தீராத பாதைகள்-3

லக்ஷ்மி சரவணக்குமார் தவிர யாரும் ஓம்னியா (Omnia) இசைக்குழுவை பற்றி பேசியதாக தெரியவில்லை. இது ஒரு இசைக்குழு என்று கூறுவதைவிட வாழ்வியல் என்று கூறுவதைதான் இந்த குழுவும் விரும்புகிறது. பூமியின் போராளிகள் (Earth Warriors) என்று அழைத்துக்கொள்ளும் இவர்கள் தங்கள் இசையை இந்த பூமியை பாதுகாக்க ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். ஸ்டீவ் சிக் 1996ல் இந்த குழுவை ஆரம்பிக்கிறார். இது பிரிட்டனின் இரும்பு யுகத்தின் செலடிக் என்ற பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. இயற்கை வழிபாட்டை முன் நிறுத்தும் இவர்களுக்கு மனிதர்களை பிடிக்காது. இவர்களை பொறுத்தவரை மனிதர்கள் ஒரு அதிசய சக்தி பெற்ற குரங்குகள் அவ்வளவுதான். மனிதர்களை வெறுப்பது இவர்களின் பிரதான நோக்கமில்லை ஆனால் ஒரு விரக்தியின் வெளிப்பாடு. இந்த பூமியை நாசமாக்கியது மனிதனை தவிர வேறெதுவுமில்லை. மனிதர்கள்தான் தன் சகமனிதனை வன்புணர்வு செய்கிறார்கள் அதுவும் குழந்தைகளை வன்புணர்ச்சிக்கு பின் முதுகெலும்பை உடைத்து கொலை செய்கிறார்கள். அணு ஆயுதம் இன்னும் என்னென்ன வழிகள் இருக்கிறதோ அத்தனை வழிகளில் லாபம் பார்த்து இயற்கையை அழித்து சக உயிர்களையும் அழிக்கிறார்கள். இப்படி இருக்கும் போது விரக்தி வராதா? இந்த விரக்தியிலிருந்துதான் ஓம்னியா (லத்தின் மொழியில் “எல்லாவற்றிற்கும் தயார்” என்பது பொருள் – கடவுளை Omnipotent – எல்லாம்வல்ல என கூறுவதை நினைவுகொள்க) தனது இசையை உருவாக்குகின்றனர்.

விரக்தி என்பதை நேர்மறையாக புரிந்துகொள்ள வேண்டும் – மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற விரக்தியல்ல ஆனால் அந்த இனத்தையே கண்டுகொள்ளாமல் இயங்குவது. ஸ்டீவும் அவரது மனைவி ஜென்னியும் இந்த குழுவிற்கான இசையையும் பாடல் வரிகளையும் இயற்றுகிறார்கள். இவர்கள் பயன்படுத்துவதெல்லாம் பண்டைய இசைக்கருவிகள். கொம்புக்கருவி, மூங்கில் குழல்கள், யாழ் இப்படியான கருவிகளை கொண்டு இசைக்கிறார்கள். இவர்களின் தோற்றமும் ஹிப்பிகளை ஒத்திருப்பது இன்னொரு கலகம் என்றுதான் கூறவேண்டும்.

இயற்கையை மீட்டெடுக்க இவர்கள் செய்யும் இசைப்போரில் மனிதகுலத்திற்கு எதிரே நின்றாலும் அந்த இசையில் உள்ள ஈர்ப்பை என்னவென்று சொல்வது! உதாரணமாக ஜென்னியின் Naked Harp தொகுப்பில் One Morning in May என்ற யாழிசையை கேட்டுப்பாருங்கள்

https://www.youtube.com/watch?v=GQTy7sXVbj8

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் சில நேரம் பிராத்தனையில் ஒன்றித்து உள்ளம் உருகி வேறெதுவும் சொல்ல முடியாமல் அழுதுகொண்டிருப்பார்கள். அது ஒரு பித்த மனநிலை. இந்த இசையை கண்களை மூடிக்கொண்டு தனிமையில் கேட்டால் அந்த மாதிரியான ஒரு உணர்வு ஏற்படும். யாழின் நாண்கள் சுண்டப்படும் போது நமது இதயமும் இயல்பாக மீட்டப்படுகிறது. ஸ்டீவின் சொந்த வாழ்க்கையை பார்க்கும் போது இவர் ஒரு நாடோடி தம்பதியருக்கு பிறந்து கார்ன்வால், ஹாலந்து, ஜெர்மனி வடஅமெரிக்க போன்ற பல்வேறு நாடுகளில் வளர்க்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாகவே இவர் இசையில் ஒரு கொண்டாட்டம் இருக்கிறது என நினைக்கிறேன் உதாரணமாக இந்த நிகழ்வை பாருங்கள்

https://www.youtube.com/watch?v=69OSmdm9G3w

தேசம் மொழி இனம் இவற்றை கடந்து மனிதர்களால் வாழ முடியுமானால் இப்படிதான் கொண்டாட்டமாக இருக்கும் என நினைக்கிறேன். மரிய வர்கோஸ் யோசா தனது நோபல் பரிசு உரையில் இந்த தேசம் இனம் இவற்றை கடந்து வாழ்தல் பற்றி சொல்லியிருக்கிறார். இவையாவுமே நமக்கு கொடுக்கப்பட்டது ஆனால் அது நம் அடையாளங்கள் அல்ல அடையாளங்களை நாம்தான் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஸ்டீவ் சிக்கின் அடையாளம் ஓம்னியாவும் அதன் இசையும். பெரியாரும் இதைதானே கூறினார் – தேசாபிமானம், குலாபிமானம், பாஷாபிமானம் கூடாது. ஓம்னியாவின்

I don’t speak Human

https://www.youtube.com/watch?v=bLZ_Zy1VhMI

Suck my Flute

https://www.youtube.com/watch?v=qSrL7iGSvUg

போன்ற பாடல்கள் பெரிதாக கொண்டாடப்பட்டவை. இவர்களுக்கென்று தனிப்பட்ட ஒரு இணையதளம் இருக்கிறது அதில் மேலும் பல தகவல்களையும் இசையையும் கேட்க முடியும். லக்ஷ்மி சரவணகுமாரை போல் நானும் ஓம்னியாவின் இசையை நேரில் கண்டு களிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

இந்த கொள்ளைநோயின் காலத்தில் இசை பற்றி எப்படி எழுதிகொண்டிருக்க முடிகிறது? எல்லாவற்றிற்கும் காரணம் சாரு நிவேதிதாதான். நான் இருக்கும் இடத்தைவிட்டு பாதுகாப்பிற்காக வேறு இடத்தில் இருக்கிறேன். வெளியே எங்கும் செல்லக்கூடாது. கிட்டதட்ட சிறைவாசம். எப்போதும் வைரஸ் பற்றி கேட்டுக்கொண்டிருந்தால் இந்த தனிமையில் பைத்தியம் பிடித்துவிடும். அதனால்தான் இசையை கொண்டு இந்த சூழலை கடந்துவிட பார்க்கிறேன். சாரு நிவேதிதா பல்வேறு இசைக்கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘கடவுளும் நானும்’ என்ற தொகுப்பில் யானி, பிலிப் க்ளாஸ், பிஸ்மில்லா கான் இப்படி பலரை பற்றி எழுதியிருக்கிறார். ‘கலகம் இசை காதல்’ எனக்கு பிடித்தமான தொகுப்பு. சூஃபி இசையை சாரு அளவுக்கு கொண்டாடிய ஒருவரை நான் பார்த்ததில்லை. நஸ்ரத் ஃபதே அலிகானையும் ரஹட் ஃபதே அலிகானையும் அறிமுகபடுத்தியதற்காகவே சாருவை இறுக்கி அணைத்து முத்தமிடலாம். இன்னும் இன்னா (Inna) – ரூமேனிய பாடகி, Cradle of Filth போன்ற இசையின் பல்வேறு பரிமாணங்களை ரகளையாக கொண்டாடிக் கொண்டேயிருக்கிறார். சமீபத்தில் ஒரு காணொளியில் ரெபேக்கா ப்ளாக்கின் பெயரை அறிமுகப்படுத்தினார் அவரின் Friday என்ற பாடலை கேட்டுப்பாருங்கள் அப்போது சாருவின் இசை ரசனையை நாம் அறிந்துகொள்ள முடியும்

https://www.youtube.com/watch?v=kfVsfOSbJY0

இந்த பேரழிவின் காலத்தில் பல வருடங்களுக்கு முன் சாரு அறிமுகப்படுத்திய Struggle for Pleasure என்ற இசையை கொண்டு உங்களையும் சாருவையும் இறுகத் தழுவிக்கொள்கிறேன்.

https://www.youtube.com/watch?v=pybqjwf8w8s

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
 2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
 3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
 4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
 5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
 6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
 7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
 8. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
 9. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
 10. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
 11. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
 12. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
 13. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
 14. பெண்களுடனான உரையாடல்- வளன்
 15. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
 16. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
 17. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
 18. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
 19. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
 20. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
 21. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
 22. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
 23. மூன்று இசை தேவதைகள் - வளன்
 24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்