நாம் வாழும் காலம் – 14

இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பண்டைய எகிப்தோடு தொடர்புடைய செய்தி ஒன்றைப் படித்தேன். எகிப்திய மன்னர் குஃபு புதைக்கப்பட்ட கீஸா பிரமிடின் அருகில் மண்ணுக்குள் புதைந்திருந்த பிரம்மாண்டமான சூரிய கப்பல் கீஸா அருங்காட்சியகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. உலகிலேயே மரத்தாலான மிகவும் பெரியதும் பழைமை வாய்ந்ததுமான கைவினை பொருளை பாதுகாத்து வைப்பதற்காக இதைச் செய்வதாக எகிப்திய அரசாங்கம் சொன்னது. 4600 வருடம் பழைமை வாய்ந்த அந்தக் கப்பல் 126 மீட்டர் நீளமும் 20 டன் எடையும் கொண்டது. 1954-ஆம் ஆண்டு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் மறுமையில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால் மன்னரை வானுலகுக்கு அழைத்துச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

முதலாம் உலக அதிசயம் 

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்திய கீஸா பிரமிடும் அதைச் சுற்றியுள்ள பிரமிடு தொகுதியும் சுவையான இரகசியங்களை உள்ளடக்கிய கட்டட அமைப்பாக இருக்கின்றது. பிரமிடின்  கூர்ங்கோபுர வடிவமும் பரந்து விரிந்த மணல்வெளியில் மனிதனால் கட்டமைக்கப்பட்டது என்பதாலும் அவற்றைக் குறித்த செய்திகளை அறிந்துகொள்வதில் ஆவல் ஏற்படுகிறது. அகழ்வாராய்ச்சியாளர்களோடு கூடவே இயற்பியல் வல்லுனர்களும் பொறியாளர்களும் இணைந்து பிரமிடுகள் ஏன், எதற்கு, எப்படிக் கட்டப்பட்டன என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். ஓரளவுக்கு விடை தெரிந்துவிட்டது என்றாலும் தோண்டத் தோண்ட இன்னுமின்னும் புதிய தகவல்களும் பரிமாணங்களும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

எகிப்திய பிரமிடுகள் பண்டைய எகிப்தின் தலைநகராகவும் முக்கியமான நகரங்களுள் ஒன்றாகவும் இருந்த மெம்ஃபிஸ் நகரை ஒட்டிய பகுதியில் இருக்கும் சிதிலங்களுக்கு இடையே காணப்படுகின்றன. இந்தப் பிரமிடு தொகுதிகளும் அவற்றைச் சுற்றியுள்ள ஊர்களும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் கலாசார அமைப்பான யுனஸ்கோவின் உலகப் பாரம்பரிய களங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் மட்டுமில்லாமல் சூடான், மெக்ஸிகோ, கிரீஸ், இத்தாலி, ஜாவா, கம்போடியா, பெரு, அமெரிக்கா எனப் பல நாடுகளில் பிரமிடுகளும் அவற்றையொத்த கட்டட அமைப்புகளும் இருக்கின்றன. இவை வழிபாட்டுத் தலங்களாகவும் இறந்தவர்களின் மறுமைக்கான தலங்களாகவும் இருந்தன.

பிரமிடுகள் நைல் ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்திருப்பதற்கு தத்துவார்த்தமான காரணம் சொல்லப்படுகிறது. பண்டைய எகிப்தியர்களின் வாழ்வோடு சூரியன் பின்னிப் பிணைந்திருந்தது. மேற்கில் மறையும் சூரியன் மறுநாள் மீண்டும் பிறப்பது போலவே இறந்து போன எகிப்திய பாரோக்களின் ஆன்மா நிலைபேறுடைய வாழ்க்கையைப் பெறும் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது.

குஃபு மன்னனின் கீஸா பிரமிடு 

கீஸாவில் இருக்கும் மூன்று முக்கியமான பிரமிடுகள் மன்னர்கள் குஃபு, கஃப்ரே மற்றும் மென்கவுரே ஆகியோருடையவை. இவற்றுள் கீஸா பிரமிடு என்றும் பெரிய பிரமிட் என்றும் அழைக்கப்படுவது மிகவும் பெரியதும் பழமையானதும் ஆகும். கி.மு. 2613-க்கும் 2494-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மன்னன் குஃபுவுக்காக கட்டப்பட்டது. தன்னுடைய இருபதாவது வயதில் அரியணை ஏறியவன் பெரிய பிரமிட் எனப்படும் கூர்ங்கோபுரத்தை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டான்.

உலகிலேயே இதுவரை மனிதனால் எழுப்பப்பட்ட மிக உயரமான கட்டடம் குஃபுவின் பிரமிட் தான். கட்டப்பட்ட போது அதன் உயரம் 147 மீட்டர் ஆகும். கீஸா பிரமிடின் அடிப்பகுதியின் ஒவ்வொரு பக்கமும் சுமார் 230 மீட்டர் நீளமாகும். அதன் சாய்வு பக்கங்கள் 51 பாகை கோணத்தில் அமைந்திருப்பதோடு திசை காட்டும் கருவியின் நான்கு முதன்மைப் புள்ளிகளோடு ஒத்திசைந்தும் காணப்படுகிறது. கூடவே சூரியக் கடிகாரமாகவும் இருக்கிறது. கல்லில் குறிக்கப்பட்டு இருக்கும் அடையாளத்தின்மீது விழும் நிழலைப் பார்த்து நேரத்தைச் சொல்லமுடியும். வானில் சூரியனின் பயணத்தைக் கணக்கிடும் சூரிய நாட்காட்டியாகவும் இருந்திருக்கலாம்.

பண்டைய எகிப்தியர்களின் தொழில்நுட்பத் திறனுக்கும் நுட்ப கட்டடக் கலை குறித்த அறிவுக்கும் சான்றாக இருக்கிறது கீஸா பிரமிட். இதன் உட்புறம் மஞ்சள் வண்ண சுண்ணாம்புக் கல்லாலும் வெளிப்புறச் சுவர் வழவழப்பான இளம் வண்ண சுண்ணாம்புக் கல்லாலும் மன்னரின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் உள்ளறை கருங்கல்லாலும் ஆனது. 5.75 டன் எடையுள்ள இந்தப் பிரமிடை அமைப்பதற்காகக் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் கற்கள் வெட்டப்பட்டு இந்த இடத்துக்குக் கொண்டுவரப்பட்டன. பிரமிடின் நுழைவாயில் வடக்குப் பகுதியில் நிலத்தில் இருந்து 18 மீட்டர்களுக்கு மேலே அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கீழ்நோக்கிச் செல்லும் சாய்வான பாதை அரசி மற்றும் மன்னர் புதைப்பட்டிருக்கும் அறைகளுக்கு இட்டுச் செல்கிறது.

கீஸாவில் இருக்கும் மூன்று பிரமிடுக்கும் அருகே பிணவறைக் கோயிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இறந்த மன்னனுக்கு தேவைப்படும் உணவும் பொருட்களும் இங்கே காணிக்கையாக படைக்கப்படும். இந்தப் பிணவறைக் கோயிலில் மண்டபம், கிடங்கு, நீள வடிவிலான வழிபாட்டு அறைகள், தொழுகையிடம் மற்றும் காணிக்கைளை அடுக்கி வைக்கும் மேசை ஆகியவை இருக்கின்றன. பூசாரிகள் ஒவ்வொரு நாளும் நீத்தார் சடங்குகளைச் செய்வதோடு இறந்த மன்னனின் காவல் ஆத்மாவுக்கு காணிக்கைகளைப் படைக்கிறார்கள்.

மன்னர் குஃபுவின் பிரமிடுக்கு அருகே அவருடைய தாய் அரசி ஹெடஃபெரஸ் புதைக்கப்பட்ட அறை இருக்கிறதுது. இங்கே கல்லால் ஆன காலி சவப்பெட்டியைச் சுற்றிலும் இருக்கும் மேசை நாற்காலி போன்ற பொருட்களும் நகைகளும் பண்டைய எகிப்திய கைவினைஞர்களின் கலைத்திறனுக்கும் நேர்த்திக்கும் சான்றாக இருக்கின்றன. பண்டைய காலத்திலும் இடைக்காலத்திலும் பிரமிடுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த விலைமதிப்புமிக்க பொருட்கள் வெவ்வேறு நபர்களால் சூறையாடப்பட்டன. மன்னரோடு புதைக்கப்பட்ட அரிய பொருட்களும் ஆபரணங்களும் திருடப்பட்டன. அதோடு கீஸா பிரமிடின் கற்கள் திருடப்பட்டுவிட்டதால் அதன் தற்போதைய உயரம் 138 மீட்டராக இருக்கிறது.

பிரமிடின் கட்டுமானக் கதை 

இத்தனை பெரிய பிரமிடு எப்படிக் கட்டப்பட்டது என்பது குறித்த ஆராய்ச்சியும் அலசலும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரமிடு கட்டப்படும் இடத்தைச் சுற்றிலும் செங்கல், மண், மணலால் ஆன சாய்வான மேடு ஒன்றை எழுப்பி பிரமிடு உயர உயர மேட்டின் உயரமும் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரமிட் கட்டுவதற்கான சுண்ணாம்பு கற்களை சறுக்கூர்தி, உருளை, நெம்புகோல் ஆகியவற்றின் உதவியால் மேலே ஏற்றியிருக்கலாம்.

மன்னன் குஃபுவைப் பற்றி கிரேக்க வரலாற்றியலாளர் ஹெரோடெட்டஸ் எழுதிய குறிப்பில் கொடூரமானவன் என்றும் கொடுங்கோலன் என்றும் அவன் ஆசைப்பட்ட பிரமிடைக் கட்டி முடிப்பதற்காக மக்களை அடிமைப்படுத்தினான் என்கிறார். பெரிய பிரமிடை கட்டி முடிக்க நூறாயிரம் பணியாளர்கள் 20 ஆண்டுகள் உழைத்தார்கள் என்கிறார். ஆனால் வேறு சில குறிப்புகள் அவனொரு மரபார்ந்த தலைவன் என்றும் மக்களின் நலனுக்காக செயல்பட்டான் என்றும் கட்டடப் பணியில் ஈடுபடுவதற்காகவென தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களின் உழைப்பில் பிரமிடைக் கட்டினான் என்றும் கூறுகின்றன. 1980-களிலும் 90-களிலும் பிரமிடைச் சுற்றி நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இதைத்தான் சுட்டுகின்றன. பிரமிடு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் கைவினைஞர்கள் ஆகியோரின் நினைவிடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை மண், செங்கல், கல் போன்ற பலவகை பொருட்களாலானவை. இவற்றில் இருக்கும் ஹீரோக்ளிஃப் எனப்படும் சித்திர எழுத்துக்களின் இறந்தோரின் பெயரையும் மற்ற தகவல்களையும் குறிப்பிடுகின்றன.

பணியாளர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளிகள் என்பதால் விவசாய நிலத்தில் வேலை குறைவாக இருந்த காலத்தில் மட்டுமே பிரமிட் கட்டுமான பணியில் ஈடுபட்டதாக எண்ணப்படுகிறது. பணியாளர்களில் ஒரு குழுவினர் நிரந்தர பணியாளர்களாகவும் மற்றவர்கள் காலத்துக்கேற்ப பணியில் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது. கூடவே மருத்துவர்கள், பூசாரிகள், சமையற்காரர்கள் ஆகியோரும் கட்டடப் பணியில் ஈடுபட்டார்கள் என்று கூறப்படுகிறது. பணியாளர்களுக்கென இருப்பிடங்களும் அடுமனைகளும் கிடங்குகளும் பட்டறைகளும் இருந்தது தெரிய வந்துள்ளது.

கீஸாவின் பெரிய இஸ்பிங்ஸ் 

கீஸாவில் இருக்கும் பெரிய பிரமிடுக்கு தெற்கே எகிப்திய பெரிய இஸ்பிங்ஸின் சிலை கஃப்ரே மன்னனின் காலத்தில் அமைக்கப்பட்டது. 73 மீட்டர் நீளமும் 20 மீட்டர் உயரமும் கொண்ட இஸ்பிங்ஸ் விலங்கு உடலும் மனிதத் தலையும் கொண்டது. ஒற்றை சுண்ணாம்புக் கல்லில் உருவாக்கப்பட்ட இது கஃப்ரே மன்னனின் உருவச் சிலை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குஃபு மன்னனின் சாடையில் இருப்பதால் அவர் நினைவாக மகன் கஃப்ரேயால் அமைக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு.

இஸ்பிங்ஸ் பண்டைய எகிப்தியரின் உருவாக்கமாக இருந்தாலும் கிரேக்கத் தொன்மங்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த வினோதமான உயிரினத்தைப் பற்றி முதலில் எழுதிய ஹெசோய்ட் என்ற கிரேக்க எழுத்தாளர் இதை ஃபிக்ஸ் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்.

தெப்ஸின் இஸ்பிங்ஸூம் ஈடிபஸூம் 

பியோஷே தெப்ஸை சேர்ந்த இறக்கையுடைய இஸ்பிங்ஸின் கதை பிரசித்தி பெற்றது. சோஃபாக்ளிஸ் எழுதிய ஈடிபஸ் மன்னனின் கதையை  நீங்களும் படித்திருக்கலாம். இந்த இஸ்பிங்ஸ் தெப்ஸ்ஸூக்கும் டெல்ஃபிக்கும் இடையே இருந்த குன்றின் மேல் படுத்துக்கொண்டு அந்தப் பக்கமாக வரும் பயணிகளிடம் விடுகதை ஒன்றைக் கேட்கும், சரியான பதில் சொல்லாதவர்களை விழுங்கிவிடும். அந்த விடுகதை இதுதான்:

“ஒற்றைக் குரலோடு இருக்கும்.

பிறகு நான்கு காலோடு இருக்கும்.

அடுத்து இரண்டு காலோடு இருக்கும்.

அப்புறம் மூன்று காலோடு இருக்கும். அது என்ன?”

இதே விடுகதையை சின்ன மாற்றத்தோடு என் இளவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

“தத்தக்கா பித்தக்கா நாலு கால்.

தானே நடந்தா இரண்டு கால்.

உச்சி பழுத்தா மூன்று கால்.

ஊருக்குப் போனால் பத்து கால்.

அது என்ன?”

இதற்குப் பதில் சொல்ல முடியாமல் பல பேர் இறந்து போனார்கள். இறுதியில் இந்த விடுகதைக்கு பதிலை ஈடிபஸ் தருகிறான். “மனிதன் குழந்தையாக இருக்கும்போது நாலு காலில் தவழ்கிறான். வளர்ந்ததும் இரண்டு காலில் நடக்கிறான். வயதானதும் தடியை ஊன்றிக்கொண்டு மூன்று காலில் நடக்கிறான்.” ஈடிபஸ் சரியான பதிலைச் சொன்னதும் இஸ்பிங்ஸ் கடலில் விழுந்து தன்னையே மாய்த்துக்கொண்டாள். இந்தக் கதையில் இருந்துதான் இஸ்பிங்ஸ் எல்லாம் அறிந்தவள், அறிவு நுட்பம் கொண்டவள் என்ற கருத்து உருவாகியிருக்கலாம்.

உலகக் கலாசாரத்தில் இஸ்பிங்ஸ் 

கிரேக்கம் முதல் ஆசியா வரையில் பல கலாசாரங்களில் இஸ்பிங்ஸையோ அதையொத்த தோற்றத்தைக் கொண்ட உயிரினத்தையோ பார்க்கமுடிகிறது. கிரேக்க பாரம்பரியத்தில் இஸ்பிங்ஸ் பெண் முகமும் சிங்கத்தின் உடலும் பறவையின் இறக்கைகளையும் கொண்ட பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறது. துரோகம் இழைப்பவளாகவும் கருணையற்றவளாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எகிப்திய  இஸ்பிங்ஸ் பெரும்பாலும் நற்செயலும் வலிமையும் கொண்ட ஆணாகவும் கோயில்களின் வாயிற்காப்போனாகவும் இருக்கிறது. பாலினம் சார்ந்த இந்த முரண் குறித்த விரிவான ஆய்வை பிரின்ஸ்டன் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த சமூக ஆய்வாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய கலாசாரத்தில் இஸ்பிங்ஸ் ஓர் அலங்கார வடிவமைப்பாக மட்டுமே இருக்கிறது.

இந்தியாவிலும் தெற்காசியாவிலும் சிங்க முகமும் மனித உடலும் கொண்ட புராணகால உயிரினங்களின் சிற்பங்களை காணமுடிகிறது. வடமொழியில் புருஷமிருக என்றும் தமிழில் புருஷமிருகம் என்றும் அழைக்கப்பட்ட இதன் சிற்பம் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கிறது. தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் யாளி சிற்பத்தையும் இன்னொரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இலங்கை, மியன்மார், தாய்லாந்து கலாசாரத்திலும் நரசிம்மா, மனுசிஹ, மனுதிஹ,நோரா நைர், தெப்நோரசிங் என பல பெயரில் அழைக்கப்படுகிறது இந்த புருஷமிருகம்.

சைவ மதத்தின் புராணத்தில் சிவபெருமான் சரப உருவம் கொண்டு நரசிம்ம அவதாரத்தின் கோபத்தைத் தனித்த கதை இருக்கிறது. சரபம் மனித சிங்க உடலின் கலவையாகவும் சிங்க முகமும் பறவையின் இறக்கைகளும் கொண்டிருப்பதோடு வலிமையும் ஆற்றலுமிக்க உயிரினமாகக் கருதப்படுகிறது. வைணவ புராணத்தில் இந்த சரபத்தின் கோபத்தை தனிப்பதற்காக மகாவிஷ்ணு கண்டபேருண்ட என்ற இரண்டு தலை கொண்ட பறவையின் உருவத்தைக் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

புத்த மதத்தின் ஜாதகக் கதைகளில் சரபம் புத்தரின் முந்தைய பிறப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. திபெத்திய புத்த ஓவியங்களில் செய்முயற்சியின் செம்மைவாதத்தை குறிப்பதாக கருதப்படுகிறது. ஆக, பண்டைய கிரேக்க எகிப்திய இஸ்பிங்ஸ் குறித்த மரபும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் அற்றுப்போய்விட்டது. ஆனால் ஆசியாவில் அது இன்னும் புழக்கத்தில் இருந்து வருகிறது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
  2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
  3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
  4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
  5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
  6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
  7. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
  8. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
  9. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
  10. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
  11. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
  12. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
  13. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
  14. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
  15. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
  16. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
  17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
  18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
  19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
  20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
  21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
  22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
  23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
  24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
  25. நாம் வாழும் காலம் : கார்குழலி