நாம் வாழும் காலம் – 11

மாநகருக்கு நடுவே எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பாண்டி பஜாரில் நடந்துகொண்டிருக்கும்போது சட்டென நின்றேன். இங்கொன்றும் அங்கொன்றுமாக குஞ்சங்களைப் போன்ற பூக்கள் மனிதர்களின் கால்பட்டு நடைபாதையோடு ஒட்டிக்கிடந்தன. அட, வாகை மரம். எத்தனை வருடமாக இந்த வழியாகப் போயிருக்கிறேன் இதைக் கவனித்ததில்லையே. வண்ணதாசனின் ‘தாண்டவம்’ கதையில் வாகை மரத்தைப் பற்றி அத்தனை அழகாக எழுதியிருப்பார். அதை மொழியாக்கம் செய்ததுமுதல் இந்த மாநகரின் சாலைகளில் இருக்கும் வாகைகள் எல்லாம் என்னிடம் தங்களின் இருப்பைப் பதிவுசெய்துகொண்டேயிருப்பது வியப்போடு பெருந்துள்ளல் ஒன்றையும் ஏற்படுத்தும். காணாததைக் கண்ட அந்தப் பரவசத்தை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளும் ஆசை பொங்கும். அன்றும் அதே பரவசத்தோடு சாலையில் என்னை மறந்து நின்றேன்.

“வாகை மரத்தில் கிளி இருக்குமாம்,” என்று மகளிடம் சொல்லிக்கொண்டே அண்ணாந்து பார்த்தேன். சமீபத்தில் பெய்த மழையில் பச்சைப்பசேலென ஒளிர்ந்த இலைகள் மெல்லிய காற்றில் சலசலத்தன. புறாக்களும் காக்கைகளும் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தாலும் இருபுறமும் விரைந்துசெல்லும் வாகனங்களின் ஒலியில் காதைத் தீட்டிக்கொண்டால் மட்டுமே பச்சைக் கிளிகளின் ‘கீ கீ’யென்ற செல்லக் குரல் கேட்டது. ஆனால் அங்கிருந்த சில நிமிடங்கள் வரை அவை கண்ணில் தென்படவேயில்லை. நான் எதையோ அண்ணாந்து பார்ப்பதைக் கவனித்த பக்கத்தில் இருந்த இரண்டொரு நபர்களும் தலையுயர்த்தி மேலே பார்த்தார்கள். சாலையின் எதிர்ப்புறத்திலும் இதன் ஜோடியைப்போன்ற இன்னொரு வாகை நிற்பதைக் கவனித்தேன். அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்து கிளிகளைப் பார்த்துவிட்டுத்தான் நகரவேண்டுமெனத் தோன்றியது. ஆனால், தலைக்கு மேலே வேலையும் கடமையும் கண்ணுக்குத் தெரியாத சாட்டைபோல விரட்டிக்கொண்டே இருக்கிறதே.

வாழ்வியலோடு இணைந்த தாவரங்கள்

சங்ககாலமுதல் தமிழரின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது வாகை. வெற்றிபெறும் வீரர்கள் வாகை மலர் சூடிக் கொண்டாடியதாக இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. ‘வெற்றி வாகை சூடினான்’ எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. வாகையின் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை என எல்லாமே மருத்துவ குணமுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படி எத்தனையோ மரங்கள் ஒரு காலத்தில் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தன. தினமும் வேப்பங்குச்சியில் பல் தேய்ப்பதையும் வாழை, வாதுமை மரத்தின் இலைகளில் உணவுண்பதையும் முள் தைத்தால் எருக்கஞ்செடியின் பாலை விடுவதையும் பார்த்துத்தான் வளர்ந்தேன். ஆனால் இன்றோ சன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதைத் தவிர மரங்களோடு நேரிடையான தொடர்புக்கண்ணி  அற்றுப்போன வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். நகரமயமான வாழ்க்கையில் இந்த இழப்பை நினைத்துப்பார்க்கக்கூட நேரமிருப்பதில்லை. ஆனாலும் அங்கேயும் இங்கேயுமென மரங்கள் தலையசைத்துத் தென்றல் வீசி நம்மைத் திரும்பிப் பார்க்கச் செய்யாமல் இருப்பதும் இல்லை.

தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டா

தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது என்பதை ஜகதீஷ் சந்திர போஸ் என்ற இந்திய விஞ்ஞானி க்ரெஸ்கோக்ராஃப் என்ற கருவியின் உதவியால் நிறுவிக்காட்டினார் என்பதைப் பள்ளியில் படித்திருப்போம். தாவரங்கள் பலவிதமான தூண்டுகைகளின் வழியாக உணரும் தகவல்களை நுண்ணலைகளின் மூலம் கடத்துகின்றன என்பதைக் கண்டுபிடித்து நிறுவினார். உயிர் இயற்பியல் துறையில் இது முக்கியமான பங்களிப்பு. தாவரத் திசுக்களில் நிகழும் நுண்ணலைகளின் செயல்பாடு அதனுடைய உயிரணு சவ்வின் திறனில் அதற்கேற்றாற் போன்ற மாற்றங்களைச் செய்தது குறித்து ஆய்வு செய்தார்.

தாவரங்களின்மீது பருவநிலை மற்றும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம், வேதியியல் செயல்குறைப்பிகள் போன்றவை ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய ஆய்வுகளையும் செய்தார். மின் தூண்டுகை, மயக்க மருந்து, நஞ்சு போன்றவற்றைக் கூட்டும்போதும் குறைக்கும்போதும் தாவரங்களின் மின் எதிர்ச்செயலில் மாற்றம் இருக்கிறது என்பதையும் பதிவுசெய்திருக்கிறார் ஜகதீஷ் சந்திர போஸ்.

மரம் எனும் சமூக உயிரி 

மரங்கள் ஒன்றோடொன்று பேசிக்கொள்கின்றன, சண்டைபோட்டுக்கொள்கின்றன, வாழ்க்கை நடத்தப் போராடுகின்றன, ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கின்றன, தவறுசெய்யும் குட்டி மரங்களைப் பெரிய மரங்கள் வழிநடத்துகின்றன ⎯ மொத்தத்தில் மனிதர்களுக்கு நிகரான வாழ்க்கையை அவை வாழ்கின்றன என்கிறார் பீட்டர் வூலீபன் என்ற இயற்கை ஆர்வலர். ஜெர்மனியில் ஈஃபில் மலைத்தொடரில் இருக்கும் காடுகளைப் பராமரிக்கும் பணியில் இருக்கிறார். நமக்குத் தெரியாத மரங்களின் வாழ்வியலைப் பற்றிய புத்தகம் எழுதியிருக்கிறார். ஜெர்மனியில் மாத்திரம் 8 இலட்சம் பிரதிகள் விற்ற இந்தப் புத்தகத்தில் மரங்களின் வாழ்க்கையைத் தன்னுடைய அனுபவங்களின்மூலம் விவரிக்கிறார்.

வனங்களில் வளரும் மரங்களோடு பழகப்பழகப் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார். வனம் என்பது வெறும் மரங்கள் அடர்ந்த பகுதி மட்டுமல்ல, அது ஒரு கட்டுக்கோப்பான சமூக அமைப்பு, அங்கிருக்கும் மரங்கள் ஒன்றுக்கொன்று பாதுகாப்பும் ஆதரவும் வழங்கும் அமைப்பு என்கிறார். மரங்களும் மனிதர்களைப் போலவே கூட்டமாக வாழும் சமூக உயிரினங்கள். உணவைத் தன் இனத்தவருடன் பங்குபோட்டுக்கொள்கின்றன. போட்டியாளர்களான வேறு இனத்தைச் சேர்ந்த மரங்களோடும் உணவைப் பகிர்ந்துகொள்கின்றன. நிறைய மரங்கள் ஒன்றாக வாழும் வனத்தில் அவை தமக்கான சூழல்மண்டலத்தை  உருவாக்கிக்கொள்கின்றன. இப்படியொரு பாதுகாப்பான சூழலில் அவற்றால் பல நூறு வருடங்கள் வாழமுடிகிறது.

மரங்களுக்கென தனி மொழி இருக்கிறது, அவை வெளியிடும் வேதிப்பொருட்களின் வாசனையின் மூலம் தகவலைப் பரிமாறிக்கொள்கின்றன. சில நேரங்களில் காற்றடிக்கும் திசை, மரங்களுக்கிடையே இருக்கும் தூரம் ஆகியவற்றால் தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது. சில மரங்கள் வேர்ப்பகுதியில் இருக்கும் நுண்ணுயிர்களின் உதவியோடு மின்னதிர்வுகளைப் பரிமாறிக்கொள்கின்றன. மரங்களிலும் தனிமை விரும்பிகள் இருக்கின்றன. எதிலும் கலந்துகொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்குமாம். ஆனால், மரங்களின் எதிரிகள் குறித்த தகவல் பரிமாற்றத்தில் அவற்றின் வேரில் இருக்கும் நுண்ணுயிரிகளும் தகவல் பரிமாற்றத்தில் பங்குபெறுகின்றன. எவ்வளவு கட்டுக்கோப்பான கூட்டமைப்பு.

வனத்தில் வளரும் மரங்களுக்கு எழுதப்படாத நன்னடத்தை விதிகள் இருக்கின்றன. அதையொட்டி வளரும் மரங்கள் இயற்கையின் சீற்றத்தைத் தாங்கி நிற்கும் வலுவைப் பெறுகின்றன. அதைக் கடைபிடிக்காத மரங்கள் எளிதில் கீழே சாய்வதோடு கிருமிகளின் தாக்குதலுக்கும் நோய்த் தொற்றுக்கும் ஆளாகின்றன.

குறிப்பிட்ட நிலப்பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட மரத்தை மனிதர்கள் முனைந்து வேறு இடத்தில் வளரச் செய்தால் அவை கைவிடப்பட்ட பிள்ளைகளைப் போலச் சிரமப்படுகின்றன என்கிறார். பருவம், தட்பவெப்பம், நிலவமைப்பு போன்றவற்றின் மாற்றத்தோடு இனத்தையும் உறவினர்களையும் தாயையும் விட்டுப்பிரிந்த குழந்தைகளைப்போன்ற தவிப்பை அவை உணர்வதாகக் கூறுகிறார்.

புலம்பெயர்ந்த சிக்கோயா மரங்கள்

சிக்கோயா என்னும் இராட்சத செம்மரம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சியாரா நிவாடா மலைத் தொடரில் வளர்வது. 150 முதல் 280 அடி உயரம் வரை வளரக்கூடிய சிக்கோயா உலகிலேயே அதிக உயரமான மரம். பல நூறு ஆண்டுகள் வாழக்கூடியது, இந்தப் பகுதியில் 3200 ஆண்டுகள் வயதான சிக்கோயா மரம் ஒன்று இருக்கிறது. ஸ்வீடனில் இருக்கும் ஊசியிலை மரமொன்றின் வயது 9500 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. மனிதர்களின் சராசரி வாழ்நாளைவிடவும் சுமார் 115 மடங்கு அதிகம். உலகிலேயே அதிக வயதான உயிரினம் மரங்கள்தான் என்பது விவரிக்கமுடியாத உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இந்தப் பூமியில் நிகழ்ந்த மாற்றங்களையெல்லாம் பார்த்த ஓர் உயிரினத்திடம் நம்மிடம் பகிர்ந்துகொள்ள எத்தனைக் கதைகளும் தகவல்களும் பாடங்களும் இருக்கும் என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றி மறைந்தது.

இந்தச் சிக்கோயாக்களை ஐரோப்பிய அரச குடும்பத்தவர்களும் அரசியல்வாதிகளும் தங்களின் அமெரிக்கப் பயணத்தின்போது வசீகரமான பரிசுப்பொருளைப்போல எடுத்து வந்து ஐரோப்பிய நகரப் பூங்காக்களில் நட்டார்கள். இப்படிப் பூங்காக்களில் நடப்பட்ட மரங்களின் வளர்ச்சியில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. சுமார் 150 வயதான மரங்கள்கூட 160 அடிக்கு மேல் வளரவில்லை. முழுவளர்ச்சியடைந்த சிக்கோயாக்களின் வயதோடு ஒப்பிடும்போது இவை இன்னும் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றன என்றாலுமே மேல்நோக்கி வளர்வதைவிடப் பக்கவாட்டில் அதிகமாக வளர்ந்தன. இதற்குக் காரணம் உறவினர்களின் வழிநடத்தல் இல்லாதது என்கிறார் பீட்டர் வூலீபன்.

தொடக்கத்தில் குட்டி மரங்கள் புது இடத்தில் இருக்கும் இடர்ப்பாடுகளைக் கண்டுகொள்வதில்லை. பக்கத்தில் அம்மா இல்லாததால் வேண்டிய மட்டும் உணவு சமைத்து இஷ்டப்படி சாப்பிடும். தோட்டக்காரர்கள் பாசத்தோடு கவனித்து நீரூற்றுவதால் வேர்கள் நீளமாக வளராதது பற்றிக் கவலைப்படுவதில்லை. புத்திமதி சொல்லிக் கட்டுப்பாட்டோடு இருக்கவேண்டிய அவசியத்தைச் சொல்லித்தர யாருமில்லை. “இன்னும் நூறு வருடம் பொறுமையாக இரு” என்றோ “செங்குத்தாக வளரவில்லையென்றால் போதிய சூரியவெளிச்சம் கிடைக்காது” என்றோ அறிவுறுத்த யாருமில்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு மனிதர்களின் பராமரிப்புக் குறையும்போது வளர்ச்சியைச் சரிசெய்துகொள்வதற்கான காலம் கடந்திருக்கும்.

மரம் நடக்குமா 

மற்ற உயிரினங்களைப் போலவே மரங்களும் உணர்ச்சிகளையும் தகவலையும் பரிமாறிக்கொள்ளும் என்றாலும் அவை ஒரே இடத்தில் நிலைமாறாமல் இருக்கும் என்பதுதான் நாமறிந்த உண்மை. நடக்கும் மரத்தைப் பற்றிப் படித்தபோது ஆச்சரியம் ஏற்பட்டது. நீங்கள் இந்த மரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படும் சாக்ரடீயா எக்ஸார்ஹிஸா என்ற அறிவியல் பெயரைக்கொண்ட மரத்தை ‘நடக்கும் பனை’ என்று மக்கள் அழைக்கிறார்கள். இந்த மரம் வித்தியாசமான வேர் அமைப்பைக் கொண்டிருக்கிறது. பொதுவாக மரங்களுக்கு ஒரே ஒரு நடுப்பகுதி இருப்பதுதான் வழக்கம். இந்த நடக்கும் பனை மரத்தின் வேர் நிலத்துக்கு மேலே எழுந்து பல சின்ன வேர்களாகப் பிளக்கிறது. இதைப் பார்க்கும்போது பல கால்களைக் கொண்டிருப்பதுபோலத் தோற்றம் அளிக்கிறது.

நிலத்தில் மண்ணரிப்பு ஏற்படும்போது பக்கத்தில் வலுவாக இருக்கும் நிலப்பகுதியில் புதிய வேர்கள் முளைக்கின்றன. பழைய வேர்களுக்கு நிலத்தோடு தொடர்பற்றுப் போகும்போது மேலே எழும்பி நிற்பதுபோல இருக்கிறது. நீரும் சூரிய ஒளியும் இருக்கும் திசையில் புதிய வேர்கள் முளைக்கின்றன என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும் எதையும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. தாவரவியலாளர்கள் இது குறித்து ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இனி யாரையும் ‘மரம் மாதிரி நிற்கிறாயே’ என்று சொல்வதற்கு முன்னால் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.