எப்போது எப்போது என்று காத்திருந்த கொண்டாட்டம் ஒருவழியாக வந்தேவிட்டது. திண்ணை காலியாகும் வரை காத்திருந்து இடம் பிடித்த தம்பி பற்றிய பழமொழியும் கூடவே நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. எதைப் பற்றிச் சொல்கிறேன் என்பது இன்னுமா புரியவில்லை. வேல்ஸ் நாட்டு இளவரசரான மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவைத்தான் குறிப்பிடுகிறேன்.

தன்னுடைய நாற்பதாவது வயதுமுதல் அரியணை ஏறவேண்டும் என்ற துடிப்பில் இருந்தார் இளவரசர் சார்லஸ். அதற்காகவென திரைமறைவில் காய் நகர்த்தினார். அடுத்தடுத்து வந்த நாட்டின் தலைவர்களிடமும் தன்னுடைய ஆவலைச் சொல்லிப் பார்த்தார். ஆனால் ஒரு பலனும் இல்லை. தாய் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஏனோ மகனுக்கு வழிவிட்டுப் பதவி விலகும் எண்ணம் சிறிதும் இல்லை. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகாராணி மறைந்த பின்னர்தான் பிரிட்டனின் மன்னராக  அறிவிக்கப்பட்டார் மூன்றாம் சார்லஸ்.

இளவரசர் சார்லஸின் முடிசூட்டு விழா லண்டனில் இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் ஆப்பி தேவாலயத்தில் 2023ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று விழா நடக்கப்போவதால் மே 8ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 6ஆம் தேதி முதல் அடுத்த மூன்று நாட்களும் சார்லஸ் மன்னரும் அவர் மனைவியான அரசி கமில்லாவும் எந்தெந்த விழாவில் பங்கெடுப்பார்கள் என்பது முடிவுசெய்யப்பட்டுவிட்டது. கூடவே சமூக வலைத்தளத்தில் இந்த விழாவில் யார் யார் பங்குகொள்வார்கள், யார் வரமாட்டார்கள், யாரை அழைக்கமாட்டார்கள் என்ற அக்கப்போரும் தொடங்கிவிட்டது. குறிப்பாக, சார்லஸின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி வந்தாலும் மருமகள் மேகன் மார்கில் வரமாட்டார் எனப்படுகிறது.

சார்லஸும் கமில்லாவும் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஆப்பி தேவாலயத்துக்கு ஆறு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் செல்வார்கள். அங்கே செயிண்ட் எட்வர்டின் மணிமுடி என்றழைக்கப்படும் கிரீடம் இளவரசர் சார்லஸுக்கு அணிவிக்கப்படும். 11ஆம் நூற்றாண்டில் இதேபோன்ற மணிமுடியை அணிந்துகொண்டு சிறப்பாக ஆட்சிபுரிந்த எட்வர்ட் மன்னரைக் கௌரவிக்கும் வகையில் அவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் அலெக்சாண்டர் என்ற போப் இந்த எட்வர்ட் மன்னரைப் புனிதராக அறிவித்தார். அன்றுமுதல் செயிண்ட் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்.

அதுசரி, 11ஆம் நூற்றாண்டு தொடங்கி பல மன்னர்கள் அல்லது அரசியரின் தலையை அலங்கரித்த எட்வர்ட் மன்னரின் மணிமுடி என்ன ஆனது? 1649ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மன்னராட்சியை ஒழிக்கவேண்டும் என்பதற்காக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களை வழிநடத்திய ஆலிவர் கிரோம்வெல் என்ற அரசியல் தலைவர் மன்னராட்சியின் குறியீடாக இருந்த மணிமுடியை விற்றுவிட்டார். ஆனால் ஆலிவர் கிரோம்வெல்லின் மறைவுக்குப் பிறகு, 1660இல் பிரிட்டனில் மீண்டும் மன்னராட்சி நடைமுறைக்கு வந்தது.

1661ஆம் ஆண்டில் இரண்டாம் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றார். அப்போது அவருக்காகத் தனிச்சிறப்புமிக்க மணிமுடியொன்று உருவாக்கப்பட்டது. தங்கத்தாலான் இந்த மணிமுடியில் நீலமணி, முத்து, மரகதம், கெம்பு போன்ற எனப் பல வண்ணத்தாலான அரிய கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். அதன் மேற்புறம் ஊதா வண்ண மென்பட்டினால் மூடப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட இரண்டரை கிலோ எடை இருக்கும். இரண்டாம் சார்லஸ் அணிந்த மணிமுடியைத்தான் கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் கழித்து மூன்றாம் சார்லஸ் தன் பதவியேற்பின்போது சூடிக்கொள்ளப் போகிறார்.

முக்கியமான அரசாங்க நிகழ்வுகளின்போது அணிந்துகொள்ளப்படும் இந்த மணிமுடி பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் குறியீடாக இருக்கிறது. முடிசூட்டு விழா முடிந்ததும் லண்டன் டவரில் இருக்கும் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டப்படும். இந்தக் காலத்தில் அரசராக இருந்தாலும் தினசரி மணிமுடியை அணிந்துகொண்டு வலம்வர முடியாதே.

பழைய பாரம்பரியமான கொண்டாட்டத்தோடு சமூக ஊடகங்கள் கோலோச்சும் தற்காலத்துக்கு ஏற்றவாறு முடிசூட்டு விழாவின் நினைவாக ஏதாவது செய்யவேண்டுமே. சார்லஸ், கமில்லா இருவரின் மே மாத முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் புதிய எமோஜி ஒன்று இந்த வாரம் வெளியானது. மேலே சொன்ன செயிண்ட் எட்வர்டின் மணிமுடியை எமோஜியாக வடிவமைத்திருக்கிறார்கள். ட்விட்டர் நிலைத் தகவலில் முடிசூட்டு விழாவோடு தொடர்புடைய Coronation, Coronation Weekend ஆகிய ஆங்கிலச் சொற்களை ஹாஷ்டேகாகப் பயன்படுத்தும்போது இந்த எமோஜியும் கூடவே பதிவாகும்.

இந்த சமூக வலைத்தள உருவப்படங்களை வெளியிடும் வழக்கத்தை தொடங்கி வைத்தவர் சார்லஸின் தாய் எலிசபெத். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது அரசாட்சியின் எழுபதாம் ஆண்டு பிளாட்டினம் விழாவைக் கொண்டாடினார். அப்போது மகாராணிக்குப் பிரியமான கார்கி இன நாய் தலையில் இந்த செயிண்ட் எட்வர்டின் மணிமுடியை அணிந்திருப்பதுபோன்ற சமூக வலைத்தள உருவப்படங்களை வெளியிட்டார்கள். பிரிட்டன் மகாராணியின் செல்ல நாயாகப் பிறப்பதும் பிரிட்டிஷ் அரசர்களின் மணிமுடியை ஓவியத்திலாவது அணிந்துகொள்ளும் வாய்ப்பும் எல்லோருக்கும் வாய்த்துவிடுமா என்ன.

(தொடரும்)

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
 2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
 3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
 4. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
 5. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
 6. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
 7. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
 8. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
 9. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
 10. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
 11. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
 12. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
 13. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
 14. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
 15. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
 16. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
 17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
 18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
 19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
 20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
 21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
 22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
 23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
 24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
 25. நாம் வாழும் காலம் : கார்குழலி