தீராத பாதைகள்-10

தொடர்ந்து சினிமா பற்றி எழுதியதால் நண்பர்கள் சிலர் சலித்துக்கொண்டார்கள். இந்த வாரம் சினிமா பற்றிப் பார்க்கபோவதில்லை. இனப்படுகொலை குறித்துச் சொல்லியிருந்தேன் அல்லவா? அந்தச் சமயத்தில் யூதர்கள் எழுதி வைத்த குறிப்புகள் கடிதங்கள் மிக முக்கியமான ஆவணங்கள். வாஷிங்டன் டீசியில் உள்ள யூத இனப்படுகொலை சம்மந்தமான ஆவணங்களைப் பாதுகாக்கும் அருங்காட்சியகத்தில் இப்படிப் பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் விஷ வாயுக்கூடரத்தை வரைந்துள்ளார்கள். அதைப் பார்க்கும்போதே மனது நடுங்கிவிடுகிறது. முன்பே சொன்னது போல நம் வாழ்வு எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டது என்பது அவற்றைப் பார்க்கும் போது புரியும்.

நம் காலத்திற்குத் தேவையான செய்திகளையும் அந்தக் கொடூர சாட்சியங்கள் சுமந்திருக்கின்றன. உதாரணமாகப் பெயரிடப்படாத ஒரு கடிதம். இந்தக் கடிதத்தை ஒவ்வொரு மாணவனும் ஆசிரியர்களும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கடிதத்தைப் பார்க்கும் முன் வேறு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அறிவியல் இருபதாம் நுற்றாண்டின் மதமாக மாறியது. அதுவரை ஆட்சிப் பீடத்திலிருந்த மதம் தூக்கியெறியப்பட்டது. அறிவியல் எல்லாவற்றிற்கும் தீர்வு என்று நம்பப்பட்டது. ஆனால் இரண்டு உலகப் போர்கள் மூண்டு மானிடர்கள் மடிந்து போனார்கள். அறிவியலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மீண்டும் தத்துவங்கள் வாயிலாகப் பல விஷயங்களுக்குத் தீர்வு காண முனைந்தார்கள். அது ஒரு விதத்தில் உண்மைதானே? நான் அறிவியலின் விரோதி அல்ல ஆனால் அறிவியல்தான் அனைத்திற்குமான தீர்வு என்பதை நம்பவில்லை. ஆழமாகச் சிந்தித்தால் நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும் அறிவியலும் ஏதோ ஒரு நம்பிக்கையின் மீதுதானே கட்டமைக்கப்படுகிறது. வளர்ச்சி, வல்லரசு கனவுகள் என்று போலி கட்டமைப்புகளால் மக்களைக் கிளர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு வளர்ச்சியின் பெயரால் சுரண்டல்கள்தானே நடைபெறுகின்றன?

இவ்வளவும் ஏன் ஞாபகம் வந்தது என்றால் நான் முன்பு சொன்ன அந்தக் கடிதம். Haim Ginott தனது Teacher and Child: A Book for Parents and Teachers என்ற புத்தகத்தில் அந்தக் கடிதத்தை இணைத்துள்ளார். இந்தக் கடிதத்தை ஒரு தலைமையாசிரியர் முதல் நாள் பள்ளி அன்று தன் ஆசிரியர்களுக்குச் சுற்றுமடலாக எழுதியிருக்கிறார் (ஆனால் அது நிச்சயமாக ஒரு தலைமையாசிரியர்தான் எழுதினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, எனவே அந்தச் சுதந்திரத்தால் நான் சிறுகதை ஒன்றை எழுதிப் பார்த்தேன்.)

Dear Teacher:

I am a survivor of a concentration camp. My eyes saw what no man should witness:

Gas chambers built by learned engineers.

Children poisoned by educated physicians.

Infants killed by trained nurses.

Women and babies shot and burned by high school and college graduates.

So, I am suspicious of education.

My request is: Help your students become human. Your efforts must never produce learned monsters, skilled psychopaths, educated Eichmanns.

Reading, writing, arithmetic are important only if they serve to make our children more human

எனக்குத் தெரிந்த வரையில் இந்தக் கடிதத்தை மொழிபெயர்க்க முயல்கிறேன் ஆனால் இந்தக் கடிதத்தில் தெரியும் பதற்றத்தை அப்படியே கொடுத்துவிட முடியுமா என்று தெரியவில்லை.

அன்புள்ள ஆசிரியர்களுக்கு,

வதைமுகாம் ஒன்றிலிருந்து தப்பிப்பிழைத்தவன் நான். எந்த மனிதனும் பார்த்திராத வதைகளின் சாட்சியங்களாக என் கண்கள் இருக்கின்றன: படித்த பொறியாளர்களால் விஷவாயு கூடங்கள் உருவாக்கப்பட்டன. கற்றறிந்த மருத்துவர்கள், குழந்தைகளுக்கு விஷ ஊசி செலுத்தினார்கள். பயின்ற செவிலியர்களால் சிசுக்கள் கொல்லப்பட்டார்கள்.

எனவே கல்வியின் மீது எனக்குச் சந்தேகம் வருகிறது.

என் வேண்டுகோள் இதுதான்: உங்கள் மாணவர்கள் மனிதர்களாக மாற உதவுங்கள். உங்கள் முயற்சிகள் யாவையும் கற்றறிந்த அரக்கர்களையோ திறன்மிகுந்த பைத்தியங்களையோ பட்டம் பெற்ற ஐஃக்குமென்களை ஒருபோதும் உருவாக்கிட கூடாது.

நமது பிள்ளைகள் மனிதர்களாக உதவதான் வாசிப்பது எழுதுவது கணக்கிடுவது பயன்படுகிறதன்றி வேறேதற்கும் அல்ல.

இந்தக் கடிதம் இன்றும் நமது சமூதாயத்திற்குத் தேவையான செய்தியை சொல்கிறது. நாம் இன்று மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாகதான் பார்க்கிறோம். கற்றலின் மகிழ்ச்சியை நம் பிள்ளைகள் அனுபவித்தவர்கள் அல்ல. கற்பித்தலின் மகிழ்ச்சியை ஆசிரியர்கள் அனுபவித்தால்தானே முன்பு குறிப்பிட்டது நடக்கும்? பல ஆசிரியர்கள் இன்று கடமைக்குதான் பாடம் நடத்துகிறார்கள். நான் அவர்களுடன் இருந்து அனைத்தையும் உற்றுப்பார்க்கிறேன். இன்று தமிழ்நாடு பாடத்திட்டத்தில் ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’ கதை வந்திருக்கிறது, யான் மார்டெலின் ‘லைஃப் ஆஃப் பை’ கதை பாடமாக வந்திருக்கிறது என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம் ஆனால் எனக்குத் தெரிந்த ஆசிரியர்கள் யானை டாக்டர் கதையை முழுமையாகப் படித்தவர்கள் அல்ல. லைஃப் ஆஃப் பை நாவல் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டிருப்பதுகூட நிறைய ஆசிரியர்களுக்குத் தெரியாது. நான் ஆசிரியர்களைக் குற்றம் சுமத்தவில்லை. அவர்களுக்கு அலுவலகம் சார்ந்து வழங்கப்படும் வேலைகள் அதிகம். அப்படியிருக்கும் போதும் சில ஆசிரியர்கள் கற்பித்தலின் மகிழ்ச்சியை ருசித்து நடத்துகிறார்கள் ஆனால் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லையே. இப்படிபட்ட சமூதாயத்தில் எப்படி மாற்றங்கள் நிகழும்?

தமிழ்நாட்டின் நிலை எவ்வளவோ நன்றாக இருக்கிறது. நான் மூன்று மாதம் அருணாச்சல பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் பணிபுரிந்தேன். அங்கே இன்னும் கொடூரம். வீட்டுப்பாடம் எங்கே என்றுகூடக் கேட்க முடியாது. அரைச் செங்கல்லை வைத்து மாணவர்கள் அடித்துவிடுவார்கள். ஒருமுறை ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பில் எல்லார் முன்னும் என்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டிய சம்பவமும் நிகழ்ந்தது. அவர்களைப் பொறுத்தவரை வாசிக்கவும் அடிப்படை கணிதமும் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். நம் மாநிலத்திலோ எப்படியாவது முட்டிமோதி ஒரு நல்ல வேலை, சொல்லும்படியான சம்பளம். இந்த மனநிலைதான் மாணவர்கள் மத்தியில் பார்க்கிறேன். சென்னை போன்ற பெருநகரங்களில் இதில் கொஞ்சம் சொல்லிகொள்ளக்கூடிய நிலையில் இருக்கலாம். ஆனால் மற்ற இடங்களில் பள்ளியில் இருந்து வெளிவருவதை ஏதோ சிறைச்சாலையிலிருந்து வருவதைபோல் கருதுகிறார்கள். அடுத்ததாகக் கல்லூரி. நம் தமிழ் சினிமாவை நம்பி கல்லூரிகளை ஏதோ கனவு தேசங்களாக நினைத்து உள்ளே வருகிறார்கள் ஆனால் அது பெரும்பாலும் ஏமாற்றைத்தை தந்துவிடுகின்றன.

இதிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு அவர்களுக்கு இருப்பது சினிமா. ஏதோ ஒரு நாயகனுக்குத் தங்களை ரசிகர்களாக்கி கொண்டு ஒரு சராசரி வாழ்வை தொடர்கிறார்கள். ஆனால் உலகமெங்கும் இந்த நிலை இல்லை. ஒருமுறை இங்கே பாஸ்டனில் இருந்த ஒரு பள்ளியை பார்க்க சென்றபோது அங்கே ஒரு நாடக முன்னோட்டம் நடந்து கொண்டிருந்தது. பார்த்தால் ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகர வியாபாரி. ஷேக்ஸ்பியரை உயர்த்திப் பிடிப்பதற்காக இதைச் சொல்லவில்லை. ஆனால் இந்த நாடகம் அரங்கேறிய பிறகு பல மாணவர்களும் ஷேக்ஸ்பியரை தேடிப்படிக்கிறார்கள். பாடத்தில் தாந்தேவின் Divine Comedy படித்தால் அதன்பிறகு பள்ளி நாட்களிலே தாந்தேவை தேடித்தேடி வாசிக்கிறார்கள். இது பாடம் சார்ந்த வாசிப்பு. பாடத்திற்கு வெளியே பல நூலகள் வாசிக்கிறார்கள். இங்கே நான் சந்தித்த பதின்வயதினரில் ஒருவர்விடாமல் அனைவரும் ஹாரிபாட்டர் நாவல் அனைத்தையும் வாசித்திருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல இந்த அனைவருமே சொன்ன இன்னொரு விஷயம்தான் ஆச்சரியமாக இருந்தது. ஹாரிபாட்டர் படம் நாவலுடன் ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை என்றார்கள்.

இதில் பரிதாபத்துகுரியவர்கள் ABCதான். American Born Confused – இந்தியாவிலிருந்து பணி நிமித்தம் அமெரிக்காவில் குடியேறிய பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகள். இவர்களால் குடும்பத்தின் காரணமாக அமெரிக்கர்களாகவும் இருக்க முடியாமல் இந்தியர்களாகவும் இருக்க முடியாமல் தடுமாறுவார்கள். இப்படிப் பல குழந்தைகளை எனக்குத் தெரியும். கலாச்சார ரீதியாக இவர்களுடன் என்னால் பெருமளவவில் ஒத்துபோக முடியும். இவர்கள் நிறைய வாசிக்கிறார்கள். இப்படி நான் பார்த்த ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஒரு பெரிய நூலகமே இருக்கிறது. ஆனால் அவர்கள் பெற்றோர்கள் வாசிப்பதில்லை. இதனால் பெருமளவில் இந்தப் பிள்ளைகள் பெற்றோர்களிடம் பேசமுடிவதில்லை. இன்னும் பெரும்பாலான வீடுகளில் தமிழ் சேனல்கள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. லௌகீகமாக சொல்லவேண்டுமென்றால் இங்கு வாழும் இந்தியர்கள் பெரும் புத்திசாலிகள் ஆனால் கலாச்சாரத்தில் வெகுசிலரே அறிவுத்தெளிவுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

அதனால் இங்குள்ள மாணவர்களுடன் எந்தத் தடையும் இல்லாமல் பல்வேறு இசை குறித்துக் கலந்துரையாட முடிகிறது. ஒருமுறை சிறுவன் ஒருவனிடம் உனக்குப் பிடித்த மேலை நாட்டு கிளாசிக் இசை கலைஞர்கள் யார்யார் என்று கேட்டபோது, யோசிக்காமல் எனக்குப் பாக் பிடிக்கும் என்றான். அடுத்ததாகப் பீத்தோவனைவிட எனக்குப் பாக்தான் பிடிக்கும் என்று ஒப்பிட ஆரம்பித்தான். அப்படியே பீத்தோவனின் மூன் லைட் சொனாட்டாவில் உள்ள நுணுக்கங்களைக் குறித்துப் பேச ஆரம்பித்தான். தினமும் பியானோ வாசிக்கப் பழகிக்கொண்டிருக்கிறான். அடுத்தமுறை சந்திக்கும்போது மூன் லைட் சொனாட்டா வாசித்துக் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறான். யோசித்துப் பார்க்கிறேன் எனக்குப் பாக், பீத்தோவன் போன்றவர்களை அறிமுகப்படுத்தியது சாரு நிவேதிதாவும் எஸ். ராமகிருஷ்ணனும்தான். இங்கே நடுநிலைப் பள்ளிகளில் இந்த இசைக் கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள்.

இவ்வளவும் சொன்ன பிறகு பலரும் சொல்வது என்ன தெரியுமா? நீ சொல்வதெல்லாம் சரிதான் வளன் ஆனால்… என்று இழுப்பார்கள். இங்கே உள்ள வாழ்வியலோடு நம் வாழ்வியலை ஒப்பிடுவது சரியில்லைதான் ஆனால் நான் சொல்ல வருவது அது இல்லை. தேடல். இந்தத் தேடல் நம்மவர்கள் யாருக்கும் இருப்பதில்லை. தற்கொலைபடை போலச் செயல்படும் எழுத்தாளர்களின் வாசக வட்ட நண்பர்களைச் சொல்லவில்லை. இங்கே சினிமாவை தவிர வேறு எதுவுமே முக்கியப்படுத்தப்படவில்லை என்று தோன்றுகிறது. அதுவும் கதாநாயக வழிபாடு என்ற நிலையில்தான் இருக்கிறது. இந்தியாவின் அரசியல் சூழலை நோக்கும்போது எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது. இதற்கு ஒரே வழி நம் மாணவர்களை நல்ல முறையில் தயார்படுத்த வேண்டும். ஞானத்தின் மீதான தேடல் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பாடதிட்டத்திற்கு வெளியே மாணவர்கள் வாசிக்க வேண்டும்.

எதை வாசிப்பது?

நம் இலக்கிய ஆசன்கள் நிறைய எழுதியிக்கிறார்கள். ஒரு பல்கலைகழகம் செய்ய வேண்டிய வேலையை எஸ். ராமகிருஷ்ணன் தனி ஒருவராகச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. ஒவ்வொருமுறை என் நண்பன் பேசும்போதும் எப்படி எஸ்.ராவுக்கு இவ்வளவு நேரம் கிடைக்கிறது! எவ்வளவு எழுதி குவித்திருக்கிறார்! என்று வியந்துபோவான். அவருடைய ‘விழித்திருப்பவனின் இரவுகள்’ உலக இலக்கியம் வாசிக்க மிகச் சிறந்த அறிமுக நூல். நான் அதைப் படித்துதான் பல புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். தமிழில் உள்ள நவீன இலக்கியங்கள் குறித்த மிகச் சிறந்த அறிமுக நூல் எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’. கடந்த வாரம் கவிஞர் மனுஷ்ய புத்தின் வாசிப்பு எப்படி நிகழ வேண்டும் என்பதைச் சிங்கப்பூர் வாசகர்களிடம் Zoom meeting வழியாகப் பேசியிருக்கிறார். அதன் எழுத்து வடிவத்தையும் தனது Facebookல் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவையும் Facebook பதிவையும் மனுஷ்ய புத்திரன் அவர்கள் பலருக்கும் சேரும்படி வெளியிட வேண்டும். வாசிப்பு பற்றிய மிக முக்கியமான பதிவு அது.

நம் தேடல்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நான் சராசரி வாழ்வின் எதிரியல்ல. ஆனால் நம்மை விலங்கிலிருந்து எது வேறுபடுத்திக்காட்டுகிறது என்ற கேள்வியை முன் வைக்கிறேன். வாசிப்பையும் வாழ்வின் ஒரு அங்கமாக்க வேண்டும். எல்லா இடத்திலும் அப்படிதான் நடக்கிறது. ஒரு நாட்டின் பிரதமர் சொல்லிவிட்டதால் கை தட்டுகிறோம் அல்லது விளக்கேற்றுகிறோம் என்ற நிலையிலிருந்து அவர் சொன்னதன் தர்கங்களை ஆராயச் சொல்கிறேன். ஆராய்ந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.சிந்திப்பவர்கள் சரியானதைதான் செய்வார்கள். மக்களின் சிந்தனையை ஒடுக்கி தன்னை மீட்பர்களாகக் காட்டிக்கொண்ட தலைவர்கள், வளர்ச்சியின் பெயரால் பலரை பலி கொடுத்த கோரத்தை வரலாறு நமக்கு இனம் காட்டியிருக்கிறது. நமது கற்றலும் கற்பித்தலும் இனியும் மதிப்பெண்களுக்குதான் என்ற நிலை தொடருமானால் உங்கள் கண்களையும் வதைகளின் சாட்சியங்களாக இருக்கப் பழக்கிகொள்ளுங்கள்.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
  2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
  3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
  4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
  5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
  6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
  7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
  8. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
  9. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
  10. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
  11. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
  12. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
  13. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
  14. பெண்களுடனான உரையாடல்- வளன்
  15. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
  16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
  17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
  18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
  19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
  20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
  21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
  22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
  23. மூன்று இசை தேவதைகள் - வளன்
  24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்