பெருந்தேவியின் இரு குறுங்கதைகள்
அத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்
வெட்டுக்கிளிகள் ஜெய்ப்பூர் நகரத்தை ஆக்கிரமித்தன என்று அன்றையச் செய்தித்தாளில் அவள் படித்தாள். சீக்கிரத்திலேயே அவை தெலுங்கானா வழியாக தமிழ்நாட்டுக்கும் வரும் என்றது செய்தி. காற்றடிக்கும் திசையில் ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு எட்டு கோடி வெட்டுக்கிளிகள் புயல் போல் வருமாம். கிருஷ்ணகிரிக்கு வெட்டுக்கிளிகள் வந்துவிட்டதாக ஒரு பெட்டிச் செய்தி வேறு. சென்னைக்கு வர எத்தனை நேரமாகப் போகிறது? யோசித்தபடி படுத்திருந்தவளுக்குத் தூக்கம் வரவில்லை. காற்றுக்காக ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்திருந்தாள். இப்போது அவை வெட்டுக்கிளிகளுக்காக திறந்திருப்பதாகப் பொருள்மாறித் தோன்றின. எழுந்திருக்கச் சோம்பேறித்தனமாக இருந்தாலும் ஜன்னலை மூடிவைப்பதுதான் நல்லதென்று ஜன்னலை மூடிவிட்டு ஏ.சியைப் போட்டாள்.
நல்ல தூக்கமென்று சொல்லிவிட முடியாது. ஒரு மேகமூட்டம் போல் சூழ்ந்தது. கருமை கரும்பச்சையானது. கரும்பச்சை உடைந்தது. வெட்டுக்கிளிகள். எக்கச்சக்க வெட்டுக்கிளிகள். அவள் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அவற்றிலிருந்து தப்பிக்க ஓடினாள். வெட்டுக்கிளிகள் அவள் கைகளின் மீதேறின. கன்னங்களின் மீதேறின. அலறிக் கண்விழித்தாள். வியர்த்துக்கொட்டியது. எழுந்து லைட்டைப் போட்டாள். தலையணையின் மீது சில வெட்டுக்கிளிகள் ஊர்ந்துகொண்டிருந்தன. தான் கண்டது கனவில்லையா? நல்லவேளை, கனவில் கண்ட அளவுக்கு கூட்டமாக இல்லை. சமையலறைக்குச் சென்று துடைப்பத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். தலையணையின் மீது இருந்தவற்றை துடைப்பத்தாலேயே கீழே தள்ளி அடித்துப் போட்டாள்.
சமையலறையில் துடைப்பத்தை வைத்துவிட்டு சாமி படங்களுக்கு முன்னால் சம்புடத்திலிருந்த விபூதியை இட்டுக்கொண்டு வந்து பின் படுக்கையில் சாய்ந்தாள். ஒரு நிமிடம் கூட ஆகவில்லை. கழுத்தடியில் குறுகுறுத்தது. ஒன்றை விட்டுவிட்டோமோ என்று தோன்றியது. மீண்டும் எழுந்து லைட்டைப் போட்டாள். கழுத்தில் இன்னமும் ஊர்ந்துகொண்டிருந்த அதை அசூசையோடு கையால் தள்ளிவிட்டுவிட்டு, சமையலறைக்கு வந்து துடைப்பத்தை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குத் திரும்பினாள்.
அவன் படுத்திருந்தான். ஒரு கணம் தான் எங்கேயிருக்கிறோம் என்று அவளுக்கு மனம் குழம்பிப்போனது. அது அவள் அறையேதான். அதே பொன்னிறம் மங்கிய இரவு விளக்கு. அதே கிளிகள் பறக்கும் இயற்கைக் காட்சி ஓவியம். மீண்டும் அவனைப் பார்த்தாள். அவன் நல்ல தூக்கத்திலிருப்பது போலிருந்தது. ஒரு கணம் யார் என்று எழுப்பிக் கேட்கலாமா என்று நினைத்தாள். அவனோ தன் வீட்டில் சுவாதீனமாகப் படுத்திருப்பதைப் போல ஒரு பழைய கைலியில் சலனமின்றிப் படுத்திருந்தான். நல்ல அழகனாக இருந்தான். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்துவிட்டு அவள் படுத்துக்கொண்டாள்.
யதார்த்தம்
ரங்கமணிக்கு என்னவோ போலிருந்தது. ”இதெல்லாம் அநியாயம், நீங்க நல்லாவா இருப்பீங்க, நாசமாப் போவீங்க” உச்சஸ்தாயியில் அவரைப் பார்த்துக் கத்தினாள் ஐந்து வயது ஜானுவின் அம்மா. நல்லவேளையாக பத்ரகாளியாக அவள் கத்திக்கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தபோதே ரங்கமணியின் மனைவி கதவை இழுத்து மூடித் தாளிட்டுவிட்டாள். அத்தனை சங்கடத்திலும் ரங்கமணிக்குத் தான் வசிக்கும் அபார்ட்மெண்ட் சுவர்கள் திடகாத்திரமானவை என்பதால் அவள் போடும் சத்தம் வெளியே கேட்காது என்பது அற்ப ஆறுதலாக இருந்தது.
“நீங்களே பாருங்க, ட்யூஷனுக்கு அனுப்பினா இப்டியா செய்வாரு?” என்றபடி ரங்கமணியின் மனைவிக்கு முன் ஜானுவை இழுத்துவந்து அவளது ஸ்கர்ட்டை வலது முழங்கால் முட்டிக்கு மேல் தூக்கிக்காட்டினாள் ஜானுவின் அம்மா. முட்டிக்கு மேல் ஒரு இடத்தில் சிவந்திருந்தது. “நீயெல்லாம் ஒரு வாத்யாரா, அவரு ஊர்லேர்ந்து வரட்டும். போலீஸ்க்கு போனா தெரியும் உன் சங்கதி.” ஒடுங்கிப் போயிருந்த ரங்கமணிக்கு ஒருமையைக் கேட்டுக் குன்றிப்போனது. “மாமி, மன்னிச்சிக்கோங்க, ஆனா அப்பா அப்டில்லாம் கிள்ளியிருக்க மாட்டாரு” என்று ரங்கமணியின் மகள் மெதுவாகச் சொன்னாள். தன் அலுவலக வேலையாக மும்பையிலிருந்து வந்திருந்த அவள் தன் அம்மா வீட்டில் சில நாட்களாகத் தங்கியிருந்தாள். ஜானுவின் அம்மா ஆவேசமாக அவள் பக்கம் திரும்பி “பின்ன எப்படி இப்டி தொடை கன்னியிருக்கும்னு கேக்கறேன்? பேச வந்துட்டே” என்று இன்னும் வேகமாகக் கத்தினாள். ரங்கமணியின் மகன் உள்ளிருந்து வந்து எட்டிப்பார்த்துவிட்டு தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதைப்போல மீண்டும் அறைக்குள் சென்றான்.
ரங்கமணியின் மனைவி அதிர்ந்துபோயிருந்தாள். மகள் மட்டும் ஜானுவின் அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே தன் அப்பாவின் மீது தவறில்லை என்று மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் “ஜானுட்டயே கேக்கலாம், அப்பாதான் கிள்ளினாரானு” என்று அவள் சொல்ல, ”கொழந்தைக்கு என்ன தெரியும், குளிப்பாட்டறப்ப நான் பார்க்காட்டா எனக்கே தெரிஞ்சிருக்காது” என்று எகிறினாள் ஜானுவின் அம்மா. ”அவ ஸ்கூல்ல எந்த டீச்சரும் கொழந்தங்கள அடிக்கமாட்டாங்க.” ரங்கமணியின் மகள் அதற்கு பதில்சொல்ல வாயைத் திறக்கும்போதே “அவரு வரட்டும், உங்கள வச்சிக்கறேன்” என்று கத்தியபடி கதவைத் திறந்து வெளியே அறைந்துவிட்டுச் சென்றாள். ரங்கமணி விதிர்விதிர்த்து உட்கார்ந்திருந்தார்.
“அப்பாவப் போய் வாய்க்கு வந்தபடி திட்டறாங்களே அந்த அம்மா, அண்ணாவும் ஒரு வார்த்தை கேக்கலை” என்று ஆதங்கிக்கத் தொடங்கினாள் மகள். ரங்கமணியின் மனைவி எதுவும் பேசாமல் அடுக்களைக்குள் சென்றாள். அவள் பின்னாலேயே சென்ற மகள் ”ஏம்மா, நீயும் வாய மூடிட்டு இருந்தே?” என்று அழுகிற குரலில் கேட்டாள். ”உன் பொண்ணோட சம்மர் லீவுக்கு வந்தியானா நாலு நாள் தங்கிட்டு அவளக் கையோட அழச்சிக்கிட்டுப் போயிடு” என்றாள் அவளிடம் ரங்கமணியின் மனைவி.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
- உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
- கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
- குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
- குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
- சிறுகதை: அழகு - பெருந்தேவி
- சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
- குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
- குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
- பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
- போகாதே-பெருந்தேவி
- விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
- ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
- படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
- ஜானுவும் ராமும்- பெருந்தேவி
- நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
- துச்சலை- பெருந்தேவி
- கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
- பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
- 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
- பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
- சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
- பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்