பாகம்-3

Thimonnier and the sewing machine | izi.TRAVELWalter Hunt (inventor) - Wikipediaபிரான்ஸில் திம்மோனியர் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அதே காலகட்டத்தில், அமெரிக்காவில் வால்டர் ஹண்ட் என்பவர் வேறுவிதமான இயந்திரம் ஒன்றை உருவாக்கும் பணியில் முனைப்பாக இருந்தார். 1832 முதல் 1834 வரை இடைவிடாத ஆராய்ச்சியில் ஈடுபட்டார். திம்மோனியரின் இயந்திரம் சங்கிலித்தையலைத் தைத்தது என்றால் கையில் தைப்பதுபோலவே இரண்டு நூலிழைகளை ஒன்றிணைத்துத் தைக்கும் பூட்டுத்தையல் முறையினை இயந்திரத்தில் செய்ய முற்பட்டார் ஹண்ட். ஹண்ட் இயல்பாகவே பல புதிய இயந்திரங்களையும் கருவிகளையும் உருவாக்கும் ஆர்வம்கொண்டவராக இருந்தார். எனவே இந்தத் தையல் இயந்திரத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை. தன்னுடைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெறாமல் வேறு ஒருவருக்குச் சிறிய தொகைக்கு விற்றுவிட்டார்.

தையல் இயந்திரம் மனித கைகளையும் விரல்களையும் போலவே வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கண்டுபிடிப்பாளர்களின் தவறான எண்ணத்தை மாற்றியமைத்தது ஹண்டின் இயந்திரம். ஆனால் இந்த இயந்திரத்தைக் கொண்டு சிறிய நேரான தையல்களை வேகமாகவும் துல்லியமாகவும் தைக்கமுடிந்தாலும் வளைவான பகுதிகளைத் தைக்கமுடியவில்லை. ஒவ்வொரு முறையும் மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அந்த இயந்திரம் குறித்து எல்லோருமே மறந்துபோயிருந்தனர்.

Elias Howeஎலியாஸ் ஹோவ் என்பவர் 1850களில் பூட்டுத் தையல்முறையைத் தான் கண்டுபிடித்ததாகச் சொல்லி காப்புரிமை பெறுவதற்கு முனைந்தபோது ஹண்டுக்கு அதன்மீது இருக்கும் உரிமை பற்றிய கேள்விகள் எழுந்தன. காப்புரிமை குறித்த வழக்குகள் தொடங்கியவுடன் ஐசக் மெரிட் சிங்கர் என்பவரின் நிறுவனம் ஹண்டின் வரைபடங்களைத் தேடி எடுத்து இயந்திரத்தை வடிவமைத்துக் காப்புரிமையை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்கும் இயந்திரம் ஒன்றை ஒருவர் உருவாக்கியுள்ள சமயத்தில் இத்தனை வருடங்கள் கழித்து பழைய கண்டுபிடிப்பு ஒன்றை மீண்டும் உயிர்ப்பிப்பது சரியல்ல. அது புதிய கண்டுபிடிப்பு மக்களிடம் சென்றுசேர்வதைத் தடுக்கும் முயற்சி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

அதே காலகட்டத்தில் ஆஸ்திரியாவில் ஜோசப் மாடெஸ்பெர்கர் என்பவர் 1814இல் தான் வடிவமைத்த இயந்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இயந்திரமொன்றை 1839இல் உருவாக்கினார். இது ஹண்ட் உருவாக்கிய இயந்திரத்தை ஒத்திருந்தது. தைக்கும் துணியை சீராகச் செலுத்துவதில் இருந்த கோளாறைச் சரிசெய்ய முடியவில்லை. இரண்டு காப்புரிமைகளைப் பெற்றிருந்தாலும் அதனால் பொருளீட்ட முடியாமல் வறுமையில் வாடி இறந்துபோனார் மாடெஸ்பெர்கர்.

1843இல் ஜார்ஜ் கார்லிஸ் என்பவர் தான் உருவாக்கிய தையல் இயந்திரத்துக்குக் காப்புரிமை பெற்றார். இதன் தொடக்கப் புள்ளி சுவாரசியமானது. அவருடைய பலசரக்குக் கடையில் தோல் காலணியை வாங்கிய வாடிக்கையாளர் தையல் சீக்கிரம் பிரிந்துவிட்டது என்று புகார் சொன்னார். தோல் பொருட்களைத் தைக்கும் இயந்திரத்தை இன்னும் ஏன் யாரும் கண்டுபிடிக்கவில்ல என்று யோசித்த கார்லிஸ் தானே அதைச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றார். அவர் உருவாக்கிய இயந்திரம் தடிமனான தோலைத் தைத்தது, தையல் வலுவாக இருந்தது, அதே நேரம் வேகமாகவும் பணியைச் செய்துமுடித்தது. ஆனால் கார்லிஸால் மேலும் பல இயந்திரங்களை உருவாக்கிச் சந்தைப்படுத்தவும் தன்னுடைய உழைப்பின் பலனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் முடியவில்லை. இதைச் செய்வதற்குத் தேவையான நிதியுதவியும் கிடைக்கவில்லை.

இதற்கு நடுவே காப்புரிமை வழக்கில் வெற்றிபெற்ற ஹோவ் தனது தையல் இயந்திரத்துக்கு நிதியுதவி செய்யும் புரவலர்களைத் தேடி இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். அங்கிருந்து அவர் அமெரிக்கா திரும்புவதற்குள் சிங்கரின் நிறுவனமும் வேறு பலரும் தையல் இயந்திரங்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கியிருந்தனர். இப்படிப் பலப்பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எல்லாக் கண்டுபிடிப்பாளர்களும் தயாரிப்பாளர்களும் ஒன்றிணைந்து செயலாற்ற முடிவுசெய்து 1856இல் ‘தையல் இயந்திரக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கி காப்புரிமைச் சேர்மம் ஒன்றை நிறுவினர்.

எல்லாம் சரி. எந்தவிதமான கோளாறும் இல்லாமல் சிறப்பாகத் தைக்கக்கூடிய இயந்திரத்தில் என்னவெல்லாம் இருக்கவேண்டும்? துணி நெடுக நூலை இழுத்துச் செல்லும் ஊசி, இரண்டு தையலை ஒன்றிணைத்துத் தைக்கும் தொழில்நுட்பம், ஒன்றையடுத்து மற்றொன்று என இடைவிடாத தையல், சீராக இழையோடும் நூல், இந்த எல்லாச் செயல்களும் சிக்கலின்றி ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும் செயல்திறன் எனப் பட்டியலிடலாம். இதுவரை நாம் பார்த்த ஒவ்வொரு கண்டுபிடிப்பாளரும் இந்த ஒவ்வொன்றையும் கண்டுபிடிக்க உதவினார்கள். முந்தையவர்களின் இயந்திரங்களில் இருந்த தவறுகளைச் சரிசெய்து புதிய வடிவமைப்புகளை உருவாக்கினார்கள். அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறமும் இருந்த ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வெவ்வேறு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டன, இவற்றுக்கான காப்புரிமைகளும் பதிவுசெய்யப்பட்டன. இயந்திரத்தில் பயன்படுத்தும் பல சின்னஞ்சிறிய பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான காப்புரிமைகள் வழங்கப்பட்டன. ஆனாலும் சிறப்பான இயந்திரம் உருவாகிவிட்டது என்று சொல்லமுடியவில்லை. பழைய உலகம் என அறியப்பட்ட ஐரோப்பாவில் வாழ்ந்த மனிதர்களின் சிந்தனையில் உருவானது என்றாலும் இறுதியில் புதிய உலகம் என்ற பட்டத்தைப் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த எலியாஸ் ஹோவ் என்ற அமெரிக்கருக்குத்தான் தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் என்ற பட்டத்தை வரலாறு வழங்கியது.

(தொடரும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
  2. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
  3. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
  4. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
  5. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
  6. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
  7. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
  8. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
  9. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
  10. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
  11. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
  12. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
  13. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
  14. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
  15. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
  16. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
  17. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
  18. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
  19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
  20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
  21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
  22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
  23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
  24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
  25. நாம் வாழும் காலம் : கார்குழலி