பாரதியின் சிட்டுக்குருவியைப் போலத் தங்குதடையில்லாமல் வானில் பறந்து திரிய யாருக்குத்தான் மனமிருக்காது. எமிலி டிக்கின்ஸன் வாழ்க்கையைப் பறத்தலோடு ஒப்பிட்டு, எத்தனை உயரப் பறக்கிறோம் எவ்வளவு நேரம் காற்றில் இருக்கிறோம் என்பது முக்கியம் என்கிறார். “ஓ! நான் இந்தப் பூமியின் இனிமையற்ற பிணைப்புகளை விடுத்து வெள்ளி நிற இறக்கைகளில் ஏறி வானில் மகிழ்ச்சியோடு நடனமாடி இருக்கிறேன். சூரியனை நோக்கிப் பறந்து சென்று அங்கே களிப்போடு உருண்டு செல்லும் மேகங்களோடு சேர்ந்து நீங்கள் கனவிலும் கண்டிராத ஒரு நூறு விஷயங்களைச் செய்திருக்கிறேன்,” என்கிறார் ஜான் கில்லெஸ்பி மகீ என்ற கவிஞர், இவர் இரண்டாம் உலகப்போரில் விமானியாகவும் இருந்தார். இப்படி பறத்தலின் சுகம் மனிதர்களை ஏங்க வைத்தாலும் அது எல்லோருக்கும் எளிதில் கிட்டிவிடாத பேறு. அந்தக் கனவு கைகூடும் நேரத்தை இறுகப் பிடித்துக் கொள்பவர்கள் வெகு சிலரே.

சாதனைப் பெண் அமெலியா 

சற்றும் எதிர்பாராத சமயத்தில் விமானத்தில் பறக்கக் கிடைத்த வாய்ப்பின் போது பறப்பதுதான் தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியம் என்பதை இனம்கண்டார் அமெலியா இயர்ஹார்ட். உயிரோடு இருந்தபோது தன்னுடைய பறக்கும் சாதனைகளுக்காக உலக வீராங்கனையாகக் கொண்டாடப்பட்டவர், இன்றளவும் மக்களின் நினைவில் இருக்கிறார். அமெரிக்காவில் தேசிய வீராங்கனையாகப் போற்றப்படுகிறார். அவர் வாழ்க்கை சிறுவர்களுக்கான கதையாக எழுதப்பட்டு இருக்கிறது. இறந்த பின்பும் இன்று வரையிலும் அதிகம் பேசப்படுகிறார்.

அப்படி என்ன சாதனை புரிந்தார் அமெலியா இயர்ஹார்ட் என்று கேட்கிறீர்களா? ஐரோப்பிய அமெரிக்கக் கண்டங்களைப் பிரிக்கும் அட்லாண்டிக் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற சாதனை படைத்தவர். ஏற்கனவே அவர் குறித்துப் படித்திருந்தாலும் உலகைச் சுற்றிவரும் விமானப் பயணத்தை மேற்கொண்டபோது இந்தியா வந்திருந்தார் என்பது ஆச்சரியமூட்டும் செய்தியாக இருந்தது.

வான்பயணமும் தொழில்நுட்பமும் விமானங்களும் பெருமளவில் முன்னேற்றத்தை அடைந்திருக்கும் இன்றைக்கு அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கப் பயணிகள் விமானத்துக்கு எட்டு மணி நேரமாகிறது. கன்கார்ட் எனப்படும் ஒலியை விட விரைவாகச் செல்லும் அதிவிரைவு விமானம் நியூயார்க்கில் இருந்து இலண்டனுக்கு 3 மணிக்கும் சற்று குறைவான நேரத்தில் சென்று சேர்க்கிறது. ஆனால், ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னால் அதிநுட்ப திசைகாட்டும் கருவிகளோ வானூர்திகளோ இல்லாத காலத்தில் இந்தப் பயணத்துக்கு 20 மணி நேரம் ஆனது. கூடவே துணிச்சல்மிக்கவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் அபாயகரமான பயணமாகவும் இருந்தது. அப்படி துணிச்சலும் தைரியமும் மிகுந்த ஒரு பெண்ணாக இருந்தார் அமெலியா இயர்ஹார்ட். ஆனால் அந்தப் பயணத்தின்போது மர்மமான முறையில் இறந்ததால் அதற்காகவும் அதிகம் பேசப்படுகிறார்.

அட்லாண்டிக்கைக் கடக்கும் முயற்சி 

1927-ஆம் ஆண்டில் சார்ல்ஸ் லின்ட்பெர்க் என்ற அமெரிக்க விமானி அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியொருவராக விமானம் மூலம் கடக்கும் சாதனையைப் படைத்திருந்தார். அதற்கடுத்த வருடமே இந்த சாதனையைப் படைக்கும் வாய்ப்பு அமெலியாவைத்த தேடி வந்தது. 1928-ஆம் ஆண்டு வில்மர் ஸ்டுல்ஸ், லூயி கோர்டன் என்ற இரண்டு விமானிகளுடன் அட்லாண்டிக் பெருங்கடலின் மேலே பறந்தார். அப்போது அமெலியாவுக்கு இந்தப் பயணத்தைக் தனியாகச் செய்து சாதனை படைக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. தான் எண்ணியபடியே 1932-ஆம் ஆண்டு மே மாதம் அட்லாண்டிக் பெருங்கடலின் மேலே விமானத்தை ஓட்டிச்சென்று ஏறக்குறைய 15 மணி நேரத்துக்குப் பிறகு அயர்லாந்து நாட்டின் மேய்ச்சல் நிலமொன்றில் தரையிறங்கினார். இந்தச் சாதனைக்காக பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் உயரிடத்தைச் சேர்ந்தவர்களின் நட்பையும் பெற்றார். மென்மேலும் பல சாதனைகளைப் படைத்ததோடு விமானியாகும் ஆர்வம்கொண்ட பெண்களுக்கான வழிகாட்டியாகவும் பணிபுரிந்தார்.

அடுத்ததாக விமானத்தில் உலகைச் சுற்றி வந்து சாதனை படைக்கவேண்டும் என்று முடிவுசெய்தார். அவருக்கு முன் வேறு பலர் விமானத்தில் உலகைச் சுற்றி வந்திருந்தாலும் பூமத்திய ரேகையை ஒட்டி தன் பயணப் பாதையைத் திட்டமிட்டார். கிட்டத்தட்ட 47000 கிலோமீட்டர் தூர வான்வழிப் பயணம். துணைக்கு ஃபிரெட் நூனன் என்ற விமானி, அவரே வழிகாட்டியாகவும் இருந்தார். 1937-ஆம் ஆண்டில் ஃபிளோரிடாவில் இருந்து கிளம்பி முதலில் தென்னமெரிக்காவை அடைந்தார். அங்கிருந்து  ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் வடகிழக்கு ஆப்பிரிக்காவை அடைந்து தன்னுடைய பயணத்தின் 26-வது நாளில் ஒன்றுபட்ட இந்தியாவின் கராச்சி நகரத்தில் தரையிறங்கினார்.

அமெலியாவின் இந்தியப் பயண அனுபவம்

இந்தியாவில் தரையிறங்கிய நாட்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அமெரிக்க நாளிதழில் தான் எழுதி வந்த பத்தியில் குறிப்பிட்டு இருக்கிறார் அமெலியா. முதல் நாள் ஒட்டக சவாரி செய்தேன், ஒட்டகத்தின் திமிலுக்கு நடுவே ஏறி உட்காருவதும் அது நகரும்போது கீழே விழுந்துவிடாமல் இருப்பதும் பெரிய சாதனையாக இருந்தது என்று நகைச்சுவை கொப்பளிக்க எழுதுகிறார். பிறகு  அடுத்தகட்ட பயணத்துக்கு விமானத்தையும் அதன் எரிபொருள் மானியையும் சரிசெய்துகொண்டு கல்கத்தாவுக்குப் பறந்தார். வழியில் தார் பாலைவனத்தைப் பார்த்தார். அந்த மாபெரும் வறண்ட பகுதியில் வீசிய காற்று மண்ணைத் தூற்றி நிலத்தையே மறைத்துவிட்டது. அதைக் கடந்ததும் ஆங்காங்கே தெரிந்த மலை முகடுகள் மஞ்சள் வண்ணக் கடலில் நீந்தும் சுறா மீன்களின் துடுப்பைப் போல இருந்தன என்கிறார்.

மத்திய இந்தியாவின் மேல் பறந்தபோது வானம் மேகமூட்டமாக இருந்தாலும் கீழே தெரிந்த இருப்புப் பாதைகளின் வலைப்பின்னல் வழிகாட்டியது. ஆனால் கறுப்பு கழுகுகள் விமானத்தின் மீது மோதியது சிறிது கவலை ஏற்படுத்தியது. ஆக்ராவுக்கு மேலே பறந்தபோது கீழே இறங்கி தாஜ் மஹாலைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது என்கிறார். ஒரு வழியாக கல்கத்தாவை அடைந்ததும் விமானிகள் கொஞ்சம் ஓய்வெடுத்தனர். மறுநாள் காலையில் விடாது மழை பெய்ததால் குறித்த நேரத்தில் அடுத்தகட்ட பயணத்தை துவக்க முடியவில்லை. கங்கையின் கழிமுகத்தில் இருந்த சுந்தரவனத்தையும் பிரம்மபுத்திரா ஆற்றையும் கடந்து சென்ற வழியெல்லாம் நெல்வயல்களைப் பார்க்க முடிந்தது. தென்கிழக்கு ஆசியப்பகுதியைக் கடக்கும் வரையில் அடைமழை அடித்துப் பெய்ததில் விமானத்தின் வண்ணப்பூச்சு உரிந்துபோனது என்கிறார்.

உலகப் பயணத்தின் இறுதி கட்டம்

ஒரு வழியாகப் பசிஃபிக் பெருங்கடலில் இருக்கும் நியூ கினியை அடைந்தது விமானம். அங்கிருந்து தெற்கு பசிஃபிக்கில் இருந்த ஹௌலேண்ட் தீவுக்குச் செல்வதாகத் திட்டம். பிறகு அங்கிருந்து ஹோனலுலுவுக்குச் சென்று இறுதியில் கலிஃபோர்னியாவை அடைவது என்று திட்டமிட்டிருந்தார் அமெலியா. நியூ கினியில் இருந்து கிளம்பியதும் திடீரென நடுவானில் மறைந்தது விமானம். கடைசியாக ஹோனலுலுவுக்கு அருகில் நின்ற அமெரிக்க கடற்காவல் படையோடு வானொலி வழியாகத் தொடர்பு கொண்டிருந்தார் அமெலியா. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. அவர்களின் திடீர் மறைவு குறித்துப் பலவிதமான ஊகங்களும் கட்டுக்கதைகளும் இன்று வரையிலும் நிலவுகின்றன, அவற்றை உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கிடைக்கின்றன. என்றாலும் அமெலியாவுக்கும் ஃபிரெட்டுக்கும் என்ன ஆனது என்று உறுதியாக யாராலும் சொல்லமுடியவில்லை. 1939-ஆம் ஆண்டு அமெலியா இயர்ஹார்ட் இறந்துவிட்டார் என்று சட்டபூர்வமாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது.

உலகின் முதல் பெண் விமானி 

உலகில் விமானம் ஓட்டும் உரிமத்தைப் பெற்ற 16-வது பெண்மணி அமெலியா. அவருக்கும் முன்னரே பல பெண்கள் விமானிகளாக இருந்து வேறு பல சாதனைகளைப் புரிந்தனர். உலகின் முதல் பெண் விமானியின் பெயர் தெரியுமா? ஹாரியட் க்விம்பி. ரைட் சகோதரர்கள் விமானத்தை இயக்கிய எட்டு ஆண்டுகளில், அதாவது 1911-ஆம் ஆண்டில் விமானம் ஓட்டும் உரிமத்தைப் பெற்றார். அந்த நேரத்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்திருக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். விமானம் ஓட்டும் உரிமம்கூடக் கிடைத்துவிடும் ஆனால் நாட்டை யார் ஆள்வது என்பதைப் பெண்கள் முடிவுசெய்யமுடியாது என்று நினைத்தார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஹாரியட் விமானியாவதற்கு முன்னால் எழுத்தாளராக இருந்தார். நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் பத்திகளும் கட்டுரைகளும் எழுதினார். அப்போது அமெரிக்காவில் அதிக அளவில் நடைபெற்ற விமானக் காட்சிகளோடு பயணம்செய்து அதுகுறித்த அனுபவத்தைக் கட்டுரைகளாக எழுதினார். இவை பெண்கள் விமானம் ஓட்டும் துறையைத் தேர்ந்தெடுக்க பெருமளவில் உதவின.

ஊடகங்களின் செல்லப் பெண்ணாக இருந்ததோடு விளம்பரங்களிலும் நடித்தார் ஹாரியட் க்விம்பி. பிறகு ஹாலிவுட்டில்  குறும்படங்களின் திரைக்கதை எழுத்தாளராகவும் வெற்றிபெற்றார், அவற்றில் ஓரிரு குறும்படங்களில் தானே நடிக்கவும் செய்தார்.

1912-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் பிரான்ஸூக்கும் இடையே இருந்த இங்கிலிஷ் சேனல் கடற்பகுதியை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் ஹாரியட் க்விம்பி. எதிர்பாராதவிதமாக, அதே ஆண்டு பாஸ்டன் நகரில் நிகழ்ந்த விமான விபத்தொன்றில் உயிரிழந்தார்.

இந்தியாவின் முதல் பெண் விமானி

இந்தியாவின் முதல் பெண் விமானியான சர்ளா துக்ரல் விமானம் ஓட்டும் உரிமத்தை 1936-ஆம் ஆண்டில் பெற்றார். தன்னுடைய 21-வது வயதில் பாரம்பரிய உடையான புடவையைக் கட்டிக்கொண்டு விமானத்தில் ஏறியமர்ந்து உயரப் பறந்தபோது அவர் பெயர் வரலாற்றில் இடம்பெற்றது.

லாகூர் பறக்கும் சங்கத்தின் விமானத்தைத் தொடர்ச்சியாக ஆயிரம் மணி நேரம் ஓட்டி முடித்து முதல் தர விமானிகளுக்கான உரிமத்தைப் பெற்றார் சர்ளா. அவருடைய முதல் கணவர் பி.டி. ஷர்மாவும் புகுந்த வீட்டினரும் விமானிகளாக இருந்ததால் சர்ளாவின் ஆர்வத்தை ஊக்குவித்ததோடு பக்கபலமாகவும் இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக 1939-ஆம் ஆண்டில் அவருடைய கணவர் விமான விபத்தொன்றில் இறந்தார். அதே சமயத்தில் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. இது சர்ளா பயணிகள் விமானம் ஓட்டும் உரிமத்தைப் பெறுவதற்குத் தடையாக இருந்தது.

கணவரின் துணையின்றி மகளை வளர்க்கவேண்டி இருந்ததால் பணிக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உடனே மனம்தளராமல் ஓவியம் மற்றும் நுண்கலையில் பட்டயப் படிப்பை முடித்தார். பின்னர் ஓவியராகவும் ஆடை மற்றும் ஆபரண வடிவமைப்பாளராகவும் வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் சாதனை படைத்தார் சர்ளா. 2021-ஆம் ஆண்டு சர்ளா துக்ரலின் பிறந்தநாள் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக ‘கூகுள் டூடில்’ ஒன்றை வெளியிட்டு அவரைக் கௌரவித்தது கூகுள் நிறுவனம்.

உலகின் முதல் பெண் போர் விமானி யார்

உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும், உலக நாடுகளிடையே போர் மூளக் கூடாது என்று உலகத் தலைவர்களும் மனித நேயர்களும் முயற்சி எடுத்து வருகிறார்கள். என்றாலும் எல்லாத் துறைகளிலும் பாலின பேதமின்றி ஆண்களும் பெண்களும் பணியாற்றிவரும் காலத்தில்  இராணுவத்திலும் விமானப் படையிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு என்பது முக்கியமான நகர்வாக இருக்கிறது. இதற்கான வித்து 1900-களின் துவக்கத்திலே விதைக்கப்பட்டது

பல்கேரியாவைச் சேர்ந்த ரேய்னா கசபோவா 1912-ஆம் ஆண்டு நடந்த முதலாம் பால்கன் போரில் விமானத்தில் இருந்தபடியே போர்புரிந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார். துருக்கியைச் சேர்ந்த சபிஹா கோக்சென் 1936-ஆம் ஆண்டில் உலகின் முதல் போர் விமானி என்று அறியப்பட்டார். துருக்கியைச் சேர்ந்த லெமன் அல்டின்செக்கிச் நேட்டோ நாடுகளில் முதல் சான்றுபெற்ற பெண் போர் விமானி என்ற தகுதியை 1958-ஆம் ஆண்டில் பெற்றார்.

இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள்

போர் விமானப் பிரிவில் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று 2015-ஆம் ஆண்டில்தான் முடிவுசெய்தது இந்திய விமானப் படை. அதற்கான முதல் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்கள் – அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோஹனா சிங் ஜிதர்வால், எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்து முன்னோடியாகத் திகழ்கிறார்கள். இந்த முடிவின்மூலம் 1990-களில் பெண்களைத் தங்களின் போர் விமானப் படையில் சேர்த்துக்கொண்ட ஐக்கிய அமெரிக்கா, சைனா, கொரியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, கிரீஸ், இஸ்ரேல், இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளின் வரிசையில் இணைகிறது இந்தியா.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
 2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
 3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
 4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
 5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
 6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
 7. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
 8. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
 9. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
 10. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
 11. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
 12. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
 13. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
 14. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
 15. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
 16. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
 17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
 18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
 19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
 20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
 21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
 22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
 23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
 24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
 25. நாம் வாழும் காலம் : கார்குழலி