நாம் வாழும் காலம் – 4

உங்கள் வீட்டுப் புழக்கடையில் இத்தனை நாள் யாரும் கண்டுகொள்ளாமல் கிடந்த பாறாங்கல் ஒன்று விலைமதிப்புமிக்க இரத்தினக்கல் என்பது தெரியவந்தால் என்ன செய்வீர்கள். எனக்குத் திருவிளையாடல் தருமி டெம்ப்ளட்தான். ஒருவேளை நீங்கள் வடிவேலுவின் விசிறி என்றால் உங்கள் மனதில் அவரது டெம்ப்ளட் ஓடலாம்.

இலங்கையின் இரத்தினபுரி என்ற நகரில் வசிக்கும் இரத்தினக்கல் வியாபாரியின் புழக்கடையில் கிணறு தோண்டும்போது பெரிய பாறாங்கல் ஒன்று கிடைத்தது. இந்த வருடம் ஜூலை கடைசி வாரத்தில் அது உலகிலேயே மிகப் பெரிய நட்சத்திர நீலமணிக் கல்லின் தொகுதி என்பது உறுதி செய்யப்பட்டது. செய்தியைப் படித்ததும் அம்புலிமாமா கதைபோல இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் இரத்தினபுரியில் இது ஒரு அன்றாட நிகழ்வு போல. இலங்கையின் இரத்தினச் சுரங்கத் தொழிலகம் இரத்தினபுரி என்ற நகரைச் சுற்றிலும் இயங்குகிறது. உலகிலேயே அதிக அளவில் இரத்தினக்கற்களைக் கொண்ட நாடு. கார்னெட், ஜெர்கான், டோபாஸ், குவார்ட்ஸ், டூர்மலின் எனப் பல்வகை இரத்தினங்களும் இங்கே பெருமளவில் கிடைப்பதால் ‘இந்தியப் பெருங்கடலின் புதையல் பெட்டி’ என்று அழைக்கப்படுகிறது.

வியாபாரியின் வீட்டில் கிடைத்த பாறாங்கல்லைச் சுத்தம்செய்து, ஆராய்ந்து, சான்றளிப்பதற்கு ஒரு வருடத்துக்கும் மேலே ஆனது. அப்போது அதிலிருந்து உதிர்ந்த துண்டுகள் உயர்தர நட்சத்திர நீலமணிக் கற்களாக இருந்தன. இத்தனை பெரிய தொகுதியை இதுவரை பார்த்ததில்லை எனவும் இது 400 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இளம் நீல நிறத்தில் இருக்கும் இந்த இரத்தினக்கல் தொகுதி 510 கிலோ எடையும் (2.5 மில்லியன் காரட்) பன்னாட்டுச் சந்தையில் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பும் கொண்டது. இதற்கு ‘தற்செயலாக நிகழ்ந்த நற்பேறு’ என்ற பொருள்படும்படி ‘செரெண்டிபிடி சஃபையர்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

மேலே சொல்லப்பட்ட சஃபையர் எனப்படும் நட்சத்திர நீலமணிக்கல் குருந்தம் (corundum) என்ற வகையைச் சேர்ந்தது. இது வைரத்திற்கு அடுத்தபடியாகக் கடினத்தன்மைகொண்ட கனிப்பொருள், ஒளி ஊடுருவக் கூடியது. சில வகை நீலமணிக்கற்களைக் குவிப்பரப்பு கொண்ட வடிவத்தில் பட்டை தீட்டினால் சூரிய ஒளி படும்போது அறுகோண நட்சத்திர வடிவொன்றைப் பிரதிபலிக்கும். இவை பெரும்பாலும் இலங்கையில் மட்டுமே கிடைக்கின்றன.

சஃபையர் என்ற பெயருக்கான விளக்கத்தை அறிந்துகொள்வதற்காக ஆங்கில அகராதியைப் புரட்டியபோது ஆச்சரியம் ஏற்பட்டது. இலத்தீன், கிரேக்க, ஹீப்ரூ மொழிகளில் இருக்கும் சப்பீர் என்ற மூலச்சொல் சம்ஸ்கிருத சனி பிரியா (சனிக்குப் பிடித்தமான) என்ற சொல்லாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குருந்தத்தில் காணப்படும் இரும்பு, டைட்டானியம், குரோமியம் போன்ற கனிமங்களின் மாசு அளவைப் பொறுத்து குருந்தத்தின் நிறமும் மாறும். ரூபி எனப்படும் மாணிக்கம் அல்லது கெம்பு குருந்தக் கற்கள் மியன்மார் மற்றும் இலங்கையில் அதிக அளவில் கிடைக்கின்றன.

இயற்கையில் 4000-க்கும் அதிகமான கனிமங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக கனிமங்கள் பார்க்க அழகான படிகங்களாக இருந்தாலும் இரத்தினக்கற்கள் விலைமதிப்பற்றவை. உலகிலேயே கடினமான இயற்கைப் பொருள் கார்பன் மூலக்கூறுகளால் உருவான வைரம். பூமியின் மேலடுக்கிலிருந்து பல நூறு மைல்களுக்குக் கீழே கிடைக்கும் அரிய வகைக் கனிமம். இதே கார்பன் மூலக்கூறுகளின் கூட்டமைவால் உருவான கிராஃபைட் மென்மையான கனிமங்களுள் ஒன்றாகும். இதுதான் நம் வீட்டுக் குழந்தைகள் தினசரி பயன்படுத்தும் பென்சில்களில் இருக்கிறது.

18-ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தியா மட்டுமே உலகின் வைரம் விளையும் பூமியாக இருந்தது. தென்னிந்தியாவின் வளமிகுந்த வண்டல் படிவுகளில், குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா ஆற்றின் கரைகளில் அளவற்ற வைரங்கள் கிடைத்தன. கோஹ்-இ-நூர் வைரத்தைப் பற்றிக் கேள்விப்படாதவர்களே இருக்கமுடியாது. கிருஷ்ணா ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரம் இந்தியாவை ஆண்ட பல அரசர்களின் மணிமுடியையும் அரியாசனத்தையும் அலங்கரித்தது. பிரிட்டிஷரால் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அரும்பொருட்களுள் ஒன்று. இன்றளவும் பிரிட்டனின் மணிமுடியை அலங்கரித்து வருகிறது.

முதலில் நீள் செவ்வக வடிவில் இருந்த கோஹ்-இ-நூரை இப்போதிருக்கும் நீள் வட்ட வடிவில் வெட்டிப் பட்டைதீட்டச் சொன்னவர் 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனை ஆண்ட விக்டோரியா மகாராணியின் கணவர் இளவரசர் ஆல்பர்ட். கோஹ்-இ-நூரை பிரிட்டிஷ் அரச பரம்பரையின் ஆண் வாரிசுகள் அணிந்துகொண்டால் ராசியில்லை என்ற நம்பிக்கை நிலவியதால் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அணிந்துகொள்கின்றனர். தற்போது பிரிட்டிஷ் அரசியின் அதிகாரபூர்வ அரண்மனையும் கோட்டையுமான லண்டன் டவரில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் இருக்கிறது.

கோஹ்-இ-நூர் சரி, டர்யா-இ-நூரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதுவும் கோல்கொண்டாவில் வெட்டியெடுக்கப்பட்ட இன்னொரு வைரம். க்ரேட் டேபிள் (பெரிய மேசை) என்ற பெரிய வைரமொன்றின் வெட்டப்பட்ட மேல் பகுதிதான் டர்யா-இ-நூர். இதன் கீழ்ப்பகுதி நூர்-உல்-அய்ன் என்ற பெயர்கொண்ட இன்னொரு வைரம் என்கிறார்கள். இரண்டும் பல கைகள் மாறி இன்று ஈரானின் அரச சொத்துக்களைப் பாதுகாக்கும் பெட்டகத்தில் இருக்கிறது.

நாம் தினமும் பயன்படுத்தும் பொருளில் இருந்து வைரத்தைத் தயாரிக்கமுடியுமா? வாயைப் பிளக்காதீர்கள். முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டான் ஃபிராஸ்ட் என்ற விஞ்ஞானி. அது என்ன பொருள் என்பதை அடுத்த வினாடிக்குள் ஊகிக்க முடியுமா? ஆமாம், ரொட்டிக்குத் தடவிச் சாப்பிடும் பீனட் பட்டர் என்பதுதான் சரியான விடை. நிலக்கடலையை மையாக அரைத்துச் செய்யப்படும் உணவுப்பொருள்.

உயிர்களின் தோற்றத்தைப் பற்றியும் வளிமண்டலத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பூமியில் வைரங்கள் எப்படி உருவாயின என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம் என்கிறார் ஃபிராஸ்ட். பூமியின் மேல்பகுதி அதன் மையப்பகுதியின் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தால் பாறைகளில் இருக்கும் கரியமிலவாயு இரும்பை அதிகமாகக் கொண்ட கனிமங்களின் உள்ளே செலுத்தப்படுகிறது. அப்போது அவற்றில் இருக்கும் உயிர்வாயு தனியே பிரியும்போது கரிமம் வைரமாக மாறுகிறது என்கிறார்.

2014-ஆம் வருடம் இந்தச் செயலாக்கத்தைத் தன்னுடைய ஆராய்ச்சிக்கூடத்தில் ஒப்புருவாக்க முயன்றார். பல தோல்விகளுக்கும் குளறுபடிகளுக்கும் பிறகு வைரம் உருவானது. இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் இந்தச் செயல்முறை சந்தைப்படுத்துவதற்கான வைரங்களை உருவாக்க உதவாது, விஞ்ஞான ஆய்வுகளுக்கு மட்டுமே உதவும். ஏனென்றால் இந்த முறையில் 2 மில்லிமீட்டர் அளவுள்ள வைரத்தை உருவாக்க பல வாரங்கள் எடுக்கும்.

இரத்தினக்கற்களைப் பற்றிப் பேசும் போது பண்டைய தமிழர்களின் நாகரிகத்தைப் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. தமிழர் அழகியலில் பொன் அணிகலன்களும் நவமணிகளாலான அணிகலன்களும் பெருமதிப்பு பெற்றிருந்தன. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பல்வகை தலையணி, காதணி, கழுத்தணிகளையும் புயம், கை, கைவிரல், கால், கால்விரல் என உடல் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களை அணிந்தார்கள் என்பதை நம்முடைய இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம்.

பண்டைய தமிழகமும் இலங்கையும் முத்துக்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்தன. 19-ஆம் நூற்றாண்டில் ஜப்பானியத் தொழில்முனைவோரான மிகிமோடோ கோகிச்சி முத்துக்களைச் செயற்கையாகவும் உருவாக்கலாம் என்று சொன்னபோது யாரும் நம்பவில்லை. ஒருவழியாக அவருடைய முயற்சி வெற்றியடைந்தபோது அணிகலன் துறையில் பெரும்புரட்சியை உருவாக்கியது.

பிறந்த நாள், நட்சத்திரம், ராசிக்கு ஏற்ப இரத்தினக் கற்களை உடலில் படும்படி அணிந்துகொண்டால் அதிர்ஷ்டலட்சுமி வீடுதேடி வந்து கதவைத் தட்டுவாள் என்ற பெயரில் இரத்தினக்கற்களை விற்பனை செய்வது உலகமுழுவதும் நடக்கும் விஷயம்தான். இந்திய ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகத்துக்கும் உகந்த இரத்தினக்கல் பற்றிய பட்டியலும் இருக்கிறது. நவரத்தினக் கற்கள் பதித்த மோதிரங்களை பலரும் அணிவதைப் பார்க்கிறோம்.

இரத்தினக்கற்களைப் பற்றியும் அவற்றின் ஆற்றல் குறித்தும் பல கதைகள் உலகின் எல்லா மக்களிடமும் இருக்கிறது. பண்டைய பர்மாவில் போர்வீரர்கள் மாணிக்கக் கல்லை உடலைத் தொடும்வகையில் அணிந்துகொண்டால் வெற்றி நிச்சயம் என்று நம்பினார்கள். ரோமானியப் பேரரசன் நீரோ காட்சியரங்குகளில் வீரர்கள் போர்புரிவதை பெரிய மரகதக்கல்லின் வழியே பார்த்து இரசித்தானாம். மரகதக்கல் மன அமைதியைத் தரும் என்பதால் இந்த ஏற்பாடு. அதற்குப் பதில் இந்த வன்முறைக் கேளிக்கையை நிறுத்தியிருக்கலாம் என்பதை அவனிடம் எடுத்துச் சொல்லும் தைரியம் யாருக்குமில்லைபோல. பச்சை நிற இரத்தினக்கல் இறப்பவர்களுக்கு நற்கதியைத் தருவதோடு மறுபிறப்புக்கும் வழிவகுக்கும் என்று நம்பினார்கள் பண்டைய எகிப்தியர்கள். இதனால் பிணங்களைப் பதனப்படுத்தும்போது அவற்றுக்கு மரகதக் கழுத்தணிகளை அணிவித்தனர்.

பாரசீகர்கள் புயல்கடந்த பிறகு பூமியை வானவில் தொடும் நேரத்தில் முத்து விளைவதாகவும் இடியும் மின்னலும் அதற்குக் கூடுதல் ஒளியைத் தருமென்றும் நம்பினார்கள். ஜப்பானியர்களோ கடற்கன்னிகள், தேவதைகள் போன்ற புராணக் கதாபாத்திரங்களின் கண்ணீரில் முத்து விளைவதாக நம்பினார்கள். சீனர்கள் கறுப்பு முத்து ட்ராகனின் தலையில் பிறப்பதாகவும் ட்ராகனைக் கொன்றால்தான் அதைப் பெறமுடியும் என்று நம்பினார்கள். நல்லபாம்பின் விஷத்தில் விளையும் நாகமாணிக்கத்தைப் பற்றிய கதைகளை நம்மூரிலும் கேட்டிருக்கிறோமே. இப்படி ஒவ்வொரு இரத்தினக்கல்லுக்கும் உலகமுழுவதும் பல்லாயிரக்கணக்கான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன.

இந்த வருடம் மே மாதத்தில் ஹாங்காங்கில் பிளாட்டினமும் தங்கமும் கலந்து செய்யப்பட்ட மோதிரத்தில் பதிக்கப்பட்ட மாசற்ற இளஞ்சிவப்பு நிற வைரமொன்று விற்பனைக்கு வந்தது. செர்ரிப் பூக்களின் நிறத்தைக் கொண்டிருந்த இந்த வைரத்துக்கு ஜப்பானிய மொழியில் அந்தப் பூக்களைக் குறிக்கும் ‘சகுரா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. கிறிஸ்டீஸ் என்ற பன்னாட்டு ஏல நிறுவனம் இந்த வைரத்தை பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிய வாடிக்கையாளர் ஒருவருக்கு 29.3 மில்லியன் டாலருக்கு விற்றதாம்.

உலகெங்கிலும் உள்ள கனிமச் சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளையும் பணியில் ஈடுபடுத்துவதை நிறுத்தச் சொல்லி பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்புகளும் சேவை நிறுவனங்களும் போராடி வருகின்றன. இவை சட்ட வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதோடு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செய்கின்றன. இதற்காக அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றும் முயற்சியிலும் ஈடுபடுகின்றன.

தங்க நகைகளின்மீது நாட்டமில்லாத பெற்றோரின் மகளான எனக்குத் தெரிந்த சஃபையரும் எமெரால்டும் ப்ளூ டைமெண்டும் சென்னையில் இருந்த திரையரங்குகள்தான். இந்தியாவின் முதல் மல்டிஃப்ளெக்ஸ் என்பதுடன் முதல் 70mm திரையரங்கு என்ற பெருமையையும் பெற்றது சஃபையர். சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம் அருகே 1964-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. மேலைநாடுகளில் இருந்த ஒரு வழக்கத்தை இங்கே பின்பற்றினர். ப்ளூ டைமெண்ட் திரையரங்கில் ஒரே திரைப்படம் இடைவெளியின்றி அடுத்தடுத்து திரையிடப்படும். எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து எவ்வளவு காட்சிகளை வேண்டுமென்றாலும் பார்க்கலாம்.

இந்தக் கொரோனாவுக்குப் பிறகு திரைப்படங்களை மடிக்கணினியில் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது. எங்கேயும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதில் நேர நெகிழ்வு இருப்பதைப்போலத் தோன்றினாலும் எப்போது வேண்டுமானாலும் நிறுத்திவிட்டு எழுந்துபோகலாம் என்பது திரைப்படத்தோடு பார்வையாளருக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான தொடர்பைத் துண்டிக்கிறது. பிரியமான நடிகர் அல்லது இயக்குனரின் திரைப்படத்தைப் பெரிய திரையில் அதற்கேற்ற ஒலி-ஒளி ஏற்பாடுகளோடு பார்க்கும் அனுபவம் அலாதியானது. கொரோனா பயம் விலகிப்போகும் அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கிறேன்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
  2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
  3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
  4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
  5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
  6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
  7. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
  8. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
  9. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
  10. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
  11. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
  12. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
  13. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
  14. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
  15. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
  16. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
  17. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
  18. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
  19. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
  20. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
  21. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
  22. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
  23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
  24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
  25. நாம் வாழும் காலம் : கார்குழலி