நாம் வாழும் காலம் – 5

ஒரு வருடமாக எதிர்பார்த்துக் காத்திருந்த டோக்கியோ-2020 ஒலிம்பிக்ஸ் போட்டி ஒரு வழியாக ஜூலை மாத இறுதியில் துவங்கி ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவடைந்தது. எந்த வருடத்தையும்விட டோக்கியோ-2020-இல் அதிகப் பதக்கங்களை வென்றனர் இந்திய வீரர்கள். முதல் பதக்கத்தை வென்ற பஜ்ரங் புனியாவைப் பாராட்டினோம். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றதை ஆரவாரத்துடன் கொண்டாடினோம். மீராபாய் சோனு, லவ்லீனா போர்கோஹைன், பி. வி. சிந்து என வரிசையாகப் பெண்கள் வெற்றிபெற்றதைச் சிலாகித்தோம். மல்யுத்த வீரர் ரவி தாஹியா பதக்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டியபோது மகிழ்ந்தோம். நாற்பது வருடங்கள் கழித்து ஆண்கள் ஹாக்கிக் குழு வென்ற வெண்கலப் பதக்கத்தைப் பாராட்டிய கையோடு பெண்கள் ஹாக்கிக் குழு வெற்றியை எட்டமுடியாதபோது அவர்களுடன் சேர்ந்து நாமும் அழுதோம். பதக்கம் வெல்லமுடியாதபோது ஒடுக்கப்பட்டவர்களை எள்ளி நகையாடியவர்களையும் அவர்களின்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டவர்களையும் வெகுண்டெழுந்து கண்டித்தோம். இன்னும் சிலர் வெற்றிக்கு மிக அருகில் முன்னேறிச் சென்று தவறவிட்டதையும் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்னோம்.

ஒரு வகையில் இக்கட்டான கோவிட்-19 தொற்றுக்காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றது களைத்தவனுக்குக் கிடைத்த தேநீரைப்போலப் புத்துணர்ச்சியூட்டியது. விளையாட்டில் நம் நாட்டு இளைஞர்களுக்கு வளர்ந்து வரும் ஆர்வம் ஊக்கமூட்டுகிறது. ஒலிம்பிக் நடைபெற்ற இந்த இரண்டு வார காலத்தில்தான் எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை நிகழ்வுகள், எத்தனை உணர்வுக் கலவைகள் – அவற்றில் இருந்து நமக்கு எத்தனை எத்தனை பாடங்கள். இதுபோன்ற சம்பவங்களை ஏற்கனவே பார்த்தோ கேட்டோ படித்தோ இருப்போம் என்றாலும் உலகமுழுவதும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டியில் நிகழ்வது எல்லோரின் மனதிலும் ஒரே நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

புலம்பெயர்ந்தவர்களின் விளையாட்டுக் குழு

உள்நாட்டுப் போரினால் தாய்மண்ணைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 20.7 மில்லியன் என்கிறது ஒரு புள்ளிவிவரக் கணக்கு. இப்படிப் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் குழுவொன்று முதன்முதலில் ரியோ-2016 ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டது. டோக்கியோ-2020 போட்டிகளில், 11 நாடுகளைச் சேர்ந்த 29 பேர் கொண்ட குழு கலந்துகொண்டது.

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் தத்தம் நாட்டின் பிரதிநிதியாக இருப்பதோடு தங்கள் நாட்டுக் கொடியைச் சின்னமாகக் கொள்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் குழுவுக்கு ஒலிம்பிக் சின்னத்தைக் கொண்ட கொடியைத் தரலாம் எனப் பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் கூட்டமைப்பு முடிவுசெய்தது. குழுவின் உறுப்பினர்கள் பெரும்பாலும் மத்திய கிழக்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் இரத்தத்தில் எழுதப்பட்ட துயரப் பின்னணியைக் கொண்டவர்கள்.

பல வருடங்களாக உயர்தர விளையாட்டுக் கூடங்களில் பயிற்சிசெய்யும் முதல்நிலை ஆட்டக்காரர்களோடு போட்டியிட்டு வெற்றிபெறுவதல்ல இவர்களின் நோக்கம். உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு சிறிய முயற்சி மட்டுமே இது. வாழ்வில் பல கொடுமைகளைச் சந்தித்தவர்களுக்கு வலியை ஆற்றிக்கொள்ளும் வடிகாலாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்தக் குழுவை அமைத்தோம் என்கிறது பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் கூட்டமைப்பு. “தடகளத்தில் ஓடுவது என் வலிக்கு மருந்தாக இருக்கிறது. ஓடும்போது நான் அமைதி கொள்கிறேன்,” என்கிறார் தெற்கு சூடானைச் சேர்ந்த ஓட்டக்காரர் ஒருவர். கென்யாவில் இருக்கும் விளையாட்டு மையம் ஒன்றில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ரியோ-2016-இல் ஓட்டப் பந்தயத்தில் மட்டும் பங்குகொண்ட விளையாட்டு வீரர்கள், டோக்கியோ-2020-இல் 12 விளையாட்டுக்களில் பங்குபெற்றனர்.

பெண் விஞ்ஞானிகளும் விளையாட்டு ஆர்வமும் 

புலம்பெயர்ந்தவர்களைப் போலவே மற்றுமொரு வித்தியாசமான எழுவர் குழுவொன்றும் டோக்கியோ-2020-இல் கவனத்தைப் பெற்றது. இந்த ஏழு பேரும் விஞ்ஞானிகள், விளையாட்டில் ஆர்வம்கொண்டவர்கள், பெண்களும்கூட.

  • ஆஸ்திரியாவைச் சேர்ந்த அன்னா கீசன்ஹோஃபர் பெண்களுக்கான தொலைதூர சைக்கிள் ஓட்டும் பந்தயத்தில் தங்கம் வென்றார், இவருக்குப் பயிற்சிதரத் தொழில்முறை சார்ந்த பயிற்சியாளரோ நிதி ஆதரவாளரோ இல்லை என்பது சிறப்புத் தகவல். சுவிட்சர்லாந்தில் உள்ள தொழில்நுட்பப்  பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகவும் பேராரிசியராகவும் பணிபுரிகிறார்.
  • அமெரிக்காவின் கேபி தாமஸ், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம் வென்று உலகின் மூன்றாவது வேகமான பெண் என்ற சிறப்பைப் பெற்றார். நரம்பு உயிரியல் குறித்த பட்டப்படிப்பை முடித்துவிட்டுத் தற்போது தொற்றுநோயியலில் மேற்படிப்பைப் பயில்கிறார்.
  • ஜெர்மனியைச் சேர்ந்த நதைன் அபெட்ஸ் ஒலிம்பிக்ஸுக்குத் தேர்வுபெற்ற முதல் ஜெர்மானியப் பெண் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தன்னுடைய 21-வது வயதில்தான் குத்துச்சண்டைப் பயிற்சியைத் துவக்கினார். நரம்பறிவியலில் பட்டம்பெற்று பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை தருவது குறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.
  • எகிப்தைச் சேர்ந்த ஹாதியா ஹோஸ்னி ஒரு பேட்மிண்டன் வீராங்கனை, டோக்கியோவில் பதக்கம் வெல்லாவிட்டாலும் பன்னாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடியவர். மருந்தியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராகப் பணிபுரியும் இவர் எகிப்து நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினரும்கூட.
  • ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங் விளையாட்டில் கலந்துகொண்ட ஃபிரான்ஸின் ஷார்லட் ஹிம் நரம்பறிவியல் துறையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.
  • அயர்லாந்தைச் சேர்ந்த லூயிஸ் ஷானஹான் ஒரு தடகள வீராங்கனை. பாரிஸ்-2024 போட்டிக்குத்தான் தயார்செய்துகொண்டு இருந்தார். எதிர்பாராதவிதமாக டோக்கியோ-2020-இல் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச்சுற்றில் தேர்ச்சி பெற்றார். குவாண்டம் இயற்பியல் துறையில் பட்டம்பெற்ற இவர், தற்போது முனைவர் பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.
  • இஸ்ரேலின் ஆண்ட்ரியா முரேஸ் ஒரு நீச்சல் வீராங்கனை. 50, 100, 200 மீட்டர், மற்றும் தொடர் நீச்சல் போட்டிகளில் பங்குபெற்றார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையில் பணியாற்றுகிறார்.

விளையாட்டு வீரர்களின் உளவியல் ஆரோக்கியமும் பாலினம் தாண்டிய அங்கீகாரமும் 

ஒரு பக்கம் ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாகாவும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸும் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சமூக உளவியல் அழுத்தங்களைப் பற்றியும் அதனால் ஏற்படும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த சீர்கேடுகளைப் பற்றியும் டோக்கியோ-2020-இல் வெளிப்படையாகப் பேசினார்கள். இதில் சிமோன் பைல்ஸ் தொடர்ச்சியாகப் பாலியல் வன்முறைக்கு ஆளானவரும்கூட. முதல்நிலை ஆட்டக்காரர்கள் எந்தவிதமான உணர்ச்சியுமற்ற தங்கப் பதக்கங்களை மட்டுமே வென்று தரும் இயந்திரங்களாக நடத்தப்படுவது தவறு என்று சுட்டினார்கள். விளையாடி முடித்ததும் ஊடகங்களுக்குப் பேட்டி தரும் கட்டாய வழக்கத்தையும் நயோமி ஒசாகா எதிர்த்தார்.

இன்னொரு பக்கம் பல்வேறு பாலின அடையாளங்களையும் பாலியல் ஈர்ப்புகளையும் கொண்ட வீரர்கள் அதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த முனைந்தார்கள். தங்களின் பாலின அடையாளத்தை மாற்றிக்கொண்ட திருநங்கைகளும் திருநம்பிகளும் அதிக அளவில் பங்குகொண்ட ஒலிம்பிக் போட்டி என்ற பெருமையைப் பெற்றது டோக்கியோ-2020.

இங்கிலாந்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் டாம் டேலியும் அமெரிக்காவைச் சேர்ந்த இரும்புக்குண்டு வீசும் விளையாட்டு வீராங்கனை ரேவன் சாண்டெர்ஸும் தங்களின் ஓர் பாலின ஈர்ப்பை அவமானகரமான விஷயமாகக் கருதாமல் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டனர். “இதற்காக இளவயதில் தனிமைப்படுத்தப்பட்டேன், இனி வரும் தலைமுறையினருக்கு அது நடக்கக்கூடாது,” என்றார் டாம் டேலி.

லாரல் ஹப்பர்ட் நியூஸிலாந்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை, செல்சியா வுல்ஃப் அமெரிக்காவின் சைக்கிள் பந்தய வீராங்கனை – இவர்கள் இருவரும் ஒலிம்பிக் பந்தயத்தில் பங்குபெற்ற முதல் திருநங்கைகள் என்ற பெருமையைப் பெற்றார்கள். அலானா ஸ்மித் அமெரிக்காவின் ஸ்கேட்போர்ட் வீராங்கனை, குவின் கனடா நாட்டின் கால்பந்து வீராங்கனை. இவர்களில் குவின்னுடைய கால்பந்து குழு தங்கப் பதக்கத்தை வென்றது கூடுதல் சிறப்பு.

ஆடை வடிவமைப்பில் பெண்ணியம்

உடைசார்ந்த விஷயத்தில் பெண்கள் தங்களுடைய விடுதலையை நிலைநாட்டிக்கொள்ளும் களமாகவும் இருந்தது டோக்கியோ-2020. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் பங்குபெறும் ஆண்கள் முழுக்கால் சட்டைகளை அணிவார்கள். ஆனால் பெண்களோ காலின் மேல்பகுதிவரை தெரியும் ஆடைகளை அணிந்திருப்பார்கள். இதை எதிர்த்துக் குரல் எழுப்பியதோடு கணுக்கால் வரை நீண்ட உடைகளை அணிந்துகொண்டார்கள் ஜெர்மானியப் பெண் வீரர்கள். இவர்கள் ஏற்கனவே ஐரோப்பாவின் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த ஆடைப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர்கள் என்பதைக் குறிப்பிடவேண்டும்.

போட்டியில் பங்குபெறும்போது உடை சுருண்டுகொள்ளும் என்பதால் இழுத்துவிட்டுக்கொண்டே இருப்போம். மாதவிடாய்க் காலத்தில் இன்னும் பல சங்கடங்கள். இதனால் விளையாட்டின்மீது கவனத்தைக் குவிக்கமுடியாது. தினசரிப் பயிற்சியின்போது முழுநீளக் கால்சட்டைகளைத்தான் அணிகிறோம், போட்டிகளிலும் அதை ஏன் பின்பற்றக்கூடாது. தற்போதைய உடையினால் பல பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறார்கள். இனி அவர்கள் கவலையின்றி விளையாட்டிலும் போட்டியிலும் பங்குகொள்ளவேண்டும் என்கிறார் இந்த ஆடைப்புரட்சியை முன்னெடுத்த ஜெர்மானிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சேரா வோஸ்.

இளம் போட்டியாளர்களின் நட்புறவு  

டோக்கியோ 2020-யில் பங்குபெற்ற சிரியாவின் ஹெண்ட் ஸாஜா மேசைப்பந்து விளையாட்டு வீராங்கனை. 12 வயதுதான் ஆகிறது. உள்நாட்டுப் போரால் சீர்குலைந்து போயிருக்கும் நாட்டில் இருந்து முளைத்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவீசுகிறார்.

தண்ணீருக்குள் பாயும் டைவிங் போட்டியில் சீனாவின் 14 வயது சுவன் ஹோன் சான் முந்தைய ஒலிம்பிக் சாதனைகளை முறியடித்து தங்கம் வென்றார்.

பெண்களுக்கான ஸ்கேட்போர்ட் ஸ்ட்ரீட் போட்டியில் பதக்கம் வென்ற மூன்று வீராங்கனைகளும் 13 முதல் 16 வயது வரையிலான பதின்வயதினர். மற்றுமொரு ஸ்கேட்போர்ட் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்ற ப்ரிட்டனைச் சேர்ந்த ஸ்கை பிரவுனின் வயது 13. விளையாட்டில்தான் எங்களுக்கிடையே போட்டியே தவிர மற்றநேரங்களில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்கிறார்கள் இவர்கள் அனைவரும். போட்டியில் தோற்ற வீராங்கனை ஒருவரை எல்லோரும் ஒன்றுசேர்ந்து தேற்றியது மனதை நெகிழச்செய்தது.

வயதில் மூத்த போட்டியாளர்கள் 

இதையெல்லாம் படித்துவிட்டு பதின்வயதினரும் இளைஞர்களும் மட்டுமே ஒலிம்பிக்ஸில் பங்குகொள்கிறார்கள் என்ற முடிவுக்கு வரவேண்டாம். வயதில் மூத்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்குபெற்ற ஒலிம்பிக்ஸும் இதுதான்.

ஒலிம்பிக்ஸில் பங்குபெற தனிப்பட்ட வயதுவரம்பு இல்லை. ஒவ்வொரு விளையாட்டுக்கும் இருக்கும் விதிமுறையைத்தான் பின்பற்றுகிறோம் என்கிறது பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் கூட்டமைப்பு. இதனால்தான் ஸ்கேட்போர்ட் விளையாட்டில் ஒரே போட்டியில் 12 வயதான ஜப்பானியரான கோகோனா ஹிராகியும் 46 வயதான ரூன் கிளிஃப்பெர்கும் பங்குபெற முடிந்தது.

  • டோக்கியோ 2020-இல் பங்குபெற்ற வீரர்களில் அதிக வயதானவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குதிரையேற்ற வீரரான 66 வயதான மேரி ஹான்னா. இது அவருடைய ஆறாவது ஒலிம்பிக்ஸ் போட்டி. அடுத்து பாரிஸ் 2024-இலும் பங்குபெறப்போவதாகச் சொல்கிறார்.
  • இதுவரை ஒன்பது ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குகொண்ட ஒரே பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்   ஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்த நீனோ சாலுக்வாட்ஸே, விளையாட்டுத் துப்பாக்கி சுடும் வீராங்கனை.  இவருடைய மகன் ட்சோனே மகவாரியனி கைத்துப்பாக்கி சுடும் வீரர். ஒரே ஒலிம்பிக்ஸில் முதல்முறை அம்மாவும் மகனுமாக இரண்டு விளையாட்டு வீரர்கள் பங்குபெற்றது இதுதான் முதல் தடவை. இத்தோடு  போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்திக்கொள்ளலாம் என்று முடிவுசெய்திருக்கும் அம்மாவை பாரிஸ்-2024 ஒலிம்பிக்ஸிலும் பங்குபெறச் சொல்லி வற்புறுத்துகிறார் மகன். அவர் வார்த்தை எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
  • ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பெரும்பாலும் இளவயதினரே பங்குபெறுகின்றனர். வயதானால் உடலின் வளைந்துகொடுக்கும் தன்மை குறைவதால் வெற்றிவாய்ப்புக் குறைவு. 13 வயதில் சோவியத் ஒன்றியத்தின் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர் ஒக்ஸனா சுஸோவிடினா. தற்போது 46-வது வயதில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சார்பில் டோக்கியோ-2020-இல் எட்டாவது ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டார். இத்துடன் பன்னாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் பங்குபெறுவதில்லை என்று முடிவு செய்திருக்கும் ஒக்ஸனாவுக்குக் கண்ணீர்மல்க விடைகொடுத்தனர் இரசிகர்கள்.
  • புற்றுநோயினால் ஒரு பக்க நுரையீரலை அறுவைசிகிச்சையில் அகற்றிய பிறகும் பாய்மரக் கப்பல் பந்தயத்தில் கலந்துகொண்ட அர்ஜென்டினாவின் 59 வயது சாண்டியாகோ ரவுல் லாங்கே இடையறா ஊக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

இவர்களைப்போல இன்னும் பல வயதில் மூத்த விளையாட்டு வீரர்கள் பங்குகொண்டனர். கூடவே மருத்துவத் துறையில் முன்களப் பணியில் மருத்துவர்களாகவும் செவிலியராகவும் மற்ற பணிகளையும் செய்பவர்களும் இந்த ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றனர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்கத்தில் ஜீயஸ் என்ற கடவுளர்களின் தலைவனின் புகழைப் போற்றுவதற்காகத்  துவங்கியதாகச் சொல்லப்படும் இந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று மனிதர்கள் ஒருவரோடு நேசத்தோடும் நட்போடும் மரியாதையோடும் பழகும் களமாக மாறிவருகிறது.  இளைஞர்களின் அறிவும் திறனும் ஊக்கமும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மனிதநேயமும் நற்பண்பு சார்ந்த வலிமையும் இந்த உலகின்மீதும் மனிதகுலத்தின்மீதும் நம்பிக்கைகொள்ள வைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தங்களின்மீது அவர்கள் சொரிந்துகொள்ளும் தன் அன்பு அல்லது செல்ஃப் லவ் (self-love) வியப்பூட்டுகிறது. அடுத்தவரின் அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் கொண்டிராமல் தங்களின்  தனித் தன்மைகளை முதலில் தாங்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்களைப் பார்க்கும்போது வருங்காலம் ஒளிபொருந்தியதாக இருக்கும் என்ற நம்பிக்கை சுடர்விடுகிறது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
  2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
  3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
  4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
  5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
  6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
  7. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
  8. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
  9. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
  10. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
  11. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
  12. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
  13. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
  14. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
  15. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
  16. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
  17. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
  18. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
  19. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
  20. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
  21. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
  22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
  23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
  24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
  25. நாம் வாழும் காலம் : கார்குழலி