கொரானாவுக்கு முந்தைய காலகட்டத்தின் சென்னையின் உயர் நடுத்தர வர்க்கத்தினர் போகும் ரெஸ்டரண்ட் ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள். ராதாகிருஷ்ணன் சாலையில் மியூசிக் அகாதமிக்கு எதிரே இருக்கும் அமராவதி போல ஒன்று. அந்த ரெஸ்டரண்டில் மயங்கிய இருளோடு மெல்லிய ஒளி கூடிய மூலையிலிருந்த மேஜையில்தான் இரண்டு பெண்களும் அருகருகே அமரிந்திருந்தனர். ஒருத்திக்கு நீள்வட்ட முகம், இன்னொருத்திக்கு வட்ட முகம். நவீனமான தொங்கல் காதணிகளை அணிந்திருந்த அவர்களின் முகபாவங்கள் அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயத்தின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டின.
நான் பக்கத்து மேஜையில் எதிரே அமர்ந்திருந்தேன். நல்ல பசியில் சில்லி காளானை முடித்துவிட்டு ஆந்திரா முட்டை பரோட்டாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். மேஜைகளுக்கு நடுவே போதுமான இடைவெளி இருந்தாலும் ஒரு மேஜையில் அமர்ந்திருப்பவர்கள் பேசிக்கொள்வதை அடுத்தவர்கள் கேட்க முடிகிற அளவு தூரம்தான். மேலும் எனக்குப் பாம்புக்காது என்று என்னை அறிந்தவர்கள் சொல்வதுண்டு. அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயம் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. வட்ட முகக்காரி சில நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். முப்பது தூக்க மாத்திரைகள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறாள். நீள்வட்ட முகக்காரி இறப்பிலிருந்து திரும்பி வந்த அவளைச் சமாதானப்படுத்துவதைப் போலப் பேசிக்கொண்டிருந்தாள். வட்ட முகக்காரியின் இடது கைமீது தன் வலது கையை வைத்து அவள் பொத்தியபோது வட்டமுகக்காரி கோபமும் ஆற்றாமையும் பொங்கச் சொன்னாள்:
“ஆனாலும் அவன் இதைச் செய்திருக்கக்கூடாது. அவன் என்னை மீளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கியது சரியா, சொல்.”
“நிச்சயம் தவறுதான், அதற்காக நீ மருத்துவமனையிலிருந்து கிளம்பி வரலாமா?” நீள்வட்ட முகக்காரியின் குரல் தழதழத்தது.
“அவனிடம் சொல்லிவிட்டு வரவேண்டும் என்கிறாயா, அவன் அதற்கு ஒத்துக்கொள்வானா என்ன? சரி, அப்படியென்ன தவறு நடந்துவிட்டது?”
“அவர்களுக்கு இதெல்லாம் புரியாது. குறிப்பிட்ட நடைமுறையைப் பார்த்து அதன்படி வாழப் பழகிவிட்டார்கள். மேலும்….”
“நடைமுறையாவது ஒன்றாவது, அக்கம்பக்கத்தில் சர்வசாதாரணமாக நடப்பது இதெல்லாம். இவன் பார்வையில் இப்போதுதான் இது பட்டது என்பதற்காக நான் சாகடிக்கப்பட வேண்டுமா?” அந்த ரெஸ்டரண்ட் அறையே அதிரும்படி கத்தினாள் வட்ட முகக்காரி. சீருடை அணிந்த பணியாளர்கள் இருவர் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போனார்கள்.
“கொஞ்சம் மெல்லப் பேசு, கண்ணு.” என் காதை இன்னும் கூர்மையாகத் தீட்டிக்கொண்டேன்.
”சரி, உன்னைத் தற்கொலை செய்ய வைத்தால் நீ பொறுத்துக்கொள்வாயா?”
“நியாயமான கேள்விதான், ஆனால் அவன் அப்படி ஒரு திட்டத்தை எனக்காகவும் வைத்திருந்தால் நான் என்ன செய்திருக்கமுடியும்” என்றாள் நீள்வட்ட முகக்காரி.
“நீ அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறாய். ஆனால் நீ காதலித்ததென்னவோ…”
“உன்னைத்தான், அதிலென்ன சந்தேகம்?” அவசரமாக இடையிட்டாள் நீள்வட்ட முகக்காரி.
”நானா உன்னை என் ஆசைக்கேற்றபடி வளைத்தேன்? அவ்வாறு நான் குற்றஞ்சாட்டப்பட்டபோது இல்லையென்று உடனடியாக நீ மறுத்திருக்க வேண்டாமா?”
”செல்லம், நான் சொல்வதை நம்பு. மறுக்கத்தான் நினைத்தேன். உன்னைக் குற்றஞ்சாட்டும் அந்த வசனத்தைக் கதையில் அவன் எழுதியபோது என் தொண்டையில் கசப்பு திரண்டுவந்து அடைத்தது. ஆனால் என் வசனத்தை எழுதுவது நான் இல்லையே. நான் மட்டும் எழுதியிருந்தால் நமக்குள் ஒருநாள் யதேச்சையாக ஒரு பச்சை துளிர்த்ததை அல்லவா எழுதியிருப்பேன்? எதிர்பார்ப்பில்லாத எதிர்பார்ப்பில் அது மொட்டவிழ்ந்ததை, ஒவ்வொரு நாளும் நம் இருப்பை சுகந்தமாக மணக்கவைத்த காதலை அல்லவா எழுதியிருப்பேன்?”
எனக்கு ஒன்று புரிந்தது. காதலிப்பவர்கள் பேசிக்கொள்ளும்போது அடுத்தவர்களுக்கு அது நாடகீயமாகத்தான் தோன்றுமென்று. எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் நானே சில தடவை இதேமாதிரியான வசனங்களை பேசியிருக்கிறேனே!
“மனமொருமித்த காதல் என்று சொல்,” திருத்தினாள் வட்ட முகக்காரி
“ஆம், உன் பெயரைக் கேட்கும்போதெல்லாம் என் நாளங்களில் ரத்தம் தேனாக மாறிவிடும். அத்தகையக் காதல்.”
“அதன் பின்தான் நாம் கைகளை முதன்முதலில் பற்றிக்கொண்டோம்”
“முத்தமிட்டோம், பூமியில் கால் வைக்காமல் மிதந்தோம். நம் முயல்குட்டிகளையும் தேன்கூடுகளையும் பரஸ்பரம் கண்டடைந்தோம்.”
இப்போது வட்ட முகக்காரி சத்தமின்றிச் சிரித்தாள். அவள் கன்னத்தில் கோடிட்டிருந்த கண்ணீர்த் தடம் மென்வெளிச்சத்தில் வெள்ளி ரேகையாக தோற்றம்கொண்டு என்னைப் பார்த்துக் கண்சிமிட்டியது.
“இப்போது நான் என்ன செய்வது, மருத்துவமனைக்குத் திரும்ப வேண்டியதுதானா?”
“ஆமாம். நாளை நீ செத்துவிடுவாய்.”
“அதன் பின்?”
“நான் பெற்றோர் பார்த்துவைக்கும் ஒருவனைத் மணம் செய்துகொள்வேன். குழந்தைகள் பிறக்கும். ஆனால் பழைய வாழ்க்கை எப்போதாவது என் மனதில் நிழலாடிப் பேயாட்டம் காட்டும்.”
“நீ சொல்வதைப் பார்த்தால் அவன் நாவல் எழுதுகிற மாதிரி தெரிகிறதே. நான் சிறுகதை என்றல்லவா நினைத்தேன்?”
“ஆமாம், நான் இதன்பின் இன்னும் இருநூற்று சொச்சப் பக்கங்களுக்கு வாழ்வேன் என்றுதான் தோன்றுகிறது.”
“அதாவது நான் இல்லாமல்?” வட்டமுகக்காரியின் முகத்தில் மீண்டும் சஞ்சலம் படரத் தொடங்கியது.
”ஆமாம். வேறுவழியில்லாமல் என்பதைச் சேர்த்துக்கொள்.”
“எனக்கு மறுபிறவியாவது உண்டா? என்றால் மீண்டும் ஒரு தரம் உன்னைப் பார்க்கவாவது வருவேன்.”
“தெரியவில்லை. நான் அப்படி சொன்னால் பொய்யான நம்பிக்கையைத் தருவதாக அது இருக்கும்.”
இரண்டு பெண்களும் சிறிது நேரம் பேசாமலிருந்தார்கள். சிறிது நேரம் என்பது எனக்கு யுகக்கணக்காக நீண்டது.
நான் உண்டு முடித்திருந்தேன். கைகழுவ வாஷ் ரூமுக்குப் போய்விட்டு வந்தபோது இருவரும் அங்கில்லை. சப்பாத்தி மிச்சங்களுடனும் சப்ஜியுடனும் அருகருகே இரண்டு உணவுத் தட்டுகள் மாத்திரமே இருந்தன. எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்தபடி சர்க்கரைப்பாகு பூசிய சோம்பை கிண்ணத்திலிருந்து எடுத்து மெல்லத் தொடங்கினேன்.
சீருடை அணிந்த பேரர் ஒரு தொழில்முறைப் புன்னகையோடு பில்லை வைத்த லெதர் உறையை என்னிடம் நீட்டினார், “அந்த டேபிளுக்கும் சார்!” நான் உண்ணாத சப்பாத்திகளுக்கும் காலிஃப்ளவர் மஞ்சூரியனுக்கும் குடிக்காத இரண்டு மாக்டெயில்களுக்கும் சேர்த்து பில் போடப்பட்டிருந்தது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
- உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
- கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
- குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
- குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
- சிறுகதை: அழகு - பெருந்தேவி
- சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
- குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
- குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
- பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
- போகாதே-பெருந்தேவி
- விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
- ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
- படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
- ஜானுவும் ராமும்- பெருந்தேவி
- நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
- துச்சலை- பெருந்தேவி
- பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
- 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
- அத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
- பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
- சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
- பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்