மனிதர்கள் காலடி எடுத்து வைத்ததும் அவற்றை வரைமுறையின்றி வேட்டையாடியதால் முற்றிலுமாக மறைந்தன என்கிறார்கள் அறிவியலாளர்கள். வேறு பல காரணிகளும் உண்டென்றாலும் இதுவே முதன்மையானது.

முன்னொரு காலத்தில் வட அமெரிக்காவில் கனடாவையும் ஆசியாக் கண்டத்தில் ரஷியாவையும் இணைத்த பெரிஞ்சியா என்ற நிலப்பகுதியின் வழியாக சில ஒட்டகங்கள் ஆசியாவுக்குள் நுழைந்து தப்பிப் பிழைத்தன. பழைய உலகத்தைச் சேர்ந்த டிரோமேடரி என்ற ஒற்றைத் திமில் ஒட்டகமும் பேக்ட்ரியன் என்ற இரட்டைத் திமில் ஒட்டகமும் புதிய உலகத்தைச் சேர்ந்த தென் அமெரிக்காவின் லாமா, க்வனக்கோ, அல்பகா ஆகியவை மட்டுமே ஒட்டக இனத்தில் எஞ்சியிருக்கின்றன.

ஒட்டகத்தின் நெருங்கிய உறவு 

புதைபடிவ ஆராய்ச்சிகளின் வழியாக ஒட்டகமும் லாமாவும் சுமார் 17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இரு வேறு இனமாகப் பிரிந்தன என்ற முடிவுக்கு வந்தனர் ஆராய்ச்சியாளர்கள். இதனால் கேமலோப்ஸும் லாமாவும் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகக் கருதப்பட்டது. இருந்தாலும் இந்தக் கருத்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2015-ஆம் ஆண்டு கனடாவின் யூகான் பள்ளத்தாக்கில் கிடைத்த கேமலாப்ஸின் எலும்புகளில் இருந்த டிஎன்ஏவை லாமாவோடும் தற்கால ஒட்டகத்தோடும் ஒப்பிட்ட தொல்லுயிரியலாளர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். தென்னமெரிக்க ஒட்டக இனத்தை விடவும் பழைய உலக இனமான தற்கால ஒட்டகத்தோடு கேமலாப்ஸ் பல விதத்தில் ஒத்துப்போவது தெரிய வந்தது. இரண்டும் சுமார் 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இரு வேறு இனமாகக் கிளைத்ததும் தெரியவந்தது. அடுத்தடுத்து நடக்கும் ஆய்வுகளில் ஒட்டகத்துக்கும் அதனோடு தொடர்புள்ள மற்ற விலங்குகளையும் பற்றிய உண்மைகள் தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை.

ஒட்டகப் பால் குடிக்கலாமா 

சல் அல்லது ஷூபத் என்று அழைக்கப்படும் புளித்து நுரைத்த ஒட்டகப் பால் மத்திய ஆசியாவின் துருக்கி, கசகஸ்தான், துருக்மெனிஸ்தான் நாடுகளில் பிரபலம். கோடைக் காலத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக குடிப்பது வழக்கம். பாலைக் காய்ச்சாமல் உறையூற்றிப் புளிக்க வைத்து ஷூபத்தை தயார்செய்து பருகுகிறார்கள். பால் தயிராக மாற மாட்டுப் பாலை விடவும் அதிக நேரமாகிறது. மாட்டுப் பால் ஒவ்வாமை கொண்டவர்களும் சர்க்கரை நோய், செரிமானக் கோளாறு இருப்பவர்களும் ஒட்டகப் பாலையும் ஷூபத்தையும் பயமின்றி தாராளமாகக் குடிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் ஒன்று, இதைச் சுவைக்க வேண்டுமென்றால் அந்த ஊருக்குப் பயணம் செய்தால்தான் முடியும். குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையிலும் பக்குவத்திலும் மட்டுமே ஷூபத் தயாராகும் என்பதால் ஏற்றுமதி செய்யமுடிவதில்லை.

ஒட்டக இலச்சினை தாங்கிய பொருட்கள் 

பள்ளியில் படிக்கும் வயதில் கேம்லின் பென்சில்களையும் கேமல் ஓவியம் தீட்டும் வண்ணங்களையும் அவற்றின் தரத்துக்காக கேட்டு வாங்கியிருக்கிறோம். தீப்பெட்டி முதல் அரிசி வரை சாம்பிராணி முதல் பால் பவுடர் வரை கேமல் என்ற பெயரையும் ஒட்டக இலச்சினையையும் தாங்கி வந்த பொருட்களுள் இன்றளவும் புகழ்பெற்றது கேமல் சிகரெட்டுகள். புகைப்பிடித்தல் பிடிப்பவரின் உடலுக்கும் சுற்றி உள்ளவர்களுக்கும் கேடு விளைவிக்கும் என்ற உரிமைத் துறப்பைப் பிரகடனப்படுத்திவிட்டு இலச்சினை தேர்ந்தெடுக்கப்பட்ட கதையைப் பேசலாம் வாருங்கள்.

கேமல் சிகரெட்டுகள்

புகைப்பிடிப்பது பல்லாயிரம் ஆண்டுகளாகப் மதச் சடங்காகவும் கலாசார வெளிப்பாடாகவும் புழக்கத்தில் இருந்து வந்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். ஐரோப்பியர்கள் புதிய நிலப்பகுதிகளில் கால்பதித்த பிறகு புகையிலை பயிரிடலும் விற்பனையும் பெருவணிகமாக உருவெடுத்தது. அவற்றைச் சந்தைப்படுத்தும் நேர்த்தி 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சூடு பிடித்தது. அது வரையிலும் அவரவர்களே புகையிலைத் தூளை தாளில் சுருட்டிப் புகைப்பிடிக்கும் வழக்கமே பரவலாக இருந்தது.

1913-ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர். ஜே. ரேனால்ட்ஸ் தாளில்  சுருட்டப்பட்டு தயாராக இருக்கும் சிகரெட்டுகளைத் தயாரித்தார். சரி, கேமல் என்ற பெயரையும் ஒட்டக இலச்சினையையும் தேர்ந்தெடுத்தது எதற்காக? தான் தயார் செய்யும் சிகரெட்டில் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர புகையிலையைப் பயன்படுத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாகக் காணப்பட்ட ஒட்டகத்தை இலச்சினையாக வைக்க முடிவு செய்தார். அந்தக் காலகட்டத்தில் எகிப்திய சிகரெட்டுகள் மக்களிடையே பிரபலமாக இருந்தன. ஆனால் ரேனால்ட்ஸின் கேமல் சிகரெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட முதல் வருடத்தில் 425 மில்லியன் பாக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தன.

வித்தியாசமான வருகை 

தயார்நிலையில் இருக்கும் சிகரெட்டுகளை சந்தையில் அறிமுகம் செய்வதற்காக வெளியிடப்பட்ட விளம்பரங்கள் புதுமையாக இருந்தன, “கேமல்கள் வருகின்றன” என்ற சொற்றொடர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டின் பாரம்பரியமான “கேம்ப்பேல்கள் வருகிறார்கள்” என்ற பாடலின் இசையைப் பின்னணியில் பயன்படுத்தினார்கள். ‘ஓல்ட் ஜோ’ என்ற பெயரிடப்பட்ட சர்க்கஸ் ஒட்டகத்தை ஊரூராக அழைத்துப்போய் மக்களின் கவனத்தை ஈர்த்து சிகரெட்டுகளை இலவசமாக விநியோகம் செய்தார்கள்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் ஒரு படி மேலே போய் “மற்ற சிகரெட்டுகளை விடவும் மருத்துவர்கள் விரும்பிப் புகைப்பது கேமல் சிகரெட்டுகளையே” என்ற விளம்பரத்தை படக்கதையாகவும் புகைப்படமாகவும் காணொளியாகவும் தொடர்ந்து வெளியிட்டனர். விளம்பரங்களின் இறுதியில் அழகிகளும் மருத்துவ தாதிகளும் புகைப்பிடிப்பதோடு அது நாகரிகத்தின் வெளிப்பாடு என்பதை எடுத்துச் சொன்னார்கள். வெகுசன ஊடகம் வானொலி போன்றவையோடு மருத்துவக் கூட்டமைப்பின் இதழ்களிலும் இந்த விளம்பரங்கள் வெளியாகின. ‘கேமல் வேண்டுமென்றால் ஒரு மைல் நடப்பேன்” என்பது பல ஆண்டுகளாக இந்த சிகரெட்டின் விளம்பர முழக்கமாக இருக்கிறது.

1990-களில் மிக்கி மௌஸ், பார்பி ஆகிய கதாபாத்திரங்களை விடவும் ‘ஓல்ட் ஜோ’ ஒட்டகம்  குழந்தைகளிடையே மிகவும் பிரபலமானது. இது இளம்வயதிலேயே புகைப்பிடிக்கத் தூண்டுகிறது என்று போராடி ‘ஓல்ட் ஜோ’ கதாபாத்திரத்தை திரும்பப் பெறச் செய்தது அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு.

சுண்டி இழுக்கும் சிகரெட்டு விளம்பரங்கள்

அதே காலகட்டத்தில் கேமல் சிகரெட்டுக்களை விடவும் துணிச்சலான விளம்பரங்கள் ஊடகங்களில் வலம்வந்தன. ‘லக்கி ஸ்ட்ரைக்’ என்ற நிறுவனம் எங்கள் சிகரெட்டுகள் பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களும் புகைப்பதற்கு ஏற்றவை என்றது. அதே நிறுவனத்தின் இன்னொரு விளம்பரம் இனிப்பு சாப்பிடவேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் லக்கி ஸ்ட்ரைக்கை பற்றவையுங்கள், எடைக் குறைப்புக்கு இது சிறந்த வழி என்று சற்றே பூசிய உடல்வாகு கொண்ட பெண்களிடம் சொன்னது. செஸ்டர்பீல்ட் என்ற நிறுவனம் மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளியும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரும் ஒன்றாகப் புகைப்பிடிக்கும் விளம்பரத்தை வெளியிட்டது. சிகரெட்டு பிடிப்பதை ஆண்மையின் குறியீடாக காட்சிப்படுத்தும் இந்திய விளம்பரங்களை பார்த்திருக்கிறேனே தவிர இது போன்றவை வெளியாகவில்லை என்றே எண்ணுகிறேன். நீங்கள் பார்த்த நினைவிருக்கிறதா?

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
  2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
  3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
  4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
  5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
  6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
  7. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
  8. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
  9. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
  10. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
  11. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
  12. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
  13. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
  14. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
  15. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
  16. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
  17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
  18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
  19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
  20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
  21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
  22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
  23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
  24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
  25. நாம் வாழும் காலம் : கார்குழலி