பாகம் – 1

Tailors That Come Home To Your Doorstep | LBB, Kolkataதீபாவளி, பொங்கல் எனப் பண்டிகை நாட்களுக்கு முந்தைய தினம் தையல் கடைகளுக்குப் படையெடுத்துத் தையல்காரர் நம்முடைய துணியைத் தைத்துவிட்டாரா என்பதைத் தெரிந்துகொள்ளப் பதைபதைப்புடன் காத்திருக்கும் நாளெல்லாம் திரும்பி வராது என்றே தோன்றுகிறது. துணி வாங்கி ஆடை தைத்துப் போட்டுக்கொள்ளும் வழக்கம் அரிதாகிவிட்டது. அளவெடுத்து, துணி வாங்கி, நல்ல தையல்காரரைத் தேடிப் பிடித்து, நமக்குப் பிடித்த விதத்திலும் தேவையான நாளிலும் அதைத் தைத்து வாங்குவதற்கான நேரமோ பொறுமையோ இப்போதெல்லாம் யாருக்கும் இல்லை.

ஒருவேளை தையல்காரர் நாம் சொன்னபடி தைக்கவில்லை, சொன்ன நேரத்துக்குக் கொடுக்கவில்லை என்றால் எல்லாமே வீணாகிவிடும் என்ற பிரச்சனை வேறு. பல நூறு வாடிக்கையாளர்களில் ஒவ்வொருவரின் விருப்பத்துக்கும் ஏற்றவாறு தைத்துக் கொடுக்கும் தேர்ந்த தையல்காரர்களும் இப்போது இல்லை என்பது வேறு விஷயம். பல துணி வகைகளிலும் வடிவங்களிலும் விலையிலும் உடனுக்குடன் வாங்கி அணியக்கூடிய ஆயத்த ஆடைகள் கிடைக்கும்போது இதெல்லாம் நேர விரயம், அலைச்சல் என்று தோன்றுகிறது.

திடீரெனத் தையல்காரரைப் பற்றி ஏன் பேசுகிறேன் என்று யோசிக்கிறீர்களா? ஆதி மனிதர்கள் தையல்காரரின் உதவியுடன் ஆடைகள் தைத்துப் போட்டுக்கொண்டார்கள் என்பதற்குச் சான்றாக கல், எலும்பு போன்றவற்றாலான கருவிகள் கிடைத்திருக்கின்றனவாம். ஆதி மனிதனைப் பற்றியும் அவன் வாழ்வியலைப் பற்றியும் தொல்பொருள் ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் உலகின் பல இடங்களில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு அருகில் இருக்கும் கேடலோனியா என்ற இடத்திலும் புதைபொருள் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இங்கே கிடைத்த ஓர்This is how the 'sapiens' sewed their clothes 39,000 years ago - time.news - Time News எலும்புத் துண்டில் ஒரே அளவில் பள்ளம் விழுந்தது போன்ற அடையாளக் குறிகள் காணப்பட்டன. வெவ்வேறு வரிசையில் மொத்தம் இருபத்தெட்டு குழிவுகள் இருந்ததால் இவை கணக்கு வழக்கைப் பதிவுசெய்யவோ கலைப்படைப்பை உருவாக்கவோ போடப்பட்ட துளைகள் அல்ல என்பதும் உறுதியானது.

மேலும் இந்தத் துளைகள் எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள வெவ்வேறு பொருட்களைக் கொண்டு மீண்டும் மீண்டும் துளைபோட்டு ஆய்வு செய்தார்கள். இறுதியில், தங்களின் முடிவுகளை அறிக்கையாக வெளியிட்டார்கள். இது ஆடைகளை வடிவமைக்கும் கலைஞர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தைத்தான் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த எலும்புத் துண்டு சுமார் 40,000 வருடங்களுக்கு முந்தையது. மான், எருமை, செம்மறியாடு, குதிரை போன்ற விலங்குகளின் இடுப்பெலும்பின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். அதிக ஆழமில்லாத பள்ளங்கள் என்பதால் எலும்புத்துண்டின்மீது தோல் ஆடையைப் பரத்தி உளியினால் துளைகள் போட்டிருக்கலாம். பிறகு இந்தத் துளைகள் வழியாக விலங்குகளின் நரம்பு அல்லது கனமான தாவர இழை போன்றவற்றை நுழைத்து அணிபவர்க்கு ஏற்ற அளவாகச் செய்திருக்கலாம். இதன்மூலம் ஆதிமனிதர்கள் சரியான அளவில் ஆடைகளை அணிந்தார்கள் என்பதும் அப்படியான ஆடைகளை வடிவமைக்கும் கருவிகளைப் பயன்படுத்தினார்கள் என்பதும் தெளிவாகிறது.

இந்த எலும்புத் துண்டுகள் ஐரோப்பாவில் கிடைத்த எலும்பாலான ஊசிகளுக்கு 15,000 வருடங்களுக்கு முந்தையவை. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் அணிந்த ஆடைகள் மட்கி மண்ணோடு மண்ணாக மறைந்திருக்கும். இதுவரை கிடைத்துள்ள ஆடைகள் வெறும் 10,000 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதனால் இதுபோன்ற மற்ற பொருட்களைக் கொண்டுதான் அவர்களின் ஆடை அணியும் பழக்கத்தையும் ஆடைகளை எப்படி உருவாக்கினார்கள் என்ற வரலாற்றையும் தெரிந்துகொள்ளமுடியும் என்பதாலும் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Sewing Needles Reveal the Roots of Fashion – SAPIENSஎல்லாம் சரி, ஆதிமனிதர்கள் எப்போதிருந்து ஆடைகளை அணியத் தொடங்கினார்கள் என்று கேட்கிறீர்களா? அந்தக் காலத்தின் ஆடைகள் மட்கிப் போயிருக்கும் என்பதால் மனிதர்கள் அணியும் ஆடைகளில் காணப்படும் சீலைப் பேனை ஆராய்ச்சி செய்து இதற்கான விடையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சுமார் 1,70,000 ஆண்டுகளுக்கு முன்னர் வெயில், பனி, மழை ஆகியவற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மனிதர்கள் ஆடைகளை அணியத் தொடங்கினார்கள் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். வேறு சில ஆராய்ச்சியளர்களோ 1,20,000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்தப் பழக்கம் தோன்றியது என்கிறார்கள்.

அந்த முதல் தையல்காரர் யார்? ஆணா பெண்ணா? அல்லது ஒரு குழுவின் கூட்டு உருவாக்கமா என்பதையெல்லாம் தெரிந்துகொள்வது இப்போதைக்குச் சாத்தியமல்ல. அல்லது அதுகுறித்த ஆய்வுகள் நடந்துவருகிறதா என்பதும் தெரியவில்லை. ஆனால் இப்போதிருக்கும் தையல் இயந்திரத்துக்கு முன்னோடிகளின் உருவாக்கத்தில் இயந்திரமயமாக்கல், அரசியல், புரட்சி எல்லாமே முக்கியப் பங்கு வகித்தது. 18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சார்லஸ் வெய்ஸந்தல் என்ற ஜெர்மானியர் இயந்திரங்களில் பயன்படுத்தும் ஊசியை உருவாக்கி அதற்கான காப்புரிமையைப் பெற்றார். ஆனால் அந்த ஊசியை எந்த இயந்திரத்தில் பயன்படுத்தினார் என்பது பற்றிய குறிப்புகள் இல்லை .

அதே 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தாமஸ் செயின்ட் என்ற ஆங்கிலேயர் தோலைத் தைக்கும் இயந்திரத்தை உருவாக்குவதற்கான வரைபடம் ஒன்றை வரைந்து அதற்கான காப்புரிமையையும் பெற்றார். இந்த வரைபடத்தை அடிப்படையாகக்கொண்டு 1874ஆம் ஆண்டு வில்லியம் நியூட்டன் வில்சன் என்பவர் தையல் இயந்திரத்தைச் செய்தார். கையால் இயக்கும் விசையினால் துல்லியமாக இயங்கியது. அன்று முதல் இன்று வரையில் தையல் இயந்திரங்கள் ஆடைகளை மட்டுமின்றி இன்னும் எத்தனையோ அன்றாடப் பொருட்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தையல் இயந்திரம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனைசெய்துகூடப் பார்க்கமுடியாது என்பது உண்மைதானே.

 

(தொடரும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
 2. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
 3. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
 4. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
 5. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
 6. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
 7. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
 8. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
 9. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
 10. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
 11. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
 12. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
 13. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
 14. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
 15. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
 16. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
 17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
 18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
 19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
 20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
 21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
 22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
 23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
 24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
 25. நாம் வாழும் காலம் : கார்குழலி