நாம் வாழும் காலம் – 13
சென்ற வாரம் அமெரிக்காவில் உள்ள யூடா மாகாணத்தின் காடுகளின்மீது பறந்துசென்ற டிரோன் ஒன்று படம்பிடித்த காணொளியைச் சமூக இணையத்தில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலையுதிர் காலத்தில் பல மரங்களின் இலைகள் இயற்கையாகவே மஞ்சள், பழுப்பு, ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என வெவ்வேறு வண்ணங்களைப் பெறுவது எத்தனை வியப்பான விஷயம். பார்ப்பதற்கு வானவில்லின் ஏழு வண்ணங்களும் அவற்றின்மீது தெறித்துச் சிதறியதுபோல இருந்தது.
மழைபெய்து முடிந்து வெயில் அடிக்கும்போது அவசர அவசரமாக வெளியே ஓடிப்போய் வானவில் தெரிகிறதா என்று வானத்தை ஆராய்ச்சி செய்வோம் அல்லவா. அந்த வானவில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என ஏழு நிறங்களால் ஆனது. ஆங்கிலத்தில் நிறங்களின் பெயர்களின் முதல் எழுத்தைக் கொண்டு VIBGYOR என்று குறிப்பிடுவார்கள் எனப் பள்ளியில் படித்திருப்போம். உண்மையில் வானவில்லில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான வண்ணங்கள் இருக்கின்றன. என்ன ஒன்று, அவை நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. இயற்கையில் கொட்டிக்கிடக்கும் வண்ணங்கள் நம் எண்ணத்துக்கும் எட்டாதவை.
வானவில் நிறப்பிரிகை என்ற அறிவியல் நிகழ்வால் உருவாகிறது. காலை, நண்பகல், பின் மதியம் என எந்த நேரத்திலும் தோன்றலாம் என்றாலும் பின் மதிய நேரத்தில் அதிகம் தோன்றுகிறது. பொதுவாகவே, பின் மதிய நேரத்தில் மழைப் பொழிவு அதிகம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் தொடுவானத்துக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 42 பாகை அல்லது அதற்கும் குறைவாக இருப்பதால் வானவில் தோன்றுவதற்கு தகுந்த சூழலை ஏற்படுத்துகிறது. குளிர் காலத்தில் இந்தக் கோணம் கொஞ்சம் மாறுபடும். இன்னொரு துப்பு: காலையில் மழை பெய்தால் வானவில்லை மேற்கில் தேடுங்கள், அதுவே மாலை என்றால் கிழக்குத் திசையில் பாருங்கள். ஏனெனென்றால் சூரியனுக்கு எதிர்த்திசையில் தான் வானவில் தோன்றும்.
வானவில் ஓர் ஒளியியல் கண்மாயம்
வளிமண்டலத்தில் இருக்கும் பனித்துளி, நீர்த்துளி அல்லது மழைத்துளிகளின் ஊடே சூரிய ஒளிக்கதிர்கள் கடக்கும்போது முழு அக எதிரொளிப்பு நடைபெற்று ஒளிப்பிரிகை அடைந்து வானவில் தோன்றுகிறது. எதிரொளிப்பு இரண்டு முறை ஏற்பட்டால் இரட்டை வானவில் தோன்றும். இரண்டாவது வானவில் பிரதான வானவில்லின் மேலே தோன்றும், நிறம் கொஞ்சம் மங்கலாக இருக்கும், நிறங்களின் வரிசையும் திருப்பிப் போட்டது போல இருக்கும். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வானவில் மட்டுமல்ல மூன்று, நான்கு வானவில் கூடத் தோன்றும். ஆனால் சூரியன் இருக்கும் திசையில் உருவாவதாலும் மங்கலாக இருப்பதாலும் நம்மால் பார்க்கமுடியாது. ஆய்வுக்கூடங்களில் 200 வானவில்கள் வரை எதிரொளிப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நம் கண்ணுக்கு அரைவட்ட வடிவ வளைவாகத் தெரிந்தாலும் வானவில் உண்மையில் வட்ட வடிவமானது. நிலத்தில் இருக்கும் நம்மால் தொடுவானத்துக்கு மேலே இருக்கும் வளிமண்டலத்தின் நீர்த்துளிகள் எதிரொளிக்கும் ஒளியை மட்டுமே பார்க்கமுடியும். வானவூர்தியில் பயணம் செய்யும்போதோ மலை ஏறும்போதோ முழு வட்ட வானவில்களைப் பார்க்கமுடியும். ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா? நிலவைப் போலவே வானவில்லும் நம் கூடவே நகர்வது போலத் தோன்றும். ஏனெனில் வானவில் தோன்றுவதற்குத் தேவையான ஒளி நாம் நிற்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்திலும் கோணத்திலும் இருக்கவேண்டும் என்பது அறிவியல் நியதி. இதே காரணத்தால்தான் வானவில் ஓர் ஒளியியல் கண்மாயமாகவும் இருக்கிறது.
இரவில் தோன்றும் சந்திர வானவில்
வானவில் உருவாக சூரிய ஒளி தேவை என்பதை திரும்பத் திரும்பப் படித்திருந்ததால் பகலில் மட்டுமே தோன்றும் என நினைத்திருந்தேன். இரவிலும் தோன்றும் என்பதையும் அது நிலவு வில் (moonbow) அல்லது c என்று அழைக்கப்படுவதையும் தெரிந்துகொண்டபோது வியப்பு ஏற்பட்டது. வளிமண்டலத்தில் இருக்கும் நீர்த்துளிகள் வழியாக நிலவின் ஒளி ஊடுருவும்போது சந்திர வானவில் உருவாகிறது.
சந்திர வானவில் முழுநிலவு நாளிலோ அல்லது கிட்டத்தட்ட முழுநிலவாக இருக்கும் நாளிலோ மட்டுமே தோன்றும். கூடவே வளிமண்டலத்தில் நீர்த்துளிகள் இருக்கவேண்டும் என்பதால் அதிகமாக மழைப்பொழிவு ஏற்படும் இடங்களிலும் வெப்பமண்டலப் பிரதேசங்களிலும் நீர்வீழ்ச்சிகள் இருக்கும் இடங்களிலும் பெரும்பாலும் இவற்றைக் காணலாம். வானவில்லில் இருக்கும் அத்தனை வண்ணங்களும் சந்திர வானவில்லிலும் இருக்கும். ஆனால் நிலவின் ஒளி மங்கலாக இருப்பதால் நம் கண்ணுக்குத் தெரியாது, வெண்ணிற ஒளி வட்டம் போலவே தோன்றும். ஆனால் வானவியலாளர்கள் எடுக்கும் நிழற்படங்களில் எல்லா வண்ணங்களும் தெளிவாகத் தெரியும் ஆச்சரியமும் உண்டு.
அறிவியலில் பலவிதமான வானவில்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள். சிவப்பு வானவில் ஒரேயொரு வண்ணத்தால் ஆனது. சூரியன் உதிக்கும் அல்லது மறையும் நேரத்தில் தோன்றுகிறது. இந்தச் சமயத்தில் சூரிய ஒளி வளிமண்டலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வதால் ஊதா மற்றும் நீல நிறங்கள் ஒளிச் சிதறலுக்கு உள்ளாகின்றன. இதனால் நீண்ட அலைவரிசை கொண்ட சிவப்பு வண்ணம் மட்டுமே இந்த வானவில்லில் தெரிகிறது.
பூமி மட்டுமில்லாமல் சனி கிரகத்தின் நிலவான டைட்டனிலும் வானவில் தோன்றலாம் என்கிறார்கள் வானவியலாளர்கள். டைட்டனின் மேற்பரப்பில் நீரும் ஈரப்பதம் கொண்ட மேகங்களும் இருப்பதோடு சூரியனின் ஒளியும் இருக்கிறது. வானவில் உருவாகத் தேவையான எல்லா காரணிகளும் இருப்பதால் இது சாத்தியம் எனக் கருதப்படுகிறது.
உலகிலேயே வானவில்லைப் பார்க்க சிறந்த இடம் எது தெரியுமா? வானவில் மாகாணம் என்று அழைக்கப்படும் ஹவாய் தீவு தான். இங்கிருக்கும் இயற்கைச் சூழலால் வருடமுழுவதும் வானவில்லைப் பார்க்கலாம். ஹவாய் மக்களின் கலை கலச்சாரம் மொழியோடு வானவில் பின்னிப் பிணைந்திருக்கிறது. உஅகோகோ, கஹிலி, புணாகி, அனூயேனூயே கௌ போ என ஒவ்வொரு விதமான வானவில்லுக்கும் தனிப்பெயர் இருக்கிறது என்றால் பாருங்கள்.
ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட வானவில்
இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அருகருகே நின்றாலும் எந்த இரண்டு பேரும் ஒரே வானவில்லைப் பார்ப்பதில்லை. நாம் பார்க்கும் வானவில்லின் நடுப்புள்ளி நம் கண்ணில் இருந்து சூரியன் வரை நீளும் கற்பனைக் கோட்டின் மீது அமைந்திருக்கும். நம் கண்ணும் நம் அருகே இருப்பவரின் கண்ணும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. எனவே நம் கண்ணுக்குத் தெரியும் வானவில் அவர் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவ்வளவு ஏன், நம்முடைய இரு கண்களுமே இரண்டு வெவ்வேறு வானவில்லைத்தான் பார்க்கின்றன.
ஓர் இயற்கை நிகழ்வில் எத்தனை ஆழமான வாழ்க்கைத் தத்துவம் பொதிந்திருக்கிறது. எனக்கே எனக்கான தனிப்பட்ட வானவில் ஒன்றை இயற்கை உருவாக்குகிறது என்றால் நான் எத்தனை சிறப்பானவள். எனக்கான தனிமனிதத் தத்துவத்தை உருவாக்கிக்கொள்வதோடு எனக்கான உலகைப் படைக்கும் திறனையும் ஆற்றலையும் பயன்படுத்துவது என் கடமையல்லவா.
வானவில் கொடிகள்
காலங்காலமாக வானவில் நிறத்தில் இருக்கும் கொடிகள் நம்பிக்கை, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றின் குறியீடாக இருக்கின்றன. தற்போது இவற்றோடு கூடவே வேற்றுமையையும் பல்வகைமையும் அகப்படுத்துவதைக் குறிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வித பாலின ஈர்ப்பு கொண்ட மக்களின் உரிமைக்கு ஆதரவு தரும் இயக்கத்தின் பதாகையாக இருக்கிறது. இதை ‘LGBT பெருமைக் கொடி’ என்று அழைக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களில் எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவரையும் பாலின ஈர்ப்பு கொண்டவரையும் நன்மதிப்போடும் கௌரவத்தோடும் நடத்துவதை நிறுவனத்தின் எல்லா நிலையிலும் நடைமுறைப்படுத்துவது முக்கியமான செயல்பாடாக இருக்கிறது. மேலை நாடுகளில் இது குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. இந்தியாவிலும் மெதுவாக ஆனால் உறுதியான மாற்றம் நிகழ்ந்து வருகிறது.
மற்றுமொரு வானவில் நிறக் கொடி பொலிவியா நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு கொடிகளில் ஒன்றாக இருக்கிறது. விபாலா என்று அழைக்கப்படும் சதுர வடிவ வானவில் கொடி ஆண்டிஸ் மலைத்தொடரை ஒட்டிய நிலப்பகுதியான இன்றைய பெரு, பொலிவியா, ஈக்வடார், அர்ஜென்டினா, சீலே, கொலம்பியா நாடுகளில் வசிக்கும் சில தொல்குடி இனங்களின் இலச்சினை ஆகும். இந்தக் கொடியில் ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு இனத்தைக் குறிப்பதாக இருக்கிறது.
உலகளாவிய புத்த மதத்தின் சின்னமாக 19-ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட வானவில் கொடி நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, இந்த ஐந்து வண்ணங்களின் கலவை என ஆறு வண்ணங்களால் ஆனது. புத்தர் ஞானம் பெற்றபோது அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட ஒளியில் இந்த வண்ணங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.
ரஷிய சீன எல்லைப் பகுதியில் இருக்கும் யூதர்களின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒப்லஸ்ட் மாகாணம் இஸ்ரேலுக்கு அடுத்தபடி யூதர்களுக்கான தனி வாழ்விடமாக இருக்கும் நாடாகும். இந்த மாகாணத்தின் ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில் கொடி மெனோரா எனப்படும் யூதர்களின் புனித மெழுகுவர்த்திக் தண்டில் இருக்கும் ஏழு கிளைகளைக் குறிக்கிறது.
புராணங்களிலும் வாழ்வியலிலும் வானவில்
மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட இயற்கை நிகழ்வுகளை வழிபடுவதும் வாழ்க்கையின்மீது அவை ஏற்படுத்தும் தாக்கத்தை கதைகளாகச் சொல்வதும் வழக்கம்தானே. உலகின் எல்லா இனம் மற்றும் கலாச்சாரங்களின் புராணக்கதைகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது வானவில். கிறிஸ்துவ கலாசாரத்தில் ஊழிவெள்ளத்துக்குப் பிறகு நல்ல காலம் பிறக்கப்போகிறது என்று நோவாவுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக எபிரேயக் கடவுள் வானத்தில் வானவில்லைத் தோன்றச் செய்தார். நம்பிக்கையின் சின்னமாக நல்ல காலம் வரப்போவதை அறிவிக்கும் குறியீடாகவும் அது விளங்கியது.
மனிதர்களையும் மேலுலகில் வசிக்கும் அளவிடற்கரிய ஆற்றல் கொண்ட தேவர்களையும் இணைக்கும் பாலமாகவும் கருதப்படுகிறது வானவில். உலகின் வடக்கு முனையில் இருக்கும் நார்வே ஸ்கேண்டினேவியா நாடுகளின் நார்ஸ் புராணத்தில் இந்த வானவில் பாலத்தை பைஃப்ராஸ்ட் என்று அழைக்கிறார்கள்.
ஜப்பானிலும் ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த கேபன் இனத்தவரிடையேயும் வானவில் நம் மூதாதைகள் பூமிக்கு வருவதற்குப் பயன்படுத்தும் இணைப்புப் பாலம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்தியில் வானவில்லுக்கு இந்திர தனுஷ் என்று பெயர். தேவர்களின் அரசனான இந்திரன் வானவில்லை வில்லாக ஏந்தி மின்னலை அம்புகளாக எய்கிறான் என்று நம்பப்படுகிறது.
வேறு சில கலாசாரங்களில் வானவில் எதிர்மறைக் குறியீடாகவும் இருக்கிறது. பர்மாவில் குழந்தைகளைப் பயமுறுத்தும் பூதங்களாக கருதப்படுகிறது. அமேசான் ஆற்றுப் பகுதியில் வசிக்கும் மக்கள் வானவில் தோன்றினால் வியாதிகள் பரவும் என்று கருதுகிறார்கள்.
அயர்லாந்து நாட்டில் வானவில்லின் கடைசியில் ஒரு பானை தங்கம் இருப்பதாகவும் அது வயதான குள்ளனால் பாதுகாக்கப்படுகிறது என்றும் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒருவருக்குத்தான் அது கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. வட்டவடிவமான வானவில் முடியும் இடத்தைக் கண்டுபிடிப்பது நடக்கும் விஷயமா என்ன? மேலும் அது ஓர் ஒளியியல் கண்மாயம் என்றால் அதைத் தேடுவதே வீணான வேலை தானே.
பல்கேரியாவில் நிலவும் ஒரு நம்பிக்கை கொஞ்சம் வித்தியாசமானது. வானவில்லுக்குக் கீழே நடந்து செல்லும் ஒருவரின் பாலினம் மாறிவிடுமாம். ஆணென்றால் பெண்ணாகவும் பெண்ணென்றால் ஆணாகவும் மாறிவிடுவார்களாம். கட்டுக்கதை என்றாலும் ஒருவரையொருவர் கேலி பேசவும் சீண்டி விளையாடவும் ஏதோ காரணம் தேவையல்லவா.
வானவில்லைப் பற்றிய வில்லியம் வேர்ட்ஸ்வர்த் என்ற கவியின் கவிதையை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:
“ஆகாயத்தில் வானவில்லைப் பார்த்ததும்
மனம் துள்ளிக் குதிக்கிறது:
வாழ்க்கையின் துவக்கத்தில் அப்படித்தான் இருந்தது;
வளர்ந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறது;
வயதானாலும் அப்படித்தான் இருக்கவேண்டும்,
முடியாதென்றால் இறந்துபோகிறேன்!
குழந்தையே மனிதனின் தந்தை;
நாட்கள் இப்படியிருக்க வேண்டுமென்பதே விருப்பம்
இயற்கையின் வழிபாட்டில்
ஒன்றோடொன்று கட்டுண்டிருக்க வேண்டும்.”
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
- நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
- வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
- மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
- குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
- ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
- நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
- நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
- நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி
- நாம் வாழும் காலம் - 15 : வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
- கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி
- பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி
- மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
- நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
- மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி
- மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி
- உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி
- வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
- வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
- மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி
- பழங்களின் அரசனின் பயணக் கதைகள் : கார்குழலி
- வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி
- நாம் வாழும் காலம் : கார்குழலி