தீராத பாதைகள்-6

 

இயேசு சிரித்தார் – 2

கொரோனாவின் கொடூரங்களைவிட இந்தியாவில் அதை வைத்து நடைபெறும் நாடகங்கள் பயங்கரமாக இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை வீட்டிற்கு பேசியபோது ஞாயிற்றுக் கிழமை இரவு வீட்டில் ஃப்யூஸ் போய்விட்டதாகச் சொன்னார்கள். சீக்கிரம் இந்தக் கொடுமைகள் தீர வேண்டும். என்னுடைய இப்போதைய சவால் உம்பர்தோ எக்கோவின் கடைசி நாவலான Numero Zeroவை வாசித்து முடிக்க வேண்டும்.

உம்பர்தோ எக்கோ (Umberto Eco) பற்றிச் சொல்ல வேண்டும். எப்போதெல்லாம் எக்கோவின் ஞாபகம் வருகிறதோ அப்போதெல்லாம் தோழி ஒருத்தியின் ஞாபகங்களும் சேர்ந்தே வருகிறது. பூனேவில் தத்துவம் படித்துக்கொண்டிருந்த சமயம் எக்கோ பற்றிய அறிமுகம் கிடைத்தது. அவரை பற்றி தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரின் எந்த படைப்பு ரொம்ப பிடிக்கும் என்று கேட்டாள். எல்லோரும் சொல்வது போல் த நேம் ஆஃப் த ரோஸ் (The Name of the Rose) என்று சொல்லாமல் பௌதலீனோ (Baudolino) நாவலை குறிப்பிட்டேன். அடுத்தமுறை என்னைச் சந்தித்த போது அந்தப் புத்தகத்தை எனக்குப் பரிசாகக் கொடுத்தாள். அந்த பேரன்பை இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன. இப்படி அவள் வாங்கிக்கொடுத்த புத்தகங்கள் நிறைய. வேறுபல சிக்கல்களால் இப்போது அவள் என்னிடம் பேசமுடியாத சூழலில் இருக்கிறாள். அவள் செய்த உதவிகளுக்கு நான் எப்படிப் பதிலுதவி செய்யப்போகிறேன்?  நான் அவளது அன்பை இன்னும் மறக்கவில்லை. உம்பர்தோ எக்கோ இடைக்கால (medieval) வரலாற்று அறிஞர். இந்த ‘அறிஞர்’ தன்மையினாலே இவரது நாவல்கள் வாசிக்கச் சற்று கடினமாக இருக்கும். ஆனால் சுவாரசியத்திற்குப் பஞ்சமிருக்காது. இவரது பௌதலீனோ எனக்கு மிகவும் பிடிக்கக் காரணம் மத்திய காலத்தில் நடந்த சிலுவைப்போரினை குறித்து பேசுகிறது.

அரசன் ஒருவன் சிலுவைப்போரில் பங்கெடுக்க தனது பரிவாரங்களுடன் செல்கிறான் அப்போது ஒரு காட்டில் பனி சூழ்ந்து வழி தெரியாமல் தனித்துவிடப்படுகிறான் அப்போது பௌதலீனோ என்ற சிறுவன் அரசனுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்கிறான். அப்போது அவன் அரசனுக்கு பல கதைகளைச் சொல்கிறான். அந்தக் கதைகளால் வசீகரிக்கப்பட்டு பௌதலீனோவை தன்னுடன் அழைத்துச் செல்கிறான். பௌதலீனோ தொடந்து பல கதைகள் சொல்லி அரசனை அந்த சிலுவைப்போரில் ஈடுபடாதவாறு செய்துவிடுகிறான்.

எல்லாம் சுவாரசியமான கதைகள். அதில் யூனிகார்ன் – ஒற்றைக்கொம்பு குதிரை – பற்றி ஒரு கதை வருகிறது. கற்பனை விலங்காக இருந்தாலும் மத்தியகாலத்தில் யூனிகார்ன் மிகவும் பரிசுத்தமானதாகப் பார்க்கப்பட்டது (ஹாரிபாட்டர் நினைவுக்கு வருகிறதா?). இந்த யூனிகார்னை எப்படி பிடிப்பார்கள் தெரியுமா? காட்டில் ஒரு கன்னிப்பெண்ணை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்துவிடுவார்கள். யூனிகார்ன் மிகவும் தூய்மையானது என்பதால் அசுத்த குணம் படைத்த மனிதர்கள் யாரிடமும் அகப்படாது. ஆனால் கன்னிப்பெண்ணின் பரிசுத்தத்தில் மயங்கி தனது ஒற்றைக் கொம்பால் அவளது கன்னித்தன்மையை சிதைக்குமாம். அந்த நொடி யூனிகார்னின் பரிசுத்தம் இல்லாமல் போகும் அப்போது அங்கு மறைந்திருக்கும் மனிதர்கள் அதைப் பிடித்துவிடுவார்கள். இந்த யூனிகார்ன் இயேசுவை குறித்துக்காட்ட பயன்பட்டது. இயேசு கடவுள் – தூய்மையானவர். ஆனால் அவர் மனிதராக பிறக்கிறார். அதுவும் எப்படி? கன்னி மரியாள் வழியாகப் பிறக்கிறார். தூய்மையானவர் அசுத்தமான மனிதர்கள் நடுவில் பிறந்ததால் மனிதர்கள் அவரைக் கொலை செய்கிறார்கள். இப்படியாக யூனிகார்ன் இயேசுவுக்கு உவமையாகிறது. இப்படி பற்பல கதைகளால் நிரம்பியது பௌதலீனோ.

எக்கோவின் எல்லாப் படைப்புகளும் சுலபமாக வாசித்துவிட முடியாது. பலரும் போற்றும் த நேம் ஆஃப் த ரோஸ் படிக்க முயன்று தோற்று போனேன். ஆனால் அதே சுவாரசியத்துடன் அந்த நாவல் அதே பெயரில் திரைப்படமாக வந்திருக்கிறது. 1986ல் வெளியான அந்தப் படம் அற்புதமான க்ரைம் த்ரில்லர். ஒரு பெனடிக்டைன் மடாலயத்தில் தொடர் மரணங்கள் சம்பவிக்கின்றன. அதைக் கண்டறிய ஒரு பிரன்ஸிஸ்கன் துறவியும் அவர் மாணவனும் அங்கு வருகிறார்கள். படத்தின் கரு சிரிப்பு நல்லதா கெட்டதா என்பதுதான்.

கொஞ்சம் மத்தியகால வரலாற்றைப் பார்த்துவிட்டு கதைக்கு வரலாம். கிறிஸ்துவம் ஒரு மாபெரும் மதமாக உருவாக முக்கிய காரணம் மடலயங்கள். முன்பு கிறிஸ்துவத்தை பின்பற்றினால் கொலை செய்தார்கள் ஆனால் மன்னன் கான்ஸ்டன்டைன் அதைத் தடுத்துவிட்டான். இப்போது எப்படித் தங்கள் மதப்பற்றை காட்டுவது? சிலர் இந்த உலக வாழ்வை துறந்து காடுகளில் பாலைநிலங்களில் வாழ ஆரம்பித்தார்கள். இவர்களைப் பின் தொடர்ந்த சீடர்களுக்காக கட்டிடங்கள் அந்தந்த இடங்களில் கட்டப்பட்டன. அதை சூழ்ந்திருந்த நிலங்கள் அந்த மடாலயத்திற்கு சொந்தமானது. கூடி வாழ்ந்தவர்கள் தங்களுக்கென சட்டங்கள் அமைத்துக்கொண்டனர். இவர்கள் யாவரும் போப்பாண்டவருக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதால் மறைமுகமாக இவர்கள் சொத்துகள் கிறிஸ்துவ தலைமைக்கு சொந்தமானது. இப்படி மடாலயங்கள் வழியாக அன்றைய கிறிஸ்தவம் செழித்திருந்தது. ஒரு மூன்று வாரம் நம்மை தனிமைப்படுத்தியதற்கு எவ்வளவு பெரிய எதிர்வினைகளை சந்தித்தோம் ஆனால் இந்தத் துறவிகள் விரும்பி ஏற்ற தனிமை என்பதால் அவர்கள் செலவளிக்க நிறைய நேரமிருந்தது. எப்படி செலவளித்தார்கள்?

புத்தகங்களை பிரதியெடுத்தார்கள், தோட்ட வேலைகள், ஒயின் தயாரித்தல் – இன்றும் Carthusian சபை துறவிகள் செய்யும் ஒயின் அற்புதமாக இருக்கும் விலையும் அதிகம் – தொழில்நுட்ப வேலைகள் இப்படி பற்பல பணிகளில் ஈடுபட்டார்கள். கூடவே ஜெபம், தவம். அதில் முக்கியமான ஒரு வேலை புத்தக பிரதியெடுப்பு. அழியப்போகும் புத்தகங்களை சேகரித்து அதை கையால் எழுதி பிரதியெடுப்பார்கள். அப்படிப் பிரதியெடுக்கும்போது அவர்கள் குப்பை அல்லது மதத்திற்கு எதிரானது அல்லது ஆபாசமானது என கருதும் புத்தகங்களை ஒதுக்கிவிடுவார்கள். அப்படி பிரதியெடுக்க வந்த அரிஸ்டாட்டில் எழுதிய ஒரு புத்தகம் பெனடிக்டைன் மடாலயம் ஒன்றில் இருக்கிறது.

அரிஸ்டாட்டில் எழுதிய அந்தப் புத்தகம் சிரிப்பை பற்றி பேசுகிறது. ஆனால் அங்கிருந்த மடாலய விதியின்படி சிரிப்பு தடைசெய்யப்பட்ட ஒன்று. அதற்கு அவர்கள் தரும் வாதம் சிரிப்பு இறைநம்பிக்கையிலிருந்து நம்மைப் பிரித்துவிடும். இயேசு சிரித்ததாக பைபிளில் எந்த இடத்திலும் இல்லை எனவே துறவிகள் யாரும் சிரிக்கக்கூடாது. யோசித்துப்பாருங்கள், சிரிப்பில்லாமல் எப்படி அவர்களால் வாழ்ந்திருக்க முடியும்? ஆனால் அவர்கள் அப்படிதான் வாழ்ந்தார்கள். எங்கேனும் யாரும் சிரித்தால் தண்டிக்கப்பட்டார்கள். இப்படி அரிஸ்டாட்டிலின் அந்த புத்தகம் கிரேக்க மொழியில் அப்படியே அங்கிருந்த ரகசிய நூலகத்தில் இருக்கிறது. அதை தொட்டவர்களும் பிரதியெடுக்க முனைந்தவர்களும் இறந்து போகிறார்கள் அந்த மர்மத்தை தேடி பிரான்சிஸ்கன் துறவி வருகிறார். அவர் இறைநம்பிக்கையை மூடத்தனமாக பின்பற்றாமல் ஆராய்ந்து தெளிகிறார். கடைசியில் அந்த மர்மம் முடிவுக்கு வந்ததா என்பதுதான் கதை.

இந்த படம் பல அடுக்குகளைக் கொண்டது. நான் சொன்னது படத்தின் Golden thread இது இல்லாமல் ஒரு அற்புதமான காதல் கதை இந்தப் படத்தில் இருக்கிறது. அதன் சுவாரசியத்தை ஒரே ஒரு வரியில் அறிமுகபடுத்திவிடுகிறேன்: இந்த இரண்டு மணிநேரப் படத்தில் காதலனும் காதலியும் ஒருமுறைகூட பேசிக்கொள்ளமாட்டார்கள். அதுபோக அந்த காலத்தில் இப்படி இருந்த பல மடாலயங்களுக்குள் நடந்த அதிகார விளையாட்டையும் இந்தப் படம் பேசுகிறது. மேற்கத்திய மத்தியகால தத்துவங்கள் கடவுளை பற்றி மட்டுமே அதுவும் கிறிஸ்தவர்களின் கடவுளைப் மட்டும் பேசுகிறது. அதிலிருந்து நழுவி நவீன யுகம் பிறந்த போது தத்துவங்கள் கடவுளைத் தூக்கி எறிந்துவிட்டு மனிதனை மையப்படுத்தின. யார் இந்த மனிதன்? மேற்கத்திய வெள்ளை மனிதன். ஏன் நவீனம் கடவுளை தூர எறிந்தது? அவ்வளவு அராஜகங்களை கடவுளின் பெயரால் மதங்கள் செய்தன – மதங்கள் என குறிப்பிடுவது கிறிஸ்துவம் பல மதங்களாக உடைந்துபோயின என்பதை. நவீனம் மனிதனை மையப்படுத்தினாலும் இரண்டு உலகப்போர்களை சந்தித்து மையத்திலிருந்த வெள்ளை மனிதனும் தூர எறியப்பட்டு எந்த குறிப்பிட்ட மையங்களும் இல்லாமல் இயங்க ஆரம்பித்தார்கள். அதுதான் பின்நவீனத்துவம். இந்த படம் பார்க்கும்போது இவ்வளவும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

 

இயேசுவின் சொரூபங்களோ கன்னி மரியாள் அல்லது வேறு யாருடைய சொரூபங்களும் ஏன் சிரித்ததுபோல் வடிவமைக்கபடவில்லை என்பதை சொல்லிவிடுகிறேன். பொதுவாகவே மனிதர்கள் கடவுளை கஷ்டகாலத்தில்தான் தேடுவார்கள். மனத்துயரத்துடன் ஒருவர் பிராத்தனை செய்ய போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அங்கிருக்கும் இயேசுவின் சொரூபம் சிரித்தவாறு இருந்தால் இவரின் மனநிலை என்ன மாதிரி இருக்கும்? நான் பிரச்சனையுடன் வந்தால் நீ சிரித்துக்கொண்டிருக்கிறாயா என்பதாக மாறும்தானே? இம்மாதிரியான சங்கடங்களைத் தவிர்க்கதான் சாந்தமாக எல்லாs சொரூபங்களும் உணர்வின்றி வடிவமைக்கப்படுகின்றன. அதனால் பிராத்திப்பவருக்கு தக்க அவரவர் உணர்வுகளை சொரூபங்கள் காட்டும். இதே காரணத்திற்காகதான் பைபிளில் இயேசு சிரித்ததற்கான எந்தச் சுவடும் இல்லை அதேசமயம் அவர் சிரிக்காமல் இருந்ததற்கான ஆதரங்களும் இல்லை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
 2. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
 3. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
 4. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
 5. பெண்களுடனான உரையாடல்- வளன்
 6. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
 7. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
 8. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
 9. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
 10. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
 11. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
 12. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
 13. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
 14. மூன்று இசை தேவதைகள் - வளன்
 15. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்