ஹோண்டுராஸின் குரங்கு தெய்வமும் புதையுண்ட மர்ம நகரமும்

நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறன்று தாய்லாந்தில் நடந்த ‘குரங்கு  படையல் திருவிழாவில்’ நூற்றுக்கணக்கான மக்காக் எனப்படும் நீள வால் குரங்குகளுக்கு இரண்டு டன் காய்கறிகளும் கனி வகைகளும் விருந்தாகப் பரிமாறப்பட்டன. மத்திய தாய்லாந்தின் லோப்புரி மாகாணத்தை சுற்றுலாத்தலமாக மாற்றியதில் குரங்குகள் பெரும்பங்கு வகிப்பதால் அவற்றுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். லோப்புரியின் மற்றொரு பெயர் ‘குரங்கு மாகாணம்’ என்றால் பாருங்களேன். கோவிட் தொற்றினால் இரண்டு வருடமாகச் சுற்றுலாத் தொழில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இருக்காது என்ற அறிவிப்பைத் தாய்லாந்து அரசு வெளியிட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமானது. துரியன் பழங்களைக் குரங்குகளுக்கு விருந்து படைப்பதாகச் சொல்கிறார் விழா அமைப்பாளர். மற்ற எந்தப் பழத்தைவிடவும் உள்ளதிலேயே விலை அதிகமான துரியனைத்தான் குரங்குகள் விரும்பிச் சாப்பிடுகின்றனவாம். ஹ்ம்ம்… குரங்காகப் பிறந்தாலும் லோப்புரியில் பிறக்கவேண்டும் போல.

இந்தியாவில் இருக்கும் குரங்கு கோவில்கள்

இந்தியாவின் மலைசார்ந்த வழிபாட்டுத் தலங்களில் குரங்குகள் இருந்தாலும் இதுபோன்ற விருந்து படைக்கும் விழா இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஜெய்ப்பூரைச் சுற்றி அமைந்திருக்கும் ஆரவல்லி மலைத்தொடரின் குன்றுகளுக்கு இடையே இருக்கும் கணவாய் அல்லது பாறை இடுக்குகளில் கன்னியா பாலாஜி கோவில் தொகுப்பு அமைந்துள்ளது. குன்றுக்கு மேலே சுரக்கும் இயற்கை ஊற்று கீழ்நோக்கிப் பாய்கையில் ஆங்காங்கே நீர் தேங்கியுள்ள பகுதி புனிதமானதாக கருதப்படுகிறது. இந்தத் தொகுப்பில் கல்டாஜி முதல் வேறு பல கோவில்களும் இருக்கின்றன. பெரும் குரங்குக் கூட்டமொன்று கல்டாஜி கோவிலை தங்களின் வசிப்பிடமாகக்  கொண்டிருக்கிறது. கோவிலுக்குப் போகும்போது சீல் செய்யப்பட்ட தண்ணீர் குப்பிகளையும் உணவுப் பொட்டலங்களையும் மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும், இல்லையென்றால் குரங்குகள் அவற்றைச் சூறையாடிவிடும்.

நேபாளத்தில் இருக்கும் ஸ்வயம்புநாதர் கோயிலையும் குரங்கு கோவில் என்று அழைக்கிறார்கள். கர்நாடகாவில் ஹம்பிக்கு அருகே இருக்கும் அஞ்சனாத்ரி என்ற குன்று இந்துக் கடவுளான அனுமனின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. இந்திய புராணத்திலும் இந்து மதத்திலும் அனுமன் வீரம், அறிவு, வாக்கு போன்றவற்றுக்குப் பெயர்பெற்றவராகவும் சாகாவரம் பெற்ற எழுவருள் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

உலக மதங்களில் குரங்கு தெய்வ வழிபாடு

உலகெங்கிலும் இருக்கும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களும் குரங்கு வடிவக் கடவுளை வழிபடுகிறார்கள். சீன நாட்டின் சன் வுகாங்கும் ஜப்பானின் சருகாமியும் அனுமன் அளவுக்கு போற்றி வழிபடப்படுவதில்லை. பண்டைய எகிப்தியர்களின் வழிபாட்டில் குரங்குகளுக்கு முக்கியமான அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. எகிப்துக்கென தனிப்பட்ட குரங்கு இனம் இல்லையென்றாலும் குரங்கு முகமும் மனித உடலும் கொண்ட கடவுளை வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. பபூன் இனக் குரங்குகள் சூரியன் உதிக்கும் நேரத்தில் பின்னங்கால்களில் எழுந்து நின்று முன்னங்கால்களை ஒன்று கூட்டி வித்தியாசமான ஓசை எழுப்பும். அவை எகிப்தியர்களின் முதன்மைக் கடவுளான ரா என்ற சூரியக் கடவுளை வழிபடுவதாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் பண்டைய எகிப்தியர்களின் மதத்தில் பபூன்கள் புனிதமாக கருதப்பட்டன.

ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம்

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸின் புதைந்துபோன பண்டைய குரங்கு தெய்வத்தின் நகரத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்த செய்தி இணையத்தில் படிக்கக் கிடைத்தது. வட அமெரிக்கக் கண்டத்தையும் தென் அமெரிக்கக் கண்டத்தையும் தொப்புள் கோடி போல இணைக்கும் நிலப்பகுதிதான் மத்திய அமெரிக்கா. ஹோண்டுராஸின் கிழக்குப் பகுதியான மஸ்கீட்டாவில் இருக்கிறது இந்தப் புதையுண்ட நகரம்.

மஸ்கீட்டாவின் உண்மைக் கதை மர்மக் கதைகள் உணர்வைக் கிளர்த்தும் திரில்லர்கள் ஆகியவற்றுக்கு நிகரானது. இதுவரையிலும் அறிந்திராத மக்கள், அவர்களின் வாழ்க்கை பற்றிய விஷயங்களும் கலந்திருப்பதால் கூடுதல் சுவாரசியம். இந்தப் புதைந்துபோன பண்டைய நகரம் அல்லது நகரங்களின் தொகுப்பு, அவற்றைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி, அங்கு கிடைத்த தொல்பொருட்கள், துண்டு துண்டாகக் கிடைத்த செய்திகள் எல்லாம் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. ஓர் இடத்தையும் அங்கு வசித்த மக்களையும் சூழ்ந்திருக்கும் மர்மம் கொஞ்சங்கொஞ்சமாக விடுபட்டு இதுவரை அறிந்திராத புதிய தகவல்கள் தெரியவரும் நேரத்தில் பொங்கும் அட்ரினலின் சுரப்பு அலாதியான உணர்வு.

மஸ்கீட்டா மக்களின் வெண்ணிற நகரம்

பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்டபர் கொலம்பஸ் என்ற இத்தாலிய கடல்பயண வல்லுநர் பற்றிப் பள்ளியில் படித்திருப்போம். புதிய நிலப்பகுதிகளை தேடும் பயணத்தில் அமெரிக்கக் கண்டத்தை முதலில் அடைந்து உலகுக்கு அறிவித்தார். அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டத்திலும் மத்திய அமெரிக்காவிலும் வெவ்வேறு நாகரிகங்கள் செழிப்புற்று இருந்தன. அந்தக் காலகட்டத்தில் ஹோண்டுராஸின் மஸ்கீட்டாவில் வசித்த மக்கள் ‘வெண்ணிற நகரம்’ என்றழைக்கப்படும் நகரமொன்றை அமைத்தனர் என்றும் குரங்கு வடிவம் கொண்ட தெய்வத்தை வழிப்பட்டதால் அதற்கு ‘குரங்கு தெய்வத்தின் நகரம்’ என்ற பெயரும் இருந்தது என்றும் செவிவழிக் கதைகள் வழங்கப்பட்டன.

புதையுண்ட நகரத்தைத் தேடும் பணி

எப்போதும் போலவே இந்த நகரத்தைப் பற்றியும் அதன் மக்கள் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற முனைப்பில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி ஆய்வுகள் நடந்து வந்தன. மஸ்கீட்டா பகுதியின் மேலே விமானத்தில் பறந்தவர்கள் வெண்ணிறக் கட்டடங்களைப் பார்த்ததாகச் சொன்னார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்மித்சோனியன் அமைப்பின் உதவியோடு 1940-களில் நடத்தப்பட்ட ஆய்வு பல முக்கியமான விஷயங்களை தொல்லியலாளர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தன. அந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த தியடோர் மோர்டே அங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்ட பல பொருட்களையும் அங்கு வசிக்கும் தொல்குடிகள் சொன்ன பழங்கதைகளையும் சுமந்து வந்தார். ஆனால் புதையுண்ட நகரத்தின் அமைவிடம் குறித்த தகவலை யாரோடும் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டார். விஷயம் தெரியவந்தால் பழங்காலப் பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் அங்கிருக்கும் தொல்பொருட்களை சூறையாடிவிடும் என்று நினைத்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதால் பல உண்மைகள் வெளியே தெரியாமல் மறைந்து போயின.

ஆனால் புதையுண்ட நகரத்தின் ஈர்ப்பு வலுவானதாக இருந்தது. 1990-களில் அமெரிக்கத் திரைப்பட இயக்குனரும் ஆராய்ச்சியாளருமான ஸ்டீவ் எல்கின்ஸ் இந்தப் பகுதியை ஆய்வு செய்ய குழுவினருடன் களத்தில் இறங்கினார். பல்கலைக்கழகத்தில் புவி அறிவியலில் பட்டம் பெற்றவர், பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது கூடுதல் தகுதி. ஹோண்டுராஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தொல்லியல் வல்லுனர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள், புவியியல் வல்லுனர்கள், தொல் தாவர வல்லுனர்கள் என்ற பலரின் கூட்டு முயற்சியுடன் ஆய்வு நடத்தப்பட்டது.

குறைந்தது ஐந்து நூற்றாண்டுகளாக மனிதர்களின் காலடித் தடம் பதியாத அடர்ந்த காட்டுக்குள் நடந்தும் காட்டாறுகளில் பயணித்தும் மலைகளில் ஏறியும் புதையுண்ட நகரத்தின் எச்சங்களைக் கண்டார் ஸ்டீவ் எல்கின்ஸ். காட்டின் ஒரு பகுதியில் தொல்குடி ஆண் ஒருவர் வித்தியாசமான தலையலங்காரத்தோடு விளைநிலத்தில் விதைகளைத் தூவும் பணியில் ஈடுபட்டிருப்பத்தைச் சித்தரிக்கும் கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம் ஒன்றைக் கண்டார். ஐம்பது மீட்டர் உயரம் வரை அடர்ந்த மரங்கள் ஒன்றோடொன்று போட்டி போட்டுகொண்டு வானில் உயர்ந்து நிற்கும் இடத்தில் விவசாயத்தைச் சித்தரிக்கும் சிற்பமா என்று ஆய்வுக் குழு வியந்தது.

காலத்தின் சுழற்சியில் கடல்கள் மலையாக உயர்ந்து நிற்பதும் மலைகள் பாலைவனங்களாக மாறுவதும் சாத்தியமே என்பதால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் அந்த நிலப்பகுதி மனிதர்களின் வாழ்விடமாக இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது. இருந்தாலும் அந்தப் பகுதியில் இருக்கும் விலங்குகளும் தாவரங்களும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருந்ததால் ‘நரகத்தின் நுழைவாயில்’ என்று பெயரிட்டனர் புவியியல் வல்லுநர்கள். அதற்கேற்றாற்போல அங்கே ஆய்வு நடத்துவதும் கடும் முயற்சியாக இருந்ததால் ஆய்வைக் கைவிட்டார் ஸ்டீவ். இருந்தாலும்  புதையுண்டுபோன ‘குரங்கு நகரத்தைக்’ கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் மூலையில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது.

அகழ்வாராய்ச்சியில் லேடார் தொழில்நுட்பம்

இந்த முதல்கட்ட ஆய்வுகள் நடந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னர் 2012-இல் லேசர் கதிர்களைக் கொண்டு அகழ்வாராய்ச்சி செய்யும் லேடார் என்னும் புதிய தொழில்நுட்பம் பற்றி அறிவியல் இதழொன்றில் படித்தார் ஸ்டீவ். லேடாரின் உதவியுடன் தொலைந்துபோன குரங்கு தெய்வத்தின் நகரத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் என்ன என்று நினைத்தார். சொல்லி வைத்தது போல ஓரிரு நாளில் பழைய ஆய்வுக்குழு நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கூடவே ஹோண்டுராஸ் அரசின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்ற தகவலும் வந்தது. நிதி உதவியும் கிடைத்ததோடு ஆய்வுக் குழுவுக்கு இராணுவப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

லேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடர்ந்த காட்டின் நடுவே ஓடும் காட்டாற்றின் கரையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மனித நாகரிகம் தழைத்திருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது விமானத்தில் பறந்தபடியே செய்யப்பட்ட ஆய்வு. இதைத் தொடர்ந்து ஸ்டீவ் எல்கின்ஸின் குழு களத்தில் இறங்கி ஆய்வுகளை நடத்தியது. கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாக்க ஹோண்டுராஸ் அரசின் இராணுவம் பாதுகாப்பு அளித்தது. மேலும் ஆய்வு நடத்தப்பட்ட பகுதியின் அமைவிடம் இன்று வரை யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது. கள்ளக்கடத்தல்காரர்களும் மாஃபியாவும் உள்ளே புகுந்து பொருட்களைத் திருடிக்கொண்டு போய்விடுவார்கள் என்பதே முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஆய்வின் முதல்கட்ட முடிவு 2015-இல் வெளிவந்தது. புதையுண்ட நகரத்தில் பெரிய சதுக்கங்கள், அடுக்குத்தளக் கட்டுமானங்கள், கால்வாய்கள், சாலைகள், பிரமிடு மற்றும் வேறு மண் வடிவமைப்புகள், சிற்பங்கள், போன்றவை இருந்தது தெரியவந்தது. கூடவே பலவகையான கைவினைப் பொருட்களும் கைவேலைப்பாடுகள் கொண்ட உருளை வடிவக் கொள்கலன்கள், வழிபாட்டுத் தலத்தில் பயன்படும் கால்களோடு இருக்கும் தட்டையான அம்மிக்கல் போன்ற பொருட்களும் கிடைத்தன. இவையெல்லாம் அந்த மக்களின் மதச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஓராயிரம் வருடங்களுக்கு முன்னால் இங்கே மனித நாகரிகம் தழைத்திருந்தது என்பதற்கான சான்று இவை.

மாயா, அஸ்டெக், இன்கா, ஒல்மெக் இனங்கள் தழைத்த அதே காலகட்டத்தைச் சேர்ந்தது மஸ்கீட்டா இனம் என்பது தெரியவந்திருக்கிறது. ஆனால் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் தகவல் வரலாற்றில் இடம்பெறவில்லை. ஸ்பானிய படைகளின் வருகையால் அமெரிக்காவில் தொற்றுநோய்கள் பரவியது போல இங்கும் பெருந்தொற்று பரவி மக்களை மாய்த்ததா. அல்லது இயற்கைப் பேரழிவு ஏதேனும் ஏற்பட்டதா. ஓர் இனம் முழுவதும் காற்றில் கரைவது போல எந்தச் சுவடும் இன்றி அழிந்து போனது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஹோண்டுராஸ் அரசின் முயற்சியில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றால் இன்னும் பல உண்மைகள் தெரியவரலாம் என்ற நம்பிக்கையோடு தொல்லியல் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர், நானும்கூடத்தான்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
 2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
 3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
 4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
 5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
 6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
 7. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
 8. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
 9. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
 10. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
 11. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
 12. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
 13. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
 14. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
 15. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
 16. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
 17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
 18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
 19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
 20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
 21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
 22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
 23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
 24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
 25. நாம் வாழும் காலம் : கார்குழலி