நீங்கள் சூப் பிரியராக இருக்கலாம். ஆனால் ஜௌமௌ சூப்பை ருசித்திருக்கிறீர்களா? அது ஹெய்ட்டி நாட்டின் பாரம்பரிய உணவு.காலனியாதிக்கத்துக்கு எதிரானமக்கள் போராட்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார அருவச் சொத்துப்பட்டியலிலும் இடம்பெற்றது. சரி, ஜௌமௌ சூப்பின் வரலாற்றைப் பற்றி பேசுவதற்கு முன்னால் ஹெய்ட்டி எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

வட மற்றும் தென்னமரிக்கக் கண்டங்களுக்கு இடையே இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதி கரீபியன் கடல். இங்கே உள்ள ஆன்ட்டிலஸ் தீவுத்தொகுதியின் ஒரு தீவுதான் ஹிஸ்பானியோலா.இதன் மேற்குப்பகுதி தான் ஹெய்ட்டி நாடு, மற்றொரு பகுதி டொமினிக்கன் ரிபப்ளிக் எனப்படும் இன்னொரு தனிநாடு. ஹெய்ட்டிக்கு இன்னொரு பெருமையும் உண்டு, உலகிலேயே கறுப்பினத்தவரால் வழிநடத்தப்பட்ட முதல் குடியரசு என்பதுதான் அது.

ஹெய்ட்டியின் அரசியல் வரலாறு

தென் அமெரிக்காவைச் சேர்ந்த டைனோ இனத்தவர்கள் தான் ஹெய்ட்டியின் பூர்வகுடிகள்.15-ஆம்நூற்றாண்டின் இறுதியில் புதியநிலங்களைத் தேடி ஸ்பெயினில் இருந்து கடல் கடந்து வந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் கரீபியன் கடலில் இருந்த குட்டித்தீவொன்றை அடைந்தார். ஐரோப்பியர்களின் முதல்குடியிருப்பாக அமைந்த அந்தத் தீவிற்கு முதலில் ‘லாஅய்லாஎஸ்பனோலா’ என்று பெயரிட்டனர்; பின்னர் ‘ஹிஸ்பானியோலா’  என்று மாறியது. இந்தத் தீவில் கொலம்பஸும் அவர்குழுவினரும் லாநாவிதாத் என்ற குடியிருப்பை அமைத்தனர்.இது சில வருடங்கள் ஸ்பானியர்களின் வசமிருந்தது. ஐரோப்பியர்களின் வருகையால் புதியவகை நோய்க்கிருமிகள் பரவி டைனோ இனத்தவர்களை மொத்தமாக அழித்தது என்று ஒரு சாராரும் இல்லையில்லை ஐரோப்பியர்கள் இனப்படுகொலை செய்தனர் என்று மற்றொரு சாராரும் கருத்து சொல்கிறார்கள்.

17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பானியர்கள் தீவின் கிழக்குப்பகுதிக்குக் குடிபெயர்ந்தனர். மேற்கு பகுதியைப் பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைத்தனர். பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ்வந்ததும் இந்தப் பகுதிக்கு செயிண்ட்டொமிங் என்று பெயரிடப்பட்டது. 18-ஆம் நூற்றாண்டில் இங்கு அமைந்த கரும்பு, காப்பித் தோட்டங்களில் இருந்து சர்க்கரையும் பஞ்சும் உலக முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பாவின் 40 சதவீத சர்க்கரையும் 60 சதவீத காப்பியும் இங்கிருந்தே வந்தது. செயிண்ட் டொமிங் பகுதி ‘ஆன்ட்டிலஸின் முத்து’ என அழைக்கப்பட்டது, பிரெஞ்சுப் பேரரசின் பணம் கொழிக்கும் காலனியாக இருந்தது.

அடிமையாக்கப்பட்ட ஆப்பிரிக்க மக்கள்

ஹிஸ்பானியலாவின் பூர்வகுடிகள் முற்றிலும் அழிந்த நிலையில் செயிண்ட் டொமிங்கின் கரும்பு காப்பித் தோட்டங்களில் பணி செய்ய ஆட்கள் தேவைப்பட்டனர். உடனே ஆப்பிரிக்காவை ஆக்கிரமித்து அங்கிருந்து கப்பல்களில் சுமார் 80000 பேரை இந்தத் தீவுக்கு அழைத்து வந்தனர். அவர்கள் எந்த உரிமையும் இல்லாமல் அடிமைகளாக நடத்தப்பட்டனர். நேரம் காலமில்லாத கடுமையான உழைப்பு, நோய்த் தொற்று இவற்றால் பல பேர் உயிரிழந்தனர். இதனால் தொடர்ந்து அடிமைகளை அழைத்து வரவேண்டி இருந்தது.

17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அடிமைத்தளையைச் சரியான முறையில் கட்டமைப்பதற்காக ‘கோட்நாயிர்’ என்ற ‘கறுப்புவிதி’ வகுக்கப்பட்டது. எஜமானர்களின் பொறுப்புக்களையும் உரிமைகளையும் பட்டியலிட்டது. அடிமைகளுக்கு உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை வழங்கவேண்டும். அதே நேரத்தில் அடிமைகளை அடிக்கவும் தண்டிக்கவும் பணிவோடு நடக்கப்பழக்கவும் எஜமானர்களுக்கு உரிமை உண்டு என்றது ‘கோட்நாயிர்’. மொத்தத்தில் சுதந்திரமான மக்களைச் சிறை பிடித்து உரிமைகளைப் பறித்து ஒடுக்கிக் கீழ்நிலைக்குத் தள்ளினார்கள். காலனியாதிக்கத்தின் மிகக் கொடூரமான இரக்கமற்ற முகம் முதலில் வெளிப்பட்டது ஹெய்ட்டியில் தான் என்று சொல்ல வேண்டும். ஹெய்ட்டி மக்களின் இலக்கியத்தில் அடிமை வாழ்வில்அவர்கள் எதிர் கொண்ட கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

அடிமைகளின் விடுதலைப் போராட்டம்

18-ஆம்நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சுநாட்டில் நடைபெற்ற பிரெஞ்சுப்புரட்சியால் உந்தப்பட்ட ஹெய்ட்டி மக்கள் தங்கள் அரசியல் விடுதலை, சமூக உரிமை இரண்டுக்கும்மான போராட்டத்தை முன்னெடுத்தனர், புரட்சி வெடித்தது. டூசான்லூவர்ட்டியாரின் தலைமையில் இடைவிடாமல் நடந்த போரை நிறுத்துவதற்காகத் தன்னுடைய படைகளை அனுப்பிவைத்தான் நெப்போலியன். புரட்சியாளர்களின் தலைவனான டூசான்லூவர்ட்டியாரைச் சிறைப்பிடித்தான். அப்படியும் மக்கள் தொடர்ந்து போராடிதங்கள் விடுதலையை வென்றார்கள். 1804-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதும் செயிண்ட்டொமிங் என்ற பெயரைத் துறந்து ஹெய்ட்டி என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள். ஹெய்ட்டியின் புரட்சியை முன்னெடுத்த ஜான்ஜாக்கேடேசலீன் என்ற கறுப்பினத்தவர் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார்.

ஜௌமௌசூப்பின் வரலாறு

விடுதலையைக் கொண்டாடுவதற்கு ஹெய்ட்டி மக்கள் சமைத்த உணவு என்ன தெரியுமா? ஜௌமௌ சூப். இதற்கு கிரமோன் சூப் என்ற பெயரும் உண்டு. ஹெய்ட்டி மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த அடையாளம். நம் மூர்பரங்கிக்காயைப் போலவே இருக்கும் ஜௌமௌ காய், இறைச்சி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், டர்னிப், மிளகாய் ஆகிய பொருட்களைக் கொண்டுத் தயாரிக்கப்படுகிறது. ஹெய்ட்டி மக்கள் அடிமைகளாக இருந்த காலத்தில் ஜௌமௌ சூப்பைத் தயாரித்து எஜமானர்களுக்குத் தரவேண்டும், ஆனால் அவர்கள் உண்ணவோ ருசிபார்க்கவோ கூடாது என்ற கொடுமையான விதி நடைமுறையில் இருந்தது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற பிறகுதான் பாகுபாடின்றி எவரும் இந்த சூப்பைத் தயாரித்து உண்ண முடிந்தது. இதனால் அடக்கு முறையையும் வேற்றுமையுணர்வையும் அடித்தளமாகக்கொண்ட அரசியலமைப்பு, காலனியாதிக்கம், இனவேறுபாடு ஆகியவற்றை எதிர்க்கும் சின்னமாக மாறியது ஜௌமௌ சூப். ஹெய்ட்டியின் விடுதலை நாள் ஜனவரி 1-ஆம்  தேதி என்பதால் புதுவருடத்தின் முதல் உணவாக இதைச் சமைத்து உண்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சமைக்கப்படும் பாரம்பரிய காலை உணவாகவும் இருக்கிறது.

தற்காலத்தில் ஜௌமௌ சூப் தயாரிப்பு மக்களை ஒன்றிணைக்கும் சமூகநிகழ்வாக உருப்பெற்றுள்ளது. ஹெய்ட்டியில் வசிக்கும் பல்வேறு கரீபியன், இலத்தீன் அமெரிக்க இனத்தவர்களும் இதைச் சமைக்கிறார்கள். இத்தனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜௌமௌ சூப் மக்களின் கலாசார அடையாளமாகவும் கூட்டுறவையும் சமூகப்பிணைப்பையும் ஊக்குவிக்கும் விஷயமாகவும் இருப்பதால் யுனெஸ்கோ நிறுவனத்தின் அருவக் கலாச்சார சொத்துப் பட்டியலில் இணைக்கப்பட்டது.

அருவக் கலாச்சார சொத்தா? பட்டியலா? அப்படியென்றால் என்ன என்கிறீர்களா? சொல்கிறேன். அதற்கு முன்னால் யுனெஸ்கோ நிறுவனத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகளையும் தெரிந்துகொள்ளலாம்.

யுனெஸ்கோநிறுவனத்தின்வரலாறு

யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் ஐக்கியநாடுகள்(ஐநா) அவை எனப்படும் யுனைடெட் நேஷன்ஸ் (UN) அமைப்பின் ஓர் அங்கம். 1945-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி உருவான இந்நிறுவனம், ஐ.நா-வில் உறுப்பினராக இருக்கும் நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு ஆகியவற்றின் மூலம் ஒற்றுமையை வளர்க்கும் பணியைச் செய்துவருகிறது.

இரண்டாம் உலகப்போரினால் ஐரோப்பாவில் பள்ளிகளும் நூலகங்களும் அருங்காட்சியகங்களும் அழிந்துப்போயின. அவற்றைப் புனரமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது யுனெஸ்கோ. அந்தப் பணி  ஓரளவுக்கு நிறைவடைந்த பிறகு உறுப்பு நாடுகளில் கல்வியறிவை வளர்க்கவும் கட்டணமில்லாக் கல்வியைப் பரவலாக்கவும் பணியாற்றிவருகிறது. தொடக்கத்தில் படிப்பது, எழுதுவது போன்ற அடிப்படைத்திறன்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டது. தற்போது கணினிமயமாகி வரும் உலகில் கணினி வழியாகத் தகவல் பரிமாற்றம்செய்வது, இணையத்தில் இருக்கும் தகவல்களைப் படித்துப் புரிந்து கொள்வது போன்ற திறன்களை மக்கள் பெறுவதற்கான உதவிகளைச் செய்கிறது.

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்கள்

வருடங்கள் செல்லச் செல்ல வேறு பல சேவைகளையும் செய்யத் தொடங்கியது யுனெஸ்கோ. 1972-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இருக்கும் பாரம்பரியக் களங்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் இயற்கைப் பகுதிகளையும் பாதுகாப்பது என்ற முக்கிய திட்டத்தை முன்னெடுத்தது. நிகரற்ற மதிப்பு கொண்ட உலகப் பாரம்பரியக் களங்களை யுனெஸ்கோ தேர்ந்தெடுத்தபிறகு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் அவற்றைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும். இதன் மூலம் நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களும் நகரங்களும் அகழ்வாராய்ச்சிக் களங்களும், பாரம்பரியச் சிற்பங்களும், ஓவியங்களும் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் 40 உலகப் பராம்பரியக் களங்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

யுனெஸ்கோ அருவக் கலாச்சார சொத்துக்கள்

உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் இருப்பவை தொட்டுணரக் கூடியவை. ஆனால் அவை மட்டுமே வரலாற்றுக் கலாச்சார சின்னங்கள் என்று சொல்ல முடியாதல்லவா. மக்களின் அறிவு, திறன், உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தொட்டுணர முடியாத அறிவுசார் அருவக் கலாச்சார சொத்துக்களும் பாதுக்கப்பட வேண்டியவை என்று முடிவு செய்தது யுனெஸ்கோ. இது குறித்து 2001-ஆம் ஆண்டில் உறுப்புநாடுகளுடன் கலந்தாலோசனை செய்தது. 2003-ஆம் ஆண்டு அருவக் கலாச்சார சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்த வழிமுறைகளை வகுத்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றவை வாழும் கலாச்சார பாரம்பரியம் என்றும் அழைக்கப்பட்டன. இதுவரை 139 நாடுகளை சேர்ந்த 629 பொருட்கள் இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மிகச்சமீபத்தில் சேர்க்கப்பட்டது ஹெய்ட்டியின் ஜௌமௌ சூப்.

ஜௌமௌ சூப்பைப் போலவேம் இன்னும் என்னென்ன உணவுகள் அரு வக் கலாச்சார சொத்துக்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது என்கிறீர்களா? மலாவி நாட்டின் சோளமாவினால் செய்யப்படும் நசீமா என்ற கஞ்சி, தஜிகிஸ்தானின்ஓஷிபிலாஃப் எனப்படும் புலவு, அரேபியர்களின் காப்பிக்கொட்டை களைவறுத்து தயாரித்துப் பரிமாறும் முறை, தென் கொரியாவின் கிம்சி, சீபுஜென் எனப்படும் செனெகலின்மீனும் சோறும் கலந்த உணவு, மால்ட்டாவின்இல்-பித்ர என்ற தட்டையானரொட்டி, மத்தியதரைக் கடல் பகுதியின் உணவுத யாரித்து உண்ணும் முறை, பிரெஞ்சு மக்களின் உணவு முறை என நீண்டு கொண்டேபோகிறது பட்டியல்.

இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 14 அருவக் கலாச்சார சொத்துக்களும் இடம்பெற்றுள்ளன.பாரம்பரிய வேதம் ஓதும் முறை, ராம்லீலா இசை நாடக நிகழ்ச்சி, கல்பேலியா என்ற இராஜஸ்தான் நாட்டுப்புறக்கலை, கும்பமேளா, கேரளாவின் முடியாட்டம், கல்கத்தா துர்காபூஜை, யோகாசனம் போன்றவை அதில் அடங்கும். இதையெல்லாம் படிக்கையில் எல்லாம் சரி, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கரகாட்டம், தெருக்கூத்து இன்னும் பல இயல், இசை, நாடக நிகழ்வுகளும் மக்கள் கொண்டாட்டங்களும் உணவுகளும் உணர்வு சார்ந்த நிகழ்வுகளும் ஏன் இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை என்ற கேள்வி மனதில் எழுந்தது. நீங்களும் அதையேதான் நினைத்தீர்களா?

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
  2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
  3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
  4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
  5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
  6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
  7. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
  8. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
  9. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
  10. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
  11. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
  12. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
  13. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
  14. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
  15. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
  16. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
  17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
  18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
  19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
  20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
  21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
  22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
  23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
  24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
  25. நாம் வாழும் காலம் : கார்குழலி