” 16”

அந்தச் சின்னக் குடும்பம் ஆட்டோவில் வந்திறங்கியபோது இரவாகியிருந்தது.  அலுப்பூட்டும் சிறு நகரத்துக்கு வந்த புதுக் குடித்தனக்காரர்கள். குட்டிப் பெண்  துறுதுறுவென்று ஒவ்வொரு அறையாக ஓடிக்கொண்டிருந்தது. மூன்று அறைகளிலும் ஒழுங்குபடுத்தி வைக்கப்படாத சாமான்கள் நிறைந்திருந்தன. குட்டிப் பெண்ணின்  அம்மா ஹாலை மட்டும் சரிசெய்துவிட்டு, ஒரு பாயை விரித்துப் போட்டு அவளைப் படுக்க அழைத்தாள்.  உள்ளே வந்த குட்டிப் பெண் அம்மாவிடம் சுவரைக் காட்டி “பாரும்மா” என்றது. பழைய டிஸ்டம்பரில் மங்கலாக இருந்த சுவரில் “16” என்ற  எண் தெரிந்தது. “யாரோ உன்னய மாதிரி வாலு கிறுக்கியிருக்கா மாதிரி தெரியுது” என்றாள் அம்மா. உள்ளே போய் சோப்புத் தண்ணீரையும் பிடிதுணியையும் எடுத்துக்கொண்டு வந்து துடைத்தாள். கிறுக்கல் போய்விட்ட மாதிரி இருந்தது.

அடுத்த நாள் காலையில் அம்மா குட்டிப் பெண்ணை புதுப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காகத் தயார் செய்துகொண்டிருந்தாள். முடியில் சிக்கெடுத்துக்கொண்டிருந்தபோது அது  “அம்மா சிக்ஸ்டீன் அப்டியேதான் இருக்கு” என்று காட்டியது. சுவரில் 16 நேற்றைவிட அழுக்குக் களைந்து இன்னும் தெளிவாகத் தெரிந்தது.

“இருக்கட்டும் நீ தலய தலய ஆட்டாதே. ஏற்கெனவே மகாராணி எழுந்தது லேட்டு. புது ஸ்கூலுக்கு போவணும். உங்கப்பா  போட்டது போட்டபடிக்கு  ஆபீஸே கதினு போயிட்டாரு” என்று குறைப்பட்டுக்கொண்டாள்.

”சிக்ஸ்டீன் ஏம்மா போவல?”

“ஏன்னா இந்த வீட்ல நான் சிக்ஸ்டீன் வருஷம்தான் இருப்பேன்”

“அப்றம் எங்கே போவே?”

“ம், போய்ச் சேந்துடுவேன், மொதல்ல கிளம்பற வழியப் பாரு”

குட்டிப் பெண்ணுக்குத் தன் அம்மா மோசமான எதைப் பற்றியோ சொல்கிறாள் என்று  புரிந்தது. அதைப் பற்றித் திரும்பக் கேட்கவும் பயம். ஒன்றும் பேசாமல்  புதுப் புத்தகப் பையை தோளில் மாட்டிக்கொண்டு வந்து நின்றது.

அந்த வீட்டுக்கு அவர்கள் வந்து 16 வருடங்கள் சென்றன. அவர்கள் வந்ததற்குப் பின் இரண்டு முறை அதே மங்கல் வெள்ளை நிறத்தில் டிஸ்டம்பர் அடித்திருந்தார்கள். டிஸ்டம்பர் அடித்தவுடன் ஓரிரு மாதங்களுக்கு 16 தென்படாது, பிறகு மீண்டும் தென்பட ஆரம்பிக்கும்.  குட்டிப் பெண் பெரியவளாகி இப்போது அலுவலகம் செல்லத் தொடங்கியிருந்தாள். ஆனால் இப்போதும் அவளுக்கு 16 என்ற எண்ணை எங்காவது பார்த்தால் என்னவோ மனதில் சுருக்கென்று இருந்தது.

அந்த வருடம் மே மாதம் நல்ல வெயில். வேப்பம் பூவோடு வியாபித்த கோடை மணம். அவர்கள் குடும்பமாக பாதிரிப் பழத்தை வாங்கி அரிந்து தின்றார்கள். அம்மா நான்கு வித வத்தல்களைச் செய்து காயப்போட்டாள். ஒரு புதன் கிழமை அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போயிற்று. அடுத்த நாள் அந்த ஊர் மருத்துவமனையில் அவள் உயிர் போயிற்று.

அம்மாவை எடுத்துக்கொண்டு வந்தார்கள். ஹாலில் கிடத்தப்பட்ட பிணத்துக்கு அருகே அமர்ந்திருந்த மகள்  யதேச்சையாகப் பார்ப்பதைப் போல எதிர்ச் சுவரைப் பார்த்தாள்.  16 மினுங்கிக்கொண்டிருந்தது. அப்பாவிடம் “வேற வீட்டுக்குப் போயிரலாம்பா” என்று கம்மிய குரலில் சொன்னாள்.

அந்த மாதக் கடைசியில் அவர்கள் வேறு வீட்டுக்கு மாறிச் சென்றார்கள். அடுத்த வாரத்தில் ஒரு புதுக் குடித்தனம் அங்கே வந்தது. ஒரு குட்டிப் பையன் இருக்கும் சின்னக் குடும்பம். அவன் அம்மா சமையலறை அலமாரியில் டப்பாக்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தபோது, அவன் அப்பா சுவரில் படம் மாட்ட சுத்தியலோடு நின்றுகொண்டிருந்தார். குட்டிப் பையனிடம் இரண்டு ஆணிகளை எடுத்துத் தரச் சொன்ன அவர் “பாருடா, பதினாறுனு எழுதியிருக்கு” என்றார்.

“யார்ப்பா எழுதியிருக்காங்க”

“தெரிலடா, ஆனா நாம இங்கேந்து பதினாறு வருஷத்தில சொந்த வீடு வாங்கிட்டு போயிருவோம்” என்றார் அப்பா உற்சாகமாக.

“ஆமா, கிழிச்சாரு” என்று சமையலறையில் முணுமுணுத்த குரலைக் கேட்டு ஹாலில் ஒருவர் சத்தமின்றிச் சிரித்தார்.

தவறைச் சரிசெய்தல்

அவள் குடும்ப ஜோசியரிடம் கேட்டபோது இப்படித்தான் சொன்னார்: “நீங்கள் நாலுகால் பிராணிக்கு ஏதோ துன்பம் தந்திருக்கிறீர்கள். அதுதான்  மனக்கஷ்டப்படும்படி இப்படி எல்லாம் நடக்கிறது. அதைச் சரிசெய்யப் பாருங்கள்.” அவள் நகரவாசி, மாடுகளோடு பெரிய தொடர்பில்லை. அவள் வசிக்கும் பகுதியில் பூனைகளைப் பார்ப்பதும் அபூர்வமே. நாய்கள்தான் அதிகம் தென்படும். அவற்றைத்தான்  துன்புறுத்தியிருக்கிறோம் என்று அவளுக்குத் தோன்றியது.

ஜோசியரைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவள் இனிமேல் பார்க்கும் நாய்களிடம்  மன்னிப்பு கேட்க வேண்டுமென முடிவுசெய்தாள்.  மறுநாள் காலையில் அலுவலகம் செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்தபோது எதிர்வீட்டுக்காரர் தன் வெள்ளைப் பாமரேனியனோடு வாக்கிங் போக வெளியே வந்தார்.  ‘இந்த நாயைத் தான் ஒரு நாள் மதித்து ஹலோ சொன்னதில்லை’ என்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அந்த நினைப்பினூடாக, நாயைவிடத் தான் உயரமாக இருந்தது அவள் மனதில் சற்று உறுத்தியது. நின்றபடிக்கு அதனிடம் ஹலோ சொல்வது அவமரியாதையாகத் தோன்றியது. உடனே தரையில் மண்டியிட்டு, முடிந்தவரை குனிந்து அதன் முகத்துக்கு நேராக தன் முகத்தை வைத்துக்கொண்டு  ‘ஹலோ, மன்னித்துக்கொள்’ என்றாள்.  எதிர்வீட்டுக்காரர் அவளை வினோதமாகப் பார்த்தார். சட்டென அவள் அங்கிருந்து நகர்ந்து வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

பஸ் நிறுத்தத்துக்குச் செல்லும் வழியில் தெரு முனையில் சோர்வாக நடந்துகொண்டிருந்த ஒரு  பழுப்புவண்ணத் தெருநாயைப் பார்த்தாள்.  சில தினங்களுக்குமுன் ஒரு கார் அதை உரசிச் சென்றபோது அவள் அதைப் பார்க்கும் தூரத்தில்தான் நடந்துவந்துகொண்டிருந்தாள். நாய் வலியில் கத்தியது. துடித்து மண்ணில் புரண்டது. ஆனால் எதுவும் நடக்காததைப் போல அதைக் கடந்து அவள் போனது இப்போது குற்றவுணர்ச்சியைத் தந்தது. அந்த நாயின் எதிரே போய் நின்று, குனிந்து “மன்னித்துக்கொள்” என்றாள். நாய் அவளைச் சட்டைசெய்யாமல் ஒரு கம்பத்தைச் சுற்றிக்கொண்டு செல்வதைப் போலச் சென்றது. அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

பஸ் நிறுத்தத்தில் இரண்டு சொரி நாய்கள் அருகருகே உட்கார்ந்திருந்தன. ஒடுங்கிப்போனத் தோற்றத்தோடு இருந்த அவை அங்கேயே வசித்து வந்தவை. அவற்றை இதுவரை அவள் பொருட்டாக எண்ணியதில்லை. அவற்றருகே குனிந்தபடி ஒவ்வொன்றிடமும் ”மன்னித்துக்கொள்,” “மன்னித்துக்கொள்” என்று மென்குரலில் கூறினாள்.  ஒரு நாய் தன் முன்னங்காலை அவள்முன் நீட்டியது. கைகுலுக்குவதற்காக நீட்டுகிறதோ என அவளுக்குத் தோன்றியது. அதனிடம் தன் கையை நீட்ட நினைத்த நேரத்தில் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த தன்னைப் பலரும் பார்ப்பதை உணர்ந்தாள்.  குனிந்திருந்தவள் தன்னுடைய வலது காலணியின் முன்பக்கப் பட்டையைச் சரிசெய்வதைப் போல பாவனையைக் காட்டிவிட்டு எழுந்து நின்றாள். அந்த நாய் நீட்டிய தன் முன்னங்காலை சில நொடிகள் எடுக்காமல் தாமதித்து, பின் கீழே வைத்தது போலிருந்தது.  “இந்த ஜோசியர்கள் என்றைக்கு எதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்று நினைத்துக்கொண்டே அங்கே வந்து நின்ற பஸ்ஸில் வேகமாக ஏறினாள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
  2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
  3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
  4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
  5. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
  6. சிறுகதை: அழகு - பெருந்தேவி
  7. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
  8. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
  9. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
  10. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
  11. போகாதே-பெருந்தேவி
  12. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
  13. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
  14. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
  15. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
  16. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
  17. துச்சலை- பெருந்தேவி
  18. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
  19. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
  20. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
  21. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
  22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
  23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்