நாம் வாழும் காலம் – 7

மேகாலயா மாநிலத்தில் உள்ள கோங்தாங் கிராமத்தில் இருக்கும் காசி இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இரண்டு பெயர்கள் ⎯ முதலாவது அதிகாரபூர்வமான பெயர், மற்றது அம்மா குழந்தையைக் கூப்பிடப் பயன்படுத்தும் சீழ்க்கையொலித் தாலாட்டு. குழந்தை பிறந்ததும் அம்மாவின் மனதில் தோன்றும் தாலாட்டை இராகமாகப் பாடுகிறார். அதுவே குழந்தையின் பெயராக அமைகிறது. கிராமத்தில் எல்லோரும் குழந்தையை இந்தச் சீழ்க்கையொலிப் பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறார்கள். ‘ஜிங்ரிவாய் இலாபேய்’  என்றழைக்கப்படும் இந்த வழக்கத்தைப் புனிதமானதாகக் கருதுகிறார்கள் கோங்தாங் கிராம மக்கள். ஒருவிதத்தில் கேட்பதற்கு பறவைகள் எழுப்பும் இனிமையான ஒலியைப்போல இருக்கின்றன இந்தப் பெயர்கள்.

ஒவ்வொரு சீழ்க்கையொலிப் பெயரையும் சொல்லிமுடிக்கச் சில நொடிகள் முதல் ஒரு நிமிடம் வரை ஆகலாம். கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சீழ்க்கையொலிப் பெயர் இருக்கிறது. அதிகாரபூர்வமான பெயரைச் சொல்லி யாரும் யாரையும் அழைப்பதில்லை. ஒருவர் இறந்த பின்னால் அவருடைய சீழ்க்கையொலிப் பெயர் வேறு யாருக்கும் சூட்டப்படுவதில்லை.

மக்கள் குழுக்களாக வேட்டையாடும்போது ஒருவருக்கொருவர் தகவலைப் பரிமாறிக்கொள்ள இந்த வழக்கத்தைத் தொடங்கியிருக்கலாம் என்று கருதுகிறார்கள் வரலாற்று அறிஞர்கள். மலைப் பிரதேசங்களில் பேச்சு மொழியைவிடவும் சீழ்க்கையொலி முகடுகளையும் பள்ளத்தாக்குகளையும் கடந்து வெகுதூரம் வரையிலும் கேட்பது முக்கியக் காரணமாக இருக்கலாம். மலைக் காடுகளுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் தீயசக்திகளின் காதுகளில் ஒருவரின் பெயர் கேட்டால் நோய்வாய்ப்படுவார். அதற்கு மாற்றாக இந்தச் சீழ்க்கையொலிப் பெயரால் அழைக்கும்போது தீங்குவிளையாமல் காப்பாற்றப்படுவதாகக் கிராம மக்கள் நம்புகிறார்கள். கிராமத்துக்குள் கொள்ளையர்கள் புகும்போது தாக்கப்பட்டவர்கள் எழுப்பும் சீழ்க்கையொலி அக்கம்பக்கத்தவர்களை எச்சரிக்கை செய்வதோடு உடனடியாக வந்து கொள்ளையர்களைத் துரத்தியடிக்கவும் உதவிய கதைகளும் உண்டு. 

தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் சீழ்க்கை மொழி 

இன்றளவும் உலகின் 80 இனக்குழுக்கள் தொலைதூரத்தில் இருப்பவர்களோடு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள சீழ்க்கையொலியைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிவீர்களா? தற்போது வழக்கில் உள்ள சீழ்க்கை மொழி எதுவும் ஆதிமொழியின் எச்சமல்ல. பேச்சு மொழியின் மேலதிக இணைப்பாகவும் அதன் இன்னொரு வடிவமாகவும் இருக்கிறது. இதை ஆராய்வதுமூலம் மொழி உருவான வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் மொழியியலாளர்கள். கூடவே பேச்சு மொழியின் சிக்கலான வடிவங்களின் பொருளை நம் மூளை எப்படிப் புரிந்துகொள்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

சீழ்க்கையொலி மொழி கரடுமுரடான மலைப் பகுதியிலும் அடர்ந்த காட்டிலும் வசிக்கும் இனக்குழுக்களால் உருவாக்கப்படுகின்றன. வழக்கமான பேச்சையும் உரக்கக் கத்துதலையும்விட 10 மடங்கு  அதிகமான தூரத்துக்குக் கேட்கிறது சீழ்க்கையொலி. அனுபவம்கொண்டவர்கள் எழுப்பும் சீழ்க்கையொலி 120 டெசிபெல் வரை இருக்கும். ஒரு கார் ஹார்ன் எழுப்பும் ஒலியை விடவும் அதிகமானது இது. அதேபோல 1 முதல் 4 கிலோஹெர்ட்ஸ் வரையிலான அலைவரிசையில் இருக்கும். இரண்டு குன்றுகளில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும்போது ஒருவர் இருக்கும் இடத்துக்கு மற்றொருவர் போய்ச்சேர பேச பல மணி நேரமாகலாம். சீழ்க்கையொலி இருந்த இடத்தில் இருந்தே தகவலைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறது.

பெரும்பாலும் ஆங்கிலம், ஸ்பேனிஷ் போன்ற ஐரோப்பிய மொழிகளில் சொற்களின் பொருள் தொனியைச் சார்ந்து இருப்பதில்லை என்பதால் சீழ்க்கை வடிவத்துக்கு எளிதாக உருமாறுகின்றன. இவற்றில் ஒவ்வொரு எழுத்தொலியும் சிறு சிறு மாற்றங்களுடன் ஒலிக்கப்படுவதால் அவற்றை எளிதில் புரிந்துகொள்ளமுடியும். தொனியைச் சார்ந்து பொருள் மாறுபடும் மொழிகளில் சீழ்க்கையொலிப் பரிமாற்றம் எடுபடுவதில்லை. எடுத்துக்கட்டாக, சீன மொழியில் ‘மா’ என்ற சொல் தொனியைப் பொறுத்து ‘அம்மா’ ‘குதிரை’ என்ற இரு வேறு பொருளைத் தரும்.

மெக்சிகோவின் தென் பகுதியைச் சேர்ந்த மக்கள் சீழ்க்கையொலியை ஏழு வெவ்வேறு சுருதியில் ஒலிக்கிறார்கள். அமேசான் பகுதியைச் சேர்ந்த மக்கள் இரண்டு சுருதியில் மட்டுமே ஒலிப்பதால் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடிகிறது. பேச்சு மொழியில் புழங்கும் எல்லாச் சொற்களையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்ள முடியாது என்றாலும் வரையறுக்கப்பட்ட ஒலிகள் சொல்லவரும் தகவல்களைப் பழக்கப்பட்டவர்கள் கேட்கும்போது எளிதில் புரிந்துகொள்கிறார்கள். கூட்டமும் சந்தடியும் நிறைந்த பகுதியில் குறிப்பிட்ட ஒலிகளைக்கொண்டே ஒருவர் என்ன சொல்லவருகிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோமல்லவா, அதேதான் இங்கும் நடக்கிறது.

ஒவ்வொரு மொழியிலும் எத்தனை விதமான ஒலிகள், ஒலிச் சேர்க்கைகள். மனிதனின் குரல் நாண் எத்தனை விதமாக வளைந்துகொடுத்து இவற்றை உருவாக்குகிறது. மனிதனின் நெருங்கிய உறவுகளான வாலில்லாக் குரங்குகள் குரல் நாணைக் கட்டுப்படுத்தும் திறனைப் பெறவில்லை என்பதால் அவற்றால் பேச முடியவில்லை என்று சில வருடங்களுக்கு முன்னால் வரை நினைத்தார்கள் அறிவியலாளர்கள். ஆனால் விலங்குக் காட்சிச்சாலையில் வசிக்கும் ஒராங்குட்டான்கள் பணியாளர்களின் சீழ்க்கையொலியைக் கேட்டுத் தானும் சீழ்க்கையடிக்க ஆரம்பிக்கின்றன. கூடவே புதிய ஒலிகளை எழுப்பவும் ஒன்றிடம் இருந்து மற்றொன்று கற்றுக்கொள்கின்றன. மனிதர்கள் புதிய ஒலிகளை ஏற்படுத்தவும் பயன்படுத்தவும் எப்படிக் கற்றுக்கொண்டார்கள், எப்போது பேசத் துவங்கினார்கள், மொழியின் உருவாக்கம் போன்றவை குறித்து ஒராங்குட்டான்கள் சீழ்க்கையடிக்கக் கற்றுக்கொண்டதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதுமூலம் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் மொழியியலாளர்கள்.

விசிலடிக்கும் விலங்குகள்

எலிகள் சீழ்க்கையொலி எழுப்புவதைக் கேட்டிருப்போம். கம்பளிப்பூச்சியும் அதைப்போன்றே செய்யும் என்பது ஆச்சரியத்தைத் தந்தது. வட அமெரிக்காவைச் சேர்ந்த வால்நட் ஸ்பின்க்ஸ் கம்பளிப்பூச்சி எதிரிகள் தாக்க வரும்போது உடம்பைக் குறுக்கிக்கொண்டு அதில் இருக்கும் சின்னஞ்சிறிய துளைகளின் வழியாகக் காற்றை வெளியேற்றுகிறது. இந்தச் சீழ்க்கையொலி அதைத் தின்ன வரும் பறவைக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது, கம்பளிப்பூச்சி தப்பிப் பிழைக்கிறது.

ஓங்கில் எனப்படும் டால்ஃபின் மீன்களும் சீழ்க்கையொலியை எழுப்புகின்றன. ஒவ்வொரு டால்ஃபினும் தனித்துவம் வாய்ந்த சீழ்க்கையொலியை எழுப்புவதால் அவற்றை அடையாளம் காண உதவும் பெயரைப்போலப் பயன்படுகின்றன. அம்மா-குழந்தையும் ஒரே மந்தையைச் சேர்ந்த ஆண் டால்பின்ஃகளும் ஒரே மந்தையில் இருந்து பிரிந்துபோன நண்பர்களும் ஒருவரையொருவர் அடையாளம் காணவும் ஒன்றுசேரவும் இந்தச் சீழ்க்கையொலிப் பெயர் பயன்படுகிறது.

ஆசியக்காடுகளில் வசிக்கும் டோல் எனப்படும் காட்டு நாய்கள் ‘சீழ்க்கையடிக்கும் வேட்டையர்கள்’ என்ற பெயரைப் பெற்றிருக்கின்றன. கூட்டமாக வேட்டையாடும்போது இருக்கும் இடத்தை ஒன்றுக்கொன்று தெரிவிப்பதற்குச் சீழ்க்கையொலியைப் பயன்படுத்துகின்றன.

நாய்களுக்கு மட்டுமே கேட்கும் சீழ்க்கையொலி 

ஓசையில்லாத நாய் சீழ்க்கை ஒலிப்பானைப் பற்றித் தெரியுமா? தொலைதூரத்தில் இருந்தபடியே நாய்களுக்கு உத்தரவு தருவதற்காகத் தற்காலத்தில் பயன்படும் இந்தச் சீழ்க்கையை சர் ஃபிரான்சிஸ் கால்டன் என்பவர் 1876-ஆம் ஆண்டில் மனிதர்களின் கேட்கும் திறன் குறித்த ஆராய்ச்சிக்காக  உருவாக்கினார். அவருடைய பெயரிலேயே கால்டனின் சீழ்க்கை என்று அழைக்கப்படுகிறது.

ஆராய்ச்சியின்போது மனிதர்களுக்குக் கேட்காத அதிகமான அலைவரிசையில் எழுப்பப்படும் ஒலிகளை நாய்களால் கேட்கமுடிகிறது என்பதைக் கண்டுபிடித்தார். அதனால் இந்தச் சீழ்க்கையை நாய்களுக்கு உத்தரவு தருவதற்காகப் பயன்படுத்தத் துவங்கினார்கள். பயிற்சியாளரோ உரிமையாளரோ சீழ்க்கையொலியின் மூலம் என்ன உத்தரவைத் தருகிறார் என்பதை உணர்ந்து செயல்பட நாய்களுக்கு முறையான பயிற்சி தேவை. பயிற்சியாளரும் என்னவிதமான ஒலியை எப்படி எப்போது எழுப்பவேண்டும் என்று கற்றுக்கொள்வது அவசியம். பூனைகளுக்கு நாய்களைவிடவும் நுட்பமான கேட்கும்திறன் இருப்பதால் சில நேரங்களில் இந்தச் சீழ்க்கையொலியைக் கேட்டு அவை தடுமாறுவதும் உண்டு. ஆனால் பூனைகள் எப்போது மனிதனின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடந்திருக்கின்றன. அதனால் பெரிதாக எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை.

பொதுவாக, மீட்பு மற்றும் தேடுதல் குழுக்களில் இருக்கும் நாய்களோடு வேட்டை மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் நாய்களுக்கு உத்தரவு தர இந்தச் சீழ்க்கை பயன்படுகிறது. தூரத்தினாலோ புற ஒலிகளாலோ பயிற்சியாளரின் உத்தரவு மூழ்கடிக்கப்படாமல் இருப்பதில் கால்டனின் சீழ்க்கை முக்கியப் பங்கு வகிக்கிறது.  

சீழ்க்கையடிப்பது பயிற்சியால் வருவதா 

சீழ்க்கையடிப்பது மரபணு சார்ந்தது என்று ஒரு சாராரும் இல்லை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்று இன்னொரு சாராரும் கூறுகிறார்கள். சீழ்க்கையடிக்கும்போது வாய்க்குள் நிகழும் இயற்பியல், உயிரியல் சார்ந்த செயல்பாடுகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மனநிறைவோடு இருப்பவர்களாலும் எதையும் இலகுவாக எடுத்துக்கொள்பவர்களாலும் மட்டுமே சீழ்க்கையடிக்க முடிகிறது என்கிறது மற்றோர் ஆய்வு. இப்படிப்பட்டவர்கள் பணியில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதோடு பாடுவதும் சீழ்க்கையடிப்பதும் வேலைப்பளுவைக் குறைக்க உதவுகிறது. பொதுவாக சீழ்க்கையடிப்பது எந்தப் பொறுப்பும் இல்லாத விடுதலை உணர்வையும் உலகமே காலடியில் இருப்பது போலவும் வானத்தில் பறக்கும் பறவையைப் போலவும் காலம் அந்த நொடியிலே அசையாமல் நிற்பது போலவும் உணர்ச்சி செய்கிறது என்பது உண்மை. இத்தனை இருந்தும் பல கலாச்சாரங்களில் சீழ்க்கையடிப்பது ஒழுங்கீனத்தோடும் அவமரியாதையான நடத்தையோடும் தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவரின், குறிப்பாகப் பெண்களின், கவனத்தைத் திருப்பவும் பொதுக்கூட்டங்களிலும் நாடக, திரையரங்குகள் போன்ற இடங்களில் நிகழ்ச்சி பிடிக்கவில்லை என்பதைத் தெரிவிக்கவும் எழுப்பப்படும் சீழ்க்கையொலியை யாரும் விரும்புவதில்லை.

சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா சுரேஷ் ‘விசில் அரசி’ என்றழைக்கப்படுகிறார். இந்திய சீழ்க்கையடிப்போர் சங்கத்தின் உறுப்பினரான ஸ்வேதா, 2016-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற சீழ்க்கையடிப்போருக்கான உலகப் போட்டியில் வெற்றிவாகை சூடினார். இடைவிடாமல் 18 மணிநேரம் சீழ்க்கையடித்து ஆசிய அளவில்  சாதனை நிகழ்த்தியிருக்கிறார். அடுத்து 25 மணிநேரம் சீழ்க்கையடித்து உலக அளவில் சாதனை நிகழ்த்தவேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். ஜில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கயல் போன்ற திரைப்படங்களில் இவரின் சீழ்க்கையிசை இடம்பெற்றிருக்கிறது.

திரைப்படங்களில் சீழ்க்கையொலிப் பாடல்கள்

தமிழ்த் திரைப்படங்களில் சீழ்க்கையொலிப் பாடல்களைத் தேடியபோது பள்ளி நண்பர்களால் நினைவூட்டப்பட்ட பொக்கிஷமான பாடல்களுள் ஒன்று சந்திரபாபுவின் ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.’ ‘கேள்வி பிறந்தது அன்று’, ‘வந்த நாள் முதல்’ பாடல்கள் ஒருவிதமான சலனமற்ற அமைதியான உணர்வையும் மனநிறைவையும் தந்தது எனக்கு மட்டும்தானா என்பது தெரியவில்லை. இந்தப் பாடல்களைக் கேட்கும்போது ரோஜர் விட்டகேர் என்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் பாடகரின் ‘ரஷியன் விசிலிங்’ பாடலையும் இணையத்தில் தேடிப்பிடித்துக் கேட்டுவிடுங்கள். இவரின் சீழ்க்கையடிக்கும் திறனால் ‘மனித விசில்’ என்ற பட்டப்பெயரைப் பெற்றவர்.

ஒரு பாடல் பிடித்துவிட்டால் அதை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பேன். அப்படிப்பட்ட ஒன்று பாப் மெக்பெர்ரினின் ‘டோன்ட் ஒர்ரி, பீ ஹேப்பி’. பாடலின் துவக்கத்தில் வரும் சீழ்க்கையிசை அதை வேறொரு படிமத்துக்கு இட்டுச்செல்கிறது என்றே சொல்லுவேன். ‘எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது, வருத்தப்படுவதால் அது இரட்டிப்பாகிறது. எதுவும் கடந்துபோகும், அதனால் வருத்தப்படாமல் மகிழ்ச்சியாக இருங்கள்’ என்ற பொருள்படும் இந்தப் பாடலைக் கேட்கும்போது மனம் இலேசாகும் கால்கள் தாளம் போடும் பாடல் முடிவதற்குள் முகத்தில் புன்னகை அரும்பும்.

இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் பாடல் ‘நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்’. அரை நூற்றாண்டு கடந்த பின்னும் நம் நினைவில் நிற்கிறதென்றால் இசையும் பாடல்வரிகளும் நடிகர்களும்தான் முக்கியமான காரணம். பாடலின் துவக்கத்தில் வரும் சீழ்க்கையொலிச் சேர்ந்திசையை எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது. வேலையில்லாமல் சென்னை நகர வீதிகளில் அலையும் மூன்று இளைஞர்கள் ‘எங்கே கால் போகும் போகவிடு முடிவைப் பார்த்துவிடு’ என்று பாடுவதில் எத்தனை தன்னம்பிக்கை தொனிக்கிறது. மெரினா கடற்கரை அருகே உள்ள சாலையில் சிவாஜி கணேசனின் இளமைத் துள்ளலும் ஒயிலுமான நடை நம்மையும் சேர்த்தே துள்ளியாடச் செய்யும். கூட இருக்கும் மற்ற இருவரும் என் கண்ணுக்குத் தெரியவேயில்லை. அதில் தவறொன்றுமில்லையே.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
 2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
 3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
 4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
 5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
 6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
 7. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
 8. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
 9. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
 10. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
 11. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
 12. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
 13. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
 14. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
 15. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
 16. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
 17. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
 18. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
 19. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
 20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
 21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
 22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
 23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
 24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
 25. நாம் வாழும் காலம் : கார்குழலி