நாம் வாழும் காலம் – 20

குவாதமாலாவில் இருக்கும் அன்டிகுவாவில் சென்ற மாதம் புனித வாரத்தை ஒட்டி வரையப்பட்ட பிரம்மாண்டமான வண்ண மலர்க் கோலங்களைப் பார்த்ததும் ஓணம் திருநாளை ஒட்டி கேரளத்தில் வரையப்படும் பூக்களங்கள் நினைவுக்கு வந்தன. மலர்களின் வண்ணமே மனதைக் கொள்ளைகொள்ளுவதாக இருக்கிற போது அவற்றைக்கொண்டு நேர்த்தியான அலங்கார வடிவங்களை அமைக்கும் கலை அழகுணர்வைத் தூண்டுகிறது.

குவாதமாலாவின் புனித வாரக் கொண்டாட்டங்கள்

குருத்தோலை ஞாயிறு நாளில் தொடங்கி இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் ஞாயிறு வரையிலான காலமே புனித வாரம். உலகமுழுவதும் இருக்கும் கிறிஸ்துவர்கள் இதை பல்வேறு வகைகளில் கொண்டாடுகிறார்கள். செமனா சாண்டா அல்லது செமனா மேயர் என்ற புனித வாரம் அன்டிகுவாவில் கிறிஸ்துமஸைவிடவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாரமுழுவதும் நாடே விழாக்கோலம் பூணுகிறது. கலாச்சார வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மறந்து எல்லா மக்களும் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

16-ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்களின் வரவால் குவாதமாலாவில் கிறிஸ்துவம் அறிமுகமானது. காலப்போக்கில் கிறிஸ்துவத்தின் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் அந்நிலத்தைச் சேர்ந்த மாயா (Maya) இனத்தவர்களின் பாரம்பரியமும் கலாச்சாரமும் பழக்கவழக்கமும் ஒன்று கலந்தன. அவற்றில் ஒன்றுதான் வண்ணமலர்களால் நிலத்தில் கோலங்களை அமைக்கும் கலை. அன்டிகுவா முழுவதும் பல நூறு மலர்க்கோலங்கள் அமைக்கப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவின் திருவுருவத்தை வரைவதோடு வெவ்வேறு வடிவங்களையும் அமைத்து தங்களின் கலைநயத்தை வெளிப்படுத்துகிறார்கள். மலர்கள் அடர்ந்த கோலங்களைப் பார்க்க தரையில் கம்பளம் விரித்தாற்போல இருக்கும் என்பதால் மலர்க் கம்பளம் என்கிறார்கள்.

ஒவ்வொரு குழுவும் என்ன வடிவத்தை அமைக்கலாம் என்பதைப் பல மாதங்களுக்கு முன்னதாகவே திட்டமிடுகிறது. வடிவம் பெரியதாக இருந்தால் குழுவினரின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கும். சாலையில் இருக்கும் குப்பைகளை நீரைத் தெளித்துச் சுத்தம் செய்கிறார்கள். உருளைக் கற்கள் பாவிய சாலையென்றால் இடைவெளிகளை சன்னமான மணல் அல்லது மரத்தூளால் நிறைக்கிறார்கள். படியெடுக்கும் அச்சினால் நுட்பமான வடிவங்களை வரைகிறார்கள். விழா நாளன்று மலர்கள் இலை தழை போன்ற இயற்கைப் பொருட்களால் வடிவங்களுக்கு வண்ணம் சேர்க்கிறார்கள்.

நகரில் ஆங்காங்கே அமைந்துள்ள தேவாலயங்களில் இருந்து புறப்படும் ஊர்வலங்கள் மலர்க்கோலங்கள் வரையப்பட்ட தெருக்களின் வழியே நடந்துபோகும். கோலங்கள் வரையப்பட்டு சில நொடிகளே ஆகியிருக்கும். அடுத்த நிமிடத்தில் நீண்ட ஊர்வலம் நடப்பதால் அவை கலைந்துபோகும். இது குறுகிய காலம் மட்டுமே நிலைத்திருக்கும் கலை, நம்முடைய கலைநயத்தின் வெளிப்பாடு மட்டுமே என்பது இந்த மலர்க் கோலங்களை வரையும் கலைஞர்களுக்குத் தெரியும்.

ஊர்வலம் கடந்ததும் நகரின் துப்புரவாளர்கள் எல்லாவற்றையும் அகற்றித் தூய்மைப்படுத்துகிறார்கள். கோலத்தில் பயன்படுத்திய பொருட்கள் நகரின் மக்கும் உரம் தயாரிக்கும் இடத்தில் சேர்க்கப்படுகின்றன. இருபதே நிமிடத்தில் சாலை பளிச்சென ஆகிவிடுகிறது. அடுத்த நாளின் மலர்க் கோலத்துக்கான கித்தான் தயார்.

 

குறுகிய ஆயுள்கொண்ட கலைவெளிப்பாடுகள் 

நம்மூரில் வீட்டு வாசலில் அன்றாடம் வரையும் கோலமும் ஓர் அன்றாட அழகியல் கலையே. ஒரு சில மணிநேரமோ அல்லது ஒரு நாளோ மட்டுமே நிலைத்திருக்கும் கலை வெளிப்பாடுகள் எஃபெமேரல் கலை (ephemeral art) எனப்படுகின்றன. பெரும்பாலும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களால் பொதுவெளிகளில் அமைக்கப்படுகின்றன. இதுபோன்ற குறைந்த ஆயுள்கொண்ட கலைவெளிப்பாடுகளில் ஈடுபடுவது மனதுக்கு இதமளிப்பதால் இதை மன அழுத்தத்தைக் குறைக்கும் சிகிச்சை முறையாகவும் பரிந்துரைக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

உலகமுழுவதும் இதுபோன்ற பற்பல குறுகிய ஆயுள்கொண்ட கலைவெளிப்பாடுகள் புழங்குகின்றன. தென்னிந்தியாவில் வரையப்படும் கோலம், பூக்களம், வண்ணப் பொடிகளால் வரையப்படும் ரங்கோலி, வழிபாட்டுக்கான சித்திரங்கள், கடற்கரை மணல் சிற்பம், பனிக்கட்டிச் சிற்பம், வெண்ணை, சாக்லேட், காய்கறிச் சிற்பங்கள், இயற்கை வெளியில் பூ, இலை, சருகு, குச்சி, உருளைக்கற்கள் போன்றவற்றால் அமைக்கப்படும் வடிவங்கள் இவையெல்லாமே எஃபெமேரல் எனப்படும் குறுகிய ஆயுள்கொண்ட கலைவெளிப்பாடுகள். இந்த வகையில் சமையல், முக ஒப்பனை, தலை அலங்காரம், வாணவேடிக்கை போன்றவையும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. எவையெல்லாம் எஃபெமேரல் என்பது குறித்துப் பல ஆண்டுகளாக விவாதம் தொடர்கிறது. இந்தப் பட்டியல் காலத்துக்கேற்ப மாறவும் செய்கிறது.

 

பிரஸ்ஸல்சின் வண்ணமலர்க் கம்பளம்

உலகின் பிரம்மாண்டமான வண்ணமலர்க் கம்பளத்தைக் (Flower Carpet) காணவேண்டுமென்றால் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சுக்குத்தான் போகவேண்டும். 1971-ஆம் ஆண்டு முதல்  இரண்டு வருடத்துக்கு ஒரு முறை இந்த வண்ணமலர்க் கம்பளம் அமைக்க க்கப்படுகிறது.

ஐரோப்பாவைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுக்கு தேவனின் தாய் மரியாளின் உடல் ஏற்றம் பெற்ற தினம் ஒரு புனித நாள். ஆகஸ்ட் 15-ஆம் தேதியை ஒட்டி வரும் ஞாயிறன்று அசம்ப்ஷன் நாள் (Assumption Day) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளை ஒட்டி கிரான்ட் பிளேஸ் (Grand Place) எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரின் மையப்பகுதியில் பெகோனியா, டாலியா மலர்கள், இலை, மரப்பட்டை ஆகியவற்றால் இந்த மலர்க் கம்பளம் அமைக்கப்படுகிறது.  70 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட கம்பளத்தை சுமார் 100 பேர் கொண்ட குழு 8 மணிநேரத்தில் உருவாக்குகிறது.

கோதிக் (Gothic) கட்டடப் பாணியில் அமைந்த யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமான கிரான்ட் பிளேஸில் மலர்களின் நறுமணத்தை முகர்ந்தபடி நடைபோடுவதை விடவும் சிறப்பான விஷயம் இருக்குமா என்ன. அருகில் இருக்கும் நகரசபையின் மாடியில் ஏறினால் அலங்கார மலர் அமைப்பு முழுவதையும் காணக்கிடைக்கும். நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்வை ஒட்டி மாலை நேரத்தில் இசைநிகழ்ச்சியும் ஒலி-ஒளிக் காட்சியும் நடைபெறும். இந்த நிகழ்வில் பங்கேற்க உலகமுழுவதில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் பிரஸ்ஸல்சுக்கு வருகிறார்கள்.

 

போலந்தின் கார்பஸ் கிறிஸ்டி கொண்டாட்டம் 

போலந்து நாட்டிலும் இதுபோன்ற வண்ணமலர் அலங்காரம் நடைமுறையில் உள்ளது. கார்பஸ் கிறிஸ்டி தினத்தையொட்டி நடக்கும் விருந்தன்று ஊரே ஒன்று கூடி இந்த வண்ணமலர்த் தரைவிரிப்புகளை அமைக்கின்றது. ஒவ்வொரு குடும்பமும் அவரவர் வீட்டு வாயிலிலும் தெருவிலும் இவற்றை அமைக்கின்றன. சுற்றிலுமுள்ள வயல்வெளிகள் வீட்டுத் தோட்டங்களில் இருந்து மலர்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த மலர்த்தி தரைவிரிப்புகள் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரையில் விரிந்திருக்கும்.

போலந்தின் கார்பஸ் கிறிஸ்டி மலர்த் தரைவிரிப்பு யுனெஸ்கோ அருவக் கலாசார சொத்துப் பட்டியலில் ஒரு கலையாக இணைக்கப்பட்டிருக்கிறது. மலர்த் தரைவிரிப்புகளையும் அலங்கார வளைவுகளையும் எப்படி அமைப்பது என்ற தகவல்களை அடுத்த தலைமுறைக்கு ஒவ்வொரு குடும்பமும் அறிவுறுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கலையைப் பாதுகாக்க ஒவ்வொரு கிராமமும் பள்ளிகளில் முறையான பணிமனைகளை நடத்துகின்றன.

 

மதேரா தீவில் கார்பஸ் கிறிஸ்டி 

வின்ஸ்டன் சர்ச்சில் ‘அட்லாண்டிக்கின் மிதக்கும் தோட்டம்’ என்று வர்ணித்த தீவைத் தெரியுமா? போர்ச்சுகல் நாட்டின் தன்னாட்சி உரிமை பெற்ற மதேரா தீவு வசீகரமான வித்தியாசமான மலர்களுக்கும் தாவரங்களுக்கும் பெயர்போனது. ஆப்பிரிக்காவுக்கு ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் அமைந்துள்ள மதேராவில் நிலவும் மித தட்பவெப்பநிலை தாவரங்கள் தழைக்க ஏதுவான சூழலை ஏற்படுத்துகிறது. இங்கிருக்கும் சுமார் 700 வகை தாவரங்களில் 120 வகை உலகில் வேறு எங்கும் காணப்படாதவை. மதேராவின் வைன் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புதிய நிலப்பகுதிகளைத் தேடி கடற்பயணம் மேற்கொண்ட போர்ச்சுகலின் கடலோடிகள் தரைதட்டிய முதல் நிலப்பகுதி மதேரா தீவு. அவர்கள் வரும் வரையில் இங்கு மனித நடமாட்டமே இல்லை எனப்படுகிறது. தற்போது வருடமுழுவதும் மக்கள் வந்துபோகும் பிரபல சுற்றுலாத் தலமாக இருக்கிறது. மதேராவின் லாரல் மரக் காடுகள் யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

இங்கே ஜூன் மாதத்தில் அனுசரிக்கப்படும் கார்பஸ் கிறிஸ்டி புனித நாளன்று தலைநகர் ஃபுஞ்சல் விழாக்கோலம் பூணும். இரண்டு வாரங்கள் நடைபெறும் கொண்டாட்டத்தின் போது கிறிஸ்துவ தேவாலயங்களும் சாலைகளும் மலர்க் கோலங்களால் அலங்கரிக்கப்படும். பாட்டு நடனம், வரலாற்று நாடகங்கள் ஆகிய நிகழ்வுகளில் எல்லா மதத்தைச் சேர்ந்த மக்களும் கலந்துகொள்வார்கள். பெண்களும் குழந்தைகளும் வண்ணமயமான பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு ஊர்வலமாகச் செல்வார்கள். நகரத்தின் சதுக்கத்தில் அமைக்கப்பட்ட நம்பிக்கைச் சுவரில் உலக அமைதி வேண்டி ஒவ்வொரு குழந்தையும் ஒரு மலரை வைக்கும் வழக்கமும் உண்டு. இத்தாலி, ஸ்பெயின் நாடுகளிலும் கார்பஸ் கிறிஸ்டி கொண்டாட்டங்களை ஒட்டி வண்ணமலர்க் கோலங்கள் அமைக்கப்படுகின்றன.

மீண்டும் மீண்டும் ஒரே கேள்விதான் மனதில் எழுகிறது. தென்னிந்தியாவின் புள்ளிக் கோலங்கள், தேரோட்டங்கள், கலை வெளிப்பாடுகள், பாரம்பரிய சமூக நிகழ்வுகள், கேரளாவின் ஓணம், பூக்களம், வல்லம் களி ஆகியவை ஏன் இன்னும் யுனெஸ்கோவின் அருவக் கலாச்சாரப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதுதான் அது. நூற்றுக்கணக்கான இனங்களும் ஆயிரக்கணக்கான மொழிகளும் அதற்கிணையான இரண்டாயிரம் ஆண்டு பழைமையான கலைகளும் கலாச்சார பாரம்பரிய பழக்கவழக்கங்களும் கொண்ட இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்படும் தகுதிகொண்டவை. அதற்கான விண்ணப்பம், தேர்வு, அங்கீகாரம் என முறையான வழிமுறை இருக்கிறது, எளிதான வேலை இல்லை என்றாலும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்ட கலைகளைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்க பன்னாட்டு ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதால் இந்தப் பணியைச் செய்ய யாராவது முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
 2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
 3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
 4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
 5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
 6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
 7. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
 8. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
 9. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
 10. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
 11. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
 12. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
 13. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
 14. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
 15. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
 16. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
 17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
 18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
 19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
 20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
 21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
 22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
 23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
 24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
 25. நாம் வாழும் காலம் : கார்குழலி