சிறு வயதில் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம் பற்றிக் கதைகளில் படித்திருக்கிறேன். நம்மூர் பரங்கிக்காயை அச்சுறுத்தும் பிசாசின் முகம் போலக் கத்தியால் செதுக்கி அதற்குள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பார்கள், அதற்கு ஜாக்-ஓ-லான்டர்ன் என்று பெயர். குழந்தைகள் அச்சமூட்டும் டிராகுலா, சூனியக்கிழவி, பேய், பிணம், சோம்பை எனப் பலவாறாக வேடமிட்டுக்கொண்டு வீடு வீடாகச் சென்று மிட்டாய் தருகிறீர்களா அல்லது கேடு விளைவிக்கட்டுமா என்று செல்லமாகப் பயமுறுத்தி பை நிறைய இனிப்புகளையும் மிட்டாய்களையும் சாக்லேட்டுகளையும் வாங்கி வருவார்கள். அந்த வயதில் இப்படி விந்தையான கொண்டாட்டங்களைப் பற்றிப் படித்தால் ஆச்சரியமாக இருக்கும். என்ன ஏதென்று விவரமாகத் தெரிந்துகொள்ள இணையமெல்லாம் கிடையாது. நூலகத்தில் கிடைக்கும் கலைக்களஞ்சியத்திலும் நிகழ்காலம் பற்றிய தகவல்கள் இருக்காது. பல வருடங்கள் கழித்துத்தான் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் அமெரிக்கர் ஒரு புகைப்படக் கலைஞரும்கூட. அவர் எடுக்கும் புகைப்படங்களை அலுவலக நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு எங்கே எப்போது எடுத்தேன் என்பதையும் பின்னணிக் கதையையும் விளக்கிச் சொல்லுவார். கோவிட்-19 தொற்றுக்கு முன்னர் அவருடைய வீட்டின் கொல்லைப்புறத்தில் குடும்பத்தினரின் ஹாலோவீன் கொண்டாட்டத்துக்காக பெரிய குகையும் சுரங்கப்பாதையும் அமைத்திருந்தார். அவருடைய மகன்களுக்கும் அவர்களின் நண்பர்களுக்கும் சோம்பையைப் போல வேடமிட்டதும் அவரேதான். குடும்பம் முழுவதும் ஹாலோவீனுக்கான ஆயத்தத்தில் இறங்கியது குறித்துச் சுவையாக விளக்கினார்.
மேலைநாடுகளில் மட்டுமின்றி இப்போதெல்லாம் இந்தியாவிலும் இந்தக் கொண்டாட்டங்கள் பரவலாகி வருகின்றன. சின்னக் குழந்தைகள் மாறுவேடமிட்டுக் கொண்டு நண்பர்களோடு வீடுவீடாகப் போய் சாக்லேட்டுகளையும் மிட்டாய்களையும் வாங்கிவருகின்றனர். இளைஞர்களும் இளம்பெண்களும் வரலாற்றிலோ இலக்கியத்திலோ தங்களுக்குப் பிடித்த மாந்தர்களைப்போல வேடமிட்டுக்கொள்கிறார்கள். பிறகு ஒன்றாகச் சேர்ந்து தங்களுக்குப் பிடித்த உணவையும் திரைப்படத்தையும் பார்த்து மகிழ்கிறார்கள்.
ஹாலோவீன் தொடங்கிய கதை
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31-ஆம் தேதி ஹாலோவீன் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்கள் எங்கே எப்போது துவங்கின என்பது சுவாரசியமானவை. 2000 வருடத்துக்கு முன்னால் இங்கிலாந்து, அயர்லாந்து, வடக்கு பிரான்ஸ் பகுதியில் வாழ்ந்தவர்கள் செல்ட் அல்லது கெல்ட் இனத்தவர்கள். அவர்களின் புத்தாண்டு நவம்பர் 1-ஆம் தேதி துவங்கியது. முந்தைய நாள் இரவில் சம்ஹைன் எனப்படும் இறப்புக்கான செல்டிக் கடவுளுக்கு மரியாதை செலுத்தினார்கள். கூடவே குளிர்காலத்தின் துவக்கத்தையும் இருட்டையும் அழிவையும் கொண்டாடும் நாளாகவும் அது இருந்தது. அதன் தொடர்ச்சிதான் ஹாலோவீன் என்று சொல்லப்படுகிறது.
எட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கிறிஸ்துவம் பரவிய சமயத்தில் போப்பாகப் பதவியேற்ற மூன்றாம் கிரகரி, பண்டைய புதுவருடப் பிறப்புக் கொண்டாட்டத்தையும் இறந்துபோன மூதாதையர்களை நினைவுகூர்ந்து மரியாதை செய்வதையும் ஒட்டி நவம்பர் 1-ஆம் தேதியை ‘அனைத்து துறவிகள் நாளாக’ அறிவித்தார். சில பழைய சம்ஹைன் சடங்குகளும் இந்த நாளன்று தொடர்ந்தன. புதிய மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் தங்கள் பழைய பழக்கவழக்கங்களைத் தொடர்வதற்கான ஏற்பாடாக இது இருந்தது. அன்றைய தினத்தில் செய்யும் பிரார்த்தனை ‘ஆல் ஹாலோ மாஸ்’ என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் ‘அனைத்து துறவிகள் நாளின்’ முந்தைய இரவு ‘ஆல் ஹாலோ ஈவ்’ அல்லது ‘ஹாலோவீன்’ என்று மருவியது.
சம்ஹைன் கொண்டாட்டம்
சம்ஹைனின் போது கோடையில் மேய்ச்சல் நிலத்தில் இருக்கும் தங்கள் ஆடு மாடுகளை இருப்பிடங்களுக்கு ஓட்டி வருவார்கள் மக்கள். தேவையான விலங்குகளைக் கொன்று குளிர்காலத்துக்கான இறைச்சியைத் தயார்செய்வார்கள். சம்ஹைனன்று மனிதர்கள் வாழும் உலகத்துக்கும் இறந்தவர்கள் வசிக்கும் கீழுலகத்துக்கும் இடையே இருக்கும் எல்லைக்கோடு முற்றிலும் அழிந்துவிடுவதால் இறந்தவர்களின் ஆன்மாக்களும் ஆவிகளும் தேவதைகளும் அன்றைய இரவு பூமியில் நடமாடும் என்று நம்பினார்கள். அந்த நேரத்தில் தீய சக்திகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மாறுவேடமிட்டுக்கொண்டு வீடுவீடாகச் சென்று கவிதைகளையும் பாடல்களையும் சொல்வார்கள், வீட்டில் இருப்பவர்கள் அதற்கு நன்றிசொல்லும் விதமாக உணவு தருவார்கள். அந்த இரவில் இறந்துபோன மூதாதையர்களுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக விருந்துகளைப் படைத்தார்கள். இருளை விரட்டுவதற்காக நெருப்பை மூட்டினார்கள். தீயசக்திகளை விரட்டுவதற்காக டர்னிப் காய் அல்லது உருளைக்கிழங்கைச் செதுக்கி உள்ளே மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தனர்.
சம்ஹைன் நாளன்று மாலையில் செல்ட் மக்களின் பூசாரிகளும் மருத்துவர்களும் ஆசிரியர்களுமான ட்ரூயிட்கள் சில சடங்குகளைச் செய்தார்கள். மக்களை வீட்டில் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பை அணைக்கச் சொல்லிவிட்டு புத்தாண்டுக்கான புனிதமான நெருப்பை ஓக் மரத்தின் கிளைகளைக் கொண்டு தாங்களே மூட்டுவார்கள். அந்தக் கொண்டாட்டத்தின் போது மக்கள் விலங்குகளின் தலை தோல் போன்றவற்றால் செய்யப்பட்ட உடைகளை அணிந்துகொண்டனர். புதிதாக மூட்டிய நெருப்பில் விலங்குகள், தாவரங்கள், ஏன் சில நேரங்களில் மனிதர்களையும் பலியிட்டனர். பலி கொடுத்த விலங்குகளின் மிச்சத்தைப் பார்த்து வரும் ஆண்டுக்கான ஆரூடத்தைச் சொன்னார்கள். பிறகு, இந்த நெருப்பில் இருந்து தங்கள் வீட்டுக்கான புதிய நெருப்பை எடுத்துச் சென்றனர்.
செல்ட் இனத்தவர்களின் கொண்டாட்ட முறைகள்
வெவ்வேறு பகுதியில் வாழ்ந்த செல்ட் இனத்தவர்கள் பலவிதமான ஹாலோவீன் சம்பிரதாயங்களைக் கடைபிடித்தனர். அயர்லாந்தில் மக் ஓலா என்ற கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மக்கள் வீதிகளில் அணிவகுத்துச் சென்று உணவு கேட்டு பிச்சை எடுப்பார்கள். அணிவகுப்பின் தலைவர் வெள்ளை மேலங்கியும் விலங்கின் முகத்தாலான முகமூடியும் அணிந்திருப்பார். ஸ்காட்லாந்தில் மக்கள் வயல்களின் நடுவிலும் கிராமங்களின் நடுவிலும் தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு அணிவகுத்துச் செல்வார்கள். பிறகு சூனியக்கிழவிகளும் கெட்ட ஆன்மாக்களும் ஊரை அண்டாமல் இருப்பதற்காக மலைச்சரிவுகளில் நெருப்பை மூட்டுவார்கள். வேல்ஸில் ஒவ்வொருவரும் கூழாங்கல்லில் தங்கள் பெயரைக் குறியிட்டு எரியும் நெருப்பில் போடுவார்கள். மறுநாள் காலை யாருடைய கல்லாவது காணவில்லை என்றால் அடுத்த வருடத்துக்குள் அவர் இறந்துவிடுவார் என்று நம்பினார்கள்.
ஹாலோவீனோடு தொடர்புடைய எல்லா பழக்கவழக்கமும் பயத்தினால் உண்டானது அல்ல. சம்ஹைனின் போது தங்களின் அன்புக்கும் பிரியத்துக்கும் உரியவர்கள் தங்களைப் பார்க்க வருவதாக மக்கள் நம்பினார்கள். உணவு மேசையில் அவர்களுக்கென இடம் ஒதுக்கினார்கள். வீட்டுவாயிலில் உணவுப்பொருட்களை வைத்தனர். அவர்கள் தங்களை வந்து பார்த்துவிட்டு மீண்டும் ஆன்மாக்களின் வசிப்பிடத்துக்குச் செல்லும் பாதையைக் கண்டுபிடிப்பதற்காக தெருக்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தனர்.
கிபி 43-ஆம் ஆண்டில் ரோமானியர்கள் செல்ட்டுகளின் நிலத்தைக் கைப்பற்றி சுமார் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அந்தக் காலகட்டத்தில் ரோமானியர்களின் இரண்டு முக்கியமான இலையுதிர்கால திருவிழாக்கள் சம்ஹைனோடு சேர்ந்து கொண்டாடப்பட்டன. முதலாவது ஃபெராலியா என்ற அக்டோபர் மாத இறுதியில் கொண்டாடப்படும் திருவிழா, இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள். மற்றது பழங்களையும் மரங்களையும் காக்கும் பொமோனா என்ற கிரேக்க தேவதையைக் கொண்டாடும் திருவிழா. ஆப்பிள் பழங்கள் பொமோனாவைக் குறித்தன. இப்படித்தான் ஹாலோவீனுக்கும் ஆப்பிளுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.
ஹாலோவீனுக்கும் ஆப்பிளுக்கும் உள்ள தொடர்பு
அமெரிக்கப் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் பரங்கிக்காய் தானே ஹாலோவீனோடு தொடர்புடைய காயாகச் சித்தரிக்கப்பட்டது, ஆப்பிள் எங்கே வந்தது என்று யோசித்தேன். அந்த வரலாற்றை படித்தபோது பல வித்தியாசமான தகவல்கள் தெரியவந்தன. பண்டைய ஐரோப்பாவில் செக்கச் சிவந்த ஆப்பிள்கள் செழுமை, கருவளம் மற்றும் நிலைத்திருக்கும் தன்மையின் குறியீடாக இருந்தன. அவற்றின் தோலும் கொட்டையும் காதலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஆரூடம் சொல்லப் பயன்படுத்தப்பட்டன. ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் செய்தபோது இந்தச் சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் தங்களோடு எடுத்துச் சென்றனர்.
19-ஆம் நூற்றாண்டில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமணத்தை எதிர்ப்பார்த்திருந்த இளம்பெண்கள் ஆப்பிளில் தங்கள் பெயரை எழுதித் தண்ணீரில் மிதக்கவிட்டனர். அங்கு கூடியிருந்த இளைஞர்கள் பழங்களை வாயால் கவ்வி எடுக்கவேண்டும். அவர்கள் எடுக்கும் பழத்தில் எந்தப் பெண்ணின் பெயர் இருக்கிறதோ அவரைத் திருமணம் செய்துகொள்ளவார் என்று ஆரூடம் சொல்லப்பட்டது.
இன்னுமொரு வினோதமான காதல் சம்பிரதாயமும் இருந்தது. ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் மக்கள் குளிர்காலத்துக்கு தேவையான ஆப்பிள் பழக்கூழைத் தயாரித்து வைப்பார்கள். அதற்காக மலைமலையாக ஆப்பிள்களைத் தோலுரிக்க வேண்டியிருக்கும். அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் இளம்பெண் ஆப்பிளின் தோலை அறுந்து போகாமல் முழுமையாக உரித்து முதுகுக்குப் பின்னால் வீசுவாள். கீழே விழும் தோல் எந்த எழுத்தைப் போன்ற வடிவத்தில் இருக்கிறதோ அந்த எழுத்தில் துவங்கும் பெயரைக் கொண்டவர் அவளுடைய வருங்கால கணவனாக அமைவார் என்று நம்பினார்கள்.
ஆப்பிள் செழுமையின் குறியீடு
அது சரி, ஆப்பிள்களுக்கும் செழுமைக்கும் நிலைத்திருக்கும் தன்மைக்கும் புதுப்பித்தலுக்கும் இருக்கும் தொடர்பு எப்போது எப்படித் துவங்கியது? ஆப்பிள்கள் ஐரோப்பாவிலும் மேற்காசியாவிலும் அதிகம் விளைந்தன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பல கலாச்சாரங்களின் புராணங்களில் ஆப்பிள்கள் பற்றிய சுவாரசியமான கதைகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது.
மக்கள் வேட்டையாடி உணவு சேகரித்த காலத்தில் இலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும் விளைந்த ஆப்பிள்கள் முக்கியமான உணவாக இருந்தன.பெரிதோ சிறியதோ இனிப்போ புளிப்போ எப்படி இருந்தாலும் அவற்றைச் சாப்பிட்டனர். காலப்போக்கில் அவற்றை வேகவைத்தும் அடுமனையில் சுட்டும் நீண்ட நாட்கள் பாதுக்காக்க கற்றுக்கொண்டனர். அப்படியே காயவைத்து குளிர்காலத்துக்கான உணவாகவும் பதனப்படுத்தினர். அவற்றில் இருந்து சைடர் எனப்படும் மதுவைத் தயாரித்தனர்.
குளிர்ப் பிரதேசத்தில் இலையுதிர்காலத்தில் பகல்கள் குறுகி இரவுகள் நீண்ட சமயத்தில் வாழ்க்கையே முடிந்துபோனது என்ற இனம்புரியாத அச்சம் மக்களின் மனதில் தோன்றியது. அப்போது அவர்கள் உயிர்வாழ ஆப்பிள்கள் உதவின. மங்கிய சூரிய ஒளியில் சிவப்பு அல்லது தங்க நிறத்தில் ஒளிர்ந்த ஆப்பிள்கள் இளவேனில்காலம் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையைத் தந்தன. மறக்காமல் அடுத்த வருடம் வரவேண்டும் என்று சூரியக் கடவுளிடம் வேண்டிக்கொண்டு இரவில் பெரிய நெருப்பை எரித்து பசுங்கிளைகளில் கட்டி தொங்கவிடப்பட்ட ஆப்பிள்களை அவருக்குப் படைத்தனர்.
ஹாலோவீனுக்கு சர்க்கரைப் பாகில் முக்கி எடுத்த ஆப்பிள்களைச் சாப்பிடுவது மிகச் சமீபத்தில் உருவான பழக்கம்தான். 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சர்க்கரைப் பாகில் தவறி விழுந்த ஆப்பிள்களை புதிய இனிப்பாக ஒரு மிட்டாய்க் கடைக்காரர் விற்க ஆரம்பித்தார். மக்களுக்கு அந்தச் சுவை பிடித்துப் போனதால் ஹாலோவீன் சம்பிரதாயமாக மாறிவிட்டது என்று சொல்லப்படுகிறது.
மூதாதையரை வழிபடும் நாள்
மெக்சிகோவில் ஹாலோவீன் நாள் மூதாதையர்களையும் இறந்தவர்களையும் நினைவில் வைத்து வழிபடும் நாளாகக் கடைப்பிடிக்கிறார்கள். மெக்சிகோவின் தொல்குடி மக்களின் பழக்கவழக்கங்களோடு ஐரோப்பியர்களின் சடங்குகளும் சேர்ந்து இதை ஒரு வண்ணமயமான நாளாக உருவாக்கி இருக்கிறது. இறந்தவர்களின் நினைவாக பூக்களையும் இனிப்புகளையும் அலங்கரிக்கப்பட்ட மண்டையோடுகளையும் எலும்புக்கூடுகளையும் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இறந்தவர்களின் சமாதிக்கு குடும்பத்தோடு சென்று மெழுகுவர்த்திகளை ஏற்றிவைக்கிறார்கள். இதை வருத்தமும் இறப்பைக் குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாளாகவோ இல்லாமல் வாழ்க்கையைக் கொண்டாடும் நாளாகக் கருதுகிறார்கள்.
க்வதாமாலா நாட்டிலும் ஹாலோவீன் மூதாதையர்களின் நினைவு நாளாகவே கொண்டாடப்படுகிறது. இங்கே என்ன ஒரு வித்தியாசம் என்றால் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வண்ணமயமான பெரிய பட்டங்களை இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்கிறார்கள். பிறகு அவற்றை இடுகாடுகளுக்கு கொண்டுபோய் அங்கிருந்து வானில் பறக்கவிடுகிறார்கள். இந்தப் பழக்கம் 3000 ஆண்டுகள் பழைமையானது, தென்னமெரிக்காவின் மாயன் இனத்தைச் சேர்ந்த மக்கள் கடைப்பிடித்த சடங்கின் தொடர்ச்சி. இப்போது இன்ஸ்டாகிராமில் தங்களுக்குப் பிடித்த பட்டங்களின் படங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இத்தாலியில் பாரம்பரியமான ஒக்னிசான்டி கொண்டாட்டத்தோடு ஹாலோவீனையும் சேர்த்துக் கொண்டாடுகின்றனர். ஒக்னிசான்டி என்பது ‘அனைத்து துறவிகள் நாளை’ போன்றது, நவம்பர் 1, 2-ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் தங்கள் உறவினர்களை வந்து சந்திப்பதாக நம்பப்படுகிறது.
ஜப்பானில் ஹாலோவீன் கொண்டாட்டம் பெரியவர்களுக்கானது. கவஸாகி ஹாலோவீன் அணிவகுப்பு மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வருடமும் பலவிதமான வண்ண உடைகளை அணிந்துகொண்டு சுமார் 4000 மக்கள் இந்த அணிவகுப்பில் பங்குபெறுவது வழக்கம். கலந்துகொள்ள விருப்பம் கொண்டவர்கள் இதெற்கான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கவேண்டும். அதுமட்டுமில்லாமல் இரண்டு மாதத்துக்கு முன்னரே விண்ணப்பத்தை அனுப்பிவைக்க வேண்டும். கோவிட்-19 தொற்றினால் இரண்டு வருடங்களாக இந்தக் கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதுபோன்ற மனதுக்கு மகிழ்ச்சி தரும் கொண்டாட்டங்கள் முழுவீச்சில் எப்போது துவங்கும் என்று ஜப்பானிய இளைஞர்கள் மட்டுமல்ல, உலகமே காத்திருக்கிறது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
- நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
- வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
- மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
- குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
- ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
- நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
- நாம் வாழும் காலம் - 15 : வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
- கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி
- வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
- பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி
- மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
- நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
- மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி
- மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி
- உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி
- வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
- வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
- மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி
- பழங்களின் அரசனின் பயணக் கதைகள் : கார்குழலி
- வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி
- நாம் வாழும் காலம் : கார்குழலி