வானை அளப்போம் 

இந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி உலக சாதனை ஒன்று நடந்தது. அதுகுறித்த வெளியான செய்திகளை எத்தனை பேர் கவனித்தோம் என்று தெரியவில்லை. வர்ஜின் கேலக்டிக் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் விண்வெளிக்குப் பயணம் செய்து அதன் வெளிவட்டப் பாதையை வெற்றிகரமாகத் தொட்டுவிட்டு பூமிக்குத் திரும்பினர்.

மனித நாகரிகம் வளர்ச்சியடைந்த நேரத்தில் வானில் பறவையைப் போலப் பறப்பது மனிதனின் உள்ளார்ந்த ஆசைகளில் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. இரவு வானில் உதிக்கும் குளிர்நிலவும் மின்னும் விண்மீன்களும் இடம்மாறிக்கொண்டே இருக்கும் கோள்களும் அவன் உள்ளத்தையும் உணர்வையும் சுண்டி இழுத்தன. கடலுக்குக் கீழே இருக்கும் உலகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலைவிட விண்ணில் பறக்கும் சாகசம் வசீகரமானதாக இருந்திருக்கிறது.

நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் பறக்கும் ஆற்றல்கொண்ட கதாபாத்திரங்களின் சாகசங்களை வாய்பிளந்து கேட்டது மட்டுமில்லாமல் நாமும் அதுபோல பறக்கமுடியாத என்ற ஏக்கமும் பட்டிருக்கிறோம்தானே. பறக்கும் மலைகளும் கம்பளங்களும் இறக்கை முளைத்த குதிரைகளும் ட்ராகன்களும் குழந்தை உருக்கொண்ட தேவதைகளும் மனிதரை ஏற்றிச் செல்லும் புஷ்பக விமானங்களும் இறக்கை இல்லாமலே வானில் உலாவரும் அப்சரஸ்களும் கந்தர்வர்களும் என உலக முழுவதும் சொல்லப்படும் புராணக் கதைகளில் பறக்கும் தன்மைகொண்ட கதாபாத்திரம் இல்லாத கதையே என்று சொல்லலாம். அவ்வளவு ஏன்? 21-ஆம் நூற்றாண்டின் கனவுருப் புனைவுகளும் மாயாஜாலக் கதைகளுமான ஸ்டார் ட்ரெக், ஹாரி பாட்டர், கேம் ஆஃப் த்ரோன்ஸ், அவதார் எல்லாவற்றிலும் ஒன்று கதாபாத்திரங்கள் பறக்கும் அல்லது முக்கிய கதாபாத்திரங்கள் விண்ணுலகுக்குச் செல்லும் சாகசப் பயணங்களை மேற்கொள்ளுவார்கள். அப்படியும் நம்மால் பறக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஈடுகட்டுவதற்காகவே பட்டம் பறப்பதும் ஊஞ்சல் ஆடுவதும் என எளிமையான அதிக செலவில்லாத பறக்கும் உணர்வைத் தரும் செயல்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோமோ.

துவக்கத்தில் பறவை இறகுகளாலும் இலேசான மரத்தாலும் செய்த இறக்கைகளை கையில் இணைத்துக்கொண்டு உயரமான இடத்தில் இருந்து பறக்க முயற்சிசெய்து தோல்வியுற்றானர். ஆனாலும் என்ன செய்தால் பறக்கலாம் என்ற ஆராய்ச்சியில் அடுத்ததடுத்த தலைமுறையினர் ஈடுபட்டனர். நீராவியின் உந்துததால் பார்க்கமுடியுமா என்று பண்டைய கிரேக்கத்தில் ஆராய்ச்சி செய்தனர்.

15-ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த லியனார்டோ டா வின்ஸியை ஓவியராக மட்டுமே பெரும்பாலானவர்கள் அறிந்திருப்போம். அவர் ஒரு பன்முகத் திறமையாளர், அறிவியல் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். பறத்தல் குறித்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதுகுறித்த கோட்பாடுகளைச் சித்திரங்களாகத் தீட்டி வைத்தார். ஆர்னிதாப்டர் என்ற பறக்கும் இயந்திரத்தை ஓவியங்களாகத் தீட்டி வைத்திருந்தார் என்றாலும் அவர் காலத்தில் அதைக் கட்டமைக்க முடியவில்லை. இன்றைய ஹெலிகாப்டர்கள் அவருடைய கருத்துப்படிவத்தில் இருந்து உயிர்பெற்றவை என்பது ஆச்சரியமூட்டுகிறது.

மனிதரை ஏற்றிக்கொண்டு வானில் பறக்கக் கூடிய வெப்பக்காற்று பலூன்கள் 18-ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டில் கிளைடர் எனப்படும் பொறியில்லாச் சறுக்கு விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மனிதனை ஏற்றிக்கொண்டு பறக்கக்கூடிய விமானத்தை ரைட் சகோதரர்கள் வெற்றிகரமாக வடிவமைத்தது 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான். இதே காலத்தில் ஜூல்ஸ் வெர்ன், ஹெச். ஜி. வெல்ஸ் போன்ற எழுத்தாளர்கள் விண்வெளிப் பயணம், நிலவில் மனிதர்கள் இறங்குவது, வேற்றுக் கிரகவாசிகள் பூமியையும் நிலவையும் ஆக்கிரமிப்பது குறித்த புனைவுகளை இயற்றினார்கள். இரண்டாம் உலகப் போரின்போது விண்ணுக்கு ஏவுகணைகளைச் செலுத்தும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது ஜெர்மனி.

வானில் பறந்து சாதனை படைத்த மனிதனுக்கு விண்வெளிக்குள் காலடி எடுத்துவைக்கும் ஆசை  தொற்றிக்கொண்டது. இதில் முதலடி எடுத்துவைத்து வெற்றியைச் சுவைத்தது அன்றைய சோவியத் ஒன்றியம். ஸ்புட்னிக் என்று பெயரிடப்பட்ட முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அடுத்து செலுத்தப்பட்ட செயற்கைகோளில் லைக்கா என்ற பெயர்கொண்ட நாயை அனுப்பியது.

விண்வெளிக்கு மனிதர்களை முதலில் அனுப்பிவைத்த பெருமையும் சோவியத் ஒன்றியத்தையே சேரும். யூரி காகரினும் வாலெண்டினா தெரேஷ்கோவாவும் நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றனர். இப்படி அமெரிக்கர்களும் ரஷியர்களும் ஒருவரை ஒருவர் மிஞ்சவேண்டும் என்ற போட்டியில் விண்வெளிக்குச் செயற்கைக் கோள்களையும் விண்வெளிக் கலங்களையும் அனுப்பியதோடு விண்வெளிவீரர்கள் பல நாட்கள் தங்கக்கூடிய விண்வெளி நிலையங்களையும் அமைத்தனர். பிறகு இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுவதுபோல நிலவிலும் கால்பதித்தான் மனிதன். நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் பஸ் ஆல்ட்ரினும் நிலவில் எடுத்த புகைப்படங்களும் மக்களின் மனதைக் கொள்ளைகொண்டன.

இத்தனை நூற்றாண்டுகால முயற்சியின் வலுவான அடித்தளத்தின் உதவியினால்தான் கேலக்டிக் நிறுவனத்தின் அதிபர் சர் ரிச்சர்ட் பிரான்ஸன் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த விண்வெளிப் பயணம் சாத்தியமாகியது. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் வான்வெளியில் விண்வெளியின் வெளிவட்டப்பாதையின் எல்லையைத் தொட்டு சாகசம் செய்தார்.

சிறுவயது முதலே விண்வெளிக்குச் செல்லவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அந்தக் கனவை நனவாக்கும் முயற்சிக்கு 2004-ஆம் ஆண்டில் வித்திட்டார் ப்ரான்ஸன். 2007-ஆம் ஆண்டில் அது சாத்தியமாகிவிடும் என்று திட்டம் தீட்டி தேவையான நிதி முதலீட்டைச் செய்தார். ஆராய்ச்சி, அனுமதி என்று ஒவ்வொரு கட்டமாக செய்துமுடித்துத் திட்டம் கைகூட 17 ஆண்டுகள் ஆனது.

நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் இருந்து ஜூலை 11-ஆம் தேதியன்று அமெரிக்க நேரப்படி காலை 8.30 மணிக்கு  கிளம்பிய வைட் நைட் 2 வான்கலம் VSS யூனிட்டி விண்வெளியூர்தியை விண்வெளிக்குச் செல்லும் பாதையில் செலுத்தியது. கிட்டத்தட்ட 85 கிலோமீட்டர் உயரம் வரை செலுத்தப்பட்ட விண்வெளியூர்தி விண்ணில் 3 முதல் 4 நிமிடங்கள் வரை இருந்த நேரத்தில் புவியீர்ப்பின் தாக்கம் இல்லாத நிலை அல்லது சுழி ஈர்ப்பு நிலையில் இருந்தார்கள் அதன் பயணிகள். அதே நேரத்தில் விண்வெளியூர்தியின் சாளரத்தின் வழியே புவியின் வளைவையும் பார்த்துப் பரவசமடைந்தார்கள்.

இந்த நிகழ்வின் நேரலையை ஒருங்கிணைக்க அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலம் ஸ்டீபன் கோல்பெர்ட்டை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வுக்குப் பிறகு இசை நிகழ்ச்சி நடத்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் காலித் வந்திருந்தார். எங்கு பார்த்தாலும் பகட்டும் ஆடம்பரமும் களியாட்டமும் என எந்தச் செயலிலும் பேச்சிலும் விளம்பர வாசம் வீசியது.

இது உண்மையாகவே விண்வெளிப் பயணமா இல்லையா என்று விண்வெளி அறிவியலாளர்கள் விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். கூடவே இந்தக் காரியத்தை ஒன்றும் மனிதகுலத்தை உய்விப்பதற்காக பிரான்ஸன் முன்னெடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் ஒரு புறம் எழுந்துள்ளன. அதுவும் சரிதான். பிரான்ஸன் ஒரு பெரு வணிகர், தொழிலதிபர். பணம் ஈட்டுவதுதான் அவரது முதன்மைக் குறிக்கோள். இதுபோன்ற சில மணிநேர விண்வெளிப் பயணத்துக்கான செலவை எளியவர்கள் மேற்கொள்ள முடியாது. அவர்போன்ற பெரும் பணக்காரர்களின் தன்முனைப்புக்குத் தீனி போடும் பல விஷயங்களில் இந்த விண்வெளிப் பயணமும் ஒன்றாக அமையும். இத்தனை எதிர்மறையான விஷயங்கள் இருந்தும் ‘யாரும் கனவு காணலாம், கூடவே அந்தக் கனவை நனவாக்கவும் செய்யலாம்’ என்பதை நிரூபித்திருக்கிறார் பிரான்ஸன்.

ரிச்சர்ட் பிரான்ஸன், ஜெஃப் பெஃஜாஸ், எலான் மஸ்க் மூவரும் விண்வெளிப்பயணத்தின் மூன்று மஸ்கிட்டர் (Three Musketeers) என்று அழைக்கப்படுகிறார்கள். விண்வெளிப் பயணம் குறித்துப் பெருங்கனவுகளைக் கொண்டவர்கள், அந்தக் கனவு நனவாக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மற்ற இருவரையும் முந்திவிட்டார் பிரான்ஸன். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வேறு ஒரு நாளில்  ஜெஃப் பெஃஜாஸும் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளப் போகிறார்.

இந்தக் கட்டுரை வெளியாகும்போது தன்னுடைய 71-வது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடியிருப்பார்  ரிச்சர்ட் பிரான்ஸன். உலகின் முதன்மைக் கோடீஸ்வரர்களில் ஒருவரான இவர் இன்றைய தேதியில் கிட்டத்தட்ட 400 நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். இத்தனை வருடத்தில் அவர் கால்பதிக்காத துறையே இல்லை என்று சொல்லிவிடலாம். பணத்தில் புரளும் செல்வந்தர்களைத் தேடி நீளும் நட்புக்கரங்களும் நாடி வரும் பெரிய மனிதர்களும் இவரை நோக்கியும் ஓடோடி வந்தனர். உலகின் அத்தனை சொகுசுகளையும் ஆசைதீர அனுபவித்தார், அனுபவித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இவை எதுவும் எளிதில் வந்ததில்லை. ஒவ்வொரு தொழிலையும் சிரத்தையோடு செய்தார்.

பள்ளிக்காலத்தில் ‘ஸ்டூடெண்ட் என்ற இதழைத் துவங்கினார். கூடவே இசை ரெக்கார்டு தட்டுக்களை விற்கும் வியாபாரத்தைச் செய்தார். புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் பேட்டியைத் தன்னுடைய இதழில் வெளியிட்டார். அடுத்து, வர்ஜின் ரெகார்டஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி இசை ரெக்கார்டுகளைப் பதிப்பிக்கத் துவங்கினார். இன்று வரை தன்னுடைய நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கு வர்ஜின் என்ற பெயரைத்தான் சூட்டுகிறார்.

ஒரு முறை அவர் பயணம் செய்த விமானம் இரத்து செய்யப்பட்டதால் தனி விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்தார். இந்த அனுபவத்தினால் வர்ஜின் அட்லாண்டிக் என்ற பயணிகள் மற்றும் சரக்கு விமான நிறுவனங்களைத் துவக்கினார். அடுத்த வருடமே விடுமுறைப் பயண முகமையகம் ஒன்றைத் துவக்கினார்.

இருப்பூர்தி நிறுவனம், அலைபேசி, தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, இணையத்தொடர்பு நிறுவனம், காமிக்ஸ் அனிமேஷன் தயாரிப்பு நிறுவனம், 3டி ரோபாடிக்ஸ், ட்ரோன்கள் தயாரிக்கும் நிறுவனம்,  நிதி சேவை நிறுவனம், மருத்துவ சேவை நிறுவனம், ஓட்டல் துறை, பச்சிளம் மகவுகளின் தொப்புள்கொடியில் இருக்கும் மூல உயிரணுக்களைச் சேமிக்கும் வங்கி, புவி வெப்பமாதலைத் தடுப்பதற்காகப் புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல் வளங்களைக் குறித்த ஆராய்ச்சியின் புரவலர், புவியைச் சூழும் நச்சு வளிகளின் தாக்கத்தைக் குறைக்கவும் புவியின் தட்பவெப்ப நிலையைச் சீராக வைக்கவும் யோசனை சொல்பவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கும் புரவலர், ஃபார்முலா ஒன் கார் பந்தயக் குழுவின் உரிமையாளர், ஹைட்ரஜன் வளி அடைக்கப்பட்ட பலூன் பந்தயத்தின் புரவலர், உணவுத் துறையில் தொழில்முனைவோருக்கு ஆலோசகர், தொலைக்காட்சியில் தொழில்முனைவோருக்கான போட்டியில் வெற்றிபெற்றவரின் தொழில் தொடங்க நிதி முதலீடு, லாஸ் வேகாஸில் சூதாட்ட விடுதி, ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி…

உலகின் பல இடங்களில் இவருக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களின் பட்டியலில்  ஆஸ்திரேலியாவுக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் மேக் பீஸ் தீவும் கரீபியன் கடலில் மொஸ்கிடோ தீவும் அடக்கம். பற்பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார் மனிதர்.

இவை தவிர உலக சாதனைகளை உருவாக்கும் அல்லது முறியடிக்கும் சாகசங்களிலும் ஆர்வம்கொண்டவராக இருக்கிறார். அட்லாண்டிக் பெருங்கடலை அதிவேகக் கப்பலில் கடக்கும் ப்ளூ ரிபான்ட் சாதனையைச் செய்தார். அடுத்து அதே அட்லாண்டிக் பெருங்கடலைக் வெப்பக் காற்று பலூனில் பயணம்செய்து கடந்தார். பிறகு ஜப்பானில் இருந்து கிளம்பி கனடா வரையிலும் மற்றுமொரு வெப்பக் காற்று பலூனில் பயணம்செய்து பசிபிக் பெருங்கடலைக் கடந்தார். உலகம் முழுவதையும் பலூனில் சுற்றிவரும் பயணத்தையும் மேற்கொண்டார். நிலத்திலும் நீரிலும் பயணம் செய்யும் ஊர்தியொன்றில் இங்கிலிஷ் சேனல் கடலை குறைந்த நேரத்தில் கடந்து சாதனை படைத்தார். மேற்கு ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மிகப் பெரிய சிகரமான மாண்ட் பிளாங்கில் ஏறும் சாதனையைச் செய்தார்.

நெல்சன் மண்டேலா, மார்கரெட் தாட்சர், அல் கோர், ஹில்லாரி கிளின்டன் என அரசியல் தலைவர்களுடன் பெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றிருந்தார். இத்தனைக்கும் மேலாக மனிதநேயத்தை வளர்க்கும் நற்பணிகளைத் துவக்கி வழிநடத்தி இருக்கிறார். அதே மூச்சில் வரி ஏய்ப்பு, பாலியல் குற்றம் என இவரைப் பற்றிய எதிர்மறையான செய்திகளும் இருக்கின்றன.

இது எல்லாவற்றையும் படித்து இந்தப் பட்டியலை எழுதி முடிப்பதற்குள்ளாக எனக்கு மூச்சு முட்டியது. 70 வயதுக்குள் ஒரு மனிதன் இத்தனை விஷயங்களைச் செய்துமுடிக்க முடியுமா என்று மலைத்துவிட்டேன். இன்னும் பல விஷயங்களை இந்தக் கட்டுரையில் எழுதவில்லை என்பதையும் சொல்லியே ஆகவேண்டும். இருந்தாலும் முதல் தனியார் விண்வெளிப் பயணத்தைப் பற்றி எழுதப் போய் சாதனையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் மனிதரான சர் ரிச்சர்ட் பிரான்ஸனை இனம்கண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. கட்டுரையைப் படித்த நீங்களும் அதே உணர்வைத்தான் பெற்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
 2. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
 3. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
 4. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
 5. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
 6. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
 7. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
 8. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
 9. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
 10. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
 11. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
 12. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
 13. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
 14. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
 15. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
 16. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
 17. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
 18. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
 19. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
 20. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
 21. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி