தீராத பாதைகள்- 5

கொரோனாவின் தீவிரம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. எப்போதும் மனிதர்களிடமிருந்து விலகியே இருந்து பழகியவன் என்பதனால் இந்த தனிமைபடுத்துதலால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எப்போதும் போல இசையாலும் வாசிப்பாலும் தனிமையை நிரப்பிவிடுகிறேன். இப்போது நெட்ஃபிலிக்ஸ் இருப்பதால் இன்னும் உற்சாகமாக இருக்கிறது. The Platform என்ற படம் பார்த்தேன். சார்லி சாப்ளின் The Gold Rush படத்தில் ஒரு காட்சியில் பசி கொண்ட மனிதன் இன்னொரு மனிதனைக்கோழியாக பார்ப்பான். பகடியாக எடுக்கப்பட்ட அந்த ஒரு காட்சியை ஒன்றரை மணி நேரப் படமாக எடுத்திருக்கிறார்கள். எனக்கு எப்போதும் மாயாஜாலப் படங்களில் ஒரு ஈர்ப்பு இருப்பதால் Locke and Key தொடர் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்னொரு அற்புதமான தொடரை குறித்து கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும், பிறகு எழுதுகிறேன். இந்த வாரம் என்னை கவர்ந்த பைபிளை அடிப்படையாக கொண்ட இரண்டு படங்களை குறித்து எழுதுகிறேன்.

ஒரு பெரிய இயக்குனர் கதை கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இயேசு சபை துறவி பைபிள் ஒன்றை அவரிடம் தருகிறார். இயக்குனர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது மேஜையில் தூக்கி எறிந்துவிட்டு மற்ற வேலைகளில் ஈடுபடலானார். ஒருமுறை ஏதோ ஒரு ஆர்வத்தில் பைபிளை வாசிக்க துவங்கினார். அதன் பிறகு பல திரைகதைகளை பைபிளை கொண்டு மட்டுமே எழுதினார். அந்த பெரிய இயக்குனர் செசில் தெமில் (Cecil B Demille). இவர் இயக்கிய பத்து கட்டளைகள் (Ten Commandments) திரைப்படம் உலகமெல்லாம் ஓடி மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படம் வந்த சமயம் மதுரையில் ஒரு தியேட்டரில் வருட கணக்காக ஓடியதாக சொல்வார்கள். வண்டி கட்டிக்கொண்டு இந்தப் படம் பார்க்க சாரை சாரையாக மக்கள் செல்வார்களாம். 1956ல் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. யூத மற்றும் கிறிஸ்தவ மதத்தினரின் முக்கியமான ஆளுமை மோசே (இஸ்லாமியர்களுக்கும்தான் ‘மூசா’ என்று அழைப்பார்கள்). அவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம்தான் பத்து கட்டளைகள்.

பழைய ஏற்பாட்டின் இரண்டாம் புத்தகமான ‘விடுதலைப் பயணம்’ இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் புத்தகத்தில் இந்தப் படத்தில் இருக்கும் நுணுக்கங்கள் இருக்காது. இங்கேதான் நாம் செசில் தெமிலின் கற்பனைத் திறனை பார்க்க முடியும். வரிகளுக்கு இடையே வாசிப்பது என்று சொல்வார்கள், அதாவது இரண்டு வரிகளுக்கு நடுவில் இருக்கும் அந்த இடைவெளியை நம் கற்பனையை கொண்டு நிரப்புவது. இது கத்தி மேல் நடப்பது போன்று ரொம்ப ஆபத்தானது. தனிப்பட்ட முறையில் நாம் எப்படி வேண்டுமானாலும் வாசித்து அர்த்தப்படுத்தலாம் ஆனால் அதை திரைப்படம் போல ஒரு கலைப்படைப்பாக மாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த திரைக்கதையை செசில் எழுதும் போது இவருடன் ஒரு யூத ரபியும் கிறிஸ்துவ பாதிரியாரும் இருந்தார்கள். அவர்களின் ஆலோசனையுடன் எந்த மதத்தையும் புண்படுத்தாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டது. இது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். மத புனித நூல்கள் தங்களுக்குள் ஒருசில வன்முறையைச் சுமந்து இருக்கும். அதை அப்படியே கலையாக்க துணிந்தால் அது வேறு பல பிரச்சனைகளை சந்திக்கும். நான் சொல்வது கலைஞர்களின் சுதந்திரம் குறித்து அல்ல. ஒரு உதாரணம் சொல்கிறேன்.

கிறிஸ்துவர்களுக்கு இந்த மாதம் தவக்காலம். இயேசுவின் மரணத்தை குறித்து அதிகமாக தியானித்து ஒடுக்கமாக இருக்க வேண்டிய கடமை உண்டு. அதில் முக்கியமான ஒரு பக்தி முயற்சி சிலுவைப்பாதை. வெள்ளி தோறும் கோவிலில் சிலுவைப்பாதை என்று பதினான்கு இடங்களில் இயேசிவின் அந்த இறுதி யாத்திரையை பற்றி சிந்தித்து ஜெபம் செய்வார்கள். நீங்கள் அடுத்தமுறை ஒரு சர்ச்சுக்குள் நுழையும் போது அதன் பக்கவாட்டில் பதினான்கு ஸ்தலங்களாக இருக்கும் சிலுவைபாதையை கவனியுங்கள். இரண்டு பக்கத்திற்கு ஏழு ஏழு என்று அமைந்திருக்கும். ஒரு பக்கம் முடிந்ததும் அடுத்த பக்கம் மாற முதலில் பீடத்தை நோக்கி வணங்கிவிட்டு அடுத்த ஏழுக்கு மாறுவார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்படி அடுத்த பக்கம் மாறும் முன் அந்த ஊரிலிருந்து பிடித்து வரப்பட்ட ஒரு யூதனை, சிலுவைபாதை செய்யும் கிறிஸ்துவர்கள் ஒவ்வொருவரும் அறைந்துவிட்டு மறுபுறம் மாறுவார்களாம். காரணம் இயேசுவை கொன்றது யூதர்கள் என்ற கட்டமைப்பு. இந்த வன்மம் எப்படி வந்திருக்கும்? மத போதகர்களின் பிரசங்கம். கூட்டத்தை கவர்ந்திழுக்க இப்படி எதையாவது கூறி அது எப்படி எதிர்வினையாற்றுகிறது பாருங்கள். பிரசங்கத்திற்கு இந்த நிலை என்றால் காட்சி ஊடகம் குறித்துச் சொல்லவா வேண்டும்? செசில் பல்வேறு ஆராச்சிகளுக்கு பிறகே படம் எடுப்பார். பத்து கட்டளைகள் இல்லாமல் அவர் எடுத்த சாம்சங்கும் டிலைலாவும் (Samson and Delila) இயேசுவை மையப்படுத்தி எடுத்த The King of Kings எனக்கு விருப்பமான படங்கள்.

இப்படி மதம் சார்ந்து எழுதப்பட்ட நாவல் The Last Temptation of Christ. பிறகு இது படமாகவும் எடுக்கப்பட்டது. இயேசுவின் மனித தன்மையை பிரதானப்படுத்தி இந்த நாவலும் படமும் இருந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை ஆனால் வத்திக்கான் தலைமையகம் இந்த நாவலையும் படத்தையும் தடைசெய்தது. வழக்கம்போல் அதனாலே இவை இரண்டும் நல்ல விற்பனை கண்டன. இந்த நாவலை எழுதியது எனக்கு மிகவும் விருப்பமான நிக்கோஸ் கஸான்சாக்கிஸ். ஸோர்பா தி கிரீக் ஞாபகம் இருக்கிறதா? இப்படி மதத்தை மையப்படுத்தி எடுத்து பெரும் வெற்றி பெற்ற நம் காலத்து இன்னொரு இயக்குனர் மெல் கிப்ஸன் (Mel Gibson).

மெல் கிப்ஸன் இயக்கிய படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றவை. அதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு அபாரமானது. உதாரணமாக அபகலிப்டோ (Apocalypto) அவரது புகழ்பெற்ற படம். பழங்குடியினரை பற்றிய இந்த படம் அவர்கள் பேசிய அதே மொழியில் எடுக்கப்பட்டது. இதில் உள்ள சிக்கல் என்ன? படத்தில் நடித்த யாவரும் இந்த மொழியை கற்று அதன் பிறகு நடிக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட மொழியில் எந்த சொல் எந்த உணர்வுகளை கொடுக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும். இப்படியாக எடுக்கப்பட்டதனால்தான் அந்த படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. எனக்கு மெல் கிப்ஸன் இயக்கியதில் மிகவும் பிடித்தவை ஹேம்லெட் (Hamlet) மற்றும் கிறிஸ்துவின் பாடுகள் (Passion of Christ).

செசில் தெமில் போலவே பேஷன் ஆஃப் கிறைஸ்ட் படத்திற்கு மெல் கிப்ஸன் பெரும் உழைப்பை நல்கியிருக்கிறார். நம் நாட்டில் யூதர்கள் இல்லை. இருந்தாலும் மிக சொர்பமான எண்ணிக்கைதான் (கேரளாவில் முன்பு இருந்தார்கள் இப்போதும் இருக்கிறார்களா தெரியவில்லை, பூனேவில் அவர்களுக்கான தொழுகை கூடங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் அங்கும் இருக்கிறார்களா தெரியாது).  அமெரிக்காவில் அப்படியில்லை. யூதர்கள் எங்கும் நிறைந்திருப்பார்கள். எனக்கும் ஒரு யூதப்பெண்ணுக்கும் இடையில் ஒரு உன்னதமான உரையாடல் நடந்தது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்த மாலை பொழுதை மறக்கமுடியாது. அதை பற்றி பிறகு எழுதுகிறேன். இப்படி ஒரு சூழலில் இயேசுவை மையமாக வைத்து படம் எடுப்பது மிகப்பெரிய சவால். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் இரண்டு பெரிய மதங்களுக்கு இடையே பிரச்சனை எழும்.

எனவே மெல் கிப்ஸன் பல பாதிரியார்களிடம் ஆலோசனை பெற்று, பல யூத ரபிகளை சந்தித்து, பற்பல புத்தகங்கள் வாசித்து அதன்பிறகு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இன்னொரு சிறப்பு இயேசு பேசிய அதே அரமேய மொழியில் இந்த படம் எடுக்கப்பட்டது. இன்று சிரியா பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய தீவில் ஐம்பதுக்கும் குறைவான மக்கள் இந்த மொழியை பயன்படுத்துகிறார்கள். இன்னொரு நுணுக்கத்தையும் நாம் கவனிக்க வேண்டும் இயேசுவின் காலகட்டத்தில் அரமேய மொழி பேச்சுவழக்கு உடையது. எழுதுவதற்கு எபிரேய மொழி. இந்த படத்தில் அதை விளக்க ஒரே ஒரு காட்சி இருக்கும்.

இந்த படம் இயேசுவின் கடைசி மூன்று மணி நேர வாழ்வை மிகைப்படுத்தி எடுக்கப்பட்டதாக விமர்சித்தனர். ஆனால் அது உண்மையல்ல. படத்தில் இயேசுவை கட்டி வைத்து அடிக்கும் அந்த ஒரு காட்சிக்காகவே பல்வேறு இடங்களில் தடைசெய்யப்பட்டது. வன்முறை நிறைந்த அந்தக் காட்சியை எப்படி படத்தில் வைத்தார் என்று ஆராய்ந்தால் அது மிகைப்படுத்தப்பட்ட காட்சியில்லை என்பது புரிந்தது. அதாவது ரோமைப் பேரரசு தண்டனை முறைகளில் கல்தூணில் கட்டி வைத்து அடிக்கப்படுவது சாதாரண ஒரு தண்டனைதான். குற்றவாளியை நாற்பது முறை பிரம்பால் அடிக்க வேண்டும் அந்த காலத்தில் சரியாக எண்ணிக்கையை கணக்கிட முடியாததால் நாற்பதுக்கு ஒன்று குறைய என்பதுதான் கணக்கு அதாவது முப்பத்து ஒன்பது முறை அடிக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் இயேசுவை விளாசி தள்ளிவிடுவார்கள். கிட்டதட்ட தோல் உரிபட்ட ஆடுபோல இருப்பார். காரணம் என்னவென்று பார்த்தால், அந்த முப்பத்து ஒன்பது என்பது ரோமை குடிமகனுக்கு மட்டும்தான் செல்லும். ரோமையர் அல்லாத மற்றனைவரும் அடிமைகள். அடிமைகளுக்கான தண்டனையில் அவர்கள் இறக்கும் வரை அடிக்கலாம் என்பது விதி. இவ்வளவு நுணுக்கங்களையும் படத்தில் காட்டியிருக்கிறார்கள். இயேசுவுக்கும் பிலாத்துவுக்குமான உரையாடலில் இயேசுவை பிலாத்து ஒரு அரசனை போலவே நடத்துவான். அதே நிலையில் இயேசுவை அடித்து விடுவிக்க உத்தரவு பிறப்பிப்பான் ஆனால் அது அடிப்பவர்களுக்கு சரியாக எடுத்து சொல்லபடாததால் அவர்கள் உரித்துவிடுவார்கள். அதன் பிறகு பிலாத்து தன் கோவத்தையும் அதிகாரத்தையும் ஒரு பார்வையில் கடத்துவது நடிப்பின் உச்சம் என்று சொல்வேன்.

நடிகர்கள் தேர்வும் அபாரம். இயேசுவின் வாழ்வில் இப்படியெல்லாம் நடந்திருக்கலாம் என்று வரும் ஒரு சில காட்சிகள் கவித்துவமாக இருக்கும். என்னுடைய படிப்பறையில் சிரிக்கும் இயேசுவின் படத்தை நான் வைத்திருக்கிறேன். இயேசு சிரித்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் சென்று வந்த அல்லது பார்த்த ஏதோ ஒரு சர்ச்சில் அல்லது எங்கேனும் சிரிக்கும் இயேசுவையோ வேறு புனிதர்களின் சொரூபத்தை பார்த்திருக்கிறீர்களா? ஏன் அவர்கள் சிரிப்பதில்லை என்பதை அடுத்தமுறை சொல்கிறேன்.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
 2. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
 3. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
 4. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
 5. பெண்களுடனான உரையாடல்- வளன்
 6. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
 7. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
 8. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
 9. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
 10. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
 11. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
 12. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
 13. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
 14. மூன்று இசை தேவதைகள் - வளன்
 15. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்