நாம் வாழும் காலம் – 2

செல்லப்பிராணியான நாய் ஒன்று தடகள தொடர் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பிடித்திருக்கிறது. கடைசி 100 மீட்டரை 10.5 நொடிகளில் கடந்து உலகத்திலேயே வேகமான மனிதரான உசைன் போல்டின் உலக சாதனையை வெல்லும் வாய்ப்பை ஒரு நொடியில் தவறவிட்டிருக்கிறது. நாய்களுக்கான தடகளப் போட்டியிலா என்றால் இல்லை. கற்பனைக் கதையிலா என்றால் அதுவும் இல்லை. பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டியில்தான் இந்த நாயும் ஓடியது. மனிதர்களுக்கான போட்டியில் நாய் எப்படி ஓடியது என்று குழப்பமாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் நடைபெற்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டியைப் பார்க்க வந்த பார்வையாளர்களில் ஒருவர் கூடவே செல்லப்பிராணி ஹோலியையும் கூட்டி வந்திருந்தார். தொடர் ஓட்டப் போட்டியின் கடைசிச் சுற்றின்போது உரிமையாளரின் பிடியில் இருந்து தப்பி விளையாட்டுத் திடலுக்குள் நுழைந்த நாய் வீரர்களோடு சேர்ந்து தானும் ஓடியது. முன்னணியில் ஓடிக்கொண்டிருந்த கிரேஸி லேனி என்ற வீராங்கனையின் கால்களுக்கு இடையே புகுந்து அவருக்கு முன்னே வெற்றிக்கோட்டை முதலில் எட்டியது. ஆனால் வெற்றிப் பதக்கம் கிடைத்தது என்னவோ கிரேஸிக்கும் அவர் குழுவுக்கும்தான்.

ஓடிக் கொண்டிருக்கையில் பார்வையாளர்களின் கரவொலியும் உற்சாகமான குரலும் காதில் விழுந்தபோது எனக்கு ஊக்கமூட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். காலுக்குள் நாயொன்று புகுந்தபோதுதான் உண்மை புரிந்தது. ஆணிகள் பதித்த என்னுடைய காலணியால் நாயை மிதித்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்தேன். வெற்றிக்களிப்பில் நாயுடன் நிழற்படம் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டேன் என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் கிரேஸி.

தடகளப் போட்டியை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த காமிராக்கள் நாயின் சேட்டையையும் சேர்த்தே பதிவுசெய்ய அந்தக் காணொளி வைரல் ஆனது. ஹோலி தனக்கான தடகளப் பாதையில் ஓடாமல் எல்லோருடைய பாதையிலும் புகுந்ததால் வெற்றிபெறும் தகுதியை இழந்தது என இணையத்தில் கிண்டல் செய்திருக்கிறார்கள். கூடவே, நாயின் வார் தட்டிவிட்டு வீரர்களில் யாராவது கீழே விழுந்து அடிபட்டிருந்தால் என்ன செய்வது என்று கோபமும் பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவிலும் இன்னும் பல நாடுகளிலும் செல்லப்பிராணிகள் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். அவற்றை எப்படி வளர்க்கவேண்டும், பொது இடங்களுக்கு அழைத்துச்செல்லும்போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் என்னென்ன, தவறினால் செலுத்தவேண்டிய அபராதம் என்ன என்பதெல்லாம் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். நம்மூரைப் போலவே அங்கேயும் செல்லப்பிராணிகளைக் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராகவே கருதுகிறார்கள். அது இது என்று சொல்லாமல் அவள் அவன் என்று உயர்திணை விகுதியைக்கொண்டே அழைக்கவும் பேசவும் செய்கிறார்கள். செல்லப்பிராணிகளின் பயன்பாட்டுக்கென தனிப்பட்ட உணவுப் பாத்திரம் படுக்கை விளையாட்டுப் பொருட்கள் என வாங்குகிறார்கள். விமானப் பயணங்களில் கூடவே அழைத்துச் செல்கிறார்கள்.

அங்கே ஒரு முறை உள்நாட்டு விமானப் பயணத்தின் போது என் அருகில் இருந்தவரின் காலுக்கருகே அவருடைய பெரிய  நாயும் அமர்ந்திருந்ததை முதலில் கவனிக்கவில்லை. பிறகு, விமானத்தில் அதிகக் கூட்டமில்லாததால் வேறு இருக்கையைத் தேடிப்போய் அமர்ந்தேன். அதேபோலப் புதிதாக நாய்க்குட்டியை வளர்ப்பவர்கள் தங்கள் வீட்டுத்தோட்டத்தைத் தாண்டி வெளியே போகக்கூடாது என்பதை அதற்குக் கற்றுக்கொடுப்பதையும் பார்த்தேன். ஓர் இருட்டிய மாலைப் பொழுதில் சாலையொன்றில் தனியே நடந்துசென்று கொண்டிருந்தபோது வேலியில்லாத காரணத்தால் வீட்டுத்தோட்டம் ஒன்றினுள் தெரியாமல் காலை வைத்துவிட்டேன். எங்கிருந்தோ குலைத்துக்கொண்டே ஓடிவந்த பெரிய நாயொன்று என்மீது பாய்ந்தது. ஈரக்குலை நடுங்க அனிச்சையாக சில அடிகள் பின்னால் நகர்ந்தபடி அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன். ஆனால் தன் வீட்டுத்தோட்டத்தின் எல்லைக்கோட்டை அடைந்ததும் உறைந்துபோனதைப்போல நின்றுவிட்டது நாய். நின்றுபோன என் மூச்சு திரும்பி வந்தது. எல்லா ஊர்களிலும் நாடுகளிலும் இதே போன்ற பயிற்சிகளைத் தருகிறார்களா என்பது தெரியவில்லை. நம் நாட்டில் பொதுவெளியில் நடந்துபோனாலே நாய் துரத்தும் என்பது தனிக்கதை.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தின் உளச்சோர்வைக் கடக்க நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயத்தைச் செய்ய ஆரம்பித்தோம். தனிமையின் துயரைக் கடப்பதற்குச் செல்லப்பிராணிகளை வளர்க்க ஆரம்பித்த நண்பர்களை அறிவேன். கிரேட் பிரிட்டனில் பெருந்தொற்றுக் காலத்தில் நாய் வளர்ப்பு அதிகமானதாகச் சொல்லும் ஆய்வறிக்கை கூடவே அதோடு இணைந்த பிரச்சனைகளும் அதிகமானது என்று சொல்கிறது. இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 2 மில்லியன் புதிய நாய்கள் வளர்க்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

கூடவே வீடுகளிலும் பொது இடங்களிலும் குழந்தைகளையும் மற்றவர்களையும் நாய்கள் கடிப்பதும் தாக்குவதும் அதிகமாகி இருப்பது கவலை ஏற்படுத்துகிறது. நாய்களால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிவரம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் மருத்துவமனைகள், நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்பவர்கள், பயிற்சியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் இந்த எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். பெருந்தொற்றுக்கு முன்னர் வளர்க்கப்பட்ட நாய்களைப்போல இந்தக் குட்டி நாய்களுக்கு வீட்டைவிட்டு வெளியே போகவோ புதியவர்களோடு பழகவோ அதிக வாய்ப்புக் கிடைக்கவில்லை. அப்படிப் புதிய மனிதர்களை சந்திக்கும்போது அவை பயந்துகொள்கின்றன. பயத்தை எதிர்கொள்வதற்காகத் தாக்குதலில் இறங்குகின்றன என்கின்றனர் விலங்கியல் மருத்துவர்கள்.

வளர்ப்பு நாய்கள் திருட்டுப் போகும் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது என்று சொல்கிறது திருட்டுப் போகும் நாய்களைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் அமைப்பு ஒன்று. அதுமட்டுமில்லாமல், பெருந்தொற்றுக் காலத்தின் நெருக்கடிகளும் போதாமைகளும் பற்றாக்குறைகளும் அதிகமாகும்போது நாய் வளர்ப்போர் அவற்றை அனாதைகளாக்கிவிடும் அபாயமும் சாத்தியமும் இருக்கிறது. அப்படியொரு நிலைமையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பது தெரியவில்லை என்கிறது விலங்குகளைக் கொடுமைக்கு உள்ளாக்குவதைத் தடுக்க முனையும் நிறுவனமான RSPCA. ஏனெனில் அப்படி நடந்தால் அது நாய்களுக்கு மாத்திரமில்லாமல் பொது மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் சேர்த்தே பெரிய தலைவலியாக இருக்கும்.

நம்மூரிலும் இதுபோல செல்லப்பிராணிகளை வளர்க்கமுடியாமல் தெருவில் விட்டுவிடும் கதைகளைப் பார்த்தும் கேட்டும் இருப்போம். நான்கு கால் செல்லப்பிராணிகளுக்குத்தான் இந்தக் கதியென்றால் கண்ணாடிக் குடுவைக்குள் தேமே என்று நீந்திக்கொண்டிருக்கும் கோல்ட் ஃபிஷ் எனப்படும் தங்கமீன்களைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பவர்களும் அவற்றை அனாதையாக்கும் செய்தியொன்றைச் சமீபத்தில் படித்தேன். நன்னீர் மீன்வகையைச் சேர்ந்த தங்கமீன்களைத் தொட்டியில் வளர்ப்பது உளச்சோர்வுக்கு நல்லது என்பதோடு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மற்ற விலங்குகளைப்போல மீன்களுக்குப் பெரிய பராமரிப்பு தேவையில்லை. வாரத்துக்கு ஒரு முறை நீரை மாற்றி தினசரி இரண்டு வேளை உணவு கொடுத்தால் போதும். ஆனால் அதைக்கூடச் செய்யமுடியாத மக்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் வீட்டில் வளர்க்கும் தங்கமீன்களை ஏரிகளிலும் குளங்களிலும் கொண்டுவந்து விடாதீர்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது அரசாங்கம். பொதுவாக இந்த மீன்கள் வீட்டில் கண்ணாடிக் குடுவையில் வளரும்போது இரண்டு இன்ச் நீள அளவு மட்டுமே இருக்கும். ஆனால் மின்னியபோலிஸ் நகரையடுத்த ஏரிகளில் விடப்பட்ட தங்கமீன்கள் 1.5 அடி நீளமும் 2 கிலோ எடையும் கொண்ட பெரிய உருவை அடைகின்றன. இவை ஏரியின் படுகையில் தேங்கியிருக்கும் கசடையும் வண்டலையும் கலைத்து விடுவதோடு நீர்த் தாவரங்களைக் கெல்லி எறிகின்றன. ஏரிகளில் வாழும் உள்நாட்டு மீன்வகைகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கின்றன.

செல்லப்பிராணியான தங்கமீனால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் அச்சமூட்டுவதாக இருக்கிறது. ஏதோ வீட்டில் இருக்கும் சில மீன்களை மட்டும் ஏரிகளில் விடுகிறோம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் மக்கள். தங்கமீன்கள் குறைந்த அளவு ஆக்சிஜனைக் கொண்டே உயிர்வாழ்வதோடு எளிதில் இனப்பெருக்கம் செய்கின்றன. உள்ளூர் ஏரி குளங்களில் இருந்து 50,000 தங்க மீன்களை வலைவீசிப் பிடித்தோம். அதற்கு பல பத்தாயிரம் டாலர்கள் செலவானது என்கிறார்கள் மின்னசோட்டா நீர் மேலாண்மைத் துறையினர். இதேபோன்ற பிரச்சனை கலிஃபோர்னியா, வாஷிங்டன், வர்ஜினியா, ஃபிளோரிடா மாகாணங்களிலும் ஆஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளிலும் ஏற்பட்டது.

ஊனுண்ணி வகையைச் சேர்ந்த லயன் ஃபிஷ் எனப்படும் சிங்க மீன் இந்தோ பசிஃபிக் கடல்பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவை. 1992-ஆம் ஆண்டில் ஃபிளோரிடாவில் வீசிய புயலின்போது வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்க மீன்களைக் கடலுக்குள் விடுவித்தனர். கரீபியன், அட்லாண்டிக் கடல்பகுதியில் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கிய இந்த மீன்கள் விரைவிலேயே பாலியல் முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்தன. இப்போது கரீபியன் கடல்பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட மீன்வகைகளையும் பவளத் திட்டுக்களையும் அழிப்பதோடு ஆழ்கடல் சூழல்மண்டலத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்த மீன்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் எல்லா விதத்திலும் தம் பெற்றோரைவிட வீரியம் மிகுந்தவையாக இருக்கின்றன என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

நாய் பூனை மீன் மட்டுமல்ல மலைப்பாம்பையும் உடும்பு வகைகளையும் வளர்ப்பவர்களை என்ன சொல்வது? ஃபிளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏனோ அதிசயமான அயற்பண்புடைய விலங்குகளின்மீது ஈர்ப்பு அதிகம் கொண்டிருக்கின்றனர். மலைப்பாம்பு, உடும்பு, டேகு என 500 வகையான அயற்பண்புடைய விலங்குகளை மிகுந்த பிரியத்துடன் வளர்த்து வருகிறார்கள். ஆனால் இந்தச் செல்லப்பிராணிகள் காலப்போக்கில் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிப்பவையாக மாறிவிட்டன என்கிறார்கள் வனவிலங்குத் துறையினர். நடைபாதைகள், கட்டடங்களின் அஸ்திவாரம், கால்வாய் மற்றும் ஏரிகளின் கரைகள், கடற்கரையை ஒட்டி எழுப்பட்டிருக்கும் சுவர்கள் என எதையும் விட்டுவைக்காமல்  குழிபறித்து அவற்றை நிலைகுலையைச் செய்கின்றன இந்த உடும்புகள். கூடவே நோய்தொற்றுக்கும் காரணமாக இருக்கின்றன. இனி இதுபோன்ற விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்க உரிமம் பெறவேண்டும் என்பதோடு ஜூலை மாத இறுதிக்குள் அவற்றின் உடம்பில் மைக்ரோசிப்களை பொருத்தவேண்டும் என்ற புதிய விதியை நடைமுறைப்படுத்தி இருக்கிறது ஃபிளோரிடா மாகாணம்.

ஹங்கேரி நாட்டில் நடந்த கதையைக் கேளுங்கள். காலையில் எழுந்து கழிவறையில் போய் உட்கார்ந்த 65 வயதுக்காரர் ஏதோ கடித்ததுபோல இருக்கிறதே என்று திரும்பிப் பார்த்தால் உள்ளே இருந்து தலையை நீட்டியதாம் மலைப்பாம்பு ஒன்று. பக்கத்து வீட்டுக்காரரின் செல்லப்பிராணியாம் அது. காவல்துறையினர் வந்து மலைப்பாம்பைப் பிடித்துக்கொண்டு போய் பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் கொடுக்கப்போனபோது அவர் இன்னும் 11 மலைப்பாம்புகளையும் பல்லி இனத்தைச் சேர்ந்த கெக்கோ ஒன்றையும் வளர்த்துவருவது தெரியவந்தது. இப்போது கவனமின்மையால் அடுத்தவரின் உடல்நலத்துக்குத் தீங்குவிளைவித்ததற்காக அவர்மீது வழக்குப் பதிந்திருக்கிறார்கள்.

நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கும் நண்பர்கள் சொல்லும் சுவாரசியமான கதைகளைக் கேட்டுவிட்டு மனதில் உற்சாகமும் ஆவலும் உந்த மகள்கள் இருவரும் என்னை நச்சத் தொடங்குவார்கள். நாயோ பூனையோ ஒரு குழந்தையை வளர்ப்பதுபோன்ற நேரமும் முனைப்பும் செலவும் எடுக்கும் விஷயமென மறுத்துவிடும் என்மீது மனத்தாங்கலோடு இருக்கிறார்கள். அவர்கள் தொட்டியில் வைத்த செடிக்கே நான்தான் நீர் ஊற்றிக்கொண்டிருக்கிறேன். நாய் பூனை வளர்த்தால் என் நிலைமை என்னவாகும். இன்னொரு உயிரைப் பராமரிக்கும் மனநிலையில் நான் இல்லை என்பதுதான் என்னுடைய இப்போதைய நிலைப்பாடு. இந்தச் செய்திகளை எல்லாம் படித்த பிறகு பேசாமல் ஆளுக்கொரு மெய்நிகர் செல்லப்பிராணியை வாங்கிக்கொடுத்துவிடலாமா என்று யோசிக்கிறேன். என்னைப் பிறாண்டாமல் கையடக்கமான செயலிக்கு உள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
 2. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
 3. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
 4. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
 5. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
 6. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
 7. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
 8. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
 9. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
 10. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
 11. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
 12. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
 13. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
 14. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
 15. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
 16. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
 17. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
 18. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
 19. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
 20. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
 21. நாம் வாழும் காலம் : கார்குழலி