நாம் வாழும் காலம் – 10 

விண்வெளிக்குப் பயணம்செய்த நாய், பூனை, குரங்கு ஆகியவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நிலவுக்குப் பயணம் செய்த ஆமைகளைப் பற்றித் தெரியுமா. அமெரிக்க விண்வெளிவீரர்களான நீல் ஆர்ம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் இருவருக்கும் முன்னதாக நிலவைச் சுற்றிவந்த பெருமையும் அவற்றைத்தான் சேரும் என்ற தகவலைப் படித்தவுடன் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தேன்.

நிலவுக்கு மனிதர்கள் போகமுடியுமா என்ற ஆராய்ச்சியை சோவியத் ரஷியா நடத்திவந்தபோது சோதனை முயற்சியாக கசக் பகுதியின் ஸ்டெப்பிப் புல்வெளியைச் சேர்ந்த ஆமைகளில் ’22’, ’37’ என்று எண்களால் குறியிடப்பட்ட  இரண்டு ஆமைகள் நிலவுப் பயணத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டன. சரியாக 53 ஆண்டுகளுக்கு முன்னால் 1968-ஆம் ஆண்டு செப்டெம்பர் 17-ஆம் நாளில் இந்தப் பயணம் நடந்தது. படிக்கப் படிக்க ஆமைகளின் நிலவுப் பயணக்கதையில் சுவாரசியம் கூடியது.

விண்வெளிப் பயணமா போட்டியா

1950-களில் விண்வெளிக்கு யார் முதலில் போவது என்று அமெரிக்காவுடன் நடந்த கடும்போட்டியில் சோவியத் ரஷியா முன்னிலை வகித்தது. அந்தச் சமயத்தில் ரஷியாவை முந்திக்கொண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிவைக்கவேண்டும் என்று அமெரிக்கா கங்கணம் கட்டிக்கொண்டது. திடீரென 1960-களில் சோவியத் ரஷியாவின் விண்வெளிப் பயண முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டது, அவர்கள் நிலவுக்கு அனுப்பிய ஐந்து  விண்வெளிக்கலன்களும் தோல்வியடைந்தன, மனித உயிர்களின் இழப்பும் ஏற்பட்டது. சோவியத் ரஷிய விஞ்ஞானிகள் மனதளவில் சோர்ந்துபோயினர். அமெரிக்காவை முந்த முடியுமா என்ற கேள்வி எழுந்தாலும் சோண்ட் 5 விண்வெளிக்கலத்தை எப்படியாவது நிலவுக்குச் செலுத்துவதில் வெற்றிபெறவேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட்டனர். சோண்ட் 5 விண்வெளிக்கலம் விண்வெளி வீரர்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்து. என்றாலும் அதுவரை ஏற்பட்ட தொடர் தோல்வியால் மனிதர்களை அனுப்புவதில் தயக்கம் இருந்தது. எனவே முதலில் விலங்குகளை அனுப்பிச் சோதனைசெய்யலாம் என முடிவுசெய்யப்பட்டது.

தொடக்கமுதலே விண்வெளியில் கதிர்வீச்சு, ஈர்ப்புவிசை, முடுக்க விசை போன்றவை உயிரினங்களின்மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முயற்சியில் வெவ்வேறு விலங்குகளை விண்வெளிக்கு அனுப்புவது வழக்கமாக இருந்தது. இந்தச் சோதனை முயற்சிகளின் முடிவைப் பொறுத்துத்தான் மனிதர்களை அனுப்பிவைத்தனர். மனிதர்களின் உடற்கூறியலை ஒத்த அல்லது பொதுவான மாதிரிகளாக இருக்கும் சாத்தியம் உள்ள உயிரினங்கள் இந்தச் சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. பெரும்பாலன உயிரினங்கள் இந்தச் சோதனை முயற்சியில் உயிரிழந்தன. தப்பிப் பிழைத்தவை கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த வகையில் 1947-ஆம் ஆண்டு முதலில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மாதிரி உயிரினம் பழ ஈ. பூமிக்கு வெளியே மூன்று நிமிடங்களை வெற்றிகரமாகக் கழித்தன.

ஆமைகள் தேர்வு செய்யப்பட்டது எப்படி 

அதுசரி, சோவியத் ரஷிய விஞ்ஞானிகள் ஆமைகளை எப்படித் தேர்ந்தெடுத்தனர் ? சுமார் நாற்பது முதல் ஐம்பது வருடம் வரை உயிர்வாழும் கசக் பகுதி ஆமையினம் வருடத்தில் ஒன்பது மாதங்களை உறக்கத்தில் கழிக்கும். இயல்பாகவே மெதுவாகச் செல்லும் உணர்ச்சித்திறம் குன்றிய மந்தமான விலங்கு. மேலும் அதற்கு அமெரிக்கர்கள் அனுப்பிய சிம்பன்ஸி குரங்கைப் போல விசையை அழுத்தக் கற்றுக்கொடுக்க முடியாது. ரஷியர்கள் அனுப்பிய லைகா நாயைப் போல உடம்பில் உணர்கருவிகளைப் பொறுத்துவது சாத்தியமில்லை.

இத்தனை பாதகமான விஷயங்களோடு ஆமைகளுக்குப் பாலூட்டிகளோடு உருவ ஒற்றுமைகூடக் கிடையாது. ஆனால் ஆமைகளின் முக்கியமான உள்ளுறுப்புகள் பாலூட்டிகளோடு ஒத்திருந்ததென விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். கூடவே வேறு சில நேர்மறையான விஷயங்களும் இருந்தன. அதிகம் நகராமல் ஒரே இடத்தில் இருக்கும். எளிதாக வார்ப்பட்டையை அணிவித்துக் கட்டிப்போடலாம். நீண்ட நாட்களுக்கு உணவும் தண்ணீரும் இல்லாமல் வாழமுடியும். இந்த எல்லாக் காரணத்தையும்விட முக்கியமான ஒன்று, விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் இருந்த கசகஸ்தான் பகுதியில் நிறைய ஆமைகள் இருந்தன.

செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி நள்ளிரவில் நிலவை நோக்கிப் புறப்பட்ட விண்வெளிக்கலத்தில் ஆமைகளோடு பழ ஈயின் முட்டைகள், விதைகள், செடிகள், பாக்டீரியா நுண்ணயிரிகள் என வேறு சில உயிரினங்களையும் அனுப்பிவைத்தனர். விண்ணில் செலுத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் விண்வெளிக்கலத்தின் கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்தது. விஞ்ஞானிகள் எப்படியோ அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு சரியான பாதையிலும் செலுத்தினர். செப்டம்பர் 18-ஆம் தேதியன்று சோண்ட் 5 விண்வெளிக்கலம் நிலவை வெற்றிகரமாகச் சுற்றிவந்தது. அது மீண்டும் பூமியை நோக்கி வரும்வழியில் கொஞ்சம் அமெரிக்கர்களைச் சீண்டிப் பார்க்கலாம் என்று நினைத்த ரஷிய விஞ்ஞானிகள் நிலவில் இறங்க முயற்சி செய்வதைப்போன்ற பாவனையில் உரையாடல்களை நடத்தினர். அதுவரையிலும் தகவல் பரிமாற்றத்தை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்கர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நிலவில் கால்பதிக்கும் போட்டியில் ரஷியர்களிடம் தோற்றுவிட்டோம் என்ற சோகத்தில் ஆழ்ந்தனர். சிறிது நேரத்தில் அது நகைச்சுவைக்காகச் செய்த ஏமாற்று வேலை என்பது தெரிந்ததும்தான் நிதானமாக மூச்சுவிட ஆரம்பித்தனர்.

பூமியை நெருங்குவதற்கு சற்று முன்னர், விண்வெளிக்கலத்தின் உயரக் கட்டுப்பாட்டு அமைப்பு பழுதடைந்தது, பாதை மாறியதால் விண்வெளிக்கலம் பாதுகாப்பாகப் பூமியை வந்தடையும் சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர் ரஷிய விஞ்ஞானிகள். கூடவே ஆமைகள் இறந்துவிடும், சோதனை ஓட்டத்தின் முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில் விண்வெளிக்கலத்தின் வெளிப்புற உறையின் வெப்பம் பல ஆயிரம் மடங்கு அதிகரித்ததோடு கலத்துக்கு உள்ளே ஈர்ப்பு விசை மனிதர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு அதிகரித்தது. திட்டமிட்டதற்கு மாறாக கசகஸ்தானில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது விண்வெளிக்கலம்.

கடலுக்குள் விழுந்த விண்வெளிக்கலத்தை ரஷியக் கடல்படை தேடிக் கண்டுபிடிக்க நான்கு நாட்கள் ஆனது. அதை மீட்டெடுத்தபோது ஆமைகள் உயிரோடு இருந்தன என்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. யூரி காகரினைப்போல அவற்றுக்கு நாடு தழுவிய வெற்றி வரவேற்போ பதக்கமோ கிடைக்கவில்லை. உணவுகூடக் கொடுக்காமல் பச்சைப் பட்டினியாக வைத்திருந்தார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு அவற்றை மருத்துவக் கூறாய்வு செய்தனர். உறுப்புகளில் மிகக் குறைந்த அளவில்தான் கதிர்வீச்சின் பாதிப்பு இருந்தது, ஈரலின் நிறம் சற்று மாறியிருந்தது, குடல் சுவர் சற்றே தடித்திருந்தது. மற்றபடி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தன. எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் கால் பதிக்கும் சாத்தியத்துக்கு ’22’, ’37’ என்றப் பெயர்கொண்ட அந்த ஆமைகள் கட்டியம் கூறின.

உலகக் கலாசாரங்களில் ஆமை 

பொதுவாகவே சில ஆமையினங்கள் 100 முதல் 200 வருடங்கள் வரை உயிர் வாழும். உலகமுழுவதும் பெரும்பாலான கலாசாரங்களில் ஆமை நீண்ட ஆயுள், அறிவுநுட்பம், பொறுமை, நிலைத் தன்மை ஆகியவற்றின் குறியீடாக இருக்கிறது. அதெல்லாம் கட்டுக்கதையல்ல உண்மை என்பதை நிறுவியதைப் போலவல்லவா இருக்கிறது நிலவுப் பயணம் செய்த ஆமைகளின் கதை.

காலங்காலமாக ஓவியர்களும் கதைசொல்லிகளும் சிற்பிகளும் கவிஞர்களும் ஆமையை மையமாகக் கொண்ட பல படைப்புகளை இயற்றியிருக்கிறார்கள். திபெத்தில் ஆமை படைப்புத்திறனின் சின்னமாக அறியப்பட்டது. பண்டைய கிரேக்க ரோமானிய கலாச்சாரங்களில் ஆமை காதல் கடவுளரான அப்ரோடைடி மற்றும் வீனஸின் சின்னமாக நம்பப்பட்டது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது சாய்ந்த மந்தர மலையைத் தூக்கி நிறுத்த மகாவிஷ்ணு ஆமை அவதாரம் எடுத்தார் என்ற புராணக் கதை நாமெல்லோரும் அறிந்ததுதானே.

சீனக் கடவுளான நூவா பெரிய கடல் ஆமை ஒன்றினை வானத்தைத் தூக்கிப்பிடிக்குமாறு பணித்தாராம். சீனாவில் நான்கு திசைகளையும் குறிக்கும் நற்குறியைக் காட்டும் வியக்கத்தகு விலங்குகளில் ஒன்று கறுப்பு ஆமை. வடக்கு திசையின் கடவுளாகக் கருதப்படுகிறது. டிராகன் கிழக்கையும் வெள்ளைப் புலி மேற்கையும் வெர்மிலியன் பறவை தெற்கையும் குறிக்கின்றன. சீனப் பேரரசரின் படை டிராகன் மற்றும் ஆமைச் சின்னம் பொறித்த கொடிகளையும் பதாகைகளையும் கொண்டிருந்தது, இணையற்ற ஆற்றலையும் அதிகாரத்தையும் குறிப்பதாக நம்பப்பட்டது.

ஆமை உலகத்தின் படைப்பு குறித்த எல்லாக் கதைகளிலும் தவறாமல் இடம்பெறுகிறது. சிவப்பிந்தியர்கள் பெரிய ஆமையொன்றின் மேலோட்டின்மீது நிற்கும் நான்கு யானைகள் பூமியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நிற்பதாகச் சொல்கிறார்கள். வட அமெரிக்க நிலப்பரப்பு எப்படி உருவானது என்பதைச் சொல்லும் சிவப்பிந்தியக் கதை சுவாரசியமானது. ஒரு சமயம் எல்லாம் வல்லவரான கடவுள் மனிதர்கள் வாழத் தகுதியான இடத்தைப் படைப்பதற்குத் தேவையான ஈரமண்ணையும் மணலையும் சேகரித்து வருமாறு விலங்குகளை அனுப்பிவைத்தார். பிறகு பெரிய ஆமை ஒன்றின் முதுகில் அந்த மண்ணையெல்லாம் வைத்து நிலத்தை அமைக்கச் சொன்னார். மண் சேரச் சேர ஆமை வளர்ந்தது, ஆமை வளர வளர மண்ணும் அதிகமானது. பிறகு அது நாற்புறமும் கடல்சூழ்ந்த மாபெரும் நிலப்பகுதியாக மாறியது⎯வட அமெரிக்கா. சிவப்பிந்தியர்கள் இன்றளவும் வட அமெரிக்காவை ‘ஆமைத் தீவு’ என்றும் அழைக்கிறார்கள்.

ஆமைக் கதையின் வெவ்வேறு வடிவங்கள் 

நிலவுக்குப் பயணம் செய்த ஆமைகள் குறித்த தகவலைப் படித்ததும் வாத்துகளின் உதவியோடு வானத்தில் பறந்த ஆமை பற்றிய பஞ்சதந்திரக் கதை நினைவுக்கு வந்தது. சிறுமியாக இருக்கும்போது அம்மா சொல்ல நிறைய தடவை கேட்டிருக்கிறேன். ஓட்டப்பந்தயத்தில் பங்குபெற்ற முயலும் ஆமையும் பற்றிய ஈசாப் கதை, அம்புலிமாமா கதைகள் என்ற எத்தனையோ ஆமைக் கதைகள் நினைவில் மின்னி மறைகின்றன. 1970 அல்லது 80-களில் குழந்தைகளுக்கான அறிவியல் கதையில் ஒரு சிறுவனை முதுகில் சுமந்து கடலுக்கு அடியில் அழைத்துச் செல்லும் ஆமையொன்று. அங்கிருக்கும் உயிரினங்களைப் பற்றிச் சிறுவன் தெரிந்துகொள்வது சுவாரசியமாக இருக்கும். கல்வி கோபாலகிருஷ்ணன் எழுதியதாக இருக்கலாம். ஓவியங்களை வரைந்தவரின் பெயர் ஆழி என்ற நினைவு. அந்தப் புத்தகம் தற்போது பதிப்பில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

வானத்தில் பறந்த ஆமையின் கதை முதலில் புத்தரின் ஜாதகக் கதைகளில் சொல்லப்பட்டது என்ற கருத்து உண்டு. அதே கதை சிற்சில மாற்றங்களுடன் பஞ்சதந்திரக் கதைகளிலும் ஈசாப் கதைகளிலும் காணப்படுகிறது. இந்தக் கதை ஆப்பிரிக்கா, ரஷியா, அரபி, பெர்சியா, கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, இலங்கை, மங்கோலியா என எல்லாக் கலாச்சாரங்களிலும் பரவியிருப்பதைப் பார்க்கலாம். இவற்றில் பெரும்பாலானவை ‘அளவுக்கு அதிகமாகப் பேசினால் அழிவு ஏற்படும்’ என்றும் ‘கட்டளைகளைக் கேட்டு அதன்படி நடக்கவேண்டும்’ என்றும் நீதியைப் போதிக்கும் கதைகள். சில கதைகளில் ஆமை நயவஞ்சகமும் தந்திரமும் கொண்ட விலங்காகவும் வேறு சிலதில் புத்திக்கூர்மையுள்ள விலங்காகவும் சித்தரிக்கப்படுகிறது.

கனவுலகைக் காட்டும் கதைகள் 

சிறுமியாக இருக்கும்போது கதை கேட்காமல் தூங்கப்போனதே இல்லை. ஒவ்வொரு இரவும் அம்மாவைப் புதுக்கதை கேட்பேன் என்பதால் கதைகளோடு ஆங்கில இதழ்களில் வரும் உண்மை நிகழ்வுகளையும் கதைபோலச் சொல்வார். அம்மா அப்பா மட்டுமல்லாமல் ஊரில் இருந்த மொத்த உறவினர் பட்டாளமும் கோடை விடுமுறை முழுவதும் ஒவ்வொரு இரவும் எனக்காகப் புதுக் கதையொன்றைத் தேடியெடுத்து வந்து சொல்வார்கள்.

சில கதைகளை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அதுபோலவே ஒவ்வொருவரும் கதைசொல்லும் பாணியும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். அதிலும் பெரிய பாட்டி கதைசொல்ல ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே உட்கார்ந்துகொண்டே தூங்கிவிழுவார். பாட்டியை எழுப்பிக் கதைசொல்லச் சொன்னால் மீண்டும் மீண்டும் தூங்கிவிழுவார். பகலிலும் இதேபோலத்தான் நடக்கும். நானும் அப்படித்தான், இரவுநேரத்தில் படுத்துக்கொண்டே கதை சொல்லும்போது தூக்கம் ஆளைத் தூக்கிக்கொண்டு போகும்.

கதை நம்மைக் கண்ணுக்குப் புலப்படாத வேறு ஒரு மண்டலத்துக்கு அழைத்துச் செல்கிறது, அந்த நெடுந்தூரப் பயணம் நம்மை தூங்கச் செய்கிறது என்று நினைக்கிறேன். பூமியில் நடக்கும் வாழ்க்கை கனவுலகில் நடப்பது என்றும் தூங்கும்போதுதான் உண்மையான வாழ்க்கை நிகழ்கிறது என்றும் சித்தாந்தம் உண்டு. இந்த உலகில் நடக்கமுடியாத பல விஷயங்களைக் கனவுலகில் செய்துபார்க்கிறோம், கதைகள் அதற்கான வினையூக்கியாக இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவியல் ஆராய்ச்சி எதுவும் நடந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் பல சமயங்களில் நிஜ வாழ்வைக் காட்டிலும் கதை சுட்டும் புனைவுலகிலும் கனவுலகிலும் சஞ்சரிப்பதே பெருமகிழ்ச்சியையும் அமைதியையும் தருவதைப் கதைப்பிரியர்கள் யாரும் மறுக்கமாட்டார்கள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
  2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
  3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
  4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
  5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
  6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
  7. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
  8. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
  9. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
  10. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
  11. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
  12. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
  13. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
  14. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
  15. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
  16. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
  17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
  18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
  19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
  20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
  21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
  22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
  23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
  24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
  25. நாம் வாழும் காலம் : கார்குழலி