The 12 Chinese Zodiac Signs Explained | Reader's Digest2023ஆம் ஆண்டு சீனர்களுக்கு முயல் ஆண்டு. ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் சீனர்களின் புத்தாண்டு பிறந்தது. சீனர்கள் நிலவின் சுழற்சியை அடிப்படையாகக்கொண்ட சந்திர நாட்காட்டியைப் பயன்படுத்துகிறார்கள். சீன சோதிடத்தின்படி ஒவ்வொரு வருடமும் ஒரு விலங்கின் ஆண்டாக வழங்கப்படுகிறது. எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி எனப் பன்னிரெண்டு விலங்குகளின் சுழற்சியில் இது முயலின் முறை. அதிலும் நீர், நிலம், தங்கம், நெருப்பு, மரம் என்று ஐந்து முயல் வகைகள் உள்ளன. இது நீர் முயல் வருடம் – நீண்ட ஆயுள், அமைதி, செல்வம் இவற்றுக்குக் குறியீடாக இருக்கிறது. முயல் ஆண்டில் பிறந்தவர்கள் விழிப்புணர்வு, விவேகம், புனைவுத்திறம், துரித அறிவு கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இந்த விலங்குகளின் வரிசை எப்படித் தீர்மானிக்கப்பட்டது என்பதற்குப் பல கதைகள் உள்ளன. ஜேட் பேரரசர் நடத்திய ஓட்டப் பந்தயத்தில் விலங்குகள் வெற்றி பெற்ற வரிசையின்படி அவற்றின் வருடங்கள் ஒதுக்கப்பட்டன என்கிறது ஒரு கதை. இல்லையில்லை, ஒவ்வொரு விலங்கும் ஒரு நாளின் எந்த நேரத்தில் விழித்துக்கொண்டு சுறுசுறுப்பாக இருக்குமோ அந்த வரிசையின்படிச் சீனச் சந்திர நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளன என்று இன்னொரு கதை சொல்கிறது.

பொதுவாகவே கிழக்காசியாவில் முயல், நிலா இவை இரண்டைப் பற்றிய கதைகளும் புராணங்களும் ஏராளம். நம்மூரில் நிலாவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் என்ற கதையைப் பிள்ளைகளிடம் இன்னும் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. நானெல்லாம் அதை நம்பிக்கொண்டு நிறைய நாள் தேடித் தேடிப் பார்த்துச் சலித்துப்போய் பிறகு விட்டுவிட்டேன். மேற்கு நாடுகளில் நிலா சீஸினால் (cheese) செய்யப்பட்டது என்று சொல்வார்கள். சீனர்களோ நிலவில் இருப்பது சரக்கொன்றை மரத்தின் அடியில் நின்றபடி சாகாவரம் தரும் அமுதத்தை உரலில் இடிக்கும் ஜேட் முயல் என்று அடித்துச் சொல்வார்கள்.

Powerful Jade Emperor - Origin and Legend of Immortality - My Myth Storiesஇதற்கு ஒரு கதை உண்டு. எந்த விலங்கு பிறருக்கு உதவி புரியும் மனம்கொண்டது என்று தெரிந்துகொள்ள ஜேட் பேரரசர் விரும்பினாராம். ஒரு நாள் பிச்சைக்காரன் வேடம் புனைந்து ஊருக்குள் சென்றாராம். சாகாவரம் தரும் அமுதம் செய்ய உதவிவேண்டும் என்று ஒவ்வொரு விலங்காகக் கேட்டாராம். இறுதியில் முயல் முன்வந்ததாம். பசியோடு இருக்கும் பிச்சைக்காரனுக்கு முதலில் உணவளிக்கவேண்டும் என்பதற்காகத் தீக்குள் குதித்துத் தன்னையே மாய்த்துக்கொண்டதாம். ஆனால் அதைத் தடுத்து நிறுத்தினாராம் ஜேட் பேரரசர். பிறகு முயலைத் தன்னுடன் நிலவில் வசிக்க அழைத்துச் சென்றாராம். அங்கே முயல் சாகாவரம் தரும் அமுதம் செய்ய அவருக்கு உதவியபடி வசிக்கிறதாம்.

இதேபோன்ற புத்த ஜாதகக் கதையும் ஒன்று உண்டு. அதில் பசியோடு வரும் முதியவர் குரங்கு, நீர்நாய், நரி, முயல் என ஒவ்வொரு விலங்கிடமும் உணவுதருமாறு கேட்டாராம். மற்ற எல்லா விலங்கும் அவருக்கு உணவு சேகரித்துத் தந்தனவாம். புல்லை மட்டுமே தின்று வாழும் முயல் நெருப்புக்குள் குதித்துத் தன்னுடைய இறைச்சியையே சாப்பிடச் சொன்னதாம். முயலின் நற்பண்பைப் பார்த்து மனமிளகிய முதியவர் தான் தேவர்களின் கடவுளான சக்காரா என்பதைச் சொன்னாராம். முயலின் உருவத்தை நிலவில் வரைந்து அதை உலகமே பார்க்கும்படிச் செய்தாராம். நிலவைச் சூழ்ந்திருக்கும் புகைமண்டலம் முயல் தன்னையே மாய்த்துக்கொள்வதற்காக நெருப்புக்குள் குதித்தபோது எழுந்த புகையாம். பழமையான இந்தக் கதைகளுக்கு அறிவுபூர்வமான விளக்கமெல்லாம் இல்லை. ஆனாலும் படிக்கவும் கேட்கவும் சுவையாக இருக்கிறதல்லவா.

காட்டு விலங்குகளை எல்லாம் வரைமுறையின்றிக் கொன்றொழித்த கொடூரமான சிங்கத்துக்குக் கிணற்றில் இருக்கும் இன்னொரு சிங்கத்தைக் காண்பித்து அதை உள்ளே குதிக்கச் செய்த பஞ்சதந்திரக் கதை முயலின் அறிவுக்கூர்மையைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா. ஆனால் என்னவோ ஈசாப்பின் முயலும் ஆமையும் ஓட்டப்பந்தயம் ஓடும் கதையை நம்மூரினுடையதுபோலவே தத்தெடுத்துக்கொண்டுவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். சரிதானே?

தென்னமரிக்காவின் தொல்குடிகள், சிவப்பிந்தியர்கள், மாயன், ஆப்பிரிக்க, கிழக்காசிய இனங்கள் எனப் பல இனங்களின் புராணங்களிலும் முயல் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஈஸ்டர் கொண்டாட்டத்திலும் முயலுக்கு இடமுண்டு. ஐரோப்பாவில் முயலின் பாதம் அதிர்ஷ்டம் தருவது என்ற நம்பிக்கையுண்டு.

What is the name of the white rabbit in Alice in Wonderland? - Quoraலூயி கரோல் என்ற எழுத்தாளர் எழுதிய அதிசய உலகில் ஆலிஸ் (Alice in Wonderland) என்ற கதையில் வெள்ளை முயல் ஒன்றின் பொந்துக்குள் தவறுதலாக விழுந்துவிடும் சிறுமி அங்கு இருக்கும் வித்தியாசமான உலகில் விந்தையான விலங்குகளைச் சந்திக்கிறாள். அவளுடைய அனுபவங்களின் தொகுப்பாக இருக்கும் இந்த நெடுங்கதை உலகப் புகழ்பெற்றது. ஆங்கிலப் பாடம் படிக்கும் சிறுவர் சிறுமியரில் இதைப் படிக்காதவர்களே இருக்கமுடியாது என்று சொல்லலாம். அமெரிக்காவின் பிரெர் முயல் கதைகளிலும் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் திரைப்படங்களிலும் முயல் தந்திரக்கார விலங்காகச் சித்தரிக்கப்பட்டது.

ஒரு காலத்தில் பிரிட்டனில் டோர்செட் என்ற இடத்தில் முயல் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் விலங்கு என்பதால் அதன் பெயரைக்கூட உச்சரிக்காதவர்கள் இருந்தார்கள். பழைய காலத்தில் கற்சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படும் கற்களில் விற்பனையாகாதவற்றை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கிவைக்கும் வழக்கம் இருந்தது. முயல்கள் இந்தச் சுவர்களுக்கு அடியில் குழி பறித்து வசிக்கும். இதனால் சுவர்கள் வலுவிழந்து பொதுமக்களின்மீது சரிந்து விழுந்து பலத்த காயமும் உயிரிழப்பும் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணமான முயலின் பெயரைச் சொல்வதுகூட கெடுதலைக் கொண்டுவரும் என்று அந்தப் பகுதி மக்கள் அச்சமுற்றார்கள். நேரடியாகப் பெயரை உச்சரிக்காமல்  ’நீண்ட காதுகள்’ என்றோ ’நிலத்தடி இறைச்சி’ என்றோ சுற்றி வளைத்துத்தான் சொல்வார்கள் என்றால் பாருங்களேன். அதே பிரிட்டனின் மற்ற பகுதிகளிலும் அமெரிக்காவிலும் இதற்கு முற்றிலும் மாறான நம்பிக்கையும் இருந்தது. மாதத்தின் முதல் நாள் கண்விழித்தவுடன் ’முயல்’ என்றோ ’வெள்ளை முயல்கள்’ என்றோ உச்சாடனம் செய்தால் மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் வந்துசேருமாம்.

 

(தொடரும்)

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
  2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
  3. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
  4. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
  5. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
  6. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
  7. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
  8. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
  9. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
  10. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
  11. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
  12. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
  13. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
  14. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
  15. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
  16. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
  17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
  18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
  19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
  20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
  21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
  22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
  23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
  24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
  25. நாம் வாழும் காலம் : கார்குழலி