தீராத பாதைகள்-16
அமெரிக்காவின் அதிகாரக் கட்டமைப்பைவிட இந்திய அதிகாரக் கட்டமைப்பு எனக்கு அச்சத்தை தருகிறது. அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் செல்வந்தர்கள் ஆக முடியும். லத்தீன் அமெரிக்கர்களுக்கும் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கும் அது கடினம் என்றபோதும் சாத்தியம் இல்லாமல் இல்லை. ஆனால் சாதிய உள் அடுக்குகள் கொண்ட நம் சமூகத்தில் அதற்குச் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. அதிகாரம் எல்லாத் தரப்பிலும் இருக்கிறது. எல்லாவற்றையும்விட ஒரு பெரிய அதிகாரம் நம் சமூகத்தில் இருக்கிறது அதுதான் சினிமா. எல்லாவற்றிற்கும் அளவுகோல் சினிமாவாக இருக்கிறது. இது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. நல்ல சினிமா எடுக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. இந்தக் கட்டுரையைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இந்த நிமிடம் இந்தப் பேசுப்பொருளை தவிர்த்துவிட்டு வேறெதுவும் எழுதலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் சினிமாவைத் தாக்கிப் பேசும்போதும் சினிமாதானே மையத்தில் இருக்கிறது? சரி பரவாயில்லை. உரையாடல்களாலும் எழுத்தினாலும்தான் எந்த அதிகார மையங்களையும் தகர்க்க வேண்டியிருக்கிறது. சினிமாவைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியுமா என்று கேட்கக்கூடாது. ஒரு சராசரி மனிதனாக என் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறேன்.
‘நிழல்’ திருநாவுக்கரசிடம் கொஞ்ச நாளுக்கு முன்னால் பேசிக்கொண்டிருந்தேன். எப்படி நம் சமூகம் சினிமாவின் அதிகாரத்திற்குள் வந்தது என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவரும் நல்ல படங்கள் வருவதில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். நம் ஊரில் இப்போது மாற்றுச் சினிமா என்று வருகின்ற படங்களைப் பார்த்தால்தான் இன்னும் பயமாக இருக்கிறது என்று சொல்லி சமீபத்தில் பார்த்த ஒரு சில மாற்றுச் சினிமாக்களைச் சுட்டிக்காட்டினேன். அப்போதுதான் ஒரு விஷயத்தை அவர் தெளிவுபடுத்தினார், நம் ஆட்களுக்குச் சினிமாவைத்தவிர வேறு பெரிய பொழுது போக்குகள் இல்லை. அதனால் நல்ல சினிமா எது என்று நமக்கு கண்டுபிடிக்கச் சிரமமாக இருக்கிறது. நாம் சினிமாவுக்கு மாற்றாகத் தேர்ந்தெடுக்கும் அனைத்துமே சினிமாவுக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கிறது. தொலைக்காட்சிக்கு சென்றால் ஆடல் பாடல் நிகழ்ச்சி. ஆடுவதும் பாடுவதும் சினிமாப் பாடல்கள். மாற்று ஊடக போர்வையில் வந்திருக்கும் யூட்யூபில் முக்கால்வாசி நிகழ்ச்சிகள் சினிமா சம்மந்தமானது. அதுவும் இந்தக் கொரோனா காலத்தில் ஒரு பெண் சினிமா நாயகர்களிடமும் இயக்குனர்களிடமும் பேட்டி எடுத்து ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தாள். இன்னொருபுறம் உலகநாயகனும் உள்ளூர் நாயகனும் வீடியோக்காலில் பேசியதை ஒளிபரப்புகிறார்கள். அதைவிட ஒரு பெரிய கூத்து, ஒரு நடிகை என்றோ பேசிய காணொளியை சர்ச்சையாக்கி அதை விவாதிக்கிறார்கள். அதில் அந்த நடிகைக்கு ஆதரவாக இருப்பவர்கள் நடிகையின் குடும்பத்திற்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள். இதிலிருந்து தப்பிக்கவே முடியவில்லை. எங்கே நாம் சென்றாலும் அங்கே ஒரு சினிமா உருப்படி நின்றுக்கொண்டு நம் கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கும்.
உண்மையில் ஆத்திரமாக வருகிறது. ஒரு சினிமா நடித்துவிட்டால் அல்லது இயக்கிவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற உரிமையை நம் சமூகம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. இதில் தவறொன்றும் இல்லையே என்கிற தொனியில் நண்பர்கள் சிலர் என்னைத் திருத்துகிறார்கள். ஒரு துறையில் சிறந்திருப்பவர்களுக்கு வேறொரு துறை சார்ந்த விஷயங்களுக்கு முடிவுகள் எடுப்பது நியாயப்படி தவறு. Misplacing the authority என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதுதான் இங்கே காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. மற்ற தேசங்களில் அப்படியல்ல. அமெரிக்காவில் கொரோனா பரவல் ஆரம்பித்தபோது பலரும் ட்ரம்பை விமர்சித்தார்கள். ஆனால் அதெல்லாம் செய்தியாகவில்லை. ஆனால் நாம் சாம்ஸ்கி (Noam Chomsky) சொன்னதுதான் இங்கே செய்தியாகிறது. காரணம் அவர்தான் இங்கே அறிஞர். அவரின் கருத்துக்களை விவாதிப்பதுதான் ஆரோக்கியமானது. அப்படியானால் நம் இயக்குனர் இமையங்களும் இதர நட்சத்திரங்களும் எதுவும் பேசக்கூடாதா? பேசலாம். ஆனால் அவர்களின் குரல்கள் மட்டும்தான் இங்கே செல்லுபடியாகிறது மற்றவர்களின் குரல்களோ இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான் வருத்தமளிக்கிறது. சினிமா பிரபலங்கள்தான் இங்கே புத்திஜீவிகள், அவர்கள்தான் கவிஞர்கள், அவர்கள்தான் எழுத்தாளர்கள். ஒரே அசூயையாக இருக்கிறது. ஒரு நடிகையின் பேச்சைக் கேட்டுதான் மருத்துவமனை சுத்தம் செய்யப்படுகிறது என்றால் பலரும் அதனால் மகிழ்ச்சியடையலாம் ஆனால் அதைச் சமூகத்தின் பெரும் அவலமாகப் பார்க்கிறேன்.
சினிமா நம் சமூகத்தின் மதமாக மாறிவிட்டது. மதத்தை விமர்சிப்பவர்கள் கழுவில்தான் ஏற்றப்படுவார்கள். ஆனால் எஞ்சியிருக்கும் கொஞ்சம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற கட்டுடைப்புகள் நிகழ்த்தித்தான் ஆகவேண்டும். பின்வரும் சம்பவம் பூனேவில் நிகழ்ந்தது. விருந்து ஒன்றில் ஒரு இசையறிஞரும் இன்னும் சிலரும் நானும் கலந்துகொண்டோம். விருந்தின் பாதியில் இசை கேட்கலாம் என்றார்கள். இசையறிஞருக்கு யானியின் இசை பிடிக்கும் எனக்கும் பிடிக்கும். எனவே யானியின் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது. இன்னொரு நண்பர் இசைஞானியின் ரசிகர். எனவே யானியின் பாடலை அணைத்துவிட்டு இசைஞானியின் பாடல்களை ஒலிக்கச் செய்தார். பேச்சு இசைஞானியின் பாடல்கள் பக்கம் திரும்பியது. அங்கிருந்த யாவரும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்துகொண்டிருந்தார்கள். எனக்கும் அவரின் குறிப்பிட்ட சில பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவரின் திருவாசகம் இன்றுவரை திரும்பித் திரும்பிக் கேட்டுக்கொண்டிருகிறேன். ஆனால் ஏனோ அவருடைய பல பாடல்களோடு என்னால் ஒன்றமுடியவில்லை. அல்லது எனக்கு அவர் மட்டுமே போதுமானதாக இல்லை என்று கூறினேன். அவ்வளவுதான். அங்கிருந்த யாவரும் வெறிநாய்களைப் போல் என்மேல் பாய்ந்துவிட்டார்கள். அதனால்தான் அவர் பெயரை எழுதக்கூடப் பயமாக இருக்கிறது. வேண்டுமானால் எல்லாரும் கூப்பிடுவதுபோல் ‘ராஜா சார்’ என்று எழுதலாம். ராஜா சார் ஒரு தெய்வம். அவரை விமர்சிக்கவே இங்கே முடியாது. அன்று நடந்த பெருங்கூத்து என்ன தெரியுமா? ராஜா சாரைப் பற்றி நான் பேசியதும் நான் முன்பு சொன்ன அந்த இசையறிஞர்தான் என்னைத் தாக்க முற்பட்டார். நியாயப்படி அவர்தானே என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும்?
அதுதான் இங்கிருக்கும் அடுத்தப் பெரிய சங்கடம். அறிஞர்கள், புத்திஜீவிகள்தான் நம்மை இந்த மாதிரியான அதிகார மையங்களுக்குப் பழக்கிவிடுகிறார்கள். நாம் வழிபடுவதற்கு ஒரு ஆளுமை தேவையானதாக இருக்கிறது. அந்தப் பீடங்களில் நட்சத்திரங்களும் இசைஞானிகளும் உட்காரவைக்கப்படுகிறார்கள். அதே போன்ற இன்னொரு ஆளுமைதான் அப்துல் கலாம். இதை வாசித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்நேரம் ரத்தம் கொதித்திருக்கும். Misplacing Authority பற்றிச் சொன்னேன் அல்லவா அதை இன்னும் விளக்கி ‘அப்துல் கலாமின் வல்லரசுக் கனவும் இந்தியாவின் பசித்த வயிறுகளும்’ என்று ஒரு சிறிய புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. எழுத்தாளரின் பெயர், ரா.பி.சகேஷ் சந்தியா. ரியோ பதிப்பகம். உணர்ச்சிவயப்படாமல் படித்துப் பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன். ராஜா சாரைப் பற்றிப் பேசியதால் இன்னொரு ஆசையையும் உங்கள் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன். ராஜா சாரை தெய்வமாக வழிபடும் ரசிகர்கள் அவர் சிம்ஃபனி தயாரிக்க முன் வரலாம். எவ்வளவு பெரிய இசைஞானியாக இருந்தாலும் சினிமாவை தவிர்த்து அவரால் எதுவும் செய்ய முடியவில்லைதானே? அல்லது சினிமாவுக்குப் புறம்பாக அவர் செய்த இசை வெகுஜனத்தைச் சேரவில்லைதானே? இதைத்தான் நான் திரும்பவும் திரும்பவும் சொல்கிறேன். சினிமாவை நீக்கிவிட்டு ராஜா சாரை உங்களால் கொண்டாட முடியுமா? சினிமா ராஜா சாரை உங்களுக்கும் எனக்கும் கொண்டுவந்து சேர்த்தது. அதன்பிறகு அவர் தனியாக இசையைக்கொண்டு ஜீவிதம் நடத்த முடிந்ததா? ஆனால் மேற்குலகில் இசைக் கலைஞர்களை எப்போதும் கொண்டாடுகிறார்கள். அவர்கள் சினிமாவில் வாசிக்கவில்லை என்றாலும் கொண்டாடப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய அமெரிக்க நண்பன் தொடர்ந்து வற்புறுத்தியதால் இந்த வருடம் ஆஸ்கர் வாங்கிய ‘பாரஸைட்’ படம் பார்த்தேன். படம் எனக்கு உவப்பானதாக இல்லை. ஆனால் அமெரிக்க நண்பனோ படத்தைப் பிரித்து மேய்ந்து என்னவெல்லாமோ சொல்லி புகழ்ந்துக்கொண்டிருந்தான். அதன்பிறகு ஆஸ்கர் வாங்கிய இன்னொரு படத்தைப் பார்த்தேன். Once upon a time in Hollywood. Quentin Tarantino இயக்கியது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தை உதாரணமாகக் கொண்டு தமிழில் ஒரு திரைப்படம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இந்தப் படத்தின் கதையைப் போன்று பல நூறுகதைகள் நம்மிடம் இருக்கிறது. இதைவிடச் சிறப்பான கதைகளும் நம்மிடம் இருக்கிறது. அப்படி ஒருவேளை வந்தால் பலரின் வழிபாட்டுப் பிம்பங்கள் தகர்ந்துவிடும். இந்த வழிபாட்டிற்குரிய பிம்பத்தைத் தகர்த்தாலே அதிகாரத்தைப் பரவலாக்க முடியும் என்று தோன்றுகிறது. ஹாலிவுட்டில் முன்பொரு காலத்தில் பெரிய நடிகனாக இருந்தவன் மார்கெட் இழந்து எப்படி வாழ்கிறான் என்பதுதான் படத்தின் கதை. ஆனால் படம் முழுவதும் அவ்வளவு பகடிகள் நிறைந்திருக்கிறது. அந்த நாயகனிடம் ஒரு நேர்காணலில் நீங்கள் ஏன் ஒரு ஓட்டுநர் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவன் அதற்கு ஏதோ சொல்கிறான். ஆனால் உண்மையில் இவன் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் இவனுடைய ஓட்டுநர் உரிமம் முழுதுமாக ரத்துச் செய்யப்பட்டுவிடுகிறது. இந்தக் காட்சி வந்துவிட்டு போகும்.
அதேபோல ஒரு பார்ட்டியில் ஒருவன் புகைத்துக்கொண்டே ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவளோ வேறொருவனுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறாள். அப்போது அவளைப் பார்த்துக்கொண்டு புகைத்துக்கொண்டிருக்கும் இவனிடம் வரும் இன்னொருத்தியிடம் நடனமாடிக்கொண்டிருப்பவள் அந்தப் பார்ட்டியில் உள்ள யார்யாரிடமெல்லாம் உறவில் இருந்தாள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். இதேப்போலப் பல இடங்கள் படத்தில் இருக்கிறது. படத்தில் ரோமன் பொலன்ஸ்கி ஒரு கதாப்பாத்திரமாக வருகிறார். அவரது சர்ச்சைகள் பேசப்படுகிறது. இந்த மாதிரியான கதைகள் நம் உதவி இயக்குனர்கள் அறியாததா? ஆனால் அப்படி எதுவும் செய்துவிட முடியாது காரணம் இங்கிருக்கும் சினிமா சார்ந்த ஒவ்வொருவரும் சிறுதெய்வங்கள். யூட்யூபில் உள்ள நேர்காணல்களைப் பாருங்கள் யாரோ ஒரு நடிகரைப் பற்றிப் பேசும்போது கேள்விக் கேட்பவருக்கும் பதில் சொல்பவருக்கும் கண்ணெல்லாம் மின்னுகிறது. நாயக பிம்பத்தை இவர்கள்தான் சர்வ சிரத்தையுடன் கட்டமைக்கிறார்கள். இப்படிப் பேசுவதால் நான் சினிமாவை வெறுக்கிறேன் என்று நினைக்கக்கூடாது. சினிமாதான் நமது அன்றாட வாழ்வை நிர்ணயிக்கிறது என்ற நிலையைத்தான் எதிர்க்கிறேன்.
எனக்குக் கிசுகிசு படிக்கும் பழக்கமெல்லாம் இல்லை. வாசித்த ஒன்றிரண்டு கிசுகிசுக்களும் அவ்வளவாகப் புரியவில்லை. சமீபத்தில் ஒரு நேர்காணலைப் பற்றி மனுஷ்ய புத்திரன் தனது ஃபேஸ் புக்கில் குறிப்பிட்டிருந்தார். அதைப்பார்த்த பின் தோன்றிய விஷயங்களைக் கிசுகிசுபவாக எழுதிப் பார்க்கலாம் என்றொரு ஆசை. இதற்கு மேலும் அறிமுகம் போனால் கிசுகிசுவின் சுவாரசியம் போய்விடும். இதுவொரு சினிமா இலக்கியக் கிசுகிசு. குரோசோவாவின் இளையமைந்தனாக அறியப்படும் இயக்குனரிடம் நாடு கடத்தப்பட்ட எழுத்தாளரைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. அந்த எழுத்தாளரின் எந்தப் படைப்பையும் தான் படித்ததில்லை என்று கூறிவிட்டார். நல்லது. அதே நேர்காணலில் தான் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த சண்டைக்கோழியைப் பற்றி நெக்குருகிப் பேசினார்.
இது நடப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ஓவியரும் என் நண்பருமான ரிஷி இந்தக் குரோசோவாவின் இளையமைந்தன் இயக்கிய ஒரு படத்தைப் பார்த்துவிட்டு மனம் நொந்து ஒரு பதிவிட்டிருந்தார். அதில் ஏற்பட்ட ஒரு விவாதத்தை வேறு ஒரு நண்பர் படித்துவிட்டு என்னைக் கடுமையாகச் சாடினார். விஷயம் இதுதான்: நம் தமிழ் சினிமாவில் பேய்ப்படங்களும் கொலையாளிகள் பற்றிய படங்களும் ஒரே டெம்ப்லேட்டில் இருப்பதாக நான் கருதுகிறேன். என் தரப்புக்கு வலுசேர்க்க அந்த நாடு கடத்தப்பட்ட எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சர்வ சாதாரணமாகக் குரோசோவாவின் இளையமைந்தன் இயக்கிய ஒரு பேய்ப்படத்தைப் பாராட்டிக்கொண்டிருந்தார். சண்டைக்கோழியைப் பற்றிப் பேசினாலும் பேசாவிட்டாலும் அது எப்படியும் பிழைத்துக்கொள்ளும் ஆனால் பாவப்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் மீது ஏன் இவ்வளவு வன்மம் என்று புரியவில்லை! இன்னொரு விஷயம் நேர்காணலில் தமிழ் எழுத்தாளர்களை அவ்வளவாகப் படிப்பதில்லை என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டு சினிமா பின்னணி உள்ள மூன்று எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் சில கதைகளைப் படித்திருப்பதாகக் கூறினார். அதிலும் பாருங்கள் பெரும் தாக்குதலுக்கு ஆளானவர் நாடு கடத்தப்பட்ட எழுத்தாளர்தான்! குரோசோவாவின் இளையமைந்தனைப் பொருத்தவரை எழுத்தாளர்கள் என்ற ஜீவராசிகள் ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் வாழ்வதாக நினைக்கிறார்போலும் அல்லது நம் தமிழ் இலக்கியங்கள் குறத்திமுடுக்கோடு முடிந்துவிட்டதோ என்னவோ!
(உள்ளிருந்து ஒரு குரல்: இதற்குப் பேசாமல் பெயர்களைக் குறிப்பிட்டே எழுதியிருக்கலாம். கிசுகிசு எழுத இன்னும் அனுபவமும் பயிற்சியும் தேவையாக இருக்கிறது.)
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
- இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
- கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
- ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
- பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
- "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
- வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
- Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
- இசை நாடகங்களும் படங்களும் – வளன்
- அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
- கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
- சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
- பெண்களுடனான உரையாடல்- வளன்
- புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
- ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
- மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
- Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
- Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
- தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
- இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
- வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
- ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
- மூன்று இசை தேவதைகள் - வளன்
- 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்