நாம் வாழும் காலம் – 6
எவரெஸ்ட் சிகரத்தை எல்லோருக்கும் தெரியும். கணித மேதை ராதாநாத் சிக்தாரைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டிருப்போமா? அவருக்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கு இருக்கும் தொடர்பு என்ன என்பதை இதுவரை எந்தப் பாடப் புத்தகத்திலாவது படித்திருப்போமா? ஆங்கில நாளிதழொன்றின் வினா விடைப் புதிரில்தான் முதன்முறையாக அவருடைய பெயரைத் தெரிந்துகொண்டேன். அவருக்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பைப்பற்றித் தெரிந்துகொள்ள இந்திய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவது அவசியமாகிறது.
இந்திய நிலப்பரப்பை அளக்கும் திட்டம்
1831-ஆம் ஆண்டில் இந்தியாவின் நில அளவை ஆய்வாளராகப் பொறுப்பேற்ற சர் ஜார்ஜ் எவரெஸ்ட் இந்திய நிலப்பரப்பு முழுவதையும் துல்லியமாக அளவிடும் திட்டத்தை வழிநடத்தினார். திட்டத்தை நிறைவேற்றக் கோளக திரிகோண கணிதம் தெரிந்த கணிதவியலாளர் தேவைப்பட்டபோது கல்கத்தாவில் பணிபுரிந்துவந்த ஜான் டைட்லர் என்ற கணிதப் பேராசிரியர் தன்னுடைய மாணவரைப் பரிந்துரைத்தார். 19-வயதான ராதாநாத் சிக்தார்தான் அந்த மாணவர். அந்த இளம்வயதிலேயே பண்டைய கிரேக்கக் கணிதவியலாளரான யூக்ளிடின் ஆய்வு நூல்களையும் ஐசக் நியூட்டனின் கணிதவியல், இயற்பியல் கோட்பாடுகளையும் கரைத்துக் குடித்திருந்தார்.
புவிக்கோளுரு அளக்கையியல் சார்ந்த அவருடைய புதிய பணியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த கணக்கியல் முறைகளைப் பின்பற்றுவதோடு புதிய முறைகளைக் கண்டுபிடித்து அவற்றையும் பயன்படுத்தத் தொடங்கினார். உடன் பணிபுரிந்த மற்ற கம்ப்யூட்டர்களைவிட (ஆமாம், அவர் வகித்த பதவிக்கு அதுதான் பெயர்) அபாரமான கணிதத் திறன் கொண்டிருந்ததால் விரைவிலேயே ஜார்ஜ் எவரெஸ்ட்டுக்கு நெருக்கமானார். 1843-ஆம் ஆண்டில் ஜார்ஜ் எவரெஸ்ட் பணி ஓய்வு பெற்றதும் கர்னல் சர் ஆண்ட்ரூ ஸ்காட் வாஹ் பதவியேற்றார். அடுத்த எட்டு ஆண்டுகளில் ராதாநாத் சிக்தர் தலைமை கம்ப்யூட்டராகப் பதவி உயர்வு பெற்றதோடு வானிலைத் துறையின் கண்காணிப்பாளர் பொறுப்பையும் ஏற்றார்.
சிகரங்களின் உயரத்தைக் கணக்கிடும் பணி
1851-ஆம் ஆண்டில் கர்னல் வாஹின் ஆணையின்பேரில் இமயமலைத் தொடரில் இருந்த சிகரங்களின் உயரத்தைக் கணக்கிடும் பணியில் ஈடுபாட்டார் ராதாநாத். அதுவரையில் கஞ்சன்ஜங்காதான் உலகிலேயே உயரமான சிகரமாகக் கருதப்பட்டது. ஆறு பகுப்பாய்வு கூர்நோக்கு அறிக்கைகளில் கிடைத்த புள்ளிவிவரத் தரவுகளின் உதவியோடு கணக்கீடு செய்து ரோமானிய எண்ணுருவால் XV (15) என்று குறிப்பிடப்பட்ட சிகரம்தான் கஞ்சன்ஜங்காவைவிட உயரமானது என்பதை 1852-ஆம் ஆண்டில் நிறுவினார் ராதாநாத் சிக்தார். அவருடைய ஆய்வின்படி XV சிகரத்தின் உயரம் 29,000 அடி (8839 மீ). இந்தக் கண்டுபிடிப்பை 1856-ஆம் ஆண்டில் வெளியிட்டார் கர்னல் வாஹ். அப்போது முழு எண்ணாக இருக்கிறது என்பதால் 2 அடியைச் சேர்த்து 29,002 அடி (8840 மீ) என்று வெளியிட்டார் .
கூடவே இந்த ஆய்வைத் தொடங்கிவைத்த ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பெயரையே சிகரத்துக்குச் சூட்டினார். நேபாள எல்லைக்குள் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தை நேபாளத்தில் சாகர் மாதா என்றும் திபெத்தில் சோமோலுங்கமா என்றும் சீனாவில் கோமோலங்க்மா என்றும் வெவ்வேறு பெயரில் அழைக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக எவரெஸ்ட்டுக்கு ராதாநாத் சிக்தாரின் பெயரைச் சூட்டவேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
எவரெஸ்ட் சிகரம் வளர்கிறதா
1955-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்திய அரசின் நில அளவை ஆய்வில் மறுகணக்கீடு செய்யப்பட்டபோது எவரெஸ்ட்டின் உயரம் 29,029 அடியாக (8848 மீ) இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி, ஆயிரக்கணக்கான மலையேற்றச் சாதனையாளர்களின் தரவுகள், சிகரத்தை அடையக் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு பாதைகள் ஆகியவற்றின் உதவியால் 2020-ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8849 மீ என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். சிகரம் ஒவ்வொரு வருடமும் 4 மில்லிமீட்டர் அளவுக்கு வளர்வதோடு கொஞ்சங்கொஞ்சமாக வடகிழக்கு திசையில் நகர்கிறது.
2015-ஆம் ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இமயமலைத் தொடரின் ஒரு சில பகுதிகள் ஒரு கிலோமீட்டர் வரையிலும் நிலத்துக்குள் புதைந்து உயரம் குறைந்தது என்றும் வேறு சில பகுதிகள் மேலெழும்பின என்றும் கூறப்படுகிறது. இது புவி மேலோட்டு இயக்கத்தின் இயல்பான செயல்பாடு என்று கூறப்படுகிறது.
மலைமேல் கடல்வாழ் உயிரினத்தின் புதைபடிவம்
சொல்லப்போனால் இமயமலைத் தொடரே புவி மேலோட்டு இயக்கத்தினால் உருவானது என்கிறார்கள் புவியியலாளர்கள். மிகச் சமீபத்தில் உருவான இளம் மலைத்தொடர் இது. சுமார் அறுபத்தைந்து மில்லியன் வருடங்களுக்கு முன்னர், இந்திய-ஆஸ்திரேலிய புவித் தட்டுகள் வடக்குநோக்கி நகர்ந்து யூரேஷியன் புவித் தட்டுக்கு அடியில் நுழைந்தபோது ஏற்பட்ட தாக்கத்தால் மேலெழுந்த பகுதிதான் இமயமலைத் தொடர்.
இது பெரும்பாலும் மடிப்பு மலைகளால் ஆனது என்றாலும் சில பகுதிகள் கடலுக்கடியில் இருக்கும் படிவுப் பாறைகளால் ஆனவை. இரண்டு புவித் தட்டுகளும் ஒன்றோடொன்று மோதியபோது டெதிஸ் கடலின் படுகை மேலே எழுந்தது. இந்தப் புவி இயக்கத்திற்குச் சாட்சியாக இப்போதும்கூட கூழாங்கற்கள், கிளிஞ்சல்கள், கடல்வாழ் உயிரினங்களின் புதைபடிவங்கள் போன்றவை இமயமலைத்தொடரில் கண்டெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக நேபாளத்தில் இருக்கும் காலீ கண்டகி ஆற்றில் அம்மோனைட்ஸ் என்றழைக்கப்படும் ஓடுகளைக் கொண்ட கடல்வாழ் உயிரினங்களின் புதைபடிவங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை விலா எலும்புகளைக்கொண்ட சுருள்வடிவ முதுகெலும்போடு இருப்பதால் சுமார் 240 முதல் 265 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஜுராஸிக் காலத்தில், கடலில் வசித்திருக்கக்கூடும் என்பது புவியியலாளர்களின் கருத்து. இந்த அம்மோனைட்ஸ் புதைபடிவங்களை விஷ்ணுவின் பல வடிவங்களில் ஒன்றான சாளக்கிராமம் என்று நம்பிக்கையோடு இந்துக்கள் வழிபடுகிறார்கள். இவற்றோடு கூடவே இங்கே காணப்படும் மரங்கள் செடிகள் ஆகியவற்றின் புதைபடிவங்களும் புவித் தட்டுகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட காலத்தையும் இமயமலைத்தொடர் உருவான சமயத்தையும் கணிக்கப் பயன்படுகின்றன.
ஷெர்பாக்களும் மலையேற்றமும்
இமயமலையில் ஏறுபவர்கள் யாரும் ஷெர்பாக்களின் உதவி இல்லாமல் அதைச் செய்யமுடியாது. பனி மலையில் வசிக்கும் ஷெர்பா இனத்தவர்கள் நேபாளம், சிக்கிம் மற்றும் திபெத்திய நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் ஷெர்பா மொழி திபெத்திய மொழியோடு நெருங்கிய தொடர்புள்ளது. சிலர் நேபாள மொழியையும் பேசுகிறார்கள். மலையேற்றத்தில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களோடு பழகுவதால் இப்போது பல்வேறு மொழிகளையும் கற்றுக்கொண்டுவிட்டார்கள். ஷெர்பாக்கள் இமயமலையையும் அதன் சிகரங்களையும் கடவுளாக நினைத்து வழிபடுவதால் 20-ஆம் நூற்றாண்டு வரையில் மலையேறவேண்டும் என்று நினைத்ததில்லை. அதற்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் மலையேற்றத்தில் ஈடுபடுத் துவங்கினர்.
ஷெர்பாக்கள் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 60 முதல் 70 கிலோ எடையுள்ள மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு மலையில் ஏறி இறங்குகிறார்கள். தங்கள் உடல் எடையைவிடவும் 90 முதல் 125 சதவீதம் வரை அதிக எடைகொண்ட மூட்டைகளைச் சுமந்துகொண்டு பல ஆயிரம் அடி உயரமான மலைப்பகுதியில் எந்தவிதமான சிரமமுமின்றி நடக்கிறார்கள். நடக்கும் விதத்திலோ மூட்டைகளைச் சுமக்கும் விதத்திலோ எந்த வித்தியாசமும் இல்லை. இருந்தாலும் இது எப்படிச் சாத்தியமாகிறது என்பது பற்றி ஆய்வு செய்தனர் அறிவியலாளர்கள்.
சமவெளியில் வசிப்பவர்கள் கடல்மட்டத்தில் இருந்து உயரமான இடங்களுக்குப் பயணம்செய்யும்போது உடல் அதிக அளவில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகிறது. அப்போது உடலில் இருக்கும் இரத்தம் கெட்டியாவதால் இதயம் வழக்கத்தைவிட அதிகமாகச் சுருங்கி விரிகிறது. அதனால் தலைசுற்றல், குமட்டல், அயர்ச்சி போன்றவை ஏற்படுகின்றன. ஆனால் ஷெர்பாக்களின் உடல்தசை அணுக்களில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா அதிகளவு உயிர்வளியை ஆற்றலாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளன. இன்னும் சில சமயங்களில் உயிர்வளியே இல்லாதபோதும் அவை ஆற்றலை உருவாக்குவதாகச் சொல்கிறார்கள்.
ஷெர்பாக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக உயரமான மலைப்பகுதியில் வசிப்பதால் இவர்களின் உடலில் இருக்கும் டி.என்.ஏ.-க்கள் வியக்கத்தக்க வகையில் மாறுதல் அடைந்திருக்கின்றன. இதனால் உயிர்வளி குறைந்த அளவில் இருந்தாலும் அதை நன்றாக உள்ளிழுத்துக்கொள்ளவும் உடல் தசைகளுக்கு அதிகளவில் உயிர்வளியைச் சேர்க்கவும் முடிகிறது என்று மரபணு மற்றும் உடலியங்கியல் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
சிகரம் ஏறும் சிங்கப் பெண்கள்
இருபது வயது முடிவதற்குள் உலகின் பெரும்பாலான கண்டங்களில் இருக்கும் சிகரங்களில் ஏறிய இளம்பெண்ணைத் தெரியுமா? இந்தியாவைச் சேர்ந்த பூர்ணா மலாவத் தான் அந்தச் சாதனையைப் படைத்தவர். தெலுங்கானா மாவட்டத்தின் பகலா என்ற ஊரைச் சேர்ந்த தேவிதாஸ், லட்சுமி என்ற பழங்குடி இனத் தம்பதியருக்கு 2000-ஆம் ஆண்டில் பிறந்தவர் பூர்ணா. எளிய சமூகப் பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வியைத் தருவதற்கான தெலுங்கானா சமூகநலக் குடியிருப்புக் கல்வி நிலையத்தில் சேர்ந்தது அவர் வாழ்க்கைப் பாதையை மாற்றியது. சத்தான உணவு, கல்வி இவற்றோடு பாறை ஏற்றப் பயிற்சியும் கொடுக்கப்பட்டது. இங்கு பயிற்சிபெற்ற அடுத்த ஒரு ஆண்டிலேயே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் வாய்ப்பைப் பெற்றார்.
2014-ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது பூர்ணாவின் வயது 13 வருடமும் 11 மாதமும் மட்டுமே. உலகிலேயே மிகச் சிறிய வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பெண் என்ற சாதனையையும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் ஒருங்கே படைத்தார்.
அடுத்தடுத்த வருடங்களில் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ, ஐரோப்பாவின் எல்பிரஸ், தென் அமெரிக்காவின் அகங்காகுவா, ஓஷியானாவின் கார்ட்ஸ்னெஸ், அண்டார்டிகாவின் வின்சன் மாஸிஃப் என ஆறு கண்டங்களில் இருக்கும் சிகரங்களில் ஏறி வெற்றிவாகை சூடியிருக்கிறார். அடுத்து வட அமெரிக்காவின் டெனாலி சிகரத்தில் ஏறுவதற்கான பயிற்சியைச் செய்துவருகிறார். இவருடைய சாதனைகளுக்காக ஃபோர்ப்ஸ் தரவரிசைப் பட்டியலின் சுயமுயற்சியால் உயர்ந்த பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
உலகில் இருக்கும் ஏழு முக்கிய சிகரங்களில் ஏறி இந்திய நாட்டின் கொடியைப் பறக்கவிட்ட இன்னொரு பெண்ணின் பெயர் அருணிமா சின்ஹா. உலகிலேயே இப்படி ஒரு சாதனையைப் படைத்த முதல் உடலுறுப்புத் துண்டிக்கப்பட்ட மனிதர் என்ற பெருமையைப் பெற்றவர்.
அருணிமா தேசிய அளவில் கைப்பந்து, கால்பந்து விளையாட்டுக்களில் பங்குபெற்ற விளையாட்டு வீரர். அவரது இளவயது கனவு இந்தியத் துணை இராணுவத்தில் சேருவது. 2011-ஆம் ஆண்டில் அந்தக் கனவை நனவாக்குவதற்காக டெல்லிக்குப் புறப்பட்டபோது அந்தப் பயணம் அவர் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அந்த இரயில் பயணத்தில் கொள்ளையர்கள் அருணிமாவை இரயிலில் இருந்து கீழே பிடித்துத் தள்ளியபோது எதிர்ப்புறத்தில் வந்த இன்னொரு இரயில் அவரது இடது காலைத் துண்டித்தது. அதற்கான சிகிச்சையையும் இழப்பீட்டுத் தொகையையும் பெறுவதற்குள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டார் என்பது தனிக்கதை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே எவரெஸ்ட் சிகரத்தை ஏறியே தீருவேன் என்று சபதமிட்டார். அதற்கான முறையான பயிற்சிகளை மேற்கொண்டு 2013-ஆம் ஆண்டு மே 21-ஆம் நாள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். 2019-ஆம் ஆண்டுக்குள் வெவ்வேறு கண்டங்களில் இருக்கும் ஏழு சிகரங்களில் ஏறிமுடித்தார். அருணிமாவின் கதையைப் படித்தபோது உடல் சிலிர்த்துப் போனது.
சாதனை படைக்கும் இளம் இந்தியர்கள்
வாய்ப்பும் ஊக்கமும் ஆதரவும் இருந்தால் எவரும் சாதனை படைக்கலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்த இரண்டு பெண்களின் வாழ்க்கைக் கதை. பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, ஹாக்கி வீரர்களான ராணி ராம்பால், வந்தனா கட்டாரியா, துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்த தீபிகா குமாரி இவர்கள் அத்தனை பேரின் வாழ்க்கையும் நமக்கு அதைத்தான் சுட்டுகிறது. எளிய சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட பெண்கள் விளையாட்டுக்களில் பயிற்சிபெற்று முன்னிலை வகிக்கும்போது மற்ற பெண்களுக்கும் வழிகாட்டியாகிறார்கள். ஒரு ஊரில் ஒரேயொரு பெண்ணின் நிலை உயர்ந்தாலும் அவர் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான முன்னேற்றப் பாதையை வகுத்துக்கொடுக்கிறார்.
தீபிகா குமாரியைப் பற்றிய செய்திப்படத்தை நெட்ஃபிளிக்ஸில் பார்த்தபோது ஒன்றைத் தெரிந்துகொண்டேன். இந்தப் பெண்களை உலகமே தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினாலும் இவர்கள் வசிக்கும் ஊர்களில் அவதூறு பேசுகிறார்கள், சாதியைச் சொல்லி ஒதுக்குகிறார்கள், எதிர்ப்புக் காட்டுகிறார்கள், அரசு இயந்திரம் பயிற்சிக்கான வசதிகளைச் தக்க முறையில் சரியான நேரத்தில் செய்துதருவதில்லை ⎯ இப்படிப் பல முட்டுக்கட்டைகள். இத்தனையையும் தாண்டி இந்தியாவின் பிரதிநிதியாக உலக அரங்கில் விளையாடிவிட்டு வருவதே பெரும் சாதனை.
“ஒரு குழந்தையை வளர்த்தெடுக்க ஒரு கிராமமே உழைக்கவேண்டும்” என்கிறது ஆப்பிரிக்கப் பழமொழியொன்று. பதக்கம் வெல்லவில்லை, சாதனை படைக்கவில்லை என்று எவரையும் நோக்கி விரல்களை நீட்டுவதற்கு முன்னால் நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகளை மறந்துவிடக்கூடாது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
- நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
- வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
- மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
- குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
- ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
- நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
- நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி
- நாம் வாழும் காலம் - 15 : வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
- கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி
- வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
- பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி
- மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
- நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
- மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி
- மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி
- உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி
- வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
- மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி
- பழங்களின் அரசனின் பயணக் கதைகள் : கார்குழலி
- வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி
- நாம் வாழும் காலம் : கார்குழலி